கொழுப்பெனும் நண்பன் 9

/files/detail1.png

கொழுப்பெனும் நண்பன் 9

  • 4
  • 0

-அ.ப.ஃபரூக் அப்துல்லா

இந்த பகுதி முழுவதும் நீரிழிவைப் பற்றி விரிவாகக் காண்போம் வாருங்கள்.

நீரிழிவு என்பது ஒரு நோயன்று அது நம் உடலில் உள்ள கணையம் என்ற உறுப்பில் இருந்து சுரக்கப்படும் இன்சுலின் எனும் ஹார்மோனின் குறைபாடு அல்லது சரியாக அது தனது பணியை செய்யாமல் இருப்பதால் வருவதாகும். இன்சுலின் ஹார்மோன் சுத்தமாக சுரக்காமல் போவதை டைப் ஒன்று டயாபடிஸ் என்றும் இன்சுலின் சுரந்தாலும் சரியாக வேலை செய்யாமல் இருப்பதை டைப் டூ டயாபடிஸ் என்றும் அழைக்கிறோம். டைப் ஒன்று டயாபடிஸ்க்கு கட்டாயம் வெளியில் இருந்து நாம் இன்சுலினை கொடுக்க வேண்டும். டைப் டூ டயாபடிஸ் குறைபாடு உள்ளவருக்கு இன்சுலினை சரியாக வேலை செய்ய வைக்கும் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இன்றைய சூழலில் இந்தியாவில் மட்டும் சுமார் 8 கோடி நீரிழிவு நோயாளிகள் வாழ்ந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை 2030 இல் இரட்டிப்பாகும் என்கின்றன ஆய்வுகள். நீரிழிவு எனும் இந்த குறைபாட்டை அறிவது எப்படி?

ஒருவருக்கு நீரிழிவு இருப்பதை பின்வரும் அறிகுறிகள் மூலம் அறியலாம். தண்ணீர் எவ்வளவு குடித்தாலும் தீராத தாகம் எடுக்கும். நா வறட்சி காணப்படும். எப்போதும் வயிறு பட்டினியாய் இருப்பதைப்போன்றே அகோரப்பசியாக இருக்கும்.  அது வரை அதிகரித்து வரும் உடல் எடை திடீரென குறையும். அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டே இருப்பார்கள். இவையனைத்தும் நீரிழிவின் பொதுவான அறிகுறிகளே ஆகும். இன்றைய சூழ்நிலையில் பலருக்கு அறிகுறிகளே இல்லாமல் நீரிழிவு நோய் வருகிறது. ஒரு மாஸ்டர் ஹெல்த் செக் அப் செய்யும் போதோ அல்லது பல் பிடுங்கும் போதோ அல்லது கண் புரை அறுவை சிகிச்சைக்கு முன்போ செய்யப்படும் ரத்த பரிசோதனையில் தான் பலருக்கும் நீரிழிவு இருப்பது கண்டறியப்படுகிறது. சிலருக்கு புண் வந்தால் ஆறுவதற்கு நீண்ட நாட்கள் ஆகும். சிலருக்கு பிறப்புறுப்பில் அடிக்கடி புண்கள் வெடிப்பு காயம் என்று ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் . இவையும் நீரிழிவின் அறிகுறிகளாய் இருக்கலாம்.  நீங்கள் முப்பது வயதுக்கு மேல் உள்ளவராய் இருந்தால் வருடம் ஒரு முறையேனும் உங்கள் Hba1c அளவுகளை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. அது என்ன Hba1c ? நம் ரத்தத்தில் கடந்த மூன்று மாதங்களாக எந்த அளவு சர்க்கரை இருந்தது என்பதை சொல்லும் ஒரு பரிசோதனை. இந்த பரிசோதனை தான் நீரிழிவு நோயை கண்டறிய தற்போதைய முக்கியம் வாய்ந்த பரிசோதனையாக முன்னிறுத்தப்படுகிறது. இத்துடன் காலை வெறும் வயிற்றிலும் உணவு சாப்பிட்ட பின் இரண்டு மணிநேரம் சென்ற பின் பரிசோதனையும் செய்தால் நம் நீரிழிவு நோயின் நிலவரம் தெரிந்து விடும். Hba1c எப்போதும் 5.5 என்ற அளவுக்கு உள் இருக்க வேண்டும் . 5.5 முதல் 6 இருப்பதை Impaired glucose tolerance என்று கூறுவோம். அதாவது இன்சுலின் சரியாக வேலை செய்ய மறுக்கும் ஆரம்ப நிலை என்று பொருள். 6 க்கு மேல் 7 க்குள் இருந்தால் ஆரம்ப நிலை நீரிழிவு . 7 முதல் 8 .. அடங்காத நீரிழிவு 

8 க்கு மேல் என்றால் அது ஆபத்தான நீரிழிவு. 

