கொழுப்பெனும் நண்பன் 11

/files/detail1.png

கொழுப்பெனும் நண்பன் 11

  • 4
  • 0

 

-அ.ப.ஃபரூக் அப்துல்லா

 

இன்று நமது சமுதாயத்தில் ஒல்லியான அல்லது சரியான எடை உள்ள மக்களை காண்பது மிக அரிதாகிவிட்டது.  தமிழக அரசால் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்படும் அம்மா ஆரோக்கியத்திட்டம் எனும் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அனைவருக்கும் உடல் எடை, உயரம் , நீரிழிவு , ரத்த அழுத்தம் போன்றவை சோதிக்கப்பட்டன. இந்த சோதனையில் முப்பது வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலினரும் சோதிக்கப்பட்டனர். சுமார் மூன்று கோடி மக்களுக்கு செய்யப்பட்ட சோதனையில் தமிழகத்தில் இரண்டில் ஒருவருக்கு உடல் பருமன் இருப்பது கண்டறியப்பட்டது. 

உடல் பருமன் என்ன அவ்வளவு பெரிய விசயமா? ஏன் அதற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறோம்? 

முதலில் உடல் பருமன் என்றால் என்ன? 

நமது மனித உடல் பருவ வயதை அடைந்ததும் உயரத்தில் வளர்ச்சி அடைவதில் நிறைவு அடைகிறது. ஆனால் நமது எடை நாம் உண்ணும் உணவைப் பொறுத்தும் நமது உடல் உழைப்பை பொறுத்தும் கூடிக்கொண்டே செல்கிறது. இவ்வாறு கூடும் உடல் எடை நமது உயரத்திற்கு ஏற்றவாறு இருந்தால் அது சரி. அதுவே உயரத்திற்கும் எடைக்கும் வேறுபாடு தோன்றும் அளவு , உடல் எடை மிகவும் அதிகமாகிக்கொண்டே சென்றால் அது உடல் பருமன் எனப்படும். 

உதாரணம் ஒருவரின் உயரம் 170 சென்ட்டிமீட்டர்கள் என்று வைத்துக்கொள்வோம் .அவரது சரியான எடை 70 முதல் 75 கிலோ இருக்கலாம் ஆனால் அதுவே அதற்கு மேல் சென்றால் அது உடல் பருமன் எனப்படும். மிக எளிதாக நாம் இருக்க வேண்டிய உத்தேச எடையை அறிய பின்வரும் கணக்கீட்டை செய்யலாம். உங்களின் உயரத்தை 100இல் கழித்தால் கிடைக்கும் எண் உங்களின் உத்தேச எடை என்று கொள்க. 180 சென்ட்டிமீட்டர் இருக்கும் ஒருவர் ( 180-100) 80 கிலோ எடை இருக்கலாம். 

இதன்படி உங்கள் எடையை வைத்து பாருங்கள். நீங்கள் உடல் பருமனுடன் உள்ளீர்களா? என்று தெரியும். நம்மில் சுமார் 50 சதவிகித மக்கள் உடல் பருமனாகத் தான் இருப்போம். 

இது எதனால்??

பலர் .. உடல் உழைப்பு இல்லாமல் போனோம் அதனால் தான் என்பார்கள். சிலர் நமது முன்னோர்களைப் போல் நாம் உண்ணாமல் ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரத்திற்கு மாறியதால் இந்த நிலை என்பர். 
இதில் எனது கோணம் யாதெனில் நாம் உண்ணும் தினசரி உணவில் மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட்ஸ் அளவு 300கிராம் முதல் 400 கிராம் உட்கொள்கிறோம் மாவுச்சத்து நம்மை அடிமையாக்க வல்லது. 

சிறிது உண்டால் வயிறும் மனமும் நிறையவே நிறையாது.

அதிகம் அதிகம் இன்னும் இன்னும் என்று கேட்டுக்கொண்டே இருக்கும். 

நாம் மாவுச்சத்தை உண்ணும் போது நமது உடல் , கார்போஹைட்ரேட்டை க்ளூகோசாக மாற்றும். "க்ளூகோஸை" செரிமானம் செய்ய இன்சுலின் எனும் ஹார்மோனை கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் சுரக்கின்றன. 

