தலித்துகளுக்குத் திருவிழாவில் சம உரிமை வழங்கப்படவில்லை- எவிடன்ஸ் கதிர் 

/files/detail1.png

தலித்துகளுக்குத் திருவிழாவில் சம உரிமை வழங்கப்படவில்லை- எவிடன்ஸ் கதிர் 

  • 1
  • 0

 

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகில் உள்ளது நாரணமங்கலம். இந்த கிராமத்தில் செல்லியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலில் தாங்களுக்கும்  பூஜை செய்ய உரிமை வழங்க வேண்டுமென்று தலித் மக்கள் கேட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த ஆணவ சாதியினர்  தலித் மக்களின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிரின்  எவிடன்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழுவினர் பெரம்பலூருக்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். 

அதில், "நாரணமங்கலம் கிராமத்தில் தலித்துகள் 250 குடும்பங்களாகவும் சாதி இந்துக்கள் 500 குடும்பங்களாகவும் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டாண்டு காலமாகத் தலித்துகள் தேர்த் திருவிழா மற்றும் சாத்து உண்டி கட்டுதல் போன்ற வழிபாட்டு நிகழ்விலும் கலந்து கொண்டு வந்துள்ளனர். ஒவ்வொரு சமூகத்தினருக்கும் மரியாதை கொடுக்கும் விதமாகத் தேங்காய் உடைத்து பூஜை செய்வது தேர்த் திருவிழாவின் சடங்காக இருந்து வந்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு சாதி இந்துக்கள் ஒன்றுகூடி தலித்துகளுக்கு இதுபோன்ற மரியாதை கொடுக்கக்கூடாது என்று முடிவெடுத்து அந்த சடங்கினை நிறுத்தியிருக்கின்றனர். காலப்போக்கில் தலித்துகளுக்கு இந்த உண்மை தெரியவர வழிபாடு என்பது அனைவருக்கும் பொதுவானது. பூஜை சடங்கில் மட்டும் சாதி பார்த்து எங்களை ஒதுக்குவது சரியில்லை என்று புகார் தெரிவித்திருக்கின்றன.

இதுகுறித்து 2007ஆம் ஆண்டு அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. அதில் கலந்து கொண்ட சாதி இந்துக்கள் நாங்கள் எந்தவிதமான பாகுபாடும் காட்டமாட்டோம் என்று உறுதி அளித்துள்ளனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் தலித்துகளுக்கு உரிய மரியாதை அளிக்கப்படாமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர், பெரம்பலூர் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்குப் புகார் கொடுத்ததன் அடிப்படையில் மறுபடியும் கடந்த வருடம் 09.06.2018 அன்று அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த அமைதி பேச்சுவார்த்தையில் இருதரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர். அந்த கூட்டத்தில் தலித்துகளுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று தீர்மானங்கள் இயற்றப்பட்டது. குறிப்பாக இருதரப்பினரும் தேங்காய்களை வடம் பிடித்து வரும் சங்கிலியில் அவரவர் தேங்காயை அவரவர் உடைத்துக் கொள்ளலாம் என்றும் அதேபோன்று சாத்துக்கட்டுதல், உண்டிகட்டுதல் போன்ற மரியாதை தலித்துகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. குறிப்பாகப் பறையர் இன மக்களின் கோரிக்கையை ஏற்று ஊரின் சனி மூலைப் பகுதியில் அவர்களின் சீரினை முதலில் ஏற்று மரியாதை செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதுபோன்று 8 தீர்மானங்கள் இயற்றப்பட்டன. ஆனால் அந்த தீர்மானங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதனால் இந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற கிளையில் தலித் தரப்பினர் வழக்கு தாக்கல் செய்தனர். சென்னை உயர்நீதிமன்றம் (W.P.No.14856/2019) மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. தலித் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்குப் பதில் அளிக்கும் விதமாகச் சாதி இந்து தரப்பினர், தலித்துகள் கூறுகிற அனைத்து கோரிக்கையையும் ஏற்றுக் கொள்கிறோம் என்று உறுதியும் அளித்தனர்.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவினை அடிப்படையாகக் கொண்டு பெரம்பலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 24.05.2019 அன்று அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த அமைதி பேச்சுவார்த்தையில் கோட்டாட்சியர், பெரம்பலூர் டிஎஸ்பி, ஆலத்தூர் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும் தலித் தரப்பில் 10 நபர்களும், சாதி இந்து தரப்பில் 10 நபர்களும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது 9 தீர்மானங்கள் இயற்றப்பட்டது. அந்த தீர்மானங்களில் 4விதாக சீர் செய்யும் நடைமுறை தலித்துகளுக்கு உள்ளது என்பதை வலியுறுத்தும் போது அந்த தீர்மானத்தை ஆய்வு செய்துவிட்டு முடிவெடுக்கலாம் என்று உறுதியளித்தனர். இதற்கு தலித் தரப்பினர் 2018ஆம் ஆண்டு சீர் செய்யும் நடைமுறையை ஏற்றுக்கொண்ட சாதி இந்துக்கள் தற்போது ஆட்சேபனை தெரிவிக்கிறார்கள். அதற்கு அரசு தரப்பிலும் ஆய்வு செய்கிறோம் என்று சொல்கிறீர்கள் இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று அந்த 4வது தீர்மானத்திற்கு மட்டும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று (மே 27) அன்று மறுபடியும் அமைதி பேச்சுவார்த்தை கோட்டாட்சியர், பெரம்பலூர் டிஎஸ்பி, ஆலத்தூர் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் காலை 11.00 மணிக்குத் துவங்கிய கூட்டம் மாலை 4.00 வரை நடைபெற்றது. அப்போது இருதரப்பிலும் சுமுகமான முடிவு எட்டப்படாததால் சட்டம் ஒழுங்கு பிரச்னையை அடிப்படையாகக் கொண்டு தேரினை யாரும் இழுக்கக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது. அதற்கு தலித் தரப்பிலும் சாதி இந்து தரப்பிலும் ஒப்புக் கொண்டனர்.

