சாதிவாரியான கணக்கெடுப்பை எடுக்க வேண்டும்- கி.வீரமணி

/files/detail1.png

சாதிவாரியான கணக்கெடுப்பை எடுக்க வேண்டும்- கி.வீரமணி

  • 0
  • 0

 

சாதிவாரிக் கணக்கெடுப்பை எந்தக் காரணத்தை முன்னிட்டு தவிர்க்கக் கூடாது; சாதிவாரிக் கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மத்திய அரசை வலியுறுத்தவேண்டும் என்று திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (ஆகஸ்ட் 09) வெளியிடப்பட்ட அறிக்கையில், "2021 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஒடுக்கப்பட்டோர், பழங்குடியினர் மட்டுமே கணக்கெடுக்கப்படுவர்; பிற்படுத்தப்பட்டோரில் அடங்கியுள்ள சாதிவாரியான பட்டியல் எடுக்கப்பட மாட்டாது என்று ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

இதற்குச் சொல்லப்படும் காரணம்தான் விசித்திரமானது. பிற்படுத்தப்பட்டோரில் 40 லட்சத்துக்கும் மேலான சாதிகள் இருப்பதாகவும், இந்த நிலையில் அவற்றைத் தொகுப்பது கடினமானது என்றும் சமாதானம் கூறப்படுகிறது. 1872ஆம் ஆண்டு முதல் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு என்ற நடைமுறை எடுக்கப்பட்டுதான் வந்தது. அப்படி எடுக்கவேண்டியது சட்டப்படியானதும் கூட.

உண்மை இவ்வாறு இருக்கையில், அதனைச் செயல்படுத்த வேண்டிய அரசு, செய்ய முடியவில்லை என்று சொல்வதற்கு ஓர் அரசு தேவையா? பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியல் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும்போது, அதன் அடிப்படையில் சாதி வாரியாக கணக்கெடுப்பு எடுப்பதில் என்ன சங்கடம் - என்ன இடர்ப்பாடு?

ஏற்கெனவே இருந்த சாதிகள்தானே - புதிதாகச் சாதிகள் குட்டிப் போட்டுவிட்டனவா? பொய் சொன்னாலும் பொருத்தமாகச் சொல்ல வேண்டாமா? உயர் சாதியினரில் ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்று அவசர அவசரமாக அறிவித்ததே அது எதன் அடிப்படையில்? சாதி பற்றிய புள்ளிவிவரம் இல்லாமல் இருந்தால்தான் இதுபோல அறிவிப்புகளை உயர் சாதி மனப்பான்மையோடு செய்வதற்கு வசதியாக இருக்கிறது என்று மத்திய பாஜக அரசு கருதுகிறது என்று நினைக்க இடம் இருக்கிறது.

சாதிகளை ஒழிக்க ஒரு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றுங்கள். பின் அதற்கு எந்த அவசியமும் இருக்காது. அதை விட்டுவிட்டு இந்த மனப்போக்கு திட்டமிட்டு அதுவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும் இப்படி அநீதியா? மற்றொரு முக்கியக் காரணம், தற்போது மத்திய அரசுத் துறைகளிலும், கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு வெறும் 27 விழுக்காடு இடங்கள்தான் அளிக்கப்படுகின்றன. இதைக்கூட முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை என்பது வேறு விஷயம்.

பிற்படுத்தப்பட்டோர்களின் எண்ணிக்கை மக்கள்தொகையில் 75 விழுக்காட்டுக்கு மேலும் இருக்கக்கூடிய உண்மை நிலை வெளிச்சத்துக்கு வந்தால், இந்த 27 விழுக்காட்டுக்குப் பதிலாக அதிக விழுக்காட்டில் இட ஒதுக்கீடு கேட்டு வலியுறுத்தும் நிலை பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் மூண்டு எழும் என்ற அச்சத்தின் காரணமாகத்தான், பிற்படுத்தப்பட்டோர் சாதிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள மறுக்கின்றனர் என்பதுதான் உண்மை.

ஏற்கெனவே அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக இட ஒதுக்கீட்டிலும், பொருளாதார அளவுகோலைத் திணித்து உயர் சாதியினருக்குப் பட்டுக்கம்பளம் விரிக்கும் மத்திய பாஜக அரசு, பிற்படுத்தப்பட்டோரின் உண்மையான மக்கள்தொகை வெளிவருமேயானால், இட ஒதுக்கீட்டுத் திசையில் மேலும் வலிமையான கோரிக்கை கிளர்ந்து எழுந்துவிடும் என்று கருதியே, திட்டமிட்ட வகையில் பிற்படுத்தப்பட்டோரின் சாதிவாரியான கணக்கை எடுப்பதிலிருந்து விலகி நிற்கிறது பாஜக.

அரசின் இந்தத் தந்திரத்தை, சூழ்ச்சியைப் புரிந்துகொண்டு பிற்படுத்தப்பட்ட மக்கள் கிளர்ந்தெழ வேண்டும். சமுக நீதியில் நம்பிக்கை உள்ள அனைத்துத் தரப்பினரும் ஒன்று சேர்ந்து பாஜக ஆட்சியின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும்.

சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என்பதுதான் பாஜகவின் கொள்கை என்றால், சாதியை முற்றிலும் ஒழிப்பதற்கான சட்டத்தை நிறைவேற்ற முன்வரட்டுமே - அதற்குத் தயாரா என்று சவால் விட்டே கேட்கிறோம். அப்படி முன்வந்தால் அதனை முதலில் வரவேற்பது திராவிடர் கழகமாகத்தான் இருக்கும் என்று உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சமூக நீதிக் கொள்கையில் மாறுபாடான கொள்கை உடைய பாஜக அரசு நாணயமான முறையில் இல்லாமல் குறுக்கு வழியில் அதனை ஒழிக்க, ஒவ்வொரு வகையிலும், செயல்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள மறுப்பதாகும்.

சாதியைப் பாதுகாக்கும் கொள்கையை அடிப்படையாக ஒரு பக்கத்தில் வைத்துக்கொண்டு இன்னொரு பக்கத்தில் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கான உண்மைப் புள்ளி விவரமும் வெளியில் வராமலும் பார்த்துக் கொள்வது - அதன் இரட்டை வேடத்தைத்தான் காட்டுகிறது.

இதனைப் புரிந்துகொண்டு இட ஒதுக்கீடு மக்கள் தொகை அடிப்படையில் அளிக்கப்பட வேண்டும் என்ற உரத்த குரல் கொடுக்கவும், வீதிக்கு வந்து போராட வேண்டும்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உரத்த குரல் கொடுக்க வேண்டும். சாதிவாரிக் கணக்கெடுப்பை எந்தக் காரணத்தை முன்னிட்டும் தவிர்க்கக் கூடாது; சாதிவாரிக் கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

இது சாதாரண பிரச்னையல்ல - முன்னுரிமை கொடுத்து முன்கையை நீட்ட வேண்டிய பிரச்சினை" என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave Comments

Comments (0)