தமிழர்களின் அடையாளங்களைப் பாதுகாக்கத் தமிழக அரசு செலவு செய்யாதா?- தோழர் திருமுருகன் காந்தி 

/files/detail1.png

தமிழர்களின் அடையாளங்களைப் பாதுகாக்கத் தமிழக அரசு செலவு செய்யாதா?- தோழர் திருமுருகன் காந்தி 

  • 0
  • 0

 

தமிழரின் தொல் வரலாறு கண்டெடுக்கப்பட்ட கீழடி பகுதியை நிலத்தின் சொந்தக்காரர்களிடம் சரியான தொகையைக் கொடுத்து தமிழக அரசு வாங்கவேண்டும் என்று தோழர் திருமுருகன் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். 

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி வைகை நாகரீகத்தின் கீழடி தொல்லியியல் அகழாய்வு இடத்தை நூற்றுக்கும் மேற்பட்ட மே 17 இயக்கத் தோழர்களுடன் சென்று பார்வையிட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தோழர் திருமுருகன் காந்தி, "தமிழரின் தொல் வரலாறு கண்டெடுக்கப்பட்ட இந்த கீழடி பகுதியை நிலத்தின் சொந்தக்காரர்களிடம் சரியான தொகையைக் கொடுத்து தமிழக அரசு வாங்கவேண்டும். இந்த பகுதியைத் திருப்பி மூடாமல் அப்படியே –தோண்டப்பட்ட பகுதியை ‘சைட் மியூசியமாக’தள அருங்காட்சியமாக மாற்றவேண்டும். பள்ளிக்குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என எல்லோரும் எப்போதும் பார்வையிடும் இடமாக மாற்றவேண்டும் மற்றும் வெளிநாடு வெளிமாநிலத்திலிருந்து வருகை தரும் பார்வையாளர்களுக்கும் தமிழர்களின் தொல் வரலாற்றைக் காண அனுமதியளிக்கவேண்டும்.

இங்குக் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை மதுரையிலே வைப்பதற்கும் அதைப் பாதுகாப்பதற்கும் அருங்காட்சியகம் அமைத்தல் வேண்டும். இந்த அருங்காட்சியகம் தமிழக அரசு தனது சொந்த செலவில் அமைத்தல் வேண்டும். இதற்குத் தமிழக அமைச்சர் மத்திய அரசிடம் நிதி கேட்டிருப்பதாகக் கேள்விப் படுகிறோம் அதைத் தவிர்க்க வேண்டும். தமிழர்களின் அடையாளங்களைப் பாதுகாக்கத் தமிழக அரசு செலவு செய்யாதா? இல்லை தமிழ் மக்களிடம் நிதி திரட்டுங்கள் தரத் தயாராக இருப்பார்கள். மத்திய அரசிடம் இதற்கு நிதி பெற்று இதை மத்திய அரசிடம் தாரை வார்க்காதீர்கள். பிறகு சுதந்திரமான தமிழர்களின் ஆராய்ச்சிக்குத் தடையாக இருக்கும்.

முதல் மூன்று கட்ட ஆய்வில் கீழடியில் கிடைத்த ஆயிரக்கணக்கான பொருட்கள் பெங்களூர் ASI அலுவலகத்தில் இருப்பதாக அறிகிறோம். முதல் மூன்று கட்ட ஆய்வில் என்ன, என்ன பொருட்கள் எடுத்தீர்கள் என இன்னும் ஏன் பட்டியலை வெளியிடவில்லை? அதன் கால கணிப்பிற்கு எத்தனை பொருட்களை அனுப்பி இருக்கிறீர்கள். மீதி பொருட்கள் எந்த நிலையில் இருக்கிறது ? அதைப் பற்றிய எந்த தகவலும் உங்க வெப் சைட்டில் ஏற்றாமல் இருக்கிறீர்கள் ஏன்? டிஜிட்டல் இந்தியா என்கிறீர்கள் தமிழர்களின் அடையாளத்தை மட்டும் ஏன் டிஜிட்டலில் ஏற்றாமல் இருக்கிறீர்கள்? மூன்றாம் கட்ட ஆய்வில் கண்டெடுத்த பொருட்களைப் படத்துடன் உங்கள் வெப்சைட்டில் ஏற்றினால் மற்ற துறை சார்ந்த ஆய்விற்கும் அது பயன்படுமல்லவா! ஆகையால், கண்டெடுக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான பொருட்கள் படத்துடன் உங்கள் வெப்சைட்டில் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறோம். ஒன்று முதல் மூன்று கட்ட ஆய்வில் வேலை செய்த ஆய்வாளர்கள் நாளை இடம் மாறுதல் ஏற்பட்டு வேறு இடம் சென்று விட்டால் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் நிலை என்ன? உடனடியாக வரைபடம் மற்றும் பொருட்களின் தன்மை, பொருட்களின் எண்ணிக்கை இவற்றை அவர்களிடமிருந்து பட்டியல் இடச்சொல்லிக் கேட்டு அதைப் பொதுவெளியில் தெரிவிக்க வேண்டுகிறோம்.

alt text

தமிழகத்தின் மற்ற பகுதியில் குறிப்பாக ஆதிச்சநல்லூர், கொற்கை, கொடுமணல்,பொருந்தல், மாங்குளம் மற்றும் இன்னபிற இடங்களில் நடந்த ஆய்வை மீண்டும் தொடர வேண்டும். கீழடி ஆய்வை நிறுத்தி விடாமல் வைகை ஆற்றின் கரை ஓரம் நீங்கள் தேர்வு செய்திருந்த இடத்தில் எல்லாம் ஆய்வை தொடர வேண்டும். மற்ற இடத்தில் ஆய்வு செய்த ஓய்வு பெற்ற அறிஞர்களை மீண்டும் பயன்படுத்தி தமிழர்களின் தொல் வரலாற்றை உலகம் அறியச் செய்யவேண்டும்.

இதுவரை கீழடியில் மத்திய, மாநில இரு அரசுகளின் ஆய்வில் கிடைத்த ஒட்டுமொத்த பொருட்களையும் பட்டியல்யிட்டு பொது வெளியில் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 
 

Leave Comments

Comments (0)