தூர நோக்குடன் தம்பி பிரபாகரன் உருவாக்கிய கூட்டமைப்பு இன்று பிழையான வழியில் செல்கிறது!

/files/detail1.png

தூர நோக்குடன் தம்பி பிரபாகரன் உருவாக்கிய கூட்டமைப்பு இன்று பிழையான வழியில் செல்கிறது!

  • 0
  • 0

ஒரு கொள்கையின் கீழ் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படுவதே காலத்தின் தேவை என்பதை அன்று தம்பி பிரபாகரன் உணர்த்தியதைப்புரிந்துகொண்டே நாம் செயற்பட முன்வர வேண்டும் என,  வடமாகாண முன்னாள் முதலமைச்சர் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம்   விக்னேஸ்வரன், யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் யாழ்  கிளிநொச்சி மாவட்ட பிராந்திய மாநாடு இந்நிகழ்வில்    கலந்து கொண்டு ஆற்றிய உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது....,

எமக்குள் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக்கொண்டு எமது இனத்துக்கு நாமே குழிபறித்துக்கொள்ளும் நிலைமை இனிமேலும் வேண்டாம் என்றே தம்பி பிரபாகரன் முரண்பட்டு நின்ற பல்வேறு தமிழ்க் கட்சிகளை தூர நோக்கு சிந்தனையுடன் ஒன்றுசேர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார். ஆனால், பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு கொள்கை மாறி பிழையான வழியில் செல்ல முற்பட்டபோது அகில இலங்கை தமிழ் காங்கிரசும் பின்னர் ஈ.பி.ஆர்.எல். எவ் கட்சியும் வெளியேறி சுய நிர்ணய உரிமை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் மக்கள் பேரவையின் கீழ் ஒரு பொது நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் செயற்பட்டன.

தமிழ் மக்கள் பேரவையினால் நடாத்தப்பட்ட “எழுக தமிழ்” நிகழ்வுகள் உட்பட பல்வேறு செயற்திட்டங்களில் ஈ.பி.ஆர்.எல்.எவ் எம்மோடு ஒன்றாக உழைத்திருக்கின்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அவ்வாறே உழைத்திருக்கின்றது. அதன் தலைவரின் மூன்று தலைமுறைகளுடன் தொடர்பு வைத்திருந்தவன் நான். அதேவேளை, தமிழ் மக்கள் கூட்டணியை உருவாக்கிய பின்னர் எமது கொள்கைகளை ஏற்று ஒன்றாக செயற்பட்டு எமது மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு என்னுடன் கைகோர்க்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வெளியே நிற்கும் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தேன். 

இதற்கு ஈ.பி.ஆர்.எல். எவ், தமிழர் சுயாட்சி கழகம், பசுமை கட்சி ஆகிய கட்சிகள் உடனடியாகவே தமது விருப்பத்தைத் தெரிவித்திருந்தன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனும் இது தொடர்பில் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.

நான் தமிழ் மக்கள் கூட்டணியின் ஸ்தாபகராக இருந்து கொண்டு இன்றைய இந்த ஈ.பி.ஆர்.எல். எவ். கட்சியின் மாநாட்டில் கலந்துகொள்வது சரியா என்று கேட்டு எனது மின்னஞ்சலுக்கு பலர் கேள்விகளை அனுப்பி இருக்கின்றார்கள். சிலர் இவ்வாறு நான் கலந்து கொள்வது தவறு என்ற கருத்தையும் தெரிவித்துள்ளார்கள். இந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கான எனது பதிலை வழங்குவது பொருத்தமானது என்று கருதுகின்றேன்.

தமிழ் மக்கள் கூட்டணியின் செயற்பாடுகளை நான் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் பிராந்திய மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு எனக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு நான் அதனை ஏற்றுக்கொண்டு விட்டேன். அத்துடன், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் கூட்டங்களில் ஏற்கனவே நான் கலந்து கொண்டிருந்தமையையும் சற்று நேரத்திற்கு முன்னர் கூறியிருந்தேன். எனவே ஈ.பி.ஆர்.எல்.எவ் களம் எனக்கு புதிதல்ல.

தம்பி பிரபாகரன் உணர்த்தியதைப் புரிந்துகொண்டே நாம் செயற்பட முன்வர வேண்டும்!

கடந்த கால கசப்பான சம்பவங்களை மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டு “நான் சுற்றவாளி நீ குற்றவாளி” என்று ஒருவரோடு ஒருவர் நாம் மோதிக்கொண்டிராமல் ஒரு கொள்கையின் கீழ் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படுவதே காலத்தின் தேவை என்பதை அன்று தம்பி பிரபாகரன் உணர்த்தியதைப் புரிந்துகொண்டே நாம் செயற்படவேண்டும். இதனையே மக்கள் விரும்புகின்றார்கள். “குற்றம் பார்க்கில் சுற்றமில்லை” என்பது ஆன்றோர் வாக்கு. இந்த அடிப்படையில்த் தான் நான் இன்றைய இந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கின்றேன்.

