மத்திய தணிக்கை குழு இயக்குனர் லீனாவின் திரைப்படத்தில் காட்சிகளை நீக்க உத்தரவிட்டுள்ளது

/files/detail1.png

மத்திய தணிக்கை குழு இயக்குனர் லீனாவின் திரைப்படத்தில் காட்சிகளை நீக்க உத்தரவிட்டுள்ளது

  • 1
  • 0


தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மட்டும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேலான புதிரை வண்ணார் சமூகத்தினர் வசித்துவருகின்றனர். இவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுள் அடித்தட்டில் உள்ளதால் தலித் மக்களின் உடைகளையும், இறந்தவர்கள் மற்றும் பெண்களில் மாதவிடாய்  காலத்து துணிகளையும் துவைக்க வலுக்கட்டாயமாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

இத்தகைய மக்களின் வாழ்க்கை முறையை அறிந்த, சுயாதீன திரைப்பட இயக்குனர் லீனா மணிமேகலை, இவர்களின் வாழ்க்கை முறையினை திரைப்படமாக எடுக்க எண்ணி மூன்று வருடங்களுக்கு மேலாக கள ஆய்வு மேற்கொண்டு, மக்களைச் சந்தித்து அவர்களுடன் உரையாடியும் அவர்களுடனே சில மாதங்கள் வசித்தும் புதிரை வண்ணார் சமூகத்திலிருந்து காவல் தெய்வமாகிய பெண்ணின் கதையை  ``மாடத்தி`` என்னும் பெயரில் திரைப்படமாகப்  படைத்துள்ளார். ஆனால் இத்திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை குழு பல்வேறு காரணங்களைக் காட்டி சான்றிதழ் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

"நான் சிறுவயதில்  கேட்ட கதைகளில் எனது ஊரின் காவல் தெய்வங்களின் கதைகளும் அடக்கம். அவர்கள் நம்மைப்போன்று இயல்பான மனிதர்களாகப் பிறந்து, நியாயம் மறுக்கப்பட்டுக் கொலையுண்டு, இன்று அப்பகுதி மக்களைக் காக்கும்  சிறுதெய்வமாக வணங்கப்படுகிறார்கள். அந்த சமூக மக்களைக் கண்டறிந்து, அவர்கள் குறித்த புத்தகங்களைப் படித்து, பல மணிநேரம் நேர்காணல் செய்து, அவர்களுடன் பல மாதங்கள் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்தேன். ``மாடத்தி`` என்பது கண்ணுக்குத் தெரியாத அடிமைப் பெண்ணாக இருப்பது என்பதை ஆராய்வதற்கான எனது முயற்சி இது. ஆணாதிக்கம் மற்றும் சாதி அமைப்பு ஆகிய இரண்டிற்குள்ளும் மாட்டிக்கொண்டு ஒடுக்கப்பட்டவர்களில் ஒடுக்கப்பட்டவர்களாக வாழ்கின்றனர் அவர்கள்`` என்று இத்திரைப்படத்தின் இயக்குனர் லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார். 

சான்றிதழ் பெறுவதற்காகப் படத்தை சமர்ப்பிக்கப்பட்டபோது, மத்திய தணிக்கை குழு படத்திற்குச் சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்து, படத்தில் பல காட்சிகளை நீக்கக் கோரியுள்ளது. 

"நான் இந்த படத்தில் பயன்படுத்தியிருக்கிற சித்தரிப்பு மற்றும் மொழி குறித்து மத்திய தணிக்கை குழு கேள்வி எழுப்பியது. அந்த பகுதிகளை நீக்கவேண்டும் என்று அவர்கள் விரும்பினர். ஆனால் அதை நான் ஏன் செய்யவேண்டும். இந்த படத்தில் உள்ள மொழி அம்மக்கள் பேசும் மொழி. அதில் எந்த மாற்றங்களையும் என்னால் கொண்டு வர முடியாது. ஒரு திரைப்பட தயாரிப்பாளராக, எந்தவொரு கட்டுப்பாடுகளும் இல்லாமல் சமூகத்தில் நிகழக்கூடிய உண்மையான சம்பவத்தைச் காட்சிப்படுத்த விரும்பினேன். மத்திய தணிக்கை குழு  சான்றிதழ் வழங்குவதற்கான வாரியம் மட்டுமே. அவர்கள் காட்சிகளை நீக்கக் கூற முடியாது`` என்று அவர் தெரிவித்தார். 

இந்த திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கும்போது, அந்த படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்கத் தேவையில்லை என்ற ஒரு விதியின் அடிப்படையில் லீனா மணிமேகலை "மாடத்தி" திரைப்படத்திற்கு  "ஏ சான்றிதழ்" கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இதுகுறித்து தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்து, நேர்மையான தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார் லீனா மணிமேகலை.

நன்றி: www.dtnext.in

Leave Comments

Comments (0)