அடிக்கடி மாவுச்சத்துள்ள க்ளைசீமிக் இண்டெக்ஸ் அதிகமாக உள்ள உணவுகள் இன்சுலின் சுரப்பை மிக அதிகமாக்கும். இன்சுலின் ஒரு வளர்ச்சிக்குரிய ஹார்மோன். நமது உடலில்  இன்சுலின் அதிகமாக சுரந்தால் நமது உடல் கொழுப்பை சேகரிக்கும் நிலைக்கு சென்று விடும்.ஆக, ஒருவருக்கு இன்சுலின் சுரந்து கொண்டே இருந்தால் , உடல் பெருத்துக்கொண்டே போகும்.

இன்சுலின் சுரந்து கொண்டே இருக்க ஒருவர் என்ன செய்ய வேண்டும்??
௮டிக்கடி மாவுச்சத்துள்ள உணவுப் பொருட்களை கொரித்துக்கொண்டே இருந்தால் போதுமானது.

காலை உணவாக  இட்லி 

பின்பு ஒரு மணிநேரம் கழித்து ஒரு டம்ளர் பால் டீ / கூட ஒரு உளுந்த வடை

மதியம் ஒரு கோப்பை சோறு 

மாலை ஒரு பால் டீ / டீ பிஸ்கட்

இரவு தோசை /பரோட்டா/ சப்பாத்தி 

இப்படி தான் பெரும்பாலனவர்கள் தினம் உண்ணும் டயட் ப்ளான் இருக்கும். 

இந்த டயட் சார்ட்டில் நீக்கமற நிறைந்திருப்பது

"கார்போஹைட்ரேட்ஸ்"

இப்படி முழு வீச்சில் மாவுச்சத்தை சாப்பிட ஆரம்பிக்கும் ஒருவருக்கு காலப்போக்கில் எடை கூடிக்கொண்டே செல்லும். இதற்கு காரணம் நமது ரத்தத்தில் அதிகமான இன்சுலின் இருப்பது தான். இளமையில் கூட அதே உணவைத்தான் சாப்பிடுகிறோம் பிறகு ஏன் வயதாக வயதாக எடை கூடுகிறது? நாள்பட நாள்பட நமது உடலின் அடிப்படை இயங்கு சக்தி குறையும். அதற்கு ஏற்றவாறு நமது உணவு உட்கொள்தலை  குறைக்க வேண்டும் .

ஆனால் நாம் வயதாக வயதாக அதிக பொருளாதாரம் ஈட்டுவதால் நமது உணவில் அதிக மாவுச்சத்து சேர்கிறது.

நான் குண்டாக இருந்தால் அதனால் என்ன பிரச்சனை? கொழு கொழுவென்று இருக்கும் மக்கள் இப்படி கேட்கிறார்கள். 

தமிழர்களின் மரபணுப்படி மாவுச்சத்தை அதிகம் உண்ணும் உணவு முறையில் இருப்பவர்கள் 80 சதவிகிதம் குண்டாவார்கள் . காரணம் 80 சதவிகித மக்களுக்கு நம்மை குண்டாக்கும் இன்சுலின் ரெசிஸ்டெண்ட் மரபணு இருக்கிறது. ஆகவே நாம் குண்டாக ஆவது நமக்கு பல்வேறு நோய்களை உண்டாக்கும். 

மீதம் 20 சதவிகிதத்தினருக்கு இன்சுலின் சென்சிடிவ் மரபணு இருப்பதால் அவர்கள் அதிக மாவுச்சத்து உண்டாலும் குண்டாக மாட்டார்கள். இவர்கள் ஒல்லியாக இருந்தாலும் இவர்களுக்கு உடல் சார்ந்த நீரிழிவு / ரத்த கொதிப்பு போன்ற நோய்கள் வராது என்ற உத்தரவாதம் எல்லாம் இல்லை. இனி உடல் பருமனால் ஏற்படும் பிரச்சனைகளை பட்டியலிடுவோம் வாருங்கள்.

                                                                                                 alt text

(கட்டுரை ஆசிரியர்: மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா)

 

1. தொப்பை . இதை Central obesity என்போம் . ஆண்களுக்கு பெரும்பாலும் தொப்பையில் கொழுப்பு சேரும். பெண்களுக்கு தொடை, மார்பு, இடுப்பு பகுதிகளில் கொழுப்பு சேரும் . இது peripheral obesity . 

இந்த தொப்பை, இதய நோய்களை வரவழைக்கவல்லது. 

2.அதிகமாக மாவுச்சத்து உண்பதால் இன்சுலின் சுரந்து சுரந்து ஒரு நாள் ஒரேயடியாக வேலை செய்யாமல் போய்விடும் (insulin resistance) . 

