மரண தண்டனை நிச்சயம் - மைத்திரிபால சிறிசேன அறிவிப்பு

/files/detail1.png

மரண தண்டனை நிச்சயம் - மைத்திரிபால சிறிசேன அறிவிப்பு

  • 0
  • 0

 

இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு  மரண தண்டனை  நிறைவேற்றப்படும் என    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கில் திட்டமிட்டு போதைப்பொருள்  பயன்பாடு பரப்பப்பட்டு வருகின்றது. இங்கு நடைபெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் இலங்கை அரசபடைகளுக்கு முக்கிய பங்கு உள்ளதாக விமர்சனங்கள் உள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நாடுமுழுவதும் சென்று போதைப்பொருள் விழிப்புனர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், முல்லைத்தீவில் இன்று இடம்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான நிகழ்வொன்றிலேயே அவர்  போதைப்பொருள் கடத்தினால் அக்குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கப்படும் என  குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பான விசேட அறிக்கை ஒன்றை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளது.

அந்த அறிக்கை,

சட்ட விரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக கடந்த நான்கு வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் இவ்வாரம் முதல் புதிய உத்வேகத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தற்காரர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என, இன்று (21) முற்பகல் முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்த மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை பிரகடனப்படுத்தும் நிகழ்வில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்பான கட்டமைக்கப்பட்ட குற்றங்கள் பற்றிய முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கான கட்டணமற்ற துரித தொலைபேசி இலக்கமொன்றும் இதன்போது ஜனாதிபதி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கமைய 1984 என்ற இலக்கத்தினூடாக இந்த தகவல்களை வழங்க முடியும்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்காக தனது வேண்டுகோளுக்கமைய பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதோடு, அதற்காக வழங்கக்கூடிய தொழிநுட்ப ஆலோசனைகள் தொடர்பில் கண்டறிவதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டின் நிபுணர் குழுவொன்று வெகுவிரைவில் வருகை தரவுள்ளதாக தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவனை காரணமாக சீரழிவுகளுக்கு முகங்கொடுத்திருந்த பிலிப்பைன்ஸ் நாடு, அந்நாட்டு ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் காரணமாக இன்று அந்த சவாலினை வெற்றிகொண்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்களை தாம் நடைமுறைப்படுத்தாவிடினும் சில அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அஞ்சி சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக மேற்கொண்ட தீர்மானங்களிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என தெரிவித்தார்.

மேலும் போதைப்பொருள் கடத்தற்காரர்களுக்கு எதிரான தீவிர தீர்மானங்களுக்கு எதிராக சில மனித உரிமை அமைப்புக்கள் குரலெழுப்பி வருகின்ற போதும், போதைப்பொருட்களால் ஏற்படும் அழிவு காரணமாக நாட்டிற்கும் மக்களுக்கும் எதிர்கால சமூதாயத்திற்கும் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை என்பதுடன், நாட்டிற்கு ஏற்பட்டுள்ள இந்த அழிவிற்கு அவர்கள் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பாக மட்டுமன்றி அக்கடத்தல் நடவடிக்கைகளுக்கு பின்னணியில் செயற்படும் தரப்பினர் தொடர்பான தகவல்களையும் தான் நாட்டுக்கு வெளிப்படுத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம் 21ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன் கீழான பிரதான செயற்திட்டமாக ஜனவரி 21 முதல் 25 வரை போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வட மாகாண பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இன்றைய காலைக் கூட்டத்தின்போது போதைப்பொருள் பற்றிய உறுதி மொழியை வழங்கியதன் பின்னரே போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா மகா வித்தியாலயத்தில் ஆரம்பமானது.

ஒட்டுமொத்த நாட்டுக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் ஜனாதிபதி அவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டத்தில் மாணவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கமைய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் 21ஆம் திகதி போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் விழிப்பூட்டும் செயலமர்வுகள் வகுப்பறைகளில் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், 22ஆம் திகதி பெற்றோர்களை பாடசாலைக்கு வரவழைத்து போதைப்பொருள் தடுப்பு பற்றி விழிப்புணர்வூட்டும் செயலமர்வுகள், 23ஆம் திகதி போதைப்பொருள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள் பற்றிய தெளிவுபடுத்தும் செயலமர்வுகளும் இடம்பெறவுள்ளன.

ஜனவரி 24ஆம் திகதி போதைப்பொருள் தொடர்பில் அரசியல் பிரதிநிதிகளை தெளிவூட்டும் செயலமர்வுகளும், ஜனவரி 25ஆம் திகதி ஊடகங்களின் வாயிலாக பாடசாலைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் போதைப்பொருள் தடுப்பு தொடர்பிலான தகவல்களை வழங்கும் நிகழ்வுகளும், ஜனவரி 26ஆம் திகதி தனியார் தொண்டு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டங்கள் உள்ளடக்கிய நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. அத்துடன் ஜனவரி 27ஆம் திகதி வணக்கஸ்தலங்கள் மற்றும் அறநெறி பாடசாலைகளில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டங்கள் நடைபெறவுள்ளன.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், சமூகத்திற்கு செய்திகளை கொண்டு செல்லும் சிறந்த தூதுவர்களை பாடசாலை மாணவர்களே எனத் தெரிவித்தார். இதனால் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின்போது பாடசாலை மாணவர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி அவர்கள் தெளிவூட்டினார்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 11 பாடசாலைகளின் புனர் நிர்மாணப் பணிகளுக்கான ஆரம்ப செலவுகளுக்கான நிதியை வழங்குதல், முல்லைத்தீவு மாவட்டத்தில் சுத்தமான குடிநீர் வசதிகள் இல்லாத 13 பாடசாலைகளுக்கு குடிநீர் வசதிகளை பெற்றுக்கொள்வதற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் ஜனாதிபதி அவர்களினால் மேற்கொள்ளப்பட்டன.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்த சுமார் 264 ஏக்கர் தனியார் காணிகளும் அரசாங்கத்தின் கீழ் இருந்த நான்கு பண்ணைகளுக்கு சொந்தமான 1099 ஏக்கர் காணிகளையும் விடுவிப்பதற்கான சான்றுப் பத்திரங்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவால் இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், ஜனாதிபதி அவர்கள் குறித்த ஆவணங்களை மாவட்ட செயலாளர்களிடம் கையளித்தார்.

அமைச்சர்களாகிய தயா கமகே, ரிஷாட் பதியுதீன், வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் மாவட்ட செயலாளர்கள், மாகாண செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும், இராணுவ மற்றும் கடற்படை தளபதிகள், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை பிரதானிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கை ஜனாதிபதி ஊடகப் பிரிவு

 

 

Leave Comments

Comments (0)