CAA: கன்னையாகுமார், சந்திர சேகர ஆசாத்தின் வேலைகளை முக்கியமானதாகப் பார்க்கிறேன்- பா. ரஞ்சித்

/files/detail1.png

CAA: கன்னையாகுமார், சந்திர சேகர ஆசாத்தின் வேலைகளை முக்கியமானதாகப் பார்க்கிறேன்- பா. ரஞ்சித்

  • 0
  • 0

தமிழ்நாடு முழுக்க குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த கலந்துரையாடல் தொடங்கியிருக்கிறது என்று திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நேற்று (டிசம்பர் 26) சேப்பாக்கத்தில் இசைமுழக்கப் போராட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பேராசிரியர் சுந்தரவள்ளி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்  கே. பாலகிருஷ்ணன், திமுக எம்.பி. கணிமொழி, திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய ரஞ்சித், “இளைஞர்கள் இந்த குடியுரிமை சட்டத்தை எப்படிப் பார்க்கிறார்கள், எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்பது முக்கியமாக இருக்கிறது. இந்திய அளவில் கன்னையாகுமார், சந்திர சேகர ஆசாத் ஆகியோரின் வேலைகளை மிக முக்கியமானதாகப் பார்க்கிறேன். இன்று எக்கச்சக்கமான இளைஞர்கள் திரண்டிருக்கிறார்கள். தமிழ் சூழலிலும் அங்கங்கு சில விசயங்கள் நடந்தாலும்கூட பெரிய அளவிலான விழிப்புணர்வும், மக்கள் ஒன்றிணையக் கூடிய சூழலும் இருக்கிறது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நடத்திய பேரணி மிகப் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடு முழுக்க இந்த பிரச்னை குறித்த கலந்துரையாடல் தொடங்கியிருக்கிறது. நாம் போராட்டத்தைத் தொடங்கிவிட்டு விட்டுவிடுவோம். அதுதான் இங்குச் சிக்கலாக இருக்கிறது. இதுபோன்ற பிரச்னைகள் வரும்போதுதான் இன்னும் தீவிரமாக எழுத வேண்டும், பேச வேண்டும், சிந்திக்கவேண்டும் என்ற ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது. அந்த படத்தின் அடிப்படையில் ஒரு ஒற்றுமை உருவாகிறது. அந்த ஒற்றுமையால் கண்டிப்பாக இங்கிருக்கும் இளைஞர்களை ஒன்று திரட்ட முடியும். 

இங்கிருக்கும் எடப்பாடி அரசு தொடர்ந்து பாஜகவின் திட்டங்களை எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் செயல்படுத்தக்கூடிய அரசாக இருக்கிறது. இந்தியா முழுக்க உள்ள 11 மாநிலங்கள் இந்த சட்டத்தை எதிர்த்தாலும், இங்கு மட்டும் இச்சட்டத்திற்கு ஆதரவாக அரசு இருக்கிறது. இன்னும் கலைஞர்கள் பெருந்திரளாக ஒன்றுகூடிப் பேசவேண்டும்” என்று கூறினார்.
 

Leave Comments

Comments (0)