இதன் காரணமாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் 
நீரிழிவு எனும் type II Diabetes வருகிறது . 

3.வளர்இளம்பெண்களுக்கு இதே காரணத்தால் தான் கருமுட்டை நீர்குமிழ்கள் நோய் (poly cystic ovary disease) வருகிறது. இதனால் பல பெண்கள் கருத்தரிக்க முடியாமல் மலட்டுத் தன்மையோடு( infertility)  இருக்கின்றனர். 

 இரண்டுக்கும் காரணம் ஒன்றே
"இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ்"

4.மூட்டுத் தேய்மானம்
 ( osteo arthritis) . அதிக உடல் எடையை தாங்க இயலாமல் நமது மூட்டுகள் வலுஇழந்து தேய்மானம் ஆக ஆரம்பிக்கும். இது 
குண்டானவர்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனை. 

5. உயர் ரத்த அழுத்தம் (hypertension) - இன்சுலின் சுரப்பு இருந்து கொண்டே இருந்தால் அதனால் கிட்னிகள் உப்புச் சத்தையும் நீரையும் சேமிக்க கட்டளையிடப்படும்( sodium and water retention) இது தான் நாளடைவில் உயர் ரத்த அழுத்தம் வரக் காரணமாகிவிடுகிறது. 

6. தைராய்டு குறைபாடு (hypothyroidism) 
அளவுக்கு மீறி எடை போடுவதால் தைராய்டு சுரப்பி நிலைதடுமாறுகிறது. அது சுரக்கும் தைராக்சின் அளவுகளை குறைக்கிறது. உடல் அதனால் மேலும் குண்டாகிறது. 

7. ஆண் மலட்டுத்தன்மை ( infertility) 
குண்டானவர்கள் முக்கால்வாசிபேருக்கு பாலியல் தொடர்பான ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் சரியான அளவு சுரக்காமல் , அதனால் உடலுறவில் விருப்பமின்மை(loss of libido) , விறைப்புத்தன்மையின்மை ( erectile dysfunction) முதலியன வந்து சந்ததிகளை உருவாக்குவதே திண்டாட்டமாகிவிடுகிறது. 

8. நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு நோய்கள் முற்றி அது நமக்கு 
இதய ரத்த நாள அடைப்பு நோய்( coronary artery disease)  , சிறுநீரக அழற்சி நோய் ( chronic kidney disease) முதலியவற்றை உருவாக்குகிறது

9. கழுத்தைச் சுற்றி கொழுப்பு படிவதால் அது நாம் தூங்கும் போது சுவாசப்பாதையில் இடையூறு ஏற்படுத்தி குறட்டையை வர வைக்கிறது . பிறகு அது முற்றினால் obstructive sleep apnoea எனும் நோய் வருகிறது. தூங்கும் பொழுது குறட்டை விடுவது obstructive sleep apnea வின் அறிகுறியாக இருக்கலாம். 

10. அழகியல் சார்ந்த பிரச்சனைகள் (cosmetic problems)  எழுகின்றன. 

வளர்இளம்பெண்கள் பலருக்கு குண்டாக இருப்பதால் வரன் கிடைக்காமல் திருமணம் நடைபெறுவது தள்ளிப்போகிறது. 

பெண்களுக்கு கழுத்தைச் சுற்றி கருப்பு நிறத்தில் படியும். இதை acanthosis nigricans என்போம். இதுவும் குண்டாக இருப்பதால் தான். 

11. அதிகமான கொழுப்பு உள்ளுருப்புகளுள் படிவதால் (visceral fat) நமது கல்லலீரிலில் கொழுப்பு படிகிறது . இது fatty liver பிரச்சனையை உருவாக்குகிறது. பின்பு கல்லீரல் சுருங்கி அழற்சி ( cirrhosis) வருகிறது. 

இப்படி குண்டாக இருப்பதால் வரும் பிரச்சனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். 

அனைத்துக்கும் மூல காரணம் 
நமது மாவுச்சத்து அதிகமான உணவுப் பழக்கம் தான் 
இந்த நோய்களிடமிருந்து தப்பிப்பது நமது கைகளில்  தான் இருக்கிறது. 
இந்த நோய்களிடம் இருந்து தப்புவது நமது சரியான உடல் எடைக்கு திரும்புவதில் இருக்கிறது. எப்படி உடல் மெலிவது என்று வரும் பகுதிகளில் காண்போம்.

Leave Comments

Comments (0)