கொழுப்பெனும் நண்பன் பகுதி 1

/files/detail1.png

கொழுப்பெனும் நண்பன் பகுதி 1

  • 1
  • 0

-அ.ப.ஃபரூக் அப்துல்லா

கொழுப்பெனும் நண்பன்  பகுதி 1 

அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். 

அ.ப.ஃபரூக் அப்துல்லா எனும் நான் சிவகங்கையில் நவீன மருத்துவம் பயின்று சிகிச்சை அளித்து வருகிறேன். அரசு சுகாதார மற்றும் நோய் தடுப்பு துறையில்  திட்ட அலுவலராக பணிபுரிகிறேன். இந்த தொடரின் மூலம் கொழுப்பு எனும் இன்றியமையாத சத்தின் மேல் மக்கள் கொண்டிருக்கும் ஐயத்தையும் அச்சத்தையும் போக்க முயற்சி செய்ய இருக்கிறேன். இந்த தொடரில் கொழுப்பினால் நமக்கு ஏற்படும் நன்மைகள்? ஏன் கொழுப்பு வில்லனாக்கப்பட்டது? மாவுச்சத்தினால் ஏற்படும் தீமைகள் என்ன? போன்றவற்றை விரிவாக எழுத இருக்கிறேன். இந்த பயணத்தில் நமது முன்னோர்கள் வாழ்க்கை முறை , ஆதி மனிதன் உணவு பழக்கம் போன்றவற்றையும் , நமது உணவுப் பழக்கம் எவ்வாறு நமக்கு பல்வேறு நோய்களை கொண்டு வந்தன என்பதைப் பற்றியும் காணலாம். 

நாம் உண்ணும் உணவுப்பொருளை அதில் இருந்து கிடைக்கும் சத்தின் அடிப்படையில் மூன்று பிரிவாக பிரிக்கலாம். 

1. மாவுச்சத்து எனும் carbohydrates 

2. புரதச்சத்து எனும் proteins 

3. கொழுப்புச்சத்து எனும் fats 

இந்த மூன்று சத்துகளில் நமக்கு மிகவும் தேவையான சத்து – புரதச்சத்து. நமது உடலின் ஒவ்வொரு செல்லும் புரதச்சத்தினால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. 

நமது மரபணுக்கள் சரியாக தகவமைத்துக்கொள்ள புரதம் தேவை. நமது தசைகளுக்கு வலிமை சேர்ப்பது புரதச்சத்தாகும்.  மனிதனுக்கு இன்றியமையாத சத்து புரதம். புரதம் சரியாக கிடைக்கவில்லையெனில் நமது உடல் இளைத்து மெலிந்து எலும்பும் தோலுமாக மாறிவிடும். 

மாவுச்சத்து என்பது இன்று நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகளில் நிறைந்து காணப்படுவது. நமக்கு நாளொன்றுக்கு 40 முதல் 50 கிராம் தான் மாவுச்சத்து தேவை. இருப்பினும் நாம் உண்பதோ 400 கிராம் மாவுச்சத்து. கிட்டத்தட்ட பத்து மடங்கு மாவுச்சத்தை தேவைக்கு அதிகமாக உண்கிறோம். 

கடைசியாக நமது அட்டவணையில் வருவது கொழுப்புச்சத்து . 

கொழுப்பை கண்டாலே காத தூரம் ஓடுகிறோம். கொலஸ்ட்ரால் என்றால் மரண பீதியடைகிறோம். தேங்காய் எண்ணெய் , நெய் போன்றவற்றின் உபயோகிப்பை அறவே நிறுத்தி விட்டோம் . முட்டை என்றால் கூட வெறும் வெள்ளை கரு மட்டும் உண்கிறோம். மஞ்சள் கரு தின்றால் இதயம் அடைத்து விடும் என்று பயம். நீரிழிவு மற்றும் ரத்த கொதிப்பு வந்தவர்கள் கூட மாமிசம் உண்பதை அறவே நிறுத்தி விட்டு முழு சைவர்களாக மாறி வருவதை காணமுடிகிறது. இது அனைத்தும் காட்டுவது ஒன்றைத் தான் . நம்மை கொழுப்பு கொன்று விடுமோ ? எங்கு இதயம் அடைத்து ஹார்ட் அட்டாக் வந்து விடுமோ என்ற பயம் தான் காரணம். இப்படி ஒரு திட்டமிடப்பட்ட பொய் களங்கம் கொழுப்பின் மீது படியக் காரணங்களை இத்தொடரில் ஆராய்வோம்.  

நமது உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்களின் வெளிப்புறச்சுவர் ( ப்ளாஸ்மா மெம்ப்ரேன்) உருவாக கொழுப்பு கட்டாயத்தேவை. மேலும், ஆண்மை பெண்மைக்கான ஹார்மோன்களான டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஆண்ட்ரோஜென் போன்றவை கொழுப்பினால் ஆன ஹார்மோன்களாகும். இத்தகைய முக்கிய வேலைகளை செய்யும் கொழுப்புணவை காரணமே இன்றி நாம் ஒதுக்குகிறோம். இது தவறு. 

உங்களுக்கு தெரியுமா 19ஆம் நூற்றாண்டில் நீரிழிவு வந்தவர்களுக்காக மருத்துவர்கள் பரிந்துரைத்த உணவு முறையில் கறி, மீன் , முட்டை, நார்ச்சத்துள்ள காய்கறிகளை அதிகம் உண்ணும் படியும் அரிசி, கோதுமை, சர்க்கரை போன்றவற்றை அறவே தவிர்க்கும்படியும் இருந்திருக்கிறது. இடையில் 1950 களில் அமெரிக்காவில் ஆன்சல் கீஸ் எனும் ஆராய்ச்சியாளர் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் செய்த ஆராய்ச்சியின் முடிவாக “ seven countries study “ என்ற ஒன்றை வெளியிட்டார். அதில் அவருக்கு தேவையான ஏழு நாடுகளில் கிடைத்த முடிவை வெளியிட்டார். அந்த முடிவு தான் நண்பனான கொழுப்பை வில்லனாக்கியது. அப்படி என்ன முடிவு அது? கொழுப்புணவை அதிகம் உண்ணும் இந்த ஏழு நாடுகளில் மாரடைப்பில் மக்கள் இறப்பது அதிகமாகியிருக்கிறது. மாவுச்சத்து நிறைந்த உணவுகளான தானியங்களை உண்ணும் நாடுகளில் மாரடைப்பு குறைவாக இருக்கிறது என்பதே. இந்த முடிவு வெளியே வந்து மருத்துவ உலகில் ஆரம்ப நாட்களில் பிரபலம் ஆகாமல் தான் இருந்தது.  

அப்போது உலகை உலுக்கும் ஒரு நிகழ்வு நடந்து ஆன்சல் கீசின் இந்த ஆய்வை மேலும் பிரபலப்படுத்தியது. என்ன நிகழ்வு அது.? அடுத்த பகுதியில் பார்ப்போம்.

\r\n

Leave Comments

Comments (0)