அமைதி பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொண்ட சாதி இந்துக்கள் தங்கள் பகுதிக்கு வந்தவுடன் எல்லோரும் ஒன்றுகூடி உள்ளிருப்பு போராட்டம் நடத்த போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அச்சமடைந்த தலித்துகள் அந்த பகுதியைவிட்டு உயிருக்குப் பயந்து வெளியேறியுள்ளனர். சாதி இந்துக்களின் மிரட்டலால் பயந்து போன அரசு நிர்வாகம் இன்று (மே 28) துணை ஆட்சியர் (டிஆர்ஓ) தலைமையில் மறுபடியும் அமைதி பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்திருக்கிறார்கள். அதற்கு தலித் தரப்பில் உடன்படவில்லை. ஒவ்வொரு முறையில் சாதி இந்துக்களின் மிரட்டலால் அரசு நிர்வாகம் அச்சமடைந்து சாதி இந்துக்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள். ஆனால் நாங்களோ அரசின் எல்லா முடிவுகளுக்கும் உடன்பட்டு வந்திருக்கிறோம். நேற்று நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் கூட உடன்பட்டிருக்கிறோம். ஆயினும் அரசு எங்களை மிரட்டிப் பணிய வைக்கப் பார்க்கிறார்கள் என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

எமது கள ஆய்வில் மாவட்டத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் வெளிப்படையாகவே, தலித்துகளுக்குப் பூஜை செய்யும் சடங்கினை கொடுத்தால் சாமி குத்தம் ஆகிவிடும் என்று பொது மக்கள் அச்சப்படுகிறார்கள். அதனால் தான் நாங்கள் நடவடிக்கை எடுக்காமல் அஞ்சுகிறோம் என்றார். சாமிக்கு 10 பேர் பூஜை எடுத்தவர்கள் இனிமேல் 20 பேர் பூஜை எடுத்தால் அது கூடுதல் பலமாக இருக்குமே தவிர குத்தமாகாது என்பதையும் எடுத்துக் கூறினோம்" என்று அந்த கள ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

மேலும், தலித்துகளுக்கு ஆலய வழிபாட்டில் பாகுபாடு காட்டுவது வன்கொடுமை குற்றமாகும். ஆகவே சாதிய பாகுபாடு கடைப்பிடிக்கும் சாதி இந்து கும்பல் மீது பட்டியல் சாதியினர் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2015 பிரிவு 3(za)(c) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.

இரண்டு தரப்பினருக்கும் பாகுபாடு இல்லாமல் சடங்கில் சம உரிமை வழங்கப்பட வேண்டும்.

நீதிமன்ற உத்தரவினை நடைமுறைப்படுத்தாத மாவட்ட நிர்வாகத்தின் மீது வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2015 பிரிவு 4ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.

சம உரிமையில் குறுக்கீடு செய்கிற சாதிய சக்திகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற கோரிக்கையையும் எவிடன்ஸ் அமைப்பு விடுத்திருக்கிறது.  
 

Leave Comments

Comments (0)