தமிழ் மக்களின் அபிலாசைக்கு எதிராக செயற்படுவோரை வெளியேற்றும் முன்னேற்பாடுகளுடன் புதிய ஐக்கிய முன்னணியை உருவாக்கப்படும்!

கடந்த காலத்தில் நாம் விட்ட தவறுகளை உணர்ந்தவர்களாக, கடந்த காலத்தில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டவர்களாக, ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை அடிப்படையில் நாம் பல கட்சிகளுடன் இணைந்து செயற்பட விருக்கின்றோம். எமது மக்களின் நீண்டகால அபிலாஷைகளைப் பாதிக்கும் வகையிலோ அல்லது கொள்கைகளுக்கு முரணாகவோ எம்மோடு சேர்ந்து பயணிப்பவர் எவராவது செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு நானும் விதிவிலக்கல்ல.

அமையவிருக்கும் கூட்டணியின் ஒழுக்க விதிகள் மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கை என்பவை பற்றி நாம் விரிவாக ஆராய்ந்து விரைவில் முடிவுகளை எடுப்போம்.

தம்பி பிரபாகரன் செய்ததை ஏன் எம்மால் செய்ய முடியாது?

கடந்த காலப் பிழைகளை நாம் தொடர்ந்தும் செய்யாதிருப்பதற்கு நாம் யாவரும் சேர்ந்து உழைக்க முன்வர வேண்டும். Toerr is human to forgive is Divine என்பார்கள். பிழை செய்வது மனித சுபாவம் மன்னித்தல் தெய்வ சுபாவம் என்பார்கள். யார் பிழை செய்தோம் என்பது முக்கியமல்ல. யாரேனும் பிழைகள் செய்திருந்தால் அவற்றை மன்னித்து கொள்கைகள் அடிப்படையில் சேர்ந்து முன்னேறுவதே நாம் தமிழ் மக்களுக்கு செய்யக் கூடிய பலத்த சேவையாகும். இதனைத் தம்பி செய்தார். ஏன் எம்மால் முடியாது? தம்பியின் மிகப் பெரிய எதிரி அந்தக் காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ்வே!

எம்மை நாமே அழிக்கும் வகையிலேயே கூட்டமைப்பின் பாதை அமைந்துள்ளது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் நோக்கம் எனக்கு இல்லை என்று பல தடவைகள் குறிப்பிட்டிருக்கின்றேன். எவருடனும் எமக்குத் தனிப்பட்ட குரோதமோ, பொறாமையோ, காழ்ப்புணர்வோ இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சகலரையும் எனது உடன் பிறந்தோராகத் தான் இன்னமும் கருதுகின்றேன். எனினும் அவர்கள் இட்டுச் செல்லும் வழி தவறானது என்று கூற எமக்கு ஒரு கடப்பாடு உள்ளது. நாம் போகும் வழி தவறானது என்றால் அந்த வழியில் பயணிக்க

வந்தவர்கள் எவருமே அதைச் சுட்டிக் காட்ட கடப்பாடு உடையவர்கள். கூட்டமைப்பு தற்போது செல்லும் பாதை எம்மை நாம் அழித்துக்கொள்வதற்கு வழி வகுக்கும் என்பதே எமது கணிப்பீடு.

ஆகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய செயற்பாடுகளில் உடன்பாடு இல்லாமல் தனிப்பட்ட ரீதியில் எவரும் எம்முடன் இணைய விரும்பினால் அவர்களை அரவணைக்க நாம் தயார் என்று நான் முன்னர் கூறியதை மீண்டும் வலியுறுத்துகின்றேன்.

பொதுமக்கள், கூட்டுக் கட்சிகள், சங்கங்கள் மற்றும் நலன் விரும்பிகளின் ஆலோசனைகள் மற்றும் காத்திரமான விமர்சனங்களை எல்லாம் சற்றும் கருத்தில் கொள்ளாமல் ஒரு சில தனி நபர்களின் விருப்பு வெறுப்புக்களுக்கு அமையவே இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது. அரசாங்கத்துடன் இணக்கப்படுவது ஒன்றும் அதுபற்றி மக்களுக்கு கூறுவது இன்னொன்றுமாகத் தொடர்ந்தும் ஏமாற்று அரசியலைச் செய்துவருகின்றது. அது எமக்கே உலை வைக்கும் செயல் என்பதே எமது புலனுணர்வு  என  விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Leave Comments

Comments (0)