மும்மொழித் திட்டம் என்ற பெயரில் சமஸ்கிருதத்தைத் திணிக்க முயற்சி- திருமா கண்டனம் 

/files/detail1.png

மும்மொழித் திட்டம் என்ற பெயரில் சமஸ்கிருதத்தைத் திணிக்க முயற்சி- திருமா கண்டனம் 

  • 0
  • 0

 

தற்போது வடிவமைக்கப்பட்டிருக்கும் தேசிய கல்விக் கொள்கை மாநில அரசின் அதிகாரத்தை முற்றாகப் பறித்து கல்வியை முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்வதாக உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் மாணவர்கள் அனைவரும் இந்தியைக் கற்றுக்கொள்ளவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. தமிழ்நாட்டிலிருந்து எழுந்த எதிர்ப்பின் காரணமாக அது கைவிடப்பட்டது. ஆனால் இப்போது தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நவம்பர் 11ஆம் தேதி அறிமுகப்படுத்தப் போவதாகவும் அதில் இந்திக்குப் பதிலாகச் செம்மொழிகளில் ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது சமஸ்கிருதத் திணிப்புக்கு வழிகோலும். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இருமொழிகளே போதும் என்ற தமிழகத்தின் நிலைப்பாட்டை ஏற்று மத்திய அரசுக் கல்விக் கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
தேசிய கல்விக் கொள்கை ஒன்றை மத்திய அரசு கொண்டு வருவதில் நமக்கு மறுப்பேதும் இல்லை. உலகிலேயே படிப்பறிவில்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகம். அதை நீக்குவதற்குப் தேசிய கல்விக் கொள்கை தேவை. அதுபோலவே உயர்நிலை வகுப்பு படிக்கும் மாணவர்களில் 50 விழுக்காடு அளவுக்கு அத்துடன் படிப்பை நிறுத்திக் கொள்கிறார்கள். இந்த இடைநிற்றலை முற்றாக ஒழித்து அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பெறும் அளவுக்குத் தேசிய கல்விக்கொள்கை உருவாக்கப்படவேண்டும்; இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தைக் கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்று நீண்ட நாளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதைச் செய்வதற்கு மத்திய அரசு முன்வரவேண்டும். ஆனால் இவற்றையெல்லாம் விட்டுவிட்டு இந்தியையும் சமஸ்கிருதத்தையும் மக்கள் மீது வலிந்து திணிப்பதற்குத் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்படுகிறது. இதை ஒருபோதும் ஏற்கமுடியாது. எங்களுக்கு இரண்டு மொழிகளே போதும் என்று ஏற்கனவே தமிழகத்தின் சார்பில் மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளோம். அதைப் புறக்கணித்துவிட்டு மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் எம்மீது சமஸ்கிருதத்தைத் திணிக்க முயற்சிப்பது எவ்விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல.

கல்வி என்பது மத்திய அரசு மாநில அரசு இரண்டும் சேர்ந்து தீர்மானிக்கக்கூடிய பொதுப் பட்டியலில் உள்ளது. இப்போது வடிவமைக்கப்படும் தேசிய கல்விக் கொள்கை மாநில அரசின் அதிகாரத்தை முற்றாகப் பறித்து கல்வியை முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்வதாக உள்ளது. இதை ஒருபோதும் தமிழகம் ஏற்காது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டும். செம்மொழி என்ற பெயரில் சமஸ்கிருதத்தைத் திணிக்க முயற்சித்தால் தமிழக மக்கள் அதைச் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். 
 

Leave Comments

Comments (0)