ஸ்மிதா பாடீல் : அகாலத்தில் உதிர்ந்த எரிநட்சத்திரம் 

/files/erer 2020-10-19 17:53:50.jpg

ஸ்மிதா பாடீல் : அகாலத்தில் உதிர்ந்த எரிநட்சத்திரம் 

  • 105
  • 0

-யமுனா ராஜேந்திரன்

திரைப்படம் சமூகமாற்றத்திற்கான ஊடகம் என்பதை ஸ்மிதா ஆத்மார்த்தமாக நம்பினார்.

அனிதா பாடீல்

ஸ்மிதா பாடீலின் இளைய சகோதரி 

ஸ்மிதாவின் விழிகள், ஆம் அவரது விழிகள், அகன்ற, எவராலும் முழுமையாகப் புரிந்து கொள்ளவோ அர்த்தத்தைத் தேடிக் கண்டடையவோ முடியாத ஆழம் கொண்டது, கூர்மை கொண்டது அவரது விழிகள். பறவையின் கண்களை தனது அம்பினால் குறிபார்த்த அர்ஜூனன் போல ஸ்மிதாவின் விழிகளைப் பார்க்கும் அந்த நொடி அதனுள் அமிழ்ந்துவிட்டால் உலகின் மற்ற அனைத்தும் மறந்து போய்விடும், இங்கு அம்பு அவரது கண்களில் இருந்து புறப்பட்டுவருகிறது. அதனது அரப்பணிப்பினால் ஆயிரம் திரைப்படங்களை உயிர்ப்பிக்கிற, ஆயிரம் இதயங்களில் சுடரப்போகிற, அவர் நினைப்பதை விடவும் அதிகமான நேயர்களை அவருக்குப் பெற்றுத் தரப்போகிற விழிகள் ஸ்மிதாவின் விழிகள் என்பதை அவரது விழிகளை எதிர்கொண்ட  அத்தருணத்தில் நான் உணர்ந்தேன்.

அருண் கோப்கர் 

ஸ்மிதாவின்; முதல் படத்தின் இயக்குனர்

புனே திரைப்படக் கல்லூரி மாணவர் 

பிரெஞ்சு புதிய அலை சினிமா இயக்குனர்களுக்கு எவ்வாறு நடிகையான அன்னா கரினா ஒரு புனித பிம்பமாகத் திகழ்ந்தாரே அதே போல தனது 25 ஆம் வயதில் ஸ்மிதா பாடீல் திட்டவட்டமாக இந்தியா சமாந்தர சினிமாவின் அரசியாகத் திகழ்ந்தார். ஸ்மிதா பாடீல்  செம்மாந்த அழகி அல்;ல. அவர் ஒளிரும் ஒரு பெண்மை. திரையில் அவசியமற்றது எனக் கருத்தத்தக்க ஒரு நகர்வைக் கூட அவர் தனது நடிப்பு வாழ்வில் செய்ததில்லை.

எலியட் ஸ்டீன்

அமெரிக்கத் திரை விமர்சகர்

பிரதீக் எனும் ஆண் மகவை ஈந்து இரண்டு வாரங்களே ஆகியிருந்தன. ஸ்மிதாவும் பிறந்த குழந்தையும் தவிர வீட்டில் வேறு யாரும் இல்லை. அவ்வேளை மின்சாரம் தடைப்பட்டிருந்தது. தொலைபேசியும் வேலை செய்யவில்லை. ஸ்மிதா குமட்டலுடன் வாந்தி எடுத்தபடியிருந்தார். வாந்தியுடன் இரத்தமும் சேர்ந்து வந்தபடியிருந்து. காதல் கணவர் ராஜ்பாபர் வந்து மருத்துவமனைக்கு அவரை அழைத்துச்; செல்லும் வழிநெடுகத் தன்னை மன்னித்துவிடும்படித் தனது கணவரை மன்றாடியபடியிருந்தார் ஸ்மிதா. 

மருத்துவ மனை ஏகியபோது ஸ்மிதா கோமா நிலையை அடைந்திருந்தார். 1986 ஆம்ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி அவர் மரணமுற்றார். 17 அக்டோபர் 1955 ஆம் ஆண்டு பிறந்த ஸ்மிதாவுக்கு மரணமுறும் தருவாயில் 31 வயதே நிரம்பியிருந்தது. 1973 ஆம் ஆண்டு தனது 18 ஆம் வயதி;ல் தீவ்ரா மத்யம் எனும் குறும்படத்தில் நடிக்கத் துவங்கிய ஸ்மிதா மரணமுறும் வேளையில,; தனது 13 ஆண்டு திரைவாழ்;வில் 75 படங்களில் நடித்து முடித்திருந்தார்.   

இந்தியக் கலை சினிமாவின் கொடுமுடிகள் என்று சொல்லப்படுகிற சத்யஜித்ரே, மிருணாள்சென், அரவிந்தன், ஷியாம் பெனிகல், ஜாபர் படேல், கோவிந்த் நிஹ்லானி, ரபீந்திர தர்மராஜ், கேதன் மேத்தா போன்ற மேதைமைகள் அனைவரது படத்திலும் ஸ்மிதா பாடீல் நடித்தார். எந்தவொரு இந்திய சினிமா நடிகைக்கும் கிடைத்திராத பெருமை இது. மராத்தி, வங்காளம், குஜராத்தி, இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என அனைத்து இந்திய மொழிகளிலும் அறுபது எழுபது எண்பதுகளில் உருவான இந்திய புதிய அலை சினிமாவில் நடித்த பெருமையும் ஸ்மிதா பாடீல் ஒருவரையே சாரும். 

பிரெஞ்சு இயக்குனர் கோஸ்ட்;டா காவ்ரசின் முன்முயற்சியில் கேன் திரைப்பட விழாவில் இவரது தொகையான படங்கள் திரையிடப்பட்ட ரெட்ரொஸ்பெக்டிவ் எனும் கௌரவத்தைப் பெற்ற ஒரேயொரு ஆசிய நடிகையும் இன்று வரையிலும் ஸ்மிதா பாடீல்;தான். 13 ஆண்டுகள் மட்டுமே திரைப்படங்களில் நடித்த ஸ்மிதா இந்த நிலையை எவ்வாறு எட்டினார்? இந்தியப் பெண்மையின் எந்த மகத்துவத்தின்; சாட்சியமாக அவர் ஏற்ற பாத்திரங்கள் திகழ்ந்தன? அவரது அரசியல் நம்பிக்கைகளுக்கும் அவரது தனிப்பட்ட குணங்களுக்கும் அவர் ஏற்ற பாத்திரங்களுக்கும் அவரது வாழ்வுக்கும் இடையிலான உறவும் முரணும் எத்தகையது?

