உத்திரபிரதேசமா  இல்லை குற்றங்களின் பிரதேசமா! 

/files/tackirrt-2020-11-22-19:09:10.jpg

உத்திரபிரதேசமா  இல்லை குற்றங்களின் பிரதேசமா! 

  • 10
  • 0

-T.செல்வமணி


உத்திரபிரதேசம் இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் 80 மக்களவை தொகுதிகளையும், 404 சட்டமன்ற தொகுதிகளின் கொண்டது. தாஜ் மஹால் ,ஆக்ரா கோட்டை என்கிற அழகிய கட்டிடங்களை தன்னகத்தே கொண்டது அழகியல் ஒருபுறம் என்றால் இதன் ஒட்டுமொத்த  உள்புறமும் பல வரலாற்றுக் கறைகள் நிறைந்தது. அயோத்தி பாபர் மசூதி இடிப்பு தொடங்கி பல மதக் கலவரங்களும் சாதி மோதல்களும் நிறைந்தது. மாட்டை கடவுளாகவும் சக மனிதனை மனிதனாக கூட பார்க்காத மதவாதிகளின் ஆட்சி நடக்கும் அம்மாநிலத்தில் பசுக்களுக்கு என்று ஆம்புலன்ஸ் விட்டார்கள் பசுக்களுக்கு பல கோடி நிதிகளை ஒதுக்கினார்கள் இவர்களைப் பார்த்து மற்றுமொரு பக்கத்து மாநிலமான மத்திய பிரதேசம் பசு அமைச்சரவையை இந்தியாவிலேயே முதன்முதலாக ஏற்படுத்தியுள்ளது. அதுவும் பாஜக மாநில அரசு தானே! உரிமையாளர்களால் கைவிடப்பட்டு பொது இடங்களில் சுற்றித் திரியும் பசுக்களை தத்தெடுத்து வளர்ப்பதற்கான ஒரு திட்டத்தை கடந்தாண்டு யோகி அரசு அறிவித்தது அப்படி பசுக்களை பராமரித்தால் அவர்களுக்கு மாதம் ரூபாய் 900  வழங்கப்படும் என்றும் அறிவித்தார்கள். அதன்படி மூன்று மாதங்களில் ஒரு லட்சம் பசுக்கள் இத்திட்டத்தின் படி பாதுகாக்கபடும் என்று கூறி மக்கள் மத்தியில் தீவிர பிரச்சாரமும் செய்தார்கள் ஆனால் மூன்று மாதங்களில் ஒரு லட்சம் பசுக்கள் என்றார்களே ஆனால் இதுவரை     5000 முதல் 10 ஆயிரம் பசுக்கள் தான் தத்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பசு அமைச்சகத்தை மத்திய பிரதேச மாநிலம் அமைக்கும் என்று அறிவித்துள்ளது. இப்படி பசுக்களுக்காகவே பல திட்டம் போடும் உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட தொழிலாளர்கள்தான் இந்தியா முழுவதும் பல ஆயிரம் கிலோமீட்டர் நடந்தே சொந்த ஊர்களுக்கு திரும்பினார்கள் தனது சொந்த ஊருக்கு கொரொனா காலத்தில் வீடு திரும்பிய பல லட்சக்கணக்கான மக்களுக்கு வாகன வசதி கூட செய்து கொடுக்காதவர்கள் தான் இந்த அரசுகள். வேலை இன்மையாலும், சரியான வேலை கிடைக்காததாலும் உ. பி,ம. பிரதேசத்தை  சேர்ந்தவர்கள் தான் இந்தியா முழுக்க பெருநகரங்களில் கூலித் தொழில் செய்கிறார்கள். அவர்கள் மட்டுமல்லாது அவர்களுடைய 5,6 வயது குழந்தைகளும் அத்தனை கிலோமீட்டர்கள் நடந்து சென்றது ஒட்டுமொத்த இந்தியாவுக்கே அவமானமாக அமைந்தது. அவர்களுக்காக ஏதேனும் ஒரு நடவடிக்கை இந்த அரசு எடுத்திருக்குமா? பசுக்களை காரணம் காட்டியே இஸ்லாமியர்களையும், தலித்துகளையும்,  அடித்துத் துன்புறுத்தினார்கள், கொலை செய்தார்கள் இவை கும்பல் கொலை என இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது கடந்த இரண்டு ஆண்டுகளில் 40க்கும் மேற்பட்ட கும்பல் கொலைகள் நடந்து உள்ளது. அதை தடுக்க இந்த அரசு ஏதேனும் திட்டம் போட்டதா? பசுக்களை பாதுகாக்க மனித உயிர்களை கொல்லும் இவர்களுடைய அரசுதான் இந்தியாவில் உலகத்திலேயே மாட்டு இறைச்சி அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடாக உள்ளது. அந்த அரசை எதிர்த்து இவர்கள் கேள்வி கேட்டு இருக்கிறார்களா? இல்லை இது கூட தெரியாத அளவுக்கு அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறார்களா? இதுமட்டுமா உத்திரபிரதேசத்தில் நடந்த அவலங்கள் எத்தனை எத்தனை

