தீண்டாமைச் சுவரால் 17 தலித்துகளைக் கொன்ற ஆணவ சாதி வெறியனைக் கைது செய்- அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் 

/files/detail1.png

தீண்டாமைச் சுவரால் 17 தலித்துகளைக் கொன்ற ஆணவ சாதி வெறியனைக் கைது செய்- அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் 

  • 0
  • 0

 

தீண்டாமைச் சுவரை எழுப்பி 17 தலித்துகளைக் கொன்ற ஆணவ சாதி வெறியனைக் கைது செய்யவேண்டும் என்று அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத் தோழர்கள் தெரிவித்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் அருகில் உள்ளது நடூர். சக்ரவர்த்தி துகில் மாளிகை என்னும் பெயரில் இயக்கிவரும் துணிக்கடை உரிமையாளருக்குச் சொந்தமான வீடு இந்த கிராமத்தில் உள்ளது. ஆணவ சாதியைச் சேர்ந்த இவருடைய வீட்டைச் சுற்றியும் ஆணவ சாதி (வன்னியர்) மக்களையும்  தலித் மக்களையும் இரண்டாகப் பிரிக்கும் வகையில் 20 அடி தீண்டாமை சுவரைக் கட்டியுள்ளார்.

கருங்கல்லால் கட்டப்பட்ட அந்த சுவர் பராமரிப்பின்மை காரணமாக நேற்று (டிசம்பர் 03) காலை பெய்த மழையில் அதிகாலை 5.30 மணிக்குத் தலித் மக்கள் குடியிருப்பின் மீது இடிந்து விழுந்துள்ளது. இதில் மூன்று வீடுகள் முழுமையாக நசுங்கி அதிலிருந்த பெண்கள் உட்பட 17 பேரும் உடல் சிதைந்து இறந்துள்ளனர். 17 பேரில் இரண்டு பேர் குழந்தைகள்.

தீண்டாமை சுவரால் இன்று 17  தலித் மக்களை ஆணவ சாதி வெறி கொலை செய்திருக்கிறது. காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இந்த கொடூரத்திற்குக் காரணமானவர்களைக் கைது செய்யும் பணியில் ஈடுபடாமல், 17 பேரின் கொலைக்கு நீதி கேட்டுப் போராடும் தோழர்கள் மீது தாக்குதல் நடத்தி அடக்குமுறையைச் செலுத்தி அவர்களைக் கைது செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறது கோவை காவல்துறை.

இதுகுறித்து அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத் தோழர்கள், ”கோவை மேட்டுப்பாளையத்தில் நடூர் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள அருந்ததியர் மக்களுக்கு எதிராக 25 அடி உயரத்திற்கு 80 அடி நீளத்திற்குக் கருங்கல்லால் தீண்டாமைச் சுவர் எழுப்பியுள்ளனர். இதை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை போராடியுள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் முறையிட்டுள்ளனர். ஆனால், சுவர் அகற்றப்படவில்லை.

இந்நிலையில், மழையின் காரணமாக தீண்டாமைச்சுவர் இடிந்து குடியிருப்புகள் மேல்விழுந்து, 13 பெண்கள், 2 குழந்தைகள், 2 ஆண்கள் என மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கு அதிகளவில் கூலித் தொழிலாளர்களே வசித்து வந்துள்ளனர்.

தீண்டாமைச் சுவர் எழுப்பிய ஆணவ சாதிவெறியன் சிவசுப்பரமணியத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் கைது செய்யப்படவில்லை. ஆனால், உயிரிழந்தவர்களின் உடலை வாங்க மறுத்து, ஆணவ சாதி வெறியனைக் கைது செய்யக்கோரிப் போராடியவர்களின் மீது காவல்துறை தடியடி நடத்தியுள்ளது. கைதும் செய்துள்ளது. இதை அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.

Leave Comments

Comments (0)