நேருவிய சோசலிசத்தில் நம்பிக்கை கொண்ட காங்கிரஸ்காரான ஸ்வராஜ் பாடீல், மருத்துவத் தாதியான வித்யா பாடீல் தம்பதியினருக்கு மூன்று பெண்குழந்தைகளில் இரண்டாவதாகப் பிறந்தார் ஸ்மிதா பாடீல். சோசலிஸ்ட் கட்சியின் கலாச்சாரப் பிரிவான ராஷ்டரா சேவா தள் அமைப்பின் கலைநிகழ்ச்சிகளில் தம் பெண்மக்களைப் பங்கேற்கச் செய்தனர் பாடீல் தம்பதியினர். ஆடம்பரமற்ற எளிய மத்தயதரவர்க்க வாழ்வு, தனிவாழ்விலும் பொதுவாழ்விலும் ஒழுக்கம், ஒடுக்கப்பட்ட மக்களின் பாலான பரிவும் தோழமையுணர்வும் சமூக மாற்றத்திலான நம்பிக்கை போன்றவற்றைத் தமது அன்றாட வாழ்வில் தமது மக்களுக்குக் கற்பித்தனர் பாடீல் தம்பதியினர்.

தனது மூத்த சகோதரியி;ன் புகைப்படக்கலை நண்பரால் எடுக்கப்படட் ஸ்மிதாவின் புகைப்படம் ஒன்றை யதேச்சையாகக் கண்ணுற்ற மராத்தி மொழி துரதர்ஷன் தொலைக் காட்சி இயக்குனர்  நேர்காணலின் பின் ஸ்மிதாவின் பாடலைச் செவிமடுத்துச் செய்தி வாசிப்பாளராக அவரைத் தேர்வு செய்தார். ஓப்புதல் பத்திரத்தில் கையெழுத்திடும் பிராயத்தை அவர் எய்தவில்லை என்பதனால் அவரது மூத்த சகோதரி அவருக்காக பணி ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்திட்டார். புனா பல்கலைக்கழக மாணவரான அருண் கோப்கரின்; 

குறும்படத்தில் இடதுசாரி அரசியலிலும் இசையிலும் நாட்டம் கொண்ட இளம் பெண்ணாக அவர் நடித்ததும், பிற்பாடு ஷியாம் பெனிகலின் படங்களில்; நடித்ததும் என ஸ்மிதாவின் வாழ்வை மாற்றிய நிகழ்வுகள் அனைத்தும் ஒரு செய்தி வாசிப்பாளராக இவரைத்; திரையில் கண்டதன் பின்னரே நேர்ந்தது.

ஷியாம் பெனிகல் தனது படத்தில் நடிகையாக நடிக்க வைக்க அணுகும் முன்பே தூரதர்ஷன் தொலைக் காட்சியில் இவரைக் கண்ட மனோஜ்குமார், தேவ் ஆனந்த் போன்ற புகழ்பெற்ற பாலிவுட் நடிகர்கள்-இயக்குனர்கள் தமது படத்தில் நடிக்கக் கேட்டு இவரது பெற்றோரை அணுகினர். ஸ்மிதாவும் சரி அவரது பெற்றோரும் சரி அந்த வாய்ப்புக்களை மறுத்துவிட்டனர். நடிகையாக இருப்பது என்பது தன்மோகம் தொடர்பானது, தன்மறுப்பைத் தனது இயல்பாகக்கொண்ட ஸ்மிதா இந்தக் காரணங்களுக்காகவே பாலிவுட் சினிமா வாய்ப்பை மறுத்தார். ஷியாம் பெனிகலின் அழைப்பையும் மறுத்தார். ஷியாம் பெனிகல் தனது முயற்சியைக் கைவிடவில்லை. ஸ்மிதாவின் பெற்றோhரைச் சந்தித்துப் பேசினார். 

பொதுவாகத் திரைப்படம் பார்ப்பதில் ஆர்வம் அற்றவர்கள் பாடீல் தம்பதியினர். என்றாலும் ஸ்மிதாவின் தாயார் வித்யா ஷியாம் பெனிகலின் அங்கூர் படம் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். பெனிகளில் தாராளவாத நேருவிய சோசலிச உலக நோக்கு, அவரது திரைப்படக் குழுவின் அறமும் கட்டுப்பாடும் அர்ப்பணிப்பும் பற்றி மரியாதை கொண்டிருந்தார் பாடீல். இதன் காரணமாகவும் தனது சமூகம் தொடர்பான பார்வைக்கு இணக்கமாக இருந்ததாலும் பெனிகலின் படத்தில் நடிக்க ஒப்பினார் ஸ்மிதா. 

ஷியாம் பெனிகலின் இந்திப் படமான நிஷாந்த் (Niளாயவெ 1975) படத்தில் நடிப்பதற்கு முன்பாக அவரது சரன்தாஸ் சோர் (1974) படத்தில் பயற்சி நடிகை போல நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றியிருந்தார் ஸ்மிதா. நிஷாந்த ஸ்மிதா பாடீலின் திரைவாழ்வின் அதியற்புதமான திறப்பாக அமைந்தது. பெனிகலின் ஆங்கூர் படத்தில் நடித்திருந்த ஷபானா ஆஷ்மிதான் நிஷாந்த் படத்தின் பிரதான நாயகி. ஸ்மிதா அப்படத்தில் நான்கு காட்சிகளில் மட்டுமே தோன்றினார். அந்த நான்கு காட்சிகளிலும் நிலப்பிரபுத்துவக் குடும்பத்தில் மணம் செய்விக்கப்பட்டு வாழநேர்ந்த ஒரு பெண்ணின் ஒடுக்கம், மனக்குமைவு, ரௌத்ரம், கருணை, தயை, பொறாமை, பழிவாங்கும் உணர்வு போன்ற வேறுபட்ட உணர்ச்சிகளையும் முகபாவங்களையும் உடல்மொழியையும் அமுங்கிய தொனியில் அவர் வெளிப்படுத்தினார்.

பெனிகலின் முக்கியமான பிற மூன்று படங்களான மந்தன் (1976) பூமிகா (1977) மண்டி (1983) போன்ற படங்களிலும் ஸ்மிதா தொடர்ந்து நடித்தார். ஹைதராபாத் நகரின் பெருந்தெருவிலுள்ள ஒரு விலைமகளிர் விடுதியின் அன்றாட நடவடிக்கைகளையும்; தமது அரசியல் நடவடிக்கையின் பகுதியாக அதனை அங்கிருந்து அகற்ற அரசியல்வாதிகள்; மேற்கொள்ளும் கோமாளித்தனங்களையும் நையாண்டி செய்யும் மண்டி படத்தில்  விலைமகளிர் விடுதியின் தலைவியாக ஷபானா ஆஸ்மி நடிக்க, அந்த நகரத்தின் மேயர் மகனுடன் ஓடிப்போகும் விலைமகளாக ஸ்மிதா பாத்திரமேற்று நடித்திருந்தார். 

பிற இரு படங்களோடு ஒப்பிட நிஜத்தில் மண்டி ஷப்னா ஆஷ்மியின் படம் எனவே சொல்ல வேண்டும். மந்தன் படத்திலும் பூமிகா படத்திலும் ஸ்மிதா பாடீல்தான் முழுமையான கதாநாயகி. அவர் தனது நடிப்பு மகா சாம்ராஜ்யத்தையே தனது பிரசன்னத்தின் மூலம் சன்னதமாடி இந்த இரு படங்களிலும் நிறுவி விட்டிருந்தார் ஸ்மிதா. 