 

  1. 15 வயதுடைய பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆதிக்கசாதி குற்றவாளிகளின் உறவினர்கள் அந்த வழக்கை திரும்பப் பெறச் சொல்லி பெண் குழந்தையின் குடும்பத்தினரை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். இதுபற்றி அந்த குழந்தையின் தந்தை காவல் துறையில் புகார் அளித்துள்ளார் அதை கண்டுகொள்ளாமல் ஆதிக்க சாதி வெறியர்களுக்கு ஆதரவாக காவல்துறையும் நடந்துகொள்கிறார்கள், அந்தக் குற்றவாளியின் உறவினர்கள் அச்சிறுமியின் வீட்டிற்கே வந்து அவளை தீயிட்டுக் கொளுத்தி விடுகிறார்கள். ஆதிக்கசாதி வெறியர்களின் இச்சைக்கும் ஆணாதிக்கதுக்கும்,  காவல் துறை அலட்சியத்துக்கும் ஒரு பட்டியல் சமூக சிறுமி பலியானாள்.   1. 16 வயது பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சிறுமி மாலையில் கழிவறை செல்ல வேண்டி பொது கழிவறை நோக்கி செல்லும் வழியில் அதே பகுதியை சேர்ந்த 50 வயது ராஜன், 22 வயது அனில்குமார், 18 வயது ஆகாஷ், இந்த மூன்று கயவர்களால் வன்புணர்வு செய்யப்படுகிறாள். இதில் ராஜன் என்பவர் அந்த ஊரின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.


நாட்டில் நடக்கும் குற்றங்களில் 10% சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் உத்திரப்பிரதேசத்தில் தான் பதிவாகியுள்ளன. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதாவது 56011. இப்படி பெண்களுக்கு எதிரான அசம்பாவிதங்கள் நடக்கும் தலைநகரமாக உத்திரபிரதேசம் இருக்கும் நிலையில் அந்த அரசு இதை தடுக்க ஏதேனும் ஒரு  நடவடிக்கையை மேற்கொண்டதா? பசுக்களின் பாதுகாப்புக்கு 40 கோடியை செலவிட்ட அவர்களால் பெண்கள் பாதுகாப்புக்கு என்ன செய்தார்கள்?

 


இவ்வளவு ஏன் ஒரு பெண் குழந்தை பாக்கியத்தை பெற வேண்டும் என்ற மூடநம்பிக்கையின் உச்சமாக 6 வயது சிறுமியை வன்புணர்ந்து கொலை செய்து மார்பைப் பிளந்து அச்சிறுமியின் நுரையீரலை எடுத்து பூஜை செய்துள்ளார்கள். எழுதும்போதே மனது நடுங்குகிறது இப்படி சாதிய மத மூடநம்பிக்கை நிறைந்து கிடக்கும் இந்த மண்ணை சீர்படுத்த வேண்டும் என்று சாமியார் முதல்வர் யோகி ஆதித்யநாத் நினைப்பாரா? பெண்களை சக மனிதர்களாக நடத்த வேண்டும் அவர்களுக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு பாலின சமத்துவத்தை, பாலின கல்வியையும் போதிக்க நடவடிக்கை எடுக்காமல், மாடுகளின் பின்செல்லும் அரசையும் மக்களையும் என்ன சொல்ல? இந்தியாவின் மையமாக இருக்கும் உத்தரபிரதேசத்தில் சட்ட ஒழுங்கின்மை, கொள்ளை, வகுப்புவாதம், சாதிக்கொடுமை, பாலியல் சார்ந்த கொடூரங்கள் வேலையில்லாத் திண்டாட்டம், படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத நிலை பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, வன்புணர்வு இத்தனையும் தலைவிரித்தாடுகிறது இதுபற்றி அரசுக்கும் அக்கறை இல்லை மக்களுக்கும் அடிப்படை புரிதல் இல்லை...

Leave Comments

Comments (0)