யார் இந்த டேனிஷ் சித்திக்!

/files/werr_copy-2021-07-18-20:48:49.jpg

யார் இந்த டேனிஷ் சித்திக்!

  • 8
  • 0

தவ.செல்வமணி


உலக வரலாற்றில் மிக முக்கியமானதும் முதன்மையானதுமான  ஒரு விடயம் என்னவென்றால் வரலாற்றின் உண்மைகளை முறையாக பதிவு செய்வது தான், வரலாற்றை அறிந்து கொள்ளாமல் வரலாறு படைக்க இயலாது என்று அண்ணல் அம்பேத்கர் சொல்கிறார், அந்த வார்த்தைகளில் தான் எத்தனை அர்த்தங்கள் பொதிந்துள்ளது.


எங்கோ ஒரு மூலையில் ஒரு மிகபெரிய பிரச்சனை நடந்து வருகிறது என்கிற உண்மை முதலில் வெளி உலகுக்கு தெரிந்தால் தான் அந்த பிரச்சனைக்கு குரல் கொடுக்கவும், தீர்வு காணவும் முடியும், அதை தனது பேனாவின் மூலமும், கேமராவின் மூலமாகவும் உலகுக்கு காட்டுபவர்களும் உண்மையில் போராளிக‌ளே!


 உலகம் முழுவதும் இனப்படு கொலைகள் நடக்கிறது, மத கலவரங்கள் அரங்கேறுகிறது, சாதிய சண்டைகள் நடக்கிறது, பெண்களும், குழந்தைகளும் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அழிக்கப்படுகிறார்கள்.


இந்த அநீதியெல்லாம் வீழ இவைகளை தைரியமாக களத்தில் ஆய்வு செய்து செய்தி ஊடகத்தில் பதிவு செய்வதே முதன்மையானது அப்படியான ஒரு கேமரா ஏந்திய போராளிதான் தோழர் டேனிஷ் சித்திக்!நிறைய ஊடகங்கள் பணம் வாங்கிக் கொண்டும், ஆதிக்க சக்திகளுக்கு அஞ்சியும், வெற்று செய்திகளையும், ஆன்மீக துணுக்குகளையும், போலிகளையும் பரப்பினாலும், அறத்துடன் மக்கள் பக்கம் நிற்கும் செய்தி ஊடகங்களும் உள்ளன, அவைகளே  விலைபோகத வைரங்கள்!


தோழர் டேனிஷ் சித்திக் ரைட்டர் செய்தி ஊடகத்தின் தலைமை செய்தி ஒளிப்பதிவாளராக பணியாற்றுபவர்..


உலகம் முழுக்க நடக்கும் அநீதிகளை படம் பிடித்து உலகுக்கு வெளிக்கொண்டு வருபவர், உலகின் உயரிய விருதான புலிட்சர் விருதை வென்றவர்.அவர் எடுத்த புகைப்படங்கள் ஒவ்வொன்ரும் உண்மையின் சாட்சியங்கள், மதவாதிகளுக்கு எதிரான மனித நேயங்கள், ஆதிக்க அரசுக்கு எதிரான அற ஆயுதங்கள், விவசாயிகளின் தோழமை சக்திகள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம், இப்படிபட்ட தோழர் இன்று நம்மிடையே இல்லை என்பது  இந்த மானுட சமூகத்துக்கே பேரிழப்பு, 

என்று தான் சொல்ல வேண்டும். ஆப்கானிஸ்தானில் நடக்கும் உள் நாட்டு போரை படம் பிடித்து உலகுக்கு காட்ட விரும்பியவரை மனித விரோத கும்பல் கொலை செய்துள்ளது. 

இவருடைய ஊடக பணி என்பது நிச்சயமாக அர்ப்பணிப்பும், சமூக அக்கறையும் நிறைந்தது.


ஒன்றிய அரசுக்கு எதிராக 200 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் வட இந்திய விவசாயிகளின் போராட்டங்கள், CAA எதிர்ப்பு போராட்டங்கள், இன வெறி கொண்ட அரசால் விரட்டப்பட்ட அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இந்துத்துவா வெறியர்களால் அப்பாவி இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட்டது, என அரசின் ஆதிக்க சக்திகளின் அநீதிகளை படம்பிடித்த அந்த கைகள் இன்று மரணத்தை தழுவிக் கொண்டது உண்மையிலேயே வருந்தத் தக்க செய்தி தான்.


இவையெல்லாவற்றுக்கும் மேலாக இன்று இந்திய ஒன்றிய பிரதமர் கொரொனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட உத்திரபிரதேசம் என்று உரையாற்றுகிறார் ஆனால் வட இந்தியா முழுவதும் நடந்த கோவிட் மரணங்களை பாரதிய ஜனதா அரசின் கையாலகாத தன்மையை உலகுக்கே எடுத்து காட்டியது இவரது கேமராக்கள் தான். ஒரு புகைப்படம் என்ன செய்யும் என்று யாரும் கேட்டு விட முடியாது, ஒரு புகை படமோ, ஒரு ஒரு பாட்டோ, ஒரு சிறு காணொளியோ கூட நிச்சயம் மிகப்பெரிய புரட்சிகளை எல்லாம் இந்த உலகில் நிகழ்த்தி உள்ளன. 


அப்படியான புகைப்படங்களை மிக தைரியமாக எந்த அநியாய சக்திகளுக்கும் பயம் கொள்ளாமல் நெஞ்சுரத்துடன் எடுத்திட்ட  மக்கள் கலைஞர் தோழர் டேனிஷ் சித்திக் அவர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி என்பது சாதிய, மதவாத, இனவாத கயவர்களை புறக்கணிப்பதாக தான் இருந்திட முடியும்!

Leave Comments

Comments (0)