தான் நடித்த படத்தின் காட்சியை ஆபாசத் தளத்திலிருந்து நீக்க, ஆறு வருடங்களாக போராடி வரும் கேரள நடிகை

/files/ok 2020-10-22 19:21:21.jpg

தான் நடித்த படத்தின் காட்சியை ஆபாசத் தளத்திலிருந்து நீக்க, ஆறு வருடங்களாக போராடி வரும் கேரள நடிகை

  • 509
  • 0

ஸ்ரீதேவி ஜெயராஜன்

தமிழில்: கோபி


ஏழு வருடங்களுக்கு முன்பு, For Sale என்ற மலையாளப் படத்தில் நடித்தார் சோனா ஆப்ரகாம். தன்னுடைய சிறிய தங்கை பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதை பார்த்த பெண் ஒருவள் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்வதே இப்படத்தின் கதை. அப்போது 14 வயது சிறுமியாக இருந்த சோனா, அப்படத்தில் தங்கையாக நடித்தார். அந்தப் படத்தில் சங்கடமான பாலியல் வல்லுறவு காட்சியில் தான் நடித்தது பற்றி தற்போது நினைவுகூர்கிறார் நடிகை சோனா.

சோனா கூறுகையில், “இந்தக் காட்சிகள் தனியாக கையடக்க கேமராவில் படமாக்கப்பட்டது. தேவையான காட்சிகளை படத்தில் சேர்த்த பிறகு மற்ற காட்சி துணுக்குகள் அழிக்கப்படும் என படத்தின் இயக்குனர் (சதிஷ் அனந்தபூரி) மற்றும் தயாரிப்பாளர் (ஆண்டோ கடவள்ளி) வாக்குறுதி கொடுத்தனர்.”

ஆனால் ஒரு வருடம் கழித்து, கையடக்க கேமாரவில் பதிவு செய்யப்பட்ட மொத்தக் காட்சிகளும் இணையத்தில் உலா வந்தன. குறிப்பாக யூடுயிபில் பரவின. இதன் காரணமாக சோனாவின் குடும்பத்தினர் போலீசின் உதவியை நாடினர். அதற்குப் பிறகுதான் பெரிய போராட்டமே தொடங்கியது. ஆறு வருடங்கள் ஆகியும், இணையத்தில் பரவி வரும் காட்சிகளை நீக்க இன்று வரை போராடி வருகிறார் சோனா. ஆன்லைன் குற்றத்தை, குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றத்தை எந்தளவிற்கு மெத்தனமாக அதிகாரிகள் கையாள்கிறார்கள் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. சமீபத்தில் சினிமாவில் பெண்கள் கூட்டமைப்பு நடத்திய ‘அவமதிப்பை மறு’ பிரச்சாரத்தில் ஆன்லைன் பாலின நீதி, ட்ரோலிங் மற்றும் இணையம் வழியாக அச்சுறுத்தல் போன்ற பல பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் தனது அணுபவத்தை வீடியோ மூலம் பகிர்ந்து கொண்டார் நடிகை சோனா.

“யூடுயுப்பில் உள்ள காட்சிகளை நீக்குமாறு 2014-ம் ஆண்டு எர்ணாகுளம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டேன். காட்சிகளை நீக்குமாறு கமிஷனர் கையொப்பமிட்ட வேண்டுகோள் கடிதத்தை அனுப்பினால் யூடுயுப் உடனடியாக சம்மந்தப்பட்ட காட்சிகளை நீக்கிவிடும் என அதிகாரிகள் கூறினர். அந்த சமயத்தில் என்னிடம் இருந்து அவர்கள் எந்தப் புகாரும் பெறவில்லை. முதல் தகவல் அரிக்கையும் பதியவில்லை” என சோனா கூறுகிறார்.

சம்மந்தப்பட்ட காட்சிகள் யூடுயுப்பில் தற்காலிகமாக நீக்கப்பட்டாலும், ஆபாசத் தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் உடனடியாக பரவத் தொடங்கின. இந்தக் காட்சிகளுக்கு ஊடே ஆபாசத் துணுக்குகளும் சேர்க்கப்பட்டன.

