கொழுப்பெனும் நண்பன் 8

/files/detail1.png

கொழுப்பெனும் நண்பன் 8

  • 1
  • 0

-அ.ப.ஃபரூக் அப்துல்லா

பேலியோ உணவு முறையில் தவிர்க்க வேண்டிய உணவுகளை கண்டோம். தற்போது பேலியோவில் அனுமதிக்கப்பட்ட உணவுகளையும் அதன் பயன்களையும் காண்போம். பேலியோ உணவு முறையில் நமது உடலுக்கு தேவையான கொழுப்பை தரும் உணவுகளை உண்ண வேண்டும். நமது அன்றாட உணவில் புரதச்சத்து சரியான அளவில் இருக்கிறதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

பேலியோ உணவு முறையில் பிரதான இடம் வகிப்பது மாமிசம். ஆதிகால மனிதன் உண்ட ஒரே உணவு - மாமிசம் மட்டுமே. தினமும் அதிகாலை எழுந்து வேட்டைக்கு செல்லும் அவன் பொழுது புலர்கையில் வேட்டையாடிய மிருகத்தை கொண்டு வந்து தீயில் வாட்டி உண்டான். ஆகவே மாமிசமானது நமது தொன்மையான உணவு. நமது மரபணுக்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட உணவு. மாமிசம் என்பது தோலுடன் சேர்த்து உண்ணப்பட வேண்டும். தோலில் தான் நமக்கு தேவையான கொழுப்பு அதிகமாக அடங்கியுள்ளது .

மாமிசத்தில் புரதமும் கொழுப்பும் அதிக அளவில் நிறைந்துள்ளது. கோழிக்கறியை தோலுடன் உண்பது சிறந்தது. ப்ராய்லர் மற்றும் நாட்டுக்கோழி இரண்டில் நாட்டுக்கோழி சிறந்தது. ஆனால் நடைமுறையில் ப்ராய்லர் கோழியே எளிதாகவும் குறைந்த செலவில் கிடைப்பதால் ப்ராய்லர் உண்பதில் பிரச்சனை இல்லை. ப்ராய்லர் கோழிகளுக்கு ஆண்டிபயாடிக்குகள் போடப்படுகின்றன. அது உண்மை. ஆனால் அந்த கோழிகள் நமக்கு உணவாக வருவதற்குள் அதன் உடலில் போடப்பட்ட ஆண்டிபயாடிக்குகள் செயல் இழந்து விடுகின்றன. மேலும் அவற்றுக்கு ஸ்டீராய்டு ஊசி போடுகிறார்கள் போன்ற வாதங்களில் உண்மை இல்லை.

ப்ராய்லர் கோழி இனமே நன்றாக கொழுத்து வளர்வதற்கு ஏற்றவாறு மரபணுமாற்றம் செய்யப்பட்டவை தான்.ஆகவே அவை கொழுத்து வளர எந்த ஊசியும் தனியாக தேவை இல்லை. தற்போது நாட்டுக்கோழி என்று விற்கப்படும் பல இடங்களிலும் கோழிகள் கூண்டில் வைத்தே தீவனம் போட்டு வளர்க்கப்படுகின்றன. ஆகவே ப்ராய்லர் கோழியை உண்பதில் பெரிய பிரச்சனைகள் இருப்பதாக தெரியவில்லை. ஆடு , மாடு போன்ற பெரிய விலங்குகளின் மாமிசங்களையும் உண்ணலாம். இவற்றில் இருந்து கிடைக்கப்படும் கறி " சிவப்புக்கறி" எனும் red meat வகையைச் சேர்ந்தது. இதில் புரதம் மற்றும் ப்யூரின் அமிலம் அதிகமாக இருக்கும். மீன் இனத்தில் அனைத்து மீன்களும் உண்ணலாம். மற்ற கடல்சார் உயிரினங்களான நண்டு, இறால் போன்றவற்றையும் உண்பதற்கு தடையில்லை. பேலியோவில் பெரிதாக பரிந்துரைக்கப்படும் மற்றொரு உணவு - முட்டை. முட்டையில் உள்ள புரதமானது நமது உடலினால் 100% உட்கொள்ளப்படுகிறது. இதை 100% பயோ அவாய்லபிளிட்டி என்பார்கள். மேலும் முட்டையில் நமக்கு தேவையான நல்ல கொழுப்பு மற்றும் விட்டமின்கள் நிரம்பியுள்ளன.

ஒரு சராசரி பேலியோ உணவு கடைபிடிப்பவர் ஒரு நாளைக்கு ஐந்து முட்டை உண்பார். முட்டையை மஞ்சள் கருவோடு சேர்த்து தான் உண்ண வேண்டும். வெள்ளையை மட்டும் சாப்பிட்டுவிட்டு மஞ்சளை ஒதுக்குவது தவறு. காய்கறிகளில் பச்சை மற்றும் இலைகள் நிரம்பிய காய்கறிகள் , கீரை வகைகள் ஆகியவை பேலியோவில் கட்டாயம் உண்ண வேண்டிய ஒன்று. இந்த காய்கறிகள் மூலம் கிடைக்கும் விட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் இவற்றுடன் இந்த காய்கறிகளில் உள்ள நார்ச்சத்து நமக்கு இன்றியமையாதது. கொட்டை வகைகளில் பாதாம் , பிஸ்தா மற்றும் வால்நட் ஆகியவற்றை உண்ணலாம். பால் மற்றும் பால் பொருட்களை சைவம் மட்டும் கடைபிடிக்கும் மக்களின் தேவைக்காக பேலியோவில் கொண்டு வந்துள்ளோம். பால், வெண்ணெய், நெய், பனீர் போன்றவை கொழுப்பு நிறைந்த உணவுகளாக அதே சமயம் புரதம் குறைந்த உணவுகளாகும்.தினமும் கட்டாயம் மூன்று முதல் நான்கு லிட்டர் நீர் அருந்த வேண்டும். நமது சிறுநீர் எப்போதும் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாறாமலும் எரிச்சல் கடுப்பு போன்றவை வராமலும் தண்ணீரை சரியான அளவு குடிக்க வேண்டும். ஆக பேலியோவில் தடுக்கப்பட்டதை விலக்கி ஆகுமானதைக் கொண்டு உணவு முறையை கடைபிடிப்பது நன்மை தரும்.அடுத்த பகுதியில் நீரிழிவுக்கான டயட் பற்றி காண்போம். 
\r\n 

\r\n

Leave Comments

Comments (0)