உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வாங்கிய விவசாயி மகள்

/files/detail1.png

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வாங்கிய விவசாயி மகள்

  • 0
  • 0

-V.கோபி

18 மாதங்களுக்கு முன்பு தான் தனது முதல் ஓட்டப்பந்தயப் போடியில் கலந்து கொண்ட, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயின் மகளான 18 வயதாகும் ஹீமா தாஸ், பின்லாந்து நாட்டில் நடைபெற்ற 20 வயதிற்குள்ளோர்களுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 400மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் பெற்று வரலாறு படைத்துள்ளார்.

தொடக்கத்தில் பதட்டத்தோடு ஓட ஆரம்பித்த ஹீமா, போகப் போக தனது வேகத்தை அதிகரித்து இறுதி 80மீ தூரத்தை மூன்று பேரை முந்திகொண்டு பந்தய தூரத்தை 51.46 நொடிகளில் ஓடி முடித்து வெற்றி பெற்றுள்ளார். 

இதன்மூலம் 20 வயதிற்குள்ளோர்களுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பாக தங்கப்பதக்கம் வாங்கியோர் பாட்டியலில் ஹீமாவும் இடம்பெற்றுள்ளார். ஆனால் இந்த பட்டியலில் ஓட்டப்பந்தயத்திற்காக தங்கம் வாங்கிய ஒரே வீர்ர் ஹீமா மட்டுமே. பட்டியலில் உள்ள மற்றவர்களின் விபரம்---- சீமா பூன்யா (வெண்கலம், தட்டு எறிதல்) நவ்ஜீத்கவுர் தில்லான் (வெண்கலம், வட்டு எறிதல்) நீரஜ் சோப்ரா (தங்கம், ஈட்டி எறிதல்).

ஹீமாவின் வளர்ச்சியை ஆரம்பத்தில் இருந்து பார்த்த அனைவரும், பின்லாந்தில் நடைபெறும் போட்டியில் முதல் மூன்று இடத்திற்குள் வருவார் என எதிர்பார்த்தனர். அதற்கேற்றார்ப்போல் முதல் தகுதிசுற்றிலும், அரையிறுதியிலும் மற்ற போட்டியாளர்களை விட விரைவாக ஓடினார். அமெரிக்கா மற்றும் ஜமைக்கா நாட்டு வீரர்களே ஓட்டப்பந்தயத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், அனைவரது கவனமும் ஹீமாவின் மேல் இருந்தது. 

“இறுதி வளைவில் முதல் மூன்று வீரராக ஹீமா இல்லாததை பார்த்து நான் கவலை அடையவில்லை. ஏனென்றால் கடைசி 80மீட்டரில் அவள் ஓடும் வேகத்தை யாரும் மிஞ்ச முடியாது” என்கிறார் ஹீமாவின் பயிற்சியாளரான நிப்பான் தாஸ்.

ஆரம்பத்தில் தனது வீட்டின் அருகே உள்ள வயலில் கால்பந்து விளையாடிய ஹீமா, உள்ளூர் பயிற்சியாளரின் அறிவுரையை கேட்டு ஓட்டப்பந்தயத்திற்கு மாறினார். அதன்பின்னர் மாவட்ட அளவிலான போட்டியின் போது ஹீமாவின் வேகத்தை பார்த்த விளையாட்டு மற்றும் இளைஞர் நல இயக்குனரகத்தில் பயிற்சியாளராக இருக்கும் நிப்பான் தாஸ், ஹீமாவை உடனடியாக குவஹாத்திக்கு வந்துவிடுமாறு கூறுகிறார்.

இது பற்றி கூறும் நிப்பான் தாஸ், “மலிவான ஷூவை போட்டு ஓடினாலும் அன்றைய போட்டியில் 100 மற்றும் 200மீ ஓட்டப்பந்தயத்தில் ஹீமா தங்கப்பதக்கம் பெற்றார். அவள் புயலைப் போல் ஓடினாள். இப்படியொரு திறமையை இதுநாள் வரை நான் பார்த்த்தில்லை. ஓட்டப்பந்தயத்தில் ஹீமாவிற்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்றும் அவளை உடனடியாக குவஹாத்திக்கு அனுப்புமாறும் அவளது பெற்றோரிடம் முறையிட்டேன். தங்களது ஆறு குழந்தைகளில் இளையவளான ஹீமாவை வெளியூருக்கு அனுப்ப அவர்களுக்கு சம்மதம் இல்லை. ஆனாலும் நான் வற்புறுத்தவே, இறுதியில் ஒத்துகொண்டனர்”.

அசாம் மாநில பயிற்சி மையத்தில் கால்பந்து மற்றும் குத்துச்சண்டை போட்டிகளுக்கே பயிற்சி கொடுக்கப்படுவதால் முதலில் ஹீமாவை சேர்க்க மறுத்துவிட்டனர். ஆனால் அவளது திறமையை பார்த்ததும் சேர்த்துகொண்டனர். அசாம் மாநிலம் இதுவரை எந்த ஓட்டப்பந்தய வீரரையும் உருவாக்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பயிற்சி மையத்தின் அருகிலேயே ஹீமா தங்குவதற்கு அறை ஏற்படுத்தி கொடுத்துள்ளார் நிப்பான் தாஸ்.

ஹீமாவிற்கு தொடர்ந்து உருதுணையாக இருந்துவரும் நிப்பான் தாஸ், “நான் அவளிடம் எப்போதும் சொல்வது ஒன்றுதான்: பெரிதாக ஆசைப்படு. ஏனென்றால் ஒரு சிலருகே கடவுள் திறமையை கொடுத்துள்ளார். ஹீமாவை ஆசிய விளையாட்டிற்கான தொடர் ஓட்ட அணியில் சேர்ப்பதே என்னுடைய ஒரே நோக்கமாக இருந்தது. ஆனால் தற்போது அவள் எல்லாவற்றையும் மிஞ்சி தனியொருவளாக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வாங்கியுள்ளார்”

Article Link: https://indianexpress.com/article/sports/sport-others/junior-athletics-worlds-from-assams-rice-fields-18-year-old-hima-das-gives-india-its-first-world-gold-on-track-5257409/

Leave Comments

Comments (0)