குஜராத்திப் படமான மந்தன் குஜராத் மாநிலத்தின் வெள்ளைப் புரட்சி என அழைக்கப்பட்ட குஜராத் விவசாயிகளின் கூட்டுப் பால்பண்ணை அமைப்பை நிறுவும் போக்கில் அப்பிரதேசத்தின் நிலப்பிரபுக்களாலும் அதிகார வர்க்கத்தினாலும் காவல்துறையினராலும் அந்த மக்கள் எதிர்கொள்ளும் துயர்களைப் பேசியது. நஸ்ருதின் ஷா தலித் விவசாயியாகவும் ஸ்மிதா பாடீல் தலித் பெண்ணாகவும் கிரிஷ் கர்னாட் கிராம மருத்துவ அதிகாரியாகவும் நடித்த அப்படத்தில், மிகுந்த சவால்களுக்கும் வன்முறைக்கும் தன்மீதான பாலியல் அவதூறுகளுக்கும் இடையில் தலித் பெண்களை பால்பண்ணைக் கூட்டுறவுச் சங்கத்திற்குத் திரட்டும் தீரமிக்க பெண்ணாக ஸ்மிதா தோன்றியிருந்தார்.

மந்தன் படத்திற்கு அடுத்ததாக பெனிகலின் பூமிகா படத்தில் நடித்ததற்காக ஸ்மிதா பாடீலுக்கு சிறந்த நடிகைக்கான ஊர்வசி விருது கிடைத்தது. 30-களிலும் 40-களிலும் வட இந்தியத் துறையுலகில் பிரபலமாக இருந்த ஹன்சா வடேக்கர் எனும் நடிகையின் ‘என் கதையைக் கேளுங்கள்’ எனும் சுயசரிதையின் அடிப்படையிலான திரைப்படம் பூமிகா. 

தேவதாசிக் குடும்பத்தில் பிறந்த உஷா, வறுமையின் காரணமாக சிறுவயதிலேயே திரைப்படப் பாடகியாக ஆக நேர்ந்த உஷா, தனது குடும்பத்திற்கு உதவியாக இருந்த தன்னைவிட மும்மடங்கு வயது மூத்தவருடன் பாலுறவுகொண்டு கர்ப்பமாகி அவரை மணந்துகொண்ட உஷா, தனது மகளின் அன்பில் திளைக்கக் குடும்ப வாழ்வுக்கு ஏங்கிய, தனது விருப்பத்திற்கு மாறாகத் திரைப்படத்தில் நடிக்க நேர்ந்த வேளை ஒரு கதாநாயக நடிகருடனும,; ஒரு திரைப்பட இயக்குனருடனும் பாலுறவை ஏற்படுத்திக் கொண்ட உஷா, தற்கொலைக்கு முயன்ற நட்சத்திரமான உஷா, இசைநாட்டம் கொண்ட நிலப்பிரபு ஒருவருக்கு வைப்பாட்டியாகப் போன மத்தியதர வயது முன்னாள் நடிகையான உஷா, அவனது வன்முறையிலிருந்து தப்பி தனது கணவனின் உதவியால் வெளியெறி மீளவும் தனது வாழ்நாளெல்லாம் அலைந்து திரிந்த அடைக்கலம் தேடிய விடுதி வாழ்வுக்குத் திரும்பும், தனிமையை விரும்பும் சுதந்திர வேட்கை கொண்ட மனுஷி என நூறு நாறு வேறுபட்ட குணாதிசியங்களை வெளிப்படுத்தும் பாத்திரத்தை இப்படத்தில் ஏற்றார் ஸ்மிதா. 

இந்தியத் திரைப்பட வரலாற்றில் எந்தவொரு கதாநாயகிக்கும் எப்போதும் கிடைத்திராத பாத்திரம் பூமிகா படத்தில் நடிகையாக அவர் ஏற்ற பாத்திரம். ஸ்மிதாவுக்கு இணையான இத்தகைய நடிகை முன்னும் இல்லை பின்னும் இல்லை என ஸ்மிதாவை இந்தியா சினிமா ஆற்றிலின் உச்சபட்ச வெளிப்பாட்டுப் பிரதிமையாக நிலைநிறுத்திய படம் பூமிகா. 

ஆங்கூர், நிஷாந்த், பூமிகா படங்களின் ஒளிப்பதிவாளரான கோவிந்த் நிஹ்லானி ஸ்மிதாவை வைத்து ஆக்ரோஷ் (1980 ) அர்த் சத்யா (1983) என இரு படங்களை உருவாக்கினார். புனே திரைப்படக் கல்லூரி மாணவரான கேதன் மேத்தா ஸ்மிதாவை வைத்து மிர்ச் மசாலா (1987) உருவாக்கினார். ஆக்ரோஷ் படத்தில் பாலியல் வல்லுறவுக்கு ஆட்பட்டு மரணமுறும் மலைவாழ் தலித் பெண்ணாக நடித்த ஸ்மிதா படத்தின் இரண்டே இரு காட்சிகளில் மட்டுமே தோன்றினார். அர்த் சத்யா ஆதாரத்தில் நேர்மையான காவல் துறையதிகாரியாக வாழ முயலும் ஓம்பூரியின் படம் என்றே சொல்ல வேண்டும். ஸ்மிதா அவரைக் காதலித்து மணக்கும் கல்லூரிப் பேராசிரியையாக இப்படத்தில் நடித்திருந்தார். கேதான் மேத்தாவின் பவானி பாவாய் குஜராத் மாநிலத் தலித் மக்களின் பேரெழுச்சி பற்;றிய ஒரு நாட்டுப் புறக்கதையின் அடிப்படையிலான நடன-நாடக-பாடல் கொண்ட படவகையினம். ஸ்மிதா இதில் காதலனோடு இணைந்து தலித்மக்களின் எழுச்சியைத் தூண்டும் தலித் பெண்ணாகப் பாத்திரமெற்றிருந்தார். 

மிர்ச் மசாலா முழுமையாகச் ஸ்மிதாவின் படம். ஸ்மிதாவுக்காகவே பேசப்பட்ட படம். சுதந்திரத்திற்கு முன்பான ஒரு இந்தியக் கிராமத்தில் பிரிட்டீஷ் ராஜ்யத்திற்காக வரிவசூலிக்கும் ஒரு உள்ளுர் அதிகாரியின் பாலியல் வேட்டைக்கு எதிராகப் போராடும் மிளகாய்த்தூள் அரைக்கும் தொழிற்சாலைத் தொழிலாளியாக இப்படத்தில் நடித்திருந்தார் ஸ்மிதா.