ஏன் ரத்த சர்க்கரையை நாம் சரியாக பேண வேண்டும்? நம் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் நான் மாவுச்சத்தை முக்கிய உணவாக உண்ணும் போது க்ளூகோஸ் எனும் மூலப்பொருள் தான் எரிபொருளாக கொடுக்கப்படும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே . அதைப்போல தேவைக்கு மேல் ரத்தத்தில் க்ளூகோஸ் இருந்தால் தேவைக்கு மேல் செல்களுக்கும் க்ளூகோஸ் புகட்டப்படும். இது செல்கள் அனைத்தையும் பிரச்சனைக்குள்ளாக்குகிறது. முக்கியமாக நமது உறுப்புகளான சிறுநீரகம், நரம்பு மண்டலம் , இதயம், கண்கள் , ரத்த நாளங்கள் என்று அனைத்தையும் செயல் இழக்கச்செய்யும் அளவு இந்த நீரிழிவின் தன்மை இருக்கிறது.

ரத்த சர்க்கரை மிகவும் அதிகமானால் அதை வடிகட்டி வெளியேற்றும் நமது சிறுநீரகம் நாளடைவில் பழுதடைகிறது. இதை டயாபடிக் நெஃப்ரோபதி என்கிறோம். இந்த சிறுநீரக நோய் தான் பல நீரிழிவு நோயாளிகளை பிரச்சனைக்குள்ளாக்கி டயாலிசிஸ் பின்பு மரணம் வரை கொண்டு செல்கிறது . நமது கை கால்களின் நரம்பு மண்டலத்தை பாதித்து அதன் ரத்த ஓட்டத்தை குறைத்து ஒரு வித மதமதப்பு தன்மை பிறகு உணர்ச்சி இன்மையை கொண்டு வருகிறது. இதை டயாபடிக் நியூரோபதி என்கிறோம். ஒரு காலத்தில் காலில் செருப்பு கூட நிற்காமல் கழன்று கழன்று நலுவும் அளவு நோய் முத்திப்போகும். கால்களில் ஏற்படும்  புண்கள் அந்த நோயாளிக்கு தெரியாது. வலியும் இராது. அந்த புண் நன்றாக கிருமி வைத்து முற்றிப்பெரிதாகி கால்களை அகற்றும் நிலை வரை கொண்டு வந்து விடும். கண்களின் விழித்திரை எனும் ரெட்டினாவை பாதிப்புக்குள்ளாக்கி நிரந்தர குருடராய் அலைய விடும் அளவு நீரிழிவு கொடிய நோயாகும். 
\r\nஇதை டயாபடிக் ஆப்தால்மோபதி என்போம். 

நன் கூறிய இந்த நோய்கள் அனைத்தும் ஓரிரு வருடங்களில் தோன்றுவது இல்லை. சிறிது சிறிதாக அந்த உறுப்புகளை அழித்து முழுமையாக உறுப்பை சீரழிக்க முப்பது வருடங்கள் வரை கூட நீரிழிவு எடுத்துக்கொள்ளும். இப்போது ஒருவருக்கு முப்பது வயதில் நீரிழிவு வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அவர் தனது ஐம்பது வயது வரை கூட வெளியில் எந்த பிரச்சனையும் இன்றியே இருப்பார் ஆனால் தனது ஐம்பது வயதுக்கு மேல் உள்ள காலத்தை மண்ணில் நரகம் போல் கழிக்க நேரிடும். காரணம் நீரிழிவினால் செயல் இழந்த உறுப்புகளை மீண்டும் சரி செய்ய இயலாது. நீரிழிவினால் ஒருவருக்கு கிட்னி முழுவதுமாக பழுதடைந்து விட்டால் அந்த கிட்னிகளை சீர்செய்ய இயலாது , வேறு ஒருவரிடம் வாங்கிய கிட்னிகள் தான் பயன்படும். வாழ்க்கையில்  நம் பகலவன் கூட நமக்கு சில நேரங்களில் பரிவும் இரக்கமும் காட்டுவான். ஆனால் இந்த நீரிழிவு நோய் இரக்கம் காட்டுவதே இல்லை. இப்படிப்பட்ட இந்த நீரிழிவை பற்றிய விழிப்புணர்வு நம் மக்களிடம் எவ்வளவு அதிகமாக இருக்க வேண்டும் ? ஆனால் ஆரம்ப நிலை அறிவு கூட இல்லை என்பதே உண்மை. 

