எனக்கு நீ சரிசமமா ?
February 20, 2021 - selvamani T
February 26, 2021,5:47:54 PM
குடியுரிமைச் திருத்தச் சட்டத்திற்கு எதிராக 2019 டிசம்பர் 31 முடிந்து, 2020 சனவரி முதல் நாள் தொடங்கும் நள்ளிரவு 12 மணிக்குக் கிண்டி ஆளுநர் மாளிகை எதிரில் உள்ள சாலையில் ஒன்றுகூடுவோம் என்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
"சமீபத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. மதச்சார்பற்ற இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை, மதச்சார்புள்ள அரசியலமைப்புச் சட்டமாக மாற்றுகின்ற இந்நடவடிக்கை, மதநல்லிணக்கத்தைச் சீர்குலைத்து, இஸ்லாமியர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றுகிறது. இந்தச் சட்டத்திற்கு எதிராக அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டத்தீ கொழுந்துவிட்டு எரிகிறது. அங்கிருந்து இப்போராட்டம் நாடு முழுவதும் பரவியுள்ளது. மதச்சார்பற்ற, தேசப்பற்றுள்ள இந்திய மக்களும், பாரபட்சத்திற்கு ஆளாகி உள்ள இஸ்லாமிய மக்களும் ஒன்று திரண்டு இந்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
நாடெங்கும் நடந்து வரும் வெகுமக்களின் இந்தப் போராட்டம் வீச்சுடன் தொடர்கிறது. தேசியக் குடிமக்கள் பதிவேடு குறித்து இந்தியப் பிரதம அமைச்சர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் முரண்பட்ட கருத்துகளை வெளியிடுவதற்கு மக்கள் போராட்டத்தின் அழுத்தமே காரணம்.
எது எப்படி இருந்தாலும் குடியுரிமைத் திருத்தச் சட்டமும், தேசியக் குடிமக்கள் பதிவேடும் அடியோடு கைவிடப்படும்வரை அவற்றிற்கு எதிரான அறப்போராட்டம் தொடரும் எனபது உறுதி. ஜமியா மிலியா, இஸ்லாமியா, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களுக்குள் ஆயுதப் படையினர் அத்துமீறிப் புகுந்து அங்குள்ள மாணவர்களையும், ஆசிரியர்களையும் மற்றவர்களையும் மூர்க்கமான முறையில் தாக்கியுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் பெருமளவு உயிரிழப்புகள் நேரிட்டிருப்பதற்கு அம்மாநில யோகி தலைமையிலான பாஜக அரசும் காவல்துறையுமே பொறுப்பு. துப்பாக்கிச் சூடு நடக்கவில்லை என்று மாநில அரசு பரப்பிய பொய்யை என்டிடிவி தொலைக்காட்சி ஆதாரத்துடன் அம்பலப் படுத்தியுள்ளது.
மக்களுக்கு எதிராக அரசு ஏவிவிட்டுள்ள வன்முறையை மறைக்கவே பிரதமர் அமைதி வழி பற்றி உபதேசம் செய்கிறார்.
ஏற்கனவே குடிஉரிமைச் திருத்தச்சட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் டிசம்பர் 19 அன்று வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
இந்த அறவழிப்போராட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும், மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் திரு.கமல்ஹாசனும் தங்கள் ஆதரவைத் தெரிவித்திருந்தனர். அவர்களுக்குக் குடியுரிமை திருத்தத்சட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் தனது நன்றியைத் தெரிவிக்கின்றது.
அறவழியில் நடந்த இப்போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. உடனடியாக அவ்வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக அரசையும், காவல்துறையையும் குடியுரிமைச் திருத்த சட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
முழுக்க முழுக்க அமைதியான வழிகளில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான அறப்போராட்டத்தை வளர்த்துச் செல்லும் வகையில் வருகிற 2020 புத்தாண்டு இரவில், ”சாலைகளை நிறைப்போம்” என்ற முழக்கத்தோடு ஒன்று கூடுவோம். தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 2019 டிசம்பர் 31 முடிந்து, 2020 ஜனவரி முதல் நாள் தொடங்கும் நள்ளிரவு 12 மணி முதல் கிண்டி ஆளுநர் மாளிகை எதிரில் உள்ள சாலையில் ஒன்றுகூடுமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்" என்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் அழைப்பு தெரிவித்துள்ளது.
கோரிக்கைகள்:
1) குடியுரிமைத் சட்டத்திருத்தத்தையும், தேசியக் குடிமக்கள் பதிவேட்டையும் கைவிடுக!
2)இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், சமயச் சார்பின்மையையும், சனநாயகத்தையும் சீரழிக்காதீர்!
3) ஈழத் தமிழ் ஏதிலியர்க்குக் குடியுரிமை வழங்குக!
4) சிறுபான்மை மக்களின் குடியுரிமையைப் பறிக்காதீர்!
5) இந்திய நாடெங்கும் போராடும் மக்கள் மீதான அடக்குமுறையைக் கைவிடுக!
6) காசுமீரத்தை ஆக்கிரமித்துள்ள இந்தியப் படைகளை உடனடியாக வெளியேற்றுக!
7) காசுமீர மக்களின் சனநாயக உரிமைகளையும் இயல்பு வாழ்வையும் மீட்டுத் தருக!
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Leave Comments