மந்தன், ஆக்ரோஷ், பவானி பாவாய் போன்ற படங்களில் தலித் பெண் பாத்திரங்ளை ஏற்ற ஸ்மிதா இன்னும் இரு படங்களிலும் தலித்பெண் பாத்திரங்களை ஏற்றார். சத்யஜித் ரேயின் சத்கதி (1981) படத்தில் பார்;ப்பனச் சுரண்டலுக்கு தனது நோயுற்ற தலித் கணவனைப் பலி தரும்  பெண்ணாக, ஒரு பெண் குழந்தையின் நிர்க்கதியான தலித் தாயாக ஸ்மிதா நடித்திருந்தார். ரபீந்திர தர்மராஜின் சக்ரா (1981)  படத்தில் மும்பை நகரச் சேரிப் பெண்ணாகப் பாத்திரமேற்றிருந்தார் ஸ்மிதா. லேவாதேவிக்காரனின் பாலியல் வல்லுறவிலிருந்து தப்பி, இடையில் காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டுக்குத் தனது கணவனைப் பறிகொடுத்து, ஒரு சாராயம் காய்ச்சுபவனையும் மேகநோய் பீடித்தவனையும், ஒரு லாரி ஓட்டுனரையும் சமகாலத்தில் காதலர்களாக ஏற்று, தனது வளர்ந்த மகனுக்கு அன்பைத் தந்து  தோற்றப் போகும் சேரிப் பெண்ணாக சக்ராவில் நடித்திருந்தார் ஸ்மிதா. எழுபதுகளிலும் எண்பதுகளிலும் மட்டுமல்ல இன்றுவரையிலும் தொகையாக ஐந்து படங்களில் தலித் ஆளுமையாகப் பாத்திரமேற்று நடித்தவர் இந்தியா சினிமா நெடுகிலும் ஸ்மிதா பாடீல் தவிர பிறிதொருவர் இல்லை.

எழுபதுகளில் அஜிதா என்ற பெண்ணின் பெயர் ஒரு யுக நம்பிக்கையின் பெயர். எழுத்தாளர் கே.ஏ.அப்பாஸ் த நக்சைலைட் (1980) என்ற பெயரில் ஒரு படமெடுத்துபோது அஜிதா எனும் பாத்திரத்தில் ஸ்மிதா நடித்தார். திரைப்படம் எனும் அளவில் நேர்த்தியான திரைக்கதையோ திரைப்பட ஆக்கமோ கொண்டிராத அப்படம் இக்காரணங்களாலேயே கவனிக்கப்படாமல் போனது. இதே கே.ஏ. அப்பாஸ் கதை எழுதிய ராஜ்கபூரின் இரு படங்களான பாபி, மேரோ நாம் ஜோக்கர் போன்ற படங்கள் தேர்ந்த திரைக்கதையாலும் இயக்கத்தினாலும் தேவைப்பட்ட பெரும் செலவினம் அமைந்ததனாலும்; புகழ்பெற்ற படங்களாக வெற்றி பெற்றன. 

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பின் ஹைதராபாத் நிஜாமின் சமஸ்தான ஆட்சி முற்றுப் பெற்றதையடுத்து. அந்த அதிகாரத்தின் கீழ் பணியாற்றிய பல முஸ்லிம்கள் வருமானத்தை இழந்தனர். ஓய்வுகால உதவித் தொகையையும்  இழந்தனர். இச்சூழலில் வறுமையில் தள்ளப்பட்ட முஸ்லீம் குடும்பங்களில் திருமண வயதில் இருந்த பெண்கள் மத்தியக் கிழக்கு நாடுகளின் செல்வந்தர்களுக்கு பணத்திற்காக விற்கப்பட்டனர். விலைமாதர் தொழிலுக்குத் தள்ளப்பட்டனர். வயதுமுதிர்ந்த உள்ளுர் கிழவர்களுக்கு பலவந்தமாக மணம் செய்விக்கப்பட்டனர். விற்கப்படும் சரக்காகப் பெண்கள் ஆயினர். இப்பிரச்சினையை அடிப்படையாகக் கொண்ட படம் பஜார் (1982) .

சாகர் சர்கார்தி இயக்கிய இப்படத்தில் தான் மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு விற்கப்படுவதில் இருந்து தப்பி தனது காதலனுடன் ஓடிப்போகும் முஸ்லீம் பெண்ணாக ஸ்மிதா நடித்திருந்தார். அந்த அமைப்பிலிருநது மீள முடியாதவராக அந்த அமைப்பின் அங்கமாக படத்தின் இறுதிக் காட்சி வரை பாத்திரமேற்கும் ஸ்மிதா சுயநலமியான தனது காதலனை நிராகரித்து உதறி சமூகமாற்றத்தில் நம்பிக்கை கொண்ட தனது நண்பனும் தன்னைக் காதலிப்பவனுமான கவிஞனுடன் ரயிலேறுகிறாள்.

மகேஷ்பட் தனது சொந்த வாழ்க்கை அனுபவத்தின் அடிப்படையில் கதை எழுதி இயக்கிய அர்த்(1982) படத்தில் உணர்ச்சிவசமான, குற்றுவுணர்ச்சி கொண்ட, நரம்புத்தளர்ச்சிக்கு ஆட்படும் மனைவியை விட்டவிட்டுத் தன்னிடம் வரும் இயக்குனரை நேசிக்கும் பதட்டமான நடிகையின் பாத்திரத்தை ஏற்றார் ஸ்மிதா. இயக்குனராக குர்புசன் கர்பந்தாவும் மனைவியாக ஷபானா ஆஷ்மியும் நடித்திருந்தார்கள். தமிழில் இப்படத்தை மறுபடியும் எனும் பெயரில் உருவாக்கினார் பாலு மகேந்திரா. நிழல்கள் ரவி இயக்குனராகவும் ரேவதி மனைவியாகவும் ரோகிணி நடிகையாகவும் நடித்திருந்தார்கள். 

அர்த் ஒரு வகையில் ஸ்மிதாவின் சொந்த வாழ்வை ஒத்த கதை கொண்டது. நடிகர் ராஜ்பாபர் தனது மனைவியான நதிராவை இரண்டு குழந்தைகளுடன் விட்டுவிலகி ஸ்மிதா பாடீலை மணந்துகொண்டிருந்தார். ஸ்மிதா பாடீலின் தாய் தந்தையர் இந்த உறவை நிராகரித்தனர். திரைப்படத்தில் மனைவியாக நடித்த ஷபானா ஆஷ்மி மீது திரை ரசிகர்கள் பரிவு காட்டினர். நிஜவாழ்வில் நதிரா மீது அனுதாபம் காட்டினர். திரை நடிகை கவிதாவையும் அந்தப் பாத்திரமேற்ற ஸ்மிதாவையும் ரசிகர்கள் வெறுத்தது போல, நிஜ வாழ்வில நதிராவை ஆதரித்து ஸ்மிதாவை ரசிகர்கள் வெறுத்தனர். திரைவாழ்விலும் நிஜவாழ்விலும் இப்பிரச்சினை ஸ்மிதாவை மிகுந்த மனக்கொந்திப்பில் வைத்திருந்தது. 