நீரிழிவு என்பது மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட்ஸை செரிமானம் செய்வதில் உடலில் ஏற்படும் கோளாறு என்பதை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். பின்பு எந்தெந்த உணவுகளில் எல்லாம் மாவுச்சத்து நிறைந்துள்ளது ? எதை உண்ணலாம்.? எதை தவிர்க்கலாம்? கொழுப்பு மீது ஏற்படுத்தப்பட்டதவறான களங்கம்? இவையனைத்தையும் பற்றி மக்களுக்கு உணர்த்த வேண்டும். மாவுச்சத்து என்பது நாம் உண்ணும் அனைத்து உணவுகளிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது. ஒரு நீரிழிவு நோயாளி தான் தினமும் உண்ணும் உணவில் 20 கிராம் முதல் 40 கிராம் வரை மாவுச்சத்து உண்டால் போதுமானது. ஆனால் நாம் நமது அன்றாட உணவு முறையில் 300 முதல் 400 கிராம் மாவுச்சத்து சாப்பிடுகிறோம். தேவைக்கு மேல் இருமடங்கு சாப்பிட்டால் கூட பரவாயில்லை. தேவைக்கு மேல் பத்து மடங்கு சாப்பிடுவதால் தான் நீரிழிவு இத்தனை வேகமாக சமூகத்தில் பரவி வருகிறது.இந்த நீரிழிவு நோய்க்கு பேலியோ வழி விடை காண்போம் வாருங்கள்.  

நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள் பின்வருமாறு..- அரிசி , கோதுமை , சிறுதானியங்கள் போன்ற மாவுச்சத்து நிரம்பிய தானியங்களை தவிர்க்க வேண்டும் . பழங்களில் இருப்பது கெட்ட சர்க்கரையான ஃப்ரக்டோஸ் ஆகும் . இது நம் கல்லீரலை பழுது செய்யும் தன்மை கொண்டாதாக இருப்பதால் இனிப்பு நிறைந்த பழங்களை கட்டாயம் தவிர்த்தாக வேண்டும். மண்ணிற்கு கீழ் விளையும் காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகைளை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொறித்த உணவுகள், பண்டங்கள், குளிர்பானங்கள், சாக்லேட், கேக்குகள் போன்றவற்றை விட்டு வெகுதூரம்  சென்றுவிட வேண்டும். அது சரி நாம் இதுவரை தினமும் சாப்பிட்டு வந்த உணவுகளை வேண்டாமென்று கூறிவிட்டோம். பிறகு நீரிழிவு நோயாளிகள் எதைத்தான் உண்பது? 

மாவுச்சத்து சிறிதும் இல்லாத முட்டைகள் , மாமிசம் போன்றவற்றை உண்ணலாம். மாவுச்சத்து குறைவான பச்சை காய்கறிகள் , பால் மற்றும் பால் பொருட்களான வெண்ணெய், நெய் , பனீர் போன்றவற்றை உண்ணலாம். இதுவரை தீண்டத்தகாதவை என்று ஒதுக்கி வைத்த உணவுகளில் தான் நீரிழிவிற்கான தீர்வு இருக்கிறது. பேலியோ உணவு முறையை கடைபிடிக்கும் நீரிழிவு நோயாளிகள் தினமும் காலை உணவாக 4 முட்டைகளை உண்ணலாம். முட்டைகளில் துளி மாவுச்சத்து இல்லை. சைவ உணவு உண்பவர்கள் பாலில் வெண்ணெய் கலந்து பருகலாம் அல்லது பாதாம் பருப்பு உண்ணலாம். 

மதியம் 250 கிராம் அளவு நார்ச்சத்துள்ள காய்கறிகளை உண்ணலாம். இரவு – 200 முதல் 300 கிராம் மாமிசம் உண்ணலாம். மாமிசத்தில் மாவுச்சத்து இல்லை. புரதம் மற்றும் நல்ல கொழுப்பு உள்ளது. சைவ உணவு உண்பவர்கள் 200 கிராம் அளவு பனீர் சாப்பிடலாம். உணவுக்கு இடையில் உண்ணப்படும்   ஸ்நேக்ஸாக கொய்யாகாய், வெள்ளரிக்காய், நெல்லிக்காய் , தேங்காய் போன்றவற்றை உண்ணலாம். உப்பு கலந்த லெமன் ஜூஸ் பருகலாம்.  

 இப்படி பேலியோ உணவு முறையில் நீரிழிவு நோயாளி உண்ணும் பொழுது தனது ரத்த சர்க்கரை அளவுகள் நன்றாக குறைவதை காணலாம். இது பலரும் உணர்ந்து பார்த்த உண்மை.  குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறையால் நீரிழிவு எனும் குறைபாட்டை முழுவதுமாக களைய முடியும். பேலியோ உணவு முறைக்கு வந்த பலர் நீரிழிவு மாத்திரைகளை முழுவதுமாக நிறுத்தி உள்ளனர். பலருக்கு குறைந்த அளவிலான மாத்திரைகளிலேயே நல்ல கண்ட்ரோல் கிடைக்கிறது. உங்கள் உறவினர்கள், நண்பர்கள் யாரேனும் கட்டுக்கடங்காத நீரிழிவினால் பாதிப்புக்குள்ளாகியிருந்தால் அவர்களுக்கு நீங்கள் தாராளமாக பேலியோவை பரிந்துரை செய்யலாம். 
\r\nபேலியோவை தொடர விரும்பும் ஒரு நீரிழிவு நோயாளி என்ன செய்ய வேண்டும் என்பதை அடுத்த வாரம் விரிவாக காண்போம் 

\r\n

Leave Comments

Comments (0)