2016-ம் ஆண்டு, சோனாவும் அவரது அம்மாவும் For Sale படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எடிட்டர் மீது எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். ஏன் இந்தக் காட்சி துணுக்குகளை வெளியே கசியவிட்டனர் என அவர்களுக்கு சுத்தமாக தெரியவில்லை. படப்பிடிப்பின் போது தயாரிப்பாளரோடு சில கசப்பான சம்பவங்கள் நடந்ததாக நினைவுகூறும் சோனா, ஆனால் அந்தளவிற்கு அது பெரிய பிரச்சனையில்லை என்றும் கூறுகிறார். இந்தக் காட்சிகள் வெளியே கசிந்ததும், நானும் எனது அம்மாவும் தயாரிப்பாளரிடம் முறையிட்டோம். ஆனால் இதற்கு தான் பொறுப்பு ஏற்க முடியாது என அவர் மறுத்துவிட்டார்.


“இவர்களுக்கு தெரியாமல் இந்தக் காட்சிகள் வெளியாகியிருக்க முடியாது. ஏனென்றால் அதற்கான உரிமை இவர்களிடமே உள்ளது. ஆகையால் முதல் தகவல் அறிக்கையில் அவர்களது பெயரைச் சேர்ப்பது பொருத்தமானதே. மேலும் இந்தக் காட்சிகளை இணையத்தில் இருந்து நீக்குமாறும் புகாரில் தெரிவித்துள்ளேன். எனது புகார் சைபர் பிரிவிற்கு மாற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி கொடுத்துள்ளனர்.” 

இணையத்தில் இருந்து சம்மந்தப்பட்ட காட்சிகளை போலிசார் நீக்கினாலும், உடனடியாக வேறு ஒரு தளத்தில் காட்சிகள் வெளியாகிவிடுவதாக கூறுகிறார் சோனா.

இதற்கிடையே, குற்றவாளிகளின் மீது சிறிய பிரிவுகளின் கீழ்தான் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிசி 500 (அவதூறு) மற்றும் கேரள போலீஸ் சட்டப் பிரிவு 119 (பி) (பெண்களின் அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் புகைப்படம் எடுப்பது அல்லது வீடியோ பதிவு செய்வது அல்லது எந்தவொரு இடத்திலும் பரப்புரை செய்வது ).

“படப்பிடிப்பின் போதும் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வெளியான போதும் நான் சிறுமியாக இருந்தேன். ஆகையால் இது போஸ்கோ சட்டத்தின் கீழும் தகவல் தொழிநுட்ப சட்டம், பிரிவு 67 B-யின் கீழும் வரும். புகாரில் இந்தப் பிரிவுகள் சேர்க்கப்படாததால் கைது செய்த உடனேயே காவல் நிலையத்தில் வைத்தே குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க வாய்ப்பாக உள்ளது” எனக் கூறுகிறார் சோனா.

இறுதியாக, இணையத்தில் இருக்கும் காட்சி துணுக்குகளை நீக்குமாறும் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எடிட்டர் மீது கொடுக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் கடுமையான சட்டப் பிரிவுகளை சேர்க்குமாறும், 2016-ம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்தார் சோனா. 

தற்போது சட்டக் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு மாணவியாக இருக்கும் சோனா, ‘அவமதிப்பை மறு’ பிரச்சாரத்தில் தனது அணுபவத்தை வீடியோவில் பகிர்ந்து கொண்டபிறகு, அவரது புகாருக்கு குறிப்பிடத்தகுந்த கவனம் கிடைத்துள்ளது. கேரள பெண்கள் ஆணையத்திடம் இருந்தும் சைபர் குற்றத்தை கையாளும் கேரள காவல்துறையின் ஹைடெக் பிரிவிடமிருந்தும் தனக்கு அழைப்பு வந்துள்ளதாக கூறுகிறார் சோனா.

Leave Comments

Comments (0)