ஸ்மிதாவின் பின்-பிரசவ-போஸ்ட் நெட்டால் உடல் சிக்கலுக்கான காரணமாகவும் இது இருந்தது என அவரது இளைய சகோதரி அனிதா பாடீல் குறிப்பிடுகிறார். ஓரு மனுஷியாக தான் இருக்க விரும்பியதற்கும், நடிகையாக ஆகியதால் தான் ஆகிப்போனதற்குமான முரணும், தனது திரை வாழ்விலும் சொந்த வாழ்விலும் முன்னர் தான் கொண்டிருந்த மதிப்பீடுகளைப் பின்னர் தனது சொந்த வாழ்வில் தான் கொண்டிருக்க முடியாததற்கான முரணும் அவரைத் தொடர்ந்து உறுத்தி வந்தது என்கிறார் அனிதா பாடீல். அவர் பங்குபெற்றுச் செயலாற்றிய மும்பைப் பெண்ணிலைவாத அமைப்பு ஸ்மிதா-ராஜ்பாப்பர் திருமணப் பிரச்சினையில் ஸ்மிதாவைக் கடுமையாக விமர்சித்து அவருக்கு எதிர்நிலை எடுத்தது. ஆவரது திருமணம் குறித்த அவரது தாயின் மறுப்பும் விலக்கமும் மளதளவில் ஸ்மிதாவை மிகவும்; பாதித்தது.  

ஸ்மிதா பாடீலின் வாழ்வின் தனி வாழ்விலும் சொந்த வாழ்விலும் மாற்றத்தைக் கொண்டு வந்த நிகழ்வு என்பது, பிரெஞ்சு புதிய அலை சினிமா, இத்தாலிய நியோ ரியலிசச் சினிமாக்களை ஒத்ததாக அறுபதுகளிலும் எழுபதுகளிலும் இந்திய சினிமாவில் தோன்றிய சமாந்தர சினிமா வகையினத்தில் எழுபதுகளின் இறுதியில்; ஏற்பட்ட மாற்றத்துடனும் தொடர்பு பட்டது. 

1973 ஆம் ஆண்டு ஸ்மிதா நடித்த புனே பிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவரின் குறும்படம் துவங்கி 1982 ஆம் ஆண்டு வெளியான ஜாபர் படேலின் உம்பர்த்தா (1982) வரை ஸ்மிதா நடித்த 19 படங்கள் சமூகக் கடப்பாடு கொண்ட இந்திய சமாந்தர சினிமாப் படங்கள். சமூத்தினால் கைவிடப்பட்ட, பாலியல் சுரண்டலுகாகு ஆளாகும் பெண்கள் விடுதியின் பொறுப்பாளராக ஸ்மிதா நடித்த உம்பர்த்தா வெளியான அதே ஆண்டில் அமிதாப்பச்சனுடன் அவர் நடித்த நமக் ஹலால் திரைப்படமும் வெளியாகிறது. நமக் ஹலால் அதுவரைத்திய ஸ்மிதாவின் நம்பிக்கைகள சார்ந்தும், அவரது திரை வாழ்வு சார்ந்தும் ஒரு திருப்புமுனை நிகழ்;வு. 

நமக்      ஹலால் படத்தில் தனது முழு உடல் தெரியும் மெல்லிய வெள்ளை ஆடை அணிந்து மழையில் தெப்பலாக நனைந்து ஆடை உடலுடன் ஒட்டிய நிலையில் அமிதாப்பச்சனுடன் தெருவில் டூயட் பாடி ஆடும் காட்சியில் நடிக்கிறார் ஸ்மிதா. இப்படம் பக்கா வியாபார மசாலா காமெடி கவர்ச்சிப்படம். நமக் ஹலால் படத்தின் பின் தனது மரணம் வரையிலும் அவர் 56 படங்களில் நடிக்கிறார். இதில் பஜார், அர்த், மண்டி, அர்த் சத்யா, மிர்ச் மசாலா, சிதம்பரம் போன்ற 5 படங்கள் மட்டுமே சமூகக்கடப்பாடு கொண்ட சமாந்தர சினிமாப் பண்புகள் கொண்ட படங்கள். மீதி அவர் நடித்த 51 படங்களும் முழுமையாக இந்தி ஜனரஞ்சக அல்லது வியாபார மசாலாப் படங்கள்தான். 

அவர் இறுதியாக நடித்த சமாந்தர சினிமாப் படம் ஒரு மலைத்தோட்ட அதிகாரியிடம் தன்னை இழக்கும் ஒரு அபதபாவி தமிழ் கிராமத்துப் பெண்ணாக ஸ்மிதா நடித்த அரவிந்தனின்; சிதம்பரம் (1985) தான். சிதம்பரம் வெளியான 1985 ஆம் ஆண்டு அவருடைய 3 மசாலா படங்கள் வெளியாகின்றன. 1986 ஆம் ஆண்டு நிகழ்ந்த அவரது மரணத்தின் பின்;பு 1989 வரை அவர் உயிருடன் இருந்தபோது நடித்து முடித்த அவருடைய 20 மசாலா படங்கள் வெளியாகின்றன.  முழுமையான புள்ளிவிவரம் எனப் பார்க்கிறபோது அவர் நடித்த 75 படங்களில் 24 படங்கள் மட்டுமே சமூகக் கடப்பாடு கொண்ட சமாந்தர சினிமாப் படங்கள். மற்ற 51 படங்கள் ஜனரஞ்சக மசாலா படங்கள். அவர் இருமுறை அகில இந்தியச் சிறந்த நடிகைக்கான விருது பெற்ற இரு படங்களும் சமாந்தர சினிமா படங்கள்தான். ஓன்று பூமிகா. மற்றது சக்ரா. 

சமாந்தர சினிமாவிலிருந்து ஜனரஞ்ஜக மசாலா சினிமாவிற்கு அவர் சென்று சேர்ந்த மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது?

எழுபதுகளின்; பிற்பகுதியில்; நேஷனல் பிலிம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் சமாந்தர சினிமாவுக்கு தயாரிப்புக்கான நிதியுதவி தருவது என்பதனை அநேகமாக நிறுத்திக் கொண்டது. சமாந்திர சினிமா அதுவரை சித்தரித்து வந்த நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் மலைவாழ் மக்களின் பிரச்சினைகள், விளிம்புநிலை மற்றும் நடுத்தரவர்க்கப் பெண்களின் பாலியல் தேர்வு மற்றும் இயல்பாக நிகழ்ந்த மீறல் போன்றவற்றிலிருந்து அது நகர்ந்துவிட்டது. எந்த ஆடல்-பாடல்-நகைச்சுவை-மெலோ டிராமா போன்ற பார்;முலாக்கiயும் நட்சத்திர நடிகர்களையும் விலக்கி உடைத்துக் கொண்டு சமாந்தர சினிமா எழுந்ததோ அந்த அடிப்மபடைகளைக் கைவிட்டு நிஹ்லானி, கௌதம் கோஷ், அடூர் கோபாலகிருஷ்ணன் போன்று விரல்விட்டு எண்ணத் தக்கவர்கள் தவிர ஷியாம் பெனிகல், கேதன் மேத்தா போன்ற இயக்குனர்கள் நட்சத்திர நடிகர்களையும் பாலிவுட் மசாலா சினிமாவின் பார்முலாயையும் மறுபடி கைக்கொள்ளத் துவங்கினார்கள். இவர்களது பிற்காலத்திய படங்களில் அரசியல் உணர்வு என்பதும் சமகால உணர்வும் அநேமாகமாக விடைபெற்றது. 

