காஷ்மீருக்கு ''அச்சே தின்'' வந்துவிட்டது- ஆழி செந்தில்நாதன்

/files/detail1.png

காஷ்மீருக்கு ''அச்சே தின்'' வந்துவிட்டது- ஆழி செந்தில்நாதன்

  • 0
  • 0

 

”காஷ்மீரில் திடீரென பருவநிலை மாறிவிட்டது. இரண்டு நாட்களில் என்னன்னவோ நடந்துவிட்டது. முழு ஊரடங்கு பள்ளத்தாக்கை முடக்கிவிட்டது. முன்னாள் முதல்வர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். அனைத்து அரசியல்வாதிகளும் இயக்கவாதிகளும் முடக்கப்பட்டுவிட்டனர்.

காஷ்மீரில் எல்லாவிதமான தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுவிட்டன. வழக்கம்போல முதலில் மொபைல் இன்டர்நெட் நிறுத்தப்பட்டது. இறுதியில் லேண்ட்லைன்கூட மண்டையைப்போட்டுவிட்டது என்று கடைசியாகச் செய்தி வந்திருக்கிறது. அதிகாரிகளின் கைகளில் வாக்கி டாக்கி தரப்பட்டுள்ளது.

வெளிநாட்டு, உள்நாட்டுப் பத்திரிகையாளர்கள் அப்புறப்படுத்தப்படுகிறார்கள். பொது சாட்சியாக நிற்கவாய்ப்புள்ள எல்லோரும் காஷ்மீரை விட்டு அப்புறப்படுத்தப் பட்டுவருகின்றனர். சாட்சியங்களற்ற ஒரு போர் தொடங்கவுள்ளதோ என்று அஞ்சப்படுகிறது. முழு பள்ளத்தாக்கும் முள்ளி வாய்க்காலாகிவிடுமோ என அனுபவம் கொண்டவர்கள் விக்கித்து நிற்கிறார்கள்.

இனி உலகின் மிகப்பெரிய ராணுவங்களில் ஒன்றும் காஷ்மீர் மண்ணின் மைந்தர்களும் மட்டுமே அங்கே இருக்கப்போகிறார்கள். ஏற்கனவே விழிகளை இழந்தவர்களும் அதில் அடங்கும்.

என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்று யாருக்கும் தெரியாது அல்லது எல்லோருக்கும் தெரியும்.

புரளிகளை நம்பாதீர்கள் என்று தில்லி சொல்கிறது. இனி எது புரளி, எது வதந்தி, எது பொய்ச் சேதி என்று யாருக்குத் தெரியும்? இனி அரசாங்கம் சொல்வதே செய்தி. அரசாங்கம் சொல்வதே பொய். உண்மையை அல்லது பொய்யைச் சொல்ல வேறு யார் இருக்கப்போகிறார்கள்?

ஆனால் இந்த நாகரீக உலகம் இதைக் கண்டும் காணாமலும்போகத்தான்போகிறது.

இந்தியாவிலுள்ள ஜனநாயகவாதிகளும் முற்போக்காளர்களும் கைகட்டி நிற்கிறார்கள். அச்சம் நமது ஆசாரமாகிவிட்டது. The Idea of India என்றெல்லாம் சொன்னவர்கள் இப்போது என்னச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்?

இந்தியாவுக்கும் காஷ்மீருக்கும் இடையிலான சட்டபூர்வ தொப்புள்கொடியான இந்திய அரசியல்சாசனத்தின் பிரிவு 370 எந்த நேரமும் வெட்டப்படலாம். பின்பு அது ஒரு சர்வதேசப் பிரச்னையாக மாற்றப்படலாம். அப்போது, "வாக்குறுதி கொடுத்த இந்தியா வேறு, இன்றைய இந்தியா வேறு" என்று மோடி - ஷா கூறலாம். உலகம் அதை ஏற்றுக்கொள்ளலாம். It's a new normal.

வலதுசாரி அலைவீசும் உலக அரங்கில் ஈழம், காஷ்மீர், திபெத், குர்திஸ்தான் என எல்லாவற்றுக்கும் ஒரே விதிதானே! ஆசாதி கேட்ட காஷ்மீரிகளுக்கு தண்டனை காத்திருக்கிறது. அது ஆசாதி கேட்கவிரும்பும் அனைவருக்குமான பாடமாக இருக்கவும் போகிறது.

ஆனால் இன்னொன்றையும் சாம்ராஜ்யவாதிகள் தெரிந்துகொள்ளவேண்டும். ஒரு சாம்ராஜ்யத்தின் சரிவு இப்படித்தான் அமையும் என்பதும் வரலாறு.

இந்தியாவை ஒற்றையாட்சியாக. ஒற்றை மதத்தின் ஆட்சியாக மாற்றமுயல்வது இந்தியாவின் ஒற்றுமையைக் குலைக்கும் முயற்சிதான்.

ஆனால் இப்படி நாம் கத்துவதால் ஏதேனும் பலன் இருக்கப்போகிறதா என்ன? ஜெய் ஸ்ரீராம் பெருங்கூச்சல் முழக்கத்தின் மத்தியில் இது யார் காதிலாவதுப் படப்போகிறதா என்ன?

ஆனால் கத்துவதை நிறுத்தமாட்டோம். அந்த வரலாற்றுப்பிழையை நாம் செய்யமாட்டோம். இதுவரை தங்கள் அரசியல் உரிமைகளுக்காக நின்ற காஷ்மீர் மக்கள் இப்போது உயிர் பிழைத்து வாழ்வதற்கான உரிமைக்காக நிற்கிறார்கள். அவர்கள் உயிர்பிழைத்திருக்கவேண்டும் என நாம் குரலெழுப்புவோம்.

எங்கள் மீது இடியே விழுந்தாலும் விழட்டும். ஓ, காஷ்மீரத்து மக்களே, உங்கள் கரங்களை இவ்வேளை நாங்கள் ஆதரவோடு பிடித்துக்கொள்கிறோம். உங்கள் துயரத்தில் பங்கு வகிக்கிறோம்.

காஷ்மீர் பிரச்னை அமைதியாகத் தீர்க்கப்படட்டும் என்றே கூறுகிறோம். இந்தியாவும் பாகிஸ்தானும் ஆடிவரும் ஆட்டம் நிறுத்தப்பட்டு, இரு தரப்பிலுமுள்ள காஷ்மீர் மக்களின் அரசியல் உரிமைகளை மையப்படுத்தி ஒரு தீர்ப்பு எழுதப்படவேண்டும் என்று குரல்கொடுக்கிறோம்.

அதற்காகக் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாம் கைகோர்த்து நிற்போம் - அமைதிக்காக.

ஜனநாயகத்தின் மீதும் சமாதானத்தின் மீதும் நம்பிக்கை இருக்கும் இந்தியாவின் கோடிக் கணக்கான மக்கள் இந்த நொடியில் வாய்மூடிக்கிடக்கக்கூடாது.

வாய் திறந்திடுங்கள். எந்த அசம்பாவிதமும் நடக்கும் முன்பு உங்கள் கருத்துகளைத் தைரியமாக வெளிப்படுத்துங்கள்” என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave Comments

Comments (0)