பாடநூல்களுக்கு அப்பால் வாசியுங்கள்!

/files/BOOK-2021-02-19-19:16:31.jpg

பாடநூல்களுக்கு அப்பால் வாசியுங்கள்!

  • 5
  • 0

செல்வமணி .T

ஒரு மனிதனின் ஆளுமையை உருவாக்குவதில் மாணவப் பருவம் தான் முக்கியமான பங்கு வகிக்கிறது. அதிலும் பள்ளிப்பருவம் என்பது எவராலும் மறக்க முடியாததாக எப்போதும் நினைவுகூரத்தக்கதாக இருக்கிறது.

தனது வாழ்க்கையில் தனது பள்ளிப் பருவத்தை நினைவுகூராதவர்கள் இருக்கவே முடியாது. நான் இப்போது நாடாளுமன்ற உறுப்பினராக உங்கள் முன்னால் நிற்கிறேன் என்று சொன்னால் அதில் எனது பள்ளி ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு.

சிதம்பரத்தில் உள்ள இதே போன்றதொரு தனியார் பள்ளியில்தான் நான் படித்தேன்.ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா என்பது அந்தப் பள்ளியின் பெயர். ஆறாம் வகுப்பில் இருந்து 11 ஆம் வகுப்பு வரை அங்கே படித்தேன்.

அப்போது அங்கிருந்த சூழலும் ஆசிரியர்களுடைய ஊக்குவிப்பும்தான் நான் இந்த அளவுக்கு உருவாவதற்கு முதன்மையான காரணம்.அந்தப் பள்ளியில் எனக்குப் பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள் பலரைப்பற்றியும் பேசவேண்டும் என விரும்பினாலும் அறிவியல் ஆசிரியராக இருந்த ராமமூர்த்தி என்பவருடைய பணிகளைப் பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.


இப்போது நாம் மிக எளிதாக அறிவியல் செய்திகளை அறிந்து கொள்கிறோம். தொலைக்காட்சியில் மட்டுமல்ல மொபைல் போனிலேயே டிஸ்கவரி சேனல் போன்றவற்றை நம்மால் பார்க்க முடிகிறது. 


ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்பு பிபிசி தயாரித்த அறிவியல் டாக்குமெண்டரி களை கொண்டு வந்து புராஜக்டர் மூலமாக ஒளிபரப்பி அவற்றை மாணவர்களுக்கு விளக்குகிற மிகப்பெரிய பணியை அவர் செய்து வந்தார். 


அதுமட்டுமல்லாமல் வெள்ளிக்கிழமைதோறும் மாணவர் ஒருவர் அறிவியல் மேதைகளைப் பற்றி உரையாற்ற வேண்டும் என்ற ஒரு வழக்கத்தை அவர் வைத்திருந்தார். 


நான் முதன்முதலில் ஜெகதீஷ் சந்திரபோஸ் குறித்து அப்படித்தான் உரையாற்றினேன். ஜெகதீஷ் சந்திரபோஸ் பற்றி எனது பாடநூலில் அவ்வளவாக செய்திகள் இல்லை.


எனவே எங்களது பள்ளி நூலகத்திற்குச் சென்று அங்கிருந்த நூல்களில் அவரைப் பற்றிய செய்திகளைத் திரட்டி அவற்றை ஒரு உரையாக எழுதி பலமுறை வாசித்துப் பார்த்து அதன்பின்னர் பேசினேன்.நல்லதொரு ஆசிரியர் என்பவர் மாணவர்களைப் பாடநூல்களுக்கும் அப்பால் தேடிப் படிக்குமாறு தூண்டவேண்டும் .அத்தகைய தூண்டுதலைத் தந்தவர் எனது ஆசிரியர் ராமமூர்த்தி அவர்கள். 


அவரால்தான் வகுப்பறை மட்டுமல்ல நூலகமும் முக்கியமானது என்பது எனக்கு அழுத்தமாக மனதில் பதிந்தது. ஒரு கட்டத்தில் எங்கள் பள்ளி நூலகம் எனது வாசிப்புக்குப் போதாதது ஆகிவிட்டது. எனவே, நான் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகத்தை நாடிச் சென்றேன்.


பள்ளி மாணவனாக இருந்தபோதே பல்கலைக்கழக நூலகத்தில் சென்று படிக்கும் ஆர்வத்தை எனது ஆசிரியர்கள் தான் உருவாக்கினார்கள்.


நல்ல பள்ளி என்பது மாணவர்களை வகுப்பறைக்கு உள்ளேயே இருத்தி வைப்பதாக இருக்கக்கூடாது. காலையில் வந்து மாலையில் பள்ளி முடிந்து போகும் வரை வகுப்பறையை விட்டு வெளியே வரவே கூடாது, அதுதான் கட்டுப்பாடான பள்ளி என்று சொன்னால் அதை நான் ஏற்கமாட்டேன். வகுப்பறைக்கு அப்பால் கல்வி இருக்கிறது என்பதை உணரச் செய்கிற ஒரு சூழல் பள்ளியில் இருக்க வேண்டும். அத்தகைய பள்ளியே ஒரு சிறந்த பள்ளியாக இருக்க முடியும்.


நல்ல மாணவர் என்பவரை மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பிடக்கூடாது. யார் அதிக மதிப்பெண் பெறுகிறாரோ அவர்தான் சிறந்த மாணவர் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம் .


அதிகமானவர்கள் தனித் திறமை மூலமாகத் தங்களது வாழ்க்கையில் வேண்டுமானால் முன்னேற முடியும். ஆனால் அவர்கள் சமூகத்துக்குப் பங்களிப்புச் செய்கிறவர்களாக பெரும்பாலும் உருவாவதில்லை. 


தனது பாடப் புத்தகங்களுக்கு அப்பால், வகுப்பறைக்கு அப்பால் கல்வியை விரிவுபடுத்துகிற மாணவரே சிறந்த மாணவராக இருப்பார். அவர் சமூகத்தில் இருந்தும் கல்வியைப் பெறுகிறார். அந்தக் கல்வி புத்தகங்களிலிருந்து கிடைக்கக்கூடியது அல்ல.இங்கே இருக்கிற மாணவர்களாகிய நீங்களெல்லாம் அத்தகைய மாணவர்களாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.


இங்கே இருக்கும் ஆசிரியர்கள்

பாடப் புத்தகங்களுக்கு அப்பால் மாணவர்களைப் படிக்க செய்யக்கூடியவர்களாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.


வகுப்பறைக்கு அப்பால் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன என்பதை உணர்ந்த ஒரு பள்ளியாக அதற்கு உகந்த சூழலை வழங்கும் ஒரு பள்ளியாக இந்தப் பள்ளி இருக்கும் என்று நம்புகிறேன், இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.


நன்றி, வணக்கம்


( களமருதூர் , அருணா மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடையே ஆற்றிய உரை )


தோழர் .ரவிக்குமார் MP

Leave Comments

Comments (0)