 சமாந்தர சினிமாவில் நேர்ந்;த மாற்றமும் அதனால் தனது சொந்தத் தேர்வுகளில் நேர்ந்;த மாற்றங்கள் பற்றியும் ஸ்மிதா பாடீல் சொல்கிறார் கேளுங்கள் : 

“ ஐந்து ஆண்டுகள் சிறிய சினிமா எனச் சொல்லப்படுகிற சமாந்தர சினிமாவில் நான் கடப்பாட்டுடன் செயல்பட்டேன். இக்காலத்தில் எனக்கு வந்த அனைத்து வியாபார சினிமா வாய்ப்புக்களையும் நான நிராகரித்தேன். 1977-78 வாக்கில் சிறிய சினிமா இயக்கம் நிலைபெற்றது. இப்போது அந்த இயக்கம் சார்ந்தவர்கள் பிரபலங்களைத் தேடத் துவங்கினார்கள். சில படங்களில் நான் அவமானகரமான முறையில் நிராகரிக்கப்பட்டேன். இது மிக நுட்பமான மாற்றம். இது என்னை மிக மிகப் பாதித்தது. இதோ நான் இங்கே இருக்கிறேன். நான் பணம் பண்ணத் தயக்கம் காட்டவில்லை. சிறிய சினிமா இயக்கததிற்கான எனது கடப்பாட்டினால் எனக்கு வந்த பெரிய படங்களை, வியாபர சினிமா வாய்ப்புக்ககளை தேவ் ஆனந்த், மனோஜ்குமார் போன்றோர் தந்த வாயப்புக்களை நான் நிராகரித்தேன். மறுதலையாக இந்தச் சிறிய சினிமா எனக்கு எதைத் திருப்பித் தந்தது? அவர்களுக்குப் பிரபலங்கள்தான் வேண்டும் என்றால் நான் பிரபலமாகிக் காட்டுகிறேன். என் வழியில் என்னென்ன வாய்ப்புக்கள் வருகிறதோ அத்தனையையும் நான் ஏற்கத் துவங்கினேன்”.

“ நான் என்னைக் கலை சினிமாவுடன் பிணைத்துக் கொண்டிருந்ததால் அதனை ஈடுபாட்டுடன் செய்தேன். நேர்மையாகச்;; சொல்வதென்றால் நான் சில வியாபார சினிமாக்கள் செய்வதை நான் விரும்பினேன். காரணமென்னவென்றால் அங்கேதான் மிகப் பெரும் வருமானம் இருக்கிறது. இந்தியாவில் மிகக் குறைந்;த ஆற்;றலைச் செலுத்தி மிகப்பெரும் பணம் ஈட்டும் தொழிலாக வியாபார சினிமாத் தொழில்தான் இருக்கிறது. இதபை; பரிந்து கொள்ள முடியாத அளவு நான் முட்டாள் அல்ல. அதே வேளை வியாபார சினிமாவில் வேலை செய்வது எனது இயல்புக்கு மாறான வாழ்வாகவும் இருக்கிறது. அதனது திட்;டமிடல்கள் என்பது மனிதர்களாக ஒருவொருக்கொருவரிடமிருந்து விட்டு விலகியதாக அந்த அமைப்பு இருக்கிறது. மனிதர்களுக்கிடையில் தனிப்பட்ட தொடர்டபாடல் என்பது அங்கு இல்லை. என்னைப் போன்ற ஒருவர் அங்கு எந்த ஓர்மையும் அற்றவராக ஒதுக்கப்படும் நிலையே உள்ளது. இது என்னில் இருக்கிற நான் எனும் ஆளுமையை அவமானப்படுத்துவதாக நான் உணர்கிறேன்”.

கலை சினிமா அல்லது சிறிய சினிமா அல்லது சமாந்தர சினிமாவுடன் அவரைப் பிணைத்தது அவரது சமத்துவ சமூகம் குறித்த அவரது பெற்றோர் அவரில் விதைத்த அரசியல் உணர்வுதான். வியாபார சினிமா பாலான ஒவ்வாமை கொண்டிருந்தாலும் சமாந்தர சினிமா வரலாற்று ரீதியில் எதிர்கொண்ட நெருக்கடியும், ஒரு தனிமனித ஆளுமையாக அவர் சமாந்தர சினிமா சார்ந்து எதிர்கொண்ட நிராகரிப்பும், ஏற்கனவே மணமாகி குழந்தைகள் கொண்ட வியாபார சினிமா நடிகரான ராஜ் பாப்பருடனான அவரது காதல் திருமணமும் அவரது இறப்பின் முன்பான சில ஆண்டுகளில் முழுமையாக அவரை வியாபார சினிமாவுடன் பிணைத்தது. அவர் ராஜ்பாப்பருடன் நடித்த வியாபார சினிமாப் படங்கள் ராஜ் பாப்பருகாகாகவே அவர் ஒப்புக்கொண்ட படங்கனாகவே இருந்தன. 

நமக் ஹலால் படத்தில்; அமிதாப்பச்சனுடன் ஈரஉடை மழைக் காதல் காட்சியில் நடித்துவிட்டு வீடு வந்த அன்றிரவு தனது இளைய சகோதரி அனிதாவுடனான உரையாடலில் ‘நான் ஒரு போதும் நம்பியிராத இவைகளை நான் ஏன் செய்து கொண்டிருக்கிறேன்?’ என ஸ்மிதா சொல்லி  வருந்தியதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

வியாபார சினிமாவில் ஸ்மிதா எதிர்கொண்ட சங்கடங்களுக்கு எடுத்துக்காட்டாக நிறைய சம்பவங்கள் பதியப்பட்டிருக்கின்றன. தனக்கு முன்பு அறிமுகமான ஒரு துணை நடிகரைப் படப்பிடிப்புத் தளத்தில் கண்ட அவர் ஓடிச்சென்று அவரைக் கட்டியனைத்து விசாரித்ததை அங்கிருந்த பலர் ரசிக்கவில்லை. அந்தத் துணை நடிகரும் அதன்பின் அவர் அருகில் வரவே அஞ்சினார். ஓரு சம்பவத்தில் படப்பிடிப்பில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவின் தரம் கீழாக இருந்தது எனத் தொழிலாளிகள் உண்ண மறுத்தபோது அவர் தானும் அவர்களோடு அமர்ந்து அந்த உணவை உண்டதோடு அவர்களுக்கு மேம்பட்ட உணவை வழங்கவும் அவர் ஏற்படு செய்தார். 

சமாந்தார சினிமாவுக்கும் அது எதிர்கொண்ட நெருக்கடிக்கும் தான் அதே சமாந்தர சினிமாவால் நிராகரிக்கப்பட்டபோது தனிமனுஷியாகத் தனக்குள் நடந்த போராட்டத்துக்கும் இடையில் அல்லாடினார் ஸ்மிதா. ஷியாம் பெனிகல் ஸ்மிதவில் நடந்த ஒரு மாற்றத்தை இவ்வாறு சொல்கிறார் : நிஷாந்த் படத்தலும் மந்தனிலும் நடித்தபோது படத்தில் நடித்த துறைசாரா  சாதாரண மனிதர்க்கும்; ஸ்மிதாவுக்கும்; வித்தியாசமே காணமுடியாது. பத்தாண்டுகளின் பின் மண்டி படத்தில் அவர் நடிக்க வந்தபோது தனது தனி ஒப்பணைப் பெண்ணையும் முடி அலங்கார நிபுணரையும் அவன் உடன் அழைத்து வந்தார் என்கிறார் பெனிகல். நிஷாந்த படத்திற்கும் நமக் ஹலால் படத்திற்கும் இடையில்தான் இந்த மாற்றம் ஸ்மிதா பாடீலிடம் இடம்பெறத் துவங்கியது. 

இந்த இரண்டு எல்லைகளுக்கும் இடையில் அவர் எதிர்கொண்ட இருத்தலியல் சிக்கல்கள் பிரசித்தமானவை. நிஷாந்த் திரைப்படம் கேன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது ஸ்மிதாவும் ஷபானாவும் அகதிகள் போன்ற நிலையில் உடுத்த நல்ல உடைகள் கூட இல்லாத நிலையில்தான்; அதில் கலந்து கொண்டார்கள். பெனிகலின் உதவியாளரிமிருந்து பெற்ற ஆபரணங்களையே ஸ்மிதா அணிந்திருந்தார். மும்பையில் நடந்த ஒரு உலகத் திரைப்பட விழாவுக்கு நடிகை பூனம் தில்லானுடன் இவர் சென்றபோது பூனம் தில்லானை உள்ளே அனுமதித்த வாயில் காவலர் ஆடம்பரமற்ற ஸ்மிதாவின் எளிமை கண்டு அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தார். காந்தி படத்தில் ஹந்தங்;காடிக்கு முதலாக கஸ்தூரிபா வேடத்திற்காகப் பரிசீலிக்கப்;பட்ட ஸ்மிதா மிகுந்த கவர்ச்சிகரமாக இருக்கிறார் எனும் காரணத்திற்காக நிராகரிக்கபட்பட்டார். 

 நஸ்ருதின் ஷா, ஓம்புரி, ஷபானா ஆஸ்மி போன்றோருடன் ஸ்மிதாவும் சேர்ந்து இந்திய சினிமாவில் ஒரு பொற்காலத்;தை உருவாக்கினார்கள். முகத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் அனல் கொண்ட அவரது அகன்ற விழிகள் அவரது தீட்சண்யமான குணச்சித்திரங்களை கூர்மையாக வெளிப்படுத்தின. கோபப்படும்போது அவரது உடல் விரைத்து அவரது தோள்கள் நாணேற்றப்பட்ட வில்லாக இறுகியது. ஒவ்வாமையையும் நிராகரிப்பையும் வெளிப்படுத்தும்போது அவரது இரண்டு கைகளும் மின்னல்போல வெட்டிக்கொண்டது. கலவிக் கட்சிகளில் அவரது சன்னமான உடல் குழைந்து உருகி உதடுகள் ஈரம் ஜ்வலிக்க நெகிழ்ந்தது. 

ஆரம்பம் முதலே ஷபானா ஆஸ்மியுடனான அவரது உறவு அற்புதமான ஆற்றல் கொண்ட இரு நடிகையர்க்கிடையிலான போட்டியும் ஒவ்வாமையும் விலக்கமும் கொண்டதாகவே இருந்தது. நிஷாந்த், மண்டி, அர்த் படங்களில் ஷபானவின் பாத்திரமே பிரதான பாத்திரம். ஷபானவை விடவும் அதியற்புதமான பாத்திரங்கள் பூமிகாவிலும் சக்ராவிலும் ஸ்மிதாவுக்கு அமைந்தது. ஷபான தொழில்முறைக் கலைஞர். முறைப்படி கல்லூரியில் நடிப்பைப் பயின்றவர். ஸ்மிதா தான் ஏற்கும் பாத்திரங்களைப் பயில்வதற்காக அந்தந்தச் சமூக மக்களோடு சில காலம் வாழ்ந்து கற்றுக் கொண்டு அதனைத் தன குணச்சித்திரத்தில் வெளிப்படுத்தியவர். மிகுந்த சிருஷ்டிகரமான கற்பனையாற்றலுடன் தனது பாத்திரப்படைப்பை உருவகித்தவர். சக்ரா படத்தில் தலித் பெண்ணாக நடிப்பதற்காக அவர் மும்பைச் சேரிக்குச்; சென்று தலித் பெண்களோடு வாழ்ந்து அந்த அனுபவ மேதமையுடன்; படத்தில் அந்த வேடத்தை வாழ்ந்து காட்டியிருந்தார்.

ஷபானாவுக்கு அவருக்குமான விரோதம் என்பதற்கு விமர்சகர்களின் மனோபாவமும் ரசிக மனோபாவமும் இயக்குனர்களின் மனோபாவமும் கூடக் காரணங்களாக அமைந்தன. ஷபானாவுடன் அவர் நடித்த அர்த் படம் அவருக்கு மிகுந்;த மனவேதனையைத் தந்தது. ஷபானா எனும் குடும்பப் பெண்ணிடமிருந்து அவரது கணவரான திரைப்பட இயக்குனரைக் கவர்ந்து கொள்ளும் மனோவியாதி கொண்ட நடிகையாக அதில் ஸ்மிதா பாத்திரமேற்றிருந்தார். முதல் பாதியில் சமநிலையடன் இருந்த அவரது பாத்திரப் படைப்பு பின்பாதியில் நரம்புத்தளர்ச்சி கொண்ட, மனோவியாதி பீடித்த பெண்ணாகச் பாத்திரச் சித்தரிப்பை இயக்குனர் மகேஷ் பட் அவசரமாகச் செய்தார் எனக் குறிப்பிடும் ஸ்மிதா, இனி சமபலம் கொண்ட வகையில் பாத்திரப் படைப்பு அமையாவிட்டால் ஷபானாவுடன் சேர்ந்து இனி நடிப்பது சாத்தியமில்லை எனவும் ஸ்மிதா சொன்னார். 

ஸ்மிதாவின் மரணம் வரையிலும் ஷபானாவுகாகும் ஸ்மிதாவுக்கும் இடையிலான போட்டியும் மனக்கசப்பும் தொடர்ந்து இருந்து வந்திருந்தாலும் வெளிப்படையாக ரசாபாசமாக ஒரு போதும் இருவரும் நடந்து கொண்டதில்லை. ‘ஸ்மிதாவின் மரணம் ஏற்படுத்திய வெற்றிடத்தினால் போட்டிபோட்;டு நடித்து, இன்னும் மேன்மையான நடிப்பைக் காண்பிக்க, ஒப்பிட்டு நடிக்க, எவரும் எனக்கு இனி இல்லாது போய்விட்;டார்கள்’ என இது குறித்து ஷபானா ஆஸ்மி குறிப்பிட்டார்.

ஸ்மிதாவின் வாழ்வை நினைக்கும் தோறும் உலகின் இரு பெண் ஆளுமைகள் ஞாபகம் வருகிறார்கள். ஓருவர் பிரெஞ்சுத் தத்துவவாதியான ழான் புவல் சார்த்தரின் வாழ்நாள் தோழியும், இரண்டாம் பாலினம் நூலை எழுதியவருமான சீமன் தீ போவா. பிறிதொருவர் நாசிக்கட்சி உறுப்பினரும் இருத்தலியல் தத்துவ முன்னோடியுமான ஹைடேக்கரைக் காதலித்த யுதப்பெண்மணியும் தத்துவவாதியுமான அனா அர்ந்த. 

வீட்டு வேலை அடிமைத்தனம் என்பதனைத் தனது வாழ்நாளெல்லாம் நம்பிய, அதன்பொருட்டே தன் வாழ்வைப் பெரும்பாலும் விடுதிகளிலேயே கழித்த சீமோன் தீ போவா, சார்த்தருக்கு அப்பால் அமெரி;க்க வலதுசாரி எழுத்தாளரான நெல்சன் அல்கரனோடு காதல் கொண்டிருந்தார். அல்கரனோடு ஒரே நாளில் ஐந்து-ஆறு முறை கலவி செய்ய விரும்பும் தீ போவா, அல்கரன் நாவல் எழுதுவதற்காக தான் வீட்டைச் சுத்தம் செய்வதாகவும், அவருக்குச் சமைப்பதாகவும், தான் எழுதுவதை விடுத்து அவரது நாவலைத் தான் எழுதவதாகவும் அல்கரனுக்கு எழுதும் அவரது தனிப்பட்டக் காதல் கடிதத்;தில் குறிப்பிடுகிறார். 

யூதமக்களை இலட்சக் கணக்கில் கொன்ற நாசிகளின் கட்சி உறுப்பினராக இருந்த ஹைடேக்கரை இனக்கொலையிலிருந்து தப்பிய அவரது தத்துவ மாணவியான அனா அரந்த காதலித்தார். பிறிதொருவரை மணந்த தருணத்தின் பின்னும் அவர் ஹைடேக்கரைக் காதலித்தார். காதல் கருத்து முரண்கள் கடந்தது என்று சொல்கிறார் அனா. கார்ல் மார்க்ஸ், லெனின், அல்த்தூசர் போன்ற மகத்தான மேதைகளின் வாழ்விலும் இத்தகைய காதல்கள் உண்டு.

ஸ்மிதா பாடீலின் சமூக மாற்றக் கடப்பாடுகளையோ அவரது சமதர்ம அரசியலையோ பகிர்ந்து கொண்டவர் என ராஜ் பாப்பரைச் சொல்ல முடியாது. சமாந்தர சினிமாவுக்கும் ராஜ்பாப்பருக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை. ஸ்மிதாவின் எளிமையும் அனாயாசமான அவரது நடிப்பாற்றலும் எத்தனைப் பெரிய நட்சத்திர நடிகர்களே ஆனாலும் அவர்களை கண்டுகொள்ளாது  மேற்செல்;கிற ஸ்மிதாவின் ஆளுமையுமே ராஜ்பாப்பரை அவர் மீது காதல் கொள்ளச் செய்கிறது. ஸ்மிதாவை மணக்க அவர் குழந்தைகளையும் மனைவியையும் விட்டு வெளியேறுகிறார். ஸ்மிதா கடப்பாட்டுடன் செயலாற்றிய, சமாந்தர சினிமா சித்தரித்த பெண் ஆளுமையாகச் சொந்த வாழ்வில் ஸ்மிதா இருக்கவில்லை. ஸ்மிதா பெண்விடுதலைக்குக் குரல் கொடுத்தவர். பெண்நிலைவாத அமைப்பில் செயலாற்;றியவர். அவரே தனது காதலின் பொருட்டு பிறிதொரு காதலைக் கலைப்பவராக ஆகி;னார். 

ராஜ்பாப்பர் ஸ்மிதாவுக்காக எந்த மனைவியை விட்டு வந்தாரோ அந்த நதிராவை அவர் காதலித்துத்தான் மணந்து கொண்டார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயும் நடிகையமான நதிரா ராஜ் பாப்பருக்காக தனது நடிப்பையும் விட்டுக் கொடுத்தவர். எவ்வாறு சமாந்தர சினிமா- வியாபார சினிமா இரண்டுக்கும் இடையிலான இரண்டக நிலை ஸ்மிதாவை நிம்மதியற்றவராக ஆக்கியதோ அது போலவே அவர் தனது சொந்த வாழ்வில் பேசிய மற்றும் சமாந்தர சினிமாவில் அவர் ஏற்ற கலகப்பெண்மை எனும் சித்தரிப்புக்கு மாறாக அவர் தேர்வு செய்த ராஜ் பாப்பருடனான அவரது இரண்டாம் திருமணமும் அவரை நிம்மதியற்றவராக்கியது. 

தனது தாயின் விலக்கமும் நேசித்தவர்கள் தன்னிலிருந்;து விலகியமை, தனது ரசிகர்கள் தன்னை வெறுத்தமை, நதிரா தொடர்பாகத் தான் கொண்டிருந்த குற்றுவுணர்வு போன்றன அவரது பின் பிரசவ உடல் நலிவுக்கு அவரை இட்டுச் சென்றது என்கிறார் அவரது இளைய சகோதரியான அனிதா பாடீல். ஸ்மிதா மாரடைப்பினால் கோமா நிலையிலிருந்து மீளாமலேயே நம் அனைவரிடமிருந்தும் விடைபெற்றுக் கொண்டார்.

இரண்டு காட்சிகள். ஆக்ரோஷ் படத்தில் தொடையும் இடையும் உடல் சேலையும் நெகிழ, நெற்றிக் குங்குமம் வியர்வையில் கரைய, ஓம்புரியின் முதுகை ஆரத் தழுவ, அவரது தோள்களைக் கடிக்கும் கலவியில் பெருகும் ஸ்மிதாவின் உன்மத்தம். நிஷாந்த் படத்தில் தனது கணவனின் கொடூர மனம் படைத்த இருகோதரர்கள் வெஞ்சினம் கொண்ட கிராம மக்களால் கையில் கிடைத்த ஆயுதங்களால் அடித்துக் கொல்லப்படும்;போது, பழிவாங்கும் உணர்வுடன் மாடிச்சட்டத்தில் சாய்ந்தபடி, உடல்இறுகித் தோள்புடைத்து முகம்இறுகப் பார்க்கும் அந்த வெறித்த விழிகளில் வெளிப்பட்ட ரௌத்ரம் எவரையும் மானுட விடுதலைச் சிலிர்ப்பின்-கலவிச் சுகத்தின் விளிம்புக்கு எடுத்துச் சென்றே தீரும். ஸ்மிதா இந்திய உழைக்கும் பெண்களின் திரைப் பிம்பம். ஓடுக்கப்பட்ட தலித் பெண்களது சீற்றத்தின் திரைப் பிரதிமை. நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்துப் போராடிய விவசாயக் கூலித் தொழிலாளிப் பெண்ணின் திரைப் பிம்பம். பாலுறவு வேட்கையை சுதந்திரமாக வெளியிட்ட, தனது பாலுறவுத் தேர்வைத் தானே நிர்ணயித்துக் கொண்ட இந்தியப் பெண்மையின் திரை வடிவம் அவர். அவரது அத்தனை முரண்களோடும் ஸ்மிதா பாடீல் இந்தியப் பெண்மையின் காதலினதும் வெஞ்சினத்தினதும்  உச்ச ஆற்றலின் வடிவம்.

Leave Comments

Comments (0)