பிரித்தானிய பிரதிநிதியுடன் கருத்து மோதலில் ஈடுபட்ட விக்னேஸ்வரன்

/files/detail1.png

பிரித்தானிய பிரதிநிதியுடன் கருத்து மோதலில் ஈடுபட்ட விக்னேஸ்வரன்

  • 0
  • 0

பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான திணைக்களத்தின் தலைவரும், இந்தியாவுக்கான இணைப்பாளருமான பேர்கஸ் ஔல்ட், வட மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியபோது கருத்து மோதலில் ஈடுபட்டதாகவும் விக்னேஸ்வரன் அவர்களுக்கு தக்க விளக்கம் அளித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்புக்குறித்து வடக்கின் முன்னாள் முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்த சந்திப்பின்போது பேர்கஸ் ஔல்ட்,  தமிழ் மக்களின் அரசியல் தொடர்பில் தெரிவித்த சில கருத்துக்களுடன் உடன்பட மறுத்த விக்னேஸ்வரன் அவர்களுக்கு தமிழ்மக்களின் நிலைகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அன்மையில் விக்னேஸ்வரன் ஆரம்பித்த கட்சி குறித்து பேர்கஸ் ஔல்ட் விளக்கம் கேட்டார். அதற்கு விக்னேஸ்வரன், வாக்கு கேட்டு மக்களிடம் செல்லும் போது,ன்அவர்களுக்கு அதிக வாக்குறுதிகளை கொடுத்து விட்டு குறைந்தபட்ச வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு தமிழ் தலைவர்கள் அரசாங்கத்திடம் கேட்கின்றனர்.ம்இவ்வாறான நிலையினை மக்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டிய சூழல் உளளது. மேலும் 2000 வருடங்களுக்கு மேலான தமிழர்களின் பாரம்பரியத்தை காக்க வேண்டிய சூழலும் உள்ளதெனக் கூறினார்.

இதற்கு பேர்கஸ் ஔல்ட் அவர்கள் பிரித்தானியாவில் பல நாடுகளில் இருந்தும் மக்கள் தம் நாட்டுக்கு வந்து தம்முடைய வாழ்க்கையுடன் ஒன்றிணைந்து ஒற்றுமையாக நாட்டை முன்னேற்றிச் செல்வதாக கருத்து கூறியதுடன் தனித்துவத்தை நீங்கள் பேண எத்தனிப்பது சரியான ஒரு விடயம் என்று தமக்குப் படுவதாகத் தெரியவில்லை என்று கூறினார். அதற்குப் பதில் அளித்த விக்னேஸ்வரன்,வெளிநாடுகளில் இருந்து எத்தனைபேர் வந்தாலும் நாட்டின் அதிகாரம் பிரித்தானிய நாட்டு மக்களின் கைகளிலேயே அமைந்துள்ளது என்றும் ஒரு நாட்டின் அரசியல் நீரோட்டத்தில் மற்றவர்கள் இணைந்து செயற்படுவது வேறு தம் நாட்டிலேயே இரண்டாந் தரப் பிரஜைகளாகத் தமிழர்கள் வாழ்ந்து வரும் நிலை வேறு என்றும் கூறினார். அதற்கு திரு பேர்கஸ், பிரித்தானியாவின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இவ்வாறான வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், உதாரணமாகத் தமிழர்கள், பெரும் பங்காற்றி வருகின்றார்கள் என்றும் ஏன் அதேவாறு தமிழ் மக்களும் நாட்டின் அரசியல் நீரோட்டத்தினுள் நுழைந்து பங்காற்ற முடியாது என்றும் கேட்டார்.

அதற்கு விக்னேஸ்வரன் , எம் நாட்டிலேயே எம்மை இரண்டாந்தரப் பிரஜைகளாக்கிவிட்டு எம்மை நாட்டின் அரசியல் நீரோட்டத்துடன் சேரச் சொல்வது முறையானதாக எனக்குப்படவில்லை.  கிணற்றின் உள்ளே ஒருவரை வைத்துக் கொண்டு கிணற்றுக்கு வெளியே மற்றொருவர் நின்று கொண்டு ஏன் என்னோடு ஒருமித்து செயற்பட மறுக்கின்றீர்கள் என்று கேட்பது போல் இருக்கின்றது உங்கள் கேள்விஎன்று கூறினார்.

மேலும், தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகள் திரும்பவும் கையளிக்கப்பட்டதன் பின்னர் நீங்கள் கூறுவது போல் எம்மாலும் நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார நீரோட்டத்தினுள் உள்ளீர்க்கப்பட்டு செயலாற்ற முடியும் என்றும் கூறினார். ஆனால் முதலில் எங்களைக் கிணற்றினுள் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.

இராணுவத்தை வைத்துக் கொண்டு பக்கச்சார்பான சட்டங்களை வைத்துக் கொண்டு தமிழ் மக்களை அடிமைப்படுத்திக் கொண்டு தமது அரசியல் நீரோட்டத்தினுள் சேருமாறு சிங்கள அரசியல் தலைவர்கள் கோரினார்களேயாகில் அது சமத்துவ அடிப்படையிலான கோரிக்கை அன்று என்றும் விளக்கினார்.

எமது உரிமைகளை அரசாங்கம் தந்த பின்னர் நாம் மத்திய அரசாங்கத்துடன் சேர்ந்து செயலாற்ற முடியும். ஆனால் முதலில் எமது தமிழ்ப் பேசும் பிரதேசங்களான வடகிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டும். சர்வதேச சட்டத்தின் கீழ் உள்நாட்டு சுயநிர்ணய உரிமை எமக்கு இருப்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் தமிழ்ப் பேசும் மக்கள் வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சமஷ்டி முறையிலான ஒரு தீர்வை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றத்தின் இறுதியில், உங்கள் மக்களின் உரிமைகளுக்காக நீங்கள் போராடுவதாக இருந்தால் அதனை நான் பாராட்டுகின்றேன். உங்கள் எண்ணங்கள் ஈடேற வாழ்த்துகின்றேன் என்று கூறி சந்திப்பை முடித்துக் கொண்டார் பேர்கஸ் ஔல்ட்.

Leave Comments

Comments (0)