இந்திய அரசியலை மறுவரையுறைச் செய்யும் மோடி-அமித் ஷா

/files/rtret 2020-10-19 17:34:23.jpg

இந்திய அரசியலை மறுவரையுறைச் செய்யும் மோடி-அமித் ஷா

  • 91
  • 0


சேகர் குப்தா

தமிழில்: கோபி


1998-ம் ஆண்டு லால் கிருஷ்ன அத்வானியின் பாஜக, 25-க்கும் மேற்பட்ட கட்சிகளோடு தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கியது. இந்தியாவின் மிக வெற்றிகரமான கூட்டணி அரசியலின் தொடக்கமாக இது அமைந்தது. அன்றிலிருந்து, முக்கிய கட்சி பெரும்பாண்மை பெறாமல் மூன்று முறை கூட்டணி ஆட்சி அதன் முழு பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ளது.

2020 முடியவுள்ள நிலையில் பாஜக-வின் நரேந்திர மோடியும் அமித் ஷாவும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு முடிவுரை எழுதி தேசிய அரசியலில் புதிய விதிகளையும் சமன்பாடுகளையும் எழுதியுள்ளனர். அத்வானியின் தேசிய ஜனநாயக கூட்டணி பயன்படுத்தப்பட்டு, நிராகரிக்கப்பட்டுவிட்டது.

இதை நீங்கள் நமது வேத பாரம்பர்யத்தில் உள்ள அஸ்வமேதா யாகத்தோடு ஒப்பீடு செய்துக் கொள்ளலாம். நாடு முழுவதும் குதிரையைக் காண்பித்து இறையாண்மையை நிறுவியதும், நீங்கள் என்ன செய்வீர்கள்? புனித குதிரையை பலி கொடுத்து விடுவீர்கள். தேசிய ஜனநாயக கூட்டணி தான் அந்தக் குதிரை. 

இன்றும் இது தேசிய ஜனநாயக் கூட்டணி அரசு என்று அழைக்கப்பட்டாலும் , 53 உறுப்பினர்கள் கொண்ட பலமிக்க மத்திய அமைச்சர் கவுன்சிலில் ஒரே ஒரு கூட்டணி கட்சி உறுப்பினர் மட்டுமே உள்ளார். யார் அது என நினைத்து கவலைப்படாதீர்கள். நீங்கள் கூகுளில் தேடிப் பார்ப்பதற்கு முன் நானே கூறி விடுகிறேன். அது வேறு யாரும் அல்ல, இந்திய குடியரசுக் கட்சியின் ராம்தாஸ் அத்வாலே. இது தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் என்பதை நியாகப்படுத்தக்கூடிய ஒரே நபராக அவர் இருக்கிறார். இது எப்படியிருக்கிறது என்றால், 1990-ம் ஆண்டு தனது ரத யாத்திரையின் போது, தான் மதச்சார்பற்ற அர்ப்பணிப்பு கொண்டவன் என்பதை நிரூபிக்க இஸ்லாமிய ஓட்டுனரