“எங்களை குறைத்து மதிப்பிட்டனர்” : குரோஷிய அணி கேப்டன் மோட்ரிச்

/files/detail1.png

“எங்களை குறைத்து மதிப்பிட்டனர்” : குரோஷிய அணி கேப்டன் மோட்ரிச்

  • 0
  • 0

-V.கோபி 

இங்கிலாந்து பத்திரிக்கையாளர்களும், நிபுணர்களும் எங்கள் குரோஷியா வீரர்களை குறைவாக மதிப்பிட்டனர். அவர்களின் விமர்சனமே இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற எங்களுக்கு உந்துசக்தியாக அமைந்தது என குரோஷியா அணியின் கேப்டன் லூக்கா மோட்ரிச் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “எங்கள் அணியை குறைவாக மதிப்பிட்டது அவர்கள் செய்த மிகப்பெரிய தவறு. எங்கள் மீது அவர்கள் கூறிய அனைத்து விமர்சனத்தையும் நாங்கள் படித்தபிறகு, இன்றைய ஆட்டத்தில் யார் சோர்வடைகிறார்கள் என்பதை பார்ப்போம் என முடிவு செய்தோம். முதலில் அவர்கள் எதிரணியை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்”.

“மனதளவிலும் உடலளவிலும் ஆட்டத்தில் எங்கள் அணியே ஆதிக்கம் செலுத்தியது. இப்போது நாங்கள் சோர்வடையவில்லை என்பதை மறுபடியும் உலகத்திற்கு உணர்த்தியுள்ளோம். இந்த வெற்றி எங்களின் மிகப்பெரிய சாதனை. 
எங்களின் நீண்டநாள் கனவு நிறைவேறியுள்ளது. நாங்கள் இறுதிபோட்டியில் நுழைந்ததை நினைத்து பெருமிதம் அடைகிறோம். எங்கள் குரோஷிய வரலாற்றில் இது மறக்க முடியாத நாள்” என பூரிப்போடு கூறுகிறார் மோட்ரிச்.

ஆட்டம் சமம் ஆவதற்கான கோலை அடித்த இவான் பெர்சிக் கூறுகையில், “குரோஷியா போன்ற சிறிய நாட்டிற்கு இந்த போட்டி எவ்வுளவு முக்கியமானது என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம். ஆரம்பத்தில் மெதுவாக விளையாடி ஆட்டத்தில் பின் தங்கியிருந்தாலும் கடந்த இரண்டு ஆட்டங்களைப் போல இம்முறையும் எங்கள் பலத்தால் வெற்றிபெற்றுளோம். 20 வருடத்திற்கு முன்பு குரோஷிய ஜெர்சியை அணிந்து கொண்டு ஊர் சுற்றுவேன். குரோஷிய அணிக்கு விளையாடுவதே என் கனவாக இருந்தது. இன்று ஆட்டத்தில் முக்கியமான கோல் அடித்து எங்கள் அணி இறுதிபோட்டியில் நுழைவதற்கு நானும் ஒரு காரணம் என்று நினைக்கும்போது பெருமையாக உள்ளது” என்கிறார் பெர்சிக்
குரோஷிய அணியின் பயிற்சியாளர் டேலிச் கூறுகையில், கூடுதல் நேரத்தில் வெறிபெற்றாலும் இந்த வெற்றி எங்களுக்குரியது. இறுதிபோட்டியில் இடம்பெறுவதற்கு எங்கள் அணி தகுதியானதே. மிகப்பெரும் வரலாற்றை எங்கள் வீரர்கள் படைத்துள்ளார்கள். தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் ஆரம்பத்தில் பின்தங்கியிருந்து வெற்றி பெற்றுள்ளோம். இது சாதாரண விஷயம் அல்ல. சிறிய நாடுகள் இறுதிபோட்டியை அடையமுடியாது என்ற வரலாற்றை இந்த வெறியின் மூலம் மாற்றி எழுதியுள்ளோம்”

கால்பந்து இறுதிபோட்டியில் நுழையும் 13வது அணி குரோஷியாவாகும். இதற்கு முன் இறுதிபோட்டிக்குச் செல்லாத புதிய அணியாக 2010ல் ஸ்பெயின் அணிக்குப் பிறகு தற்போது குரோஷியா சென்றுள்ளது. 1998ம் ஆண்டு முதன்முறையாக உலக்கோப்பையில் கலந்து கொண்ட குரோஷியா, அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் அணியிடம் தோல்வியுற்றது. அதன்பிறகான உலக்கோப்பைகளில் ஆரம்ப சுற்றுகளிலேயே வெளியேறிவிடும் அணியாக குரோஷியா அணி இருந்தது. 

தற்போது இறுதி போட்டியில் 20 வருடங்கள் கழித்து மறுபடியும் பிரான்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

“20 வருடமாக பலரும் இதனை விவாதித்து வருகிறார்கள். ஒருவேளை இந்த ஆட்டம் வரலாற்றில் முக்கியத்துவம் பெறலாம். பழைய கணக்கை தீர்த்து கொள்ள கடவுள் எங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளதாகவே இப்போட்டியை காண்கிறோம்” என்கிறார் குரோஷியா பயிற்சியாளர் டேலிச்.

 

Article Link: https://www.theguardian.com/football/2018/jul/11/croatia-motivated-lack-of-respect-england-luka-modric?CMP=fb_gu

Leave Comments

Comments (0)