தலித் மாணவர்களை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய ஆணவ சாதியினர்

/files/detail1.png

தலித் மாணவர்களை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய ஆணவ சாதியினர்

  • 0
  • 0

கடலூர் அருகே தலித் சமூகத்தைச் சேர்ந்த இரு மாணவர்களை ஆணவ சாதியினர் மரத்தில் கட்டி வைத்துச் செருப்பால் அடித்துள்ள சம்பவம் நடந்திருக்கிறது.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிபாடியடுத்த வசனகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீ காந்த், குணால். தலித் சமூகத்தைச் சேர்ந்த இந்த மாணவர்கள் நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது அவர்களது நண்பரான கார்த்திக் என்பவரைப் தற்செயலாகப் பார்த்துள்ளனர். அப்போது கார்த்திக், ”கடன் தொல்லை காரணமாக எனது இருசக்கர வாகனத்தை இங்கு இருக்கும் சிலர் அபகரிக்கப் பார்க்கிறார்கள். அதனால் இந்த வாகனத்தை ஆயிபேட்டைவரை ஓட்டி வாருங்கள். நான் அங்கு வந்து வாங்கிக் கொள்கிறேன். அதுவரை நான் பேருந்தில் வருகிறேன்” என்று கூறிவிட்டு அவர் பேருந்தில் சென்றார். கார்த்திக் சொன்னதுபோலவே  ஸ்ரீ காந்த்தும், குணாலும் வாகனத்தை ஆயிபேட்டையில் கார்த்திக்கிடம் கொடுத்துள்ளனர்.

அப்போது இந்த இரு மாணவர்களையும் பார்த்த ஆணவ சாதியினர் காலனி பசங்களுக்கு இங்க என்ன வேலை என்று கூறி தாக்கியுள்ளனர். சாதிப் பெயரைக் கூறி இழிவாகப் பேசி, மரத்தில் கட்டிவைத்துச் செருப்பால் அடித்து கொடுமையாக தாக்கியிருக்கின்றனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தாலும் காவல்துறையினர் புகாரைப் பெற்றுக்கொள்ளவில்லை என்று தலித் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் ஆணவ சாதியினருக்குத் துணைபோகும் காவல்துறையினரைக் கண்டித்தும், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஆணவ சாதியினரைக் கண்டித்தும் அப்பகுதி தலித் மக்கள் வடலூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

Leave Comments

Comments (0)