தன்னிகரற்ற தமிழ்ஸ்டுடியோவின் 13 ஆம் ஆண்டு தொடக்கம்.... 

/files/rereee-2020-11-21-15:38:21.jpg

தன்னிகரற்ற தமிழ்ஸ்டுடியோவின் 13 ஆம் ஆண்டு தொடக்கம்.... 

  • 20
  • 0


-T.செல்வமணி


கலை மனித வாழ்வின் ஆத்மார்த்தமான கொண்டாட்டம், மக்களின் வலி, காதல், கோபம், இயலாமை, உரிமை  சமத்துவம் என அனைத்து இயல்புகளையும் காட்டுவதற்கான வழித்தடம் அதன் நவீன நீட்சியாக சினிமா. அந்த சினிமா வரலாற்றுத் தொன்மை வாய்ந்த மனித இனமான தமிழனின் கைகளில் தாமதமாகத்தான் வந்து சேர்ந்தது, வந்த நாளிலிருந்து இன்று வரை அதனை ஆக்கிரமிப்பு செய்வது வணிக முதலாளித்துவமாகவே உள்ளது. எல்லாத்துறைகளிலும் புரையோடிக் கிடக்கும் பார்ப்பனீயம் திரைத்துறையையும் தின்று கொழித்தது, அடித்தட்டு மக்களின் வாசம் கூட கட்டப்படாமல் ஆடம்பரம் தலைவிரித்தாடியது, அவ்வப்போது சில நல்படைப்பாளிகள் மாற்றத்தைக் கொடுக்க எழுச்சியுடன் வந்து முட்டி மோதி பெரும் இழப்புகளுடன் விடைபெற்றுக் கொண்டார்கள். காரணம் மாற்று சினிமாவுக்கு மக்களிடம் ஆதரவு இல்லை எந்த ஒரு புரட்சியும் ஏற்பட வேண்டுமெனில் அதற்கான விதையும் வீரியமாக விதைக்கப்பட்டிருக்க  வேண்டும். வாசிப்பும், தேடலும், அறிவு மேன்மையும் மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு அமைப்பு வேண்டும் என்பதை உணர்ந்த தமிழ் இளைஞனின் பேராண்மை முயற்சிதான் தமிழ் ஸ்டுடியோ... 


1857ல் தொடங்கப்பட்ட சிப்பாய் புரட்சி தான் 1947-இல் கிடைத்த இந்திய சுதந்திரத்திற்கு வித்திட்டது, காரல் மார்க்ஸின் எழுத்துக்கள்  தான் இன்று உலகத் தொழிலாளர்களின் விடுதலையை காத்து நிற்கிறது, வால்டேர், ரூசோ எழுத்துக்கள் இல்லை என்றால் பிரெஞ்சுப் புரட்சி இல்லை, இப்படி எந்த ஒரு மாற்றத்தையும் மக்களிடம் விளைவிக்க நெடுங்காலம் எடுக்கும் ஆனால் காலத்தை எண்ணி கலங்கி நிற்பவர்  நிச்சயம் களப்பணி ஆற்ற இயலாது என்பதை உணர்த்திய பல ஆளுமைகளை போல இந்த தமிழ்ச் சமூகத்தில் சமுதாய ரீதியான, மாற்றுசினிமா களம் அமைக்க வழிகாட்டும்  ஒளிவிளக்கமாக விளங்கி வரும் தமிழ் ஸ்டுடியோ வருகிற நவம்பர் 23யில் பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.... 


சினிமா என்றால் பெயர், புகழ் சம்பாதிக்கும் ஒரு மாய உலகம் என்கின்ற போதையை, தெளிய வைக்கும் மருத்துவமாக தமிழ் ஸ்டுடியோ அதன் மருந்தாக பல படிப்பினைகளை செய்து வருகிறது. சினிமா மக்களுக்கானது என்ற தெளிவான புரிதலை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்கின்ற கலை ரீதியான ஒரு போராட்டமே இதன் அடிநாதம்... 


அப்படி 2008யில் அருண், குணா என்கிற இரண்டு இளைஞர்களால் தொடங்கப்பட்டதுதான் தமிழ் ஸ்டுடியோ. சினிமா ஆசையோடு சென்னைக்கு வந்த இவர்களை வியாபார சினிமாவின் களவாணிகள் ஏமாற்றுகிறார்கள். இவர்கள் நினைத்து இருந்தால் அடுத்த சில ஆண்டுகளிலேயே வேறு ஒரு படம் இயக்கி இருக்கலாம், இப்பொழுது ஒரு சிறந்த இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கலாம். ஆனால் நம்மை ஏமாற்றியது போல இன்னும் எத்தனை பேரை இந்த கும்பல் ஏமாற்றும் என்று எண்ணுகிறார்கள் சுயத்தை தாண்டி பொதுநல பார்வை கொண்டு இந்த சமூகத்தை பார்க்கிறார்கள். சினிமா ஆசையில் வரும் இளைஞர்களுக்கு வழிகாட்டுவதையே தனது வாழ்க்கையாக மாற்றிக் கொள்ள முடிவெடுக்கிறார்கள். இன்று வரை பல சுயாதீன படைப்பாளிகளை சினிமாவிற்கு தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். அதன் வீரியம், விருட்சம் அடுத்த பல நூற்றாண்டுகளுக்கு தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒளிவீசும் என்பது திண்ணம். 

தோழர் அருண் மோ பெரும் வருமானம் ஈட்டக்கூடிய மென்பொருள் நிறுவன வேலையை விட்டுவிட்டு முழுமையாக தமிழ் ஸ்டுடியோவை நடத்தி வருகிறார், விதை என்னும் இயற்க்கை அங்காடியை ஆரம்பித்து பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் ஆரோக்கியத்தையும் வழங்கி வருகிறார். அனைத்து சமூக செயல்பாட்டாளர்களுக்கும் ஏற்படும் பொருளாதார நெருக்கடி இவரையும் பெரிதாக தாக்கிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலானோர் இத்தகைய சூழ்நிலையில் ஏதேனும் ஒரு கட்சியுடனோ,  திரைப்படத் துறையைச் சார்ந்த பெரும்புள்ளிகளுடனோ, என்ன சொல்ல சாதியமைப்புடனோ  கூட கூட்டு வைத்துக் கொள்வார்கள். ஆனால் தான் கொண்ட கொள்கையில் உறுதியாகவும் சமரசமின்றி தனித்தன்மையோடு தனித்து நிற்பது தானே தமிழ் ஸ்டுடியோவின் சிறப்பாக உள்ளது என்பதை நிரூபித்துக் கொண்டே வருகிறார். அதன் பணி முதலீடுகளை அதன் மாணவர்கள் ஒருநாள் தமிழ் உலகு பெருமிதம் கொள்ளும் விதத்தில் படைப்புலகை சுத்தம் செய்வார்கள், மாற்று சினிமாவை மலரச் செய்வார்கள்...


கடந்த 12 ஆண்டுகளில்  தமிழ் ஸ்டுடியோவின் முன்னெடுப்புகள்பியூர் சினிமா புக் ஷாப் 


புத்தகமே புரட்சியை விதைக்கும் ஆயுதம் அதை மக்களிடம்  கொடுத்தால் அவன் மகத்தானவன் ஆகிவிடுவான் என்ற நோக்கில் உலகத் திரைப்படங்களுக்கு இணையாக தமிழ் சினிமா மேம்பட வாசித்தல் அவசியம் என்பதை உணர்ந்து. இந்தியாவில் சினிமாவுக்கு என்றே ஒரு புத்தக நிலையம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில்  பியூர்சினிமா  புத்தக நிலையம் தொடங்கப்படுகிறது... 

கூடு 


இலக்கியம்தான் எத்தகைய இன்றியமையாதது அதன் தாக்கம் சரியான கருத்தோடு நம் மக்களை சென்று சேர வேண்டும் என்கிற நோக்கில் உருவானது தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய இணைய மாத இதழ் கூடு. 

இது ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதி வெளியாகிறது...

பேசாமொழி 


பண்பட்ட படைப்புகளை நம் மக்களிடம் கொண்டுசெல்ல நமக்கென பதிப்பகம் அவசியம் என்கின்ற நோக்கில் தொடங்கப்பட்டது தான் பேசாமொழி பதிப்பகம், திரைதுறை வல்லுநர்களின் துறை சார்ந்த தொழில்நுட்பங்களை தமிழில் மொழிபெயர்த்து எளிமையாக்கி மக்களிடம் கொண்டு செல்லும் இதன் பங்கு மிக சிறந்தது. 

தமிழ் ஸ்டுடியோவின் சினிமாவிற்கான மாத, இணைய இதழை ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி வெளியிடுகிறது... 


படச்சுருள்

 

நம் தமிழகத்தில் சினிமாவிற்காக வரும் ஒரு மாத இதழ் உலகத்தரத்தில் இருப்பது நமக்கு ஒரு கொடுப்பினை. அப்படியான எழுத்தும் கருத்தும் கொண்ட சினிமா மாத இதழ் தான் படச்சுருள். இது சினிமாவோடு மட்டுமல்லாது அரசியலையும், சமத்துவத்தையும், சமூக அவலங்களை சேர்த்தே பேசுகிறது. கருப்பு 


கருப்பு, சிவப்பு, நீலம் இம்மூன்றும் இணைந்தால் மட்டுமே இந்தியாவை மதவாதிகளிடம் இருந்து மீட்கவும் காக்கவும் முடியும் என்பதே நிதர்சனம். அப்படி பெரியாரியத்தையும், கம்யூனிசத்தையும், தலித்தியத்தையும், சூழியலையும் இணைத்து அறத்தினை விதைக்க முன்னெடுக்கப்படும் ஒரு அரசியல் தளம். அவலங்களை எடுத்துரைக்கும் அரசியல் பெட்டகம் தான் நமது கருப்பு ஊடகம். 

கருப்பு வலைதளத்தில் மக்களுக்கான எழுத்தும் பேச்சும் காணொளிகளும் பதிவேற்றபடுகிறது... 
படிமை 


தொடர் பயிற்சியின் மூலம் தான் எந்த ஒரு துறையிலும் சாதிக்க இயலும் நிலைத்து நின்று நீண்ட பயணத்தை மேற்கொள்ள முடியும். அப்படி திரைத் துறையில் கால் பதிக்க, நிலைத்து நிற்க, பயணிக்க வேண்டியது படிமை பயிற்சி மையத்தில் தான். நடிப்பு, திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம் உள்ளிட்ட திரைத்துறையின் பல்துறை பயிற்சிகளாக அழகான பயணத்தோடு அனுபவமாக ஊட்டப்படுகிறது... 

ADTC 


ஒரு சினிமா சிறந்த சினிமாவாக வெளிவர வேண்டும் எனில் குறிப்பாக அதில் வேலை செய்யும் உதவி இயக்குனருடைய உழைப்பு நிச்சயம் ஒரு தூணாக படத்தை தூக்கி நிறுத்தும். அப்படி சிறந்த உதவி இயக்குனர்களை உருவாக்கும் தமிழ் ஸ்டுடியோவின் ஒரு முயற்சி தான் ADTC என்னும் உதவி இயக்குநர் பயிற்சி மையம்... 

IFFC


உலக அளவில் பல திரைப்பட விழாக்கள் நடந்து வருகிறது, உலக அளவில் சுயாதீன திரைப்பட விழாக்களும் பல நடந்துள்ளது ஆனால் இவை எல்லாவற்றிலும் இருந்து விடுபட்டு மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் Crowd Founding மூலம் நடக்கும் முதல் சர்வதேச திரைப்பட விழா தான் தமிழ் ஸ்டுடியோ ஒன்றிணைக்கும் IFFC. 

இது நிச்சயம் தமிழ் திரை உலகில் ஒரு புதிய மைல்கல்லாகவே அமைந்தது... 
செங்காந்தள் புத்தக நிலையம்


சினிமா சார்ந்து மட்டுமல்லாது அனைத்து வகை வாசிப்பு அறிவும் படைப்பாளிக்கு அவசியம் அதற்க்கு நாம் ஒரு களம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று உருவானதுதான் செங்காந்தள் புத்தகநிலையம். அரசியல், அறிவியல்,இலக்கியம், நாவல், சூழியல், மருத்துவம், ஆரோக்கியம் என அனைத்து வகையான புத்தகங்களையும் உள்ளடக்கிய ஒரு புத்தக நிலையம் நமது செங்காந்தள்... 


மிக முக்கியமாக தமிழ் ஸ்டுடியோவின் முன்னெடுப்புகளில் ஒன்று என்னவென்றால் இரண்டு விருதுகளை வழங்கி இளம் படைப்பாளிகளை ஊக்குவித்து வருகிறது. இயக்குனர், ஒளிப்பதிவாளர் தமிழ் சினிமாவில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று தன் வாழ்நாள் முழுவதும் குரல் எழுப்பிய கவிதை கலைஞன் பாலுமகேந்திரா அவர்களுடைய பெயரிலும், திரைத்துறையில் பல வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்த போதும் அதை புறக்கணித்து குறும்பட, ஆவணப்பட  உலகில் நுழைந்து அதை தமிழ் மண்ணில் பரவலாக பரப்ப பெரும்பாடுபட்ட எடிட்டர் லெனின் அவர்களுடைய பெயரிலும் விருதுகள் வழங்கப்படுகிறது இது இளம் படைப்பாளிகளின் படைப்பாற்றலை அங்கீகரிக்கும் ஒரு செயல்...


திரைதுறையினரின் சரியான ஒத்துழைப்பின்மை, பொருளாதார நெருக்கடிகள் என பல நெருக்கடிகள் சூழ்ந்த நிலையிலும் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டே தான் உள்ளது நம்முடைய தமிழ் ஸ்டுடியோ. இதுநாள் வரை மாற்று சினிமா ஊடகம் என்னும் மாபெரும் இலட்சிய பாதையில் பயணித்து வரும் தமிழ் ஸ்டுடியோவிற்கு ஒத்துழைத்து, உறுதுணையாக நின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கு அன்பும் நன்றியும் முத்தங்களும் கொடுப்பதே அறமாகும். இந்த 13 ஆண்டுகள் ஓர் ஆரம்பம் தான், இன்னும் பல ஆண்டுகள் இந்த இயக்கம் தனது உன்னத நோக்கிற்காக பயணப்படும்...

Leave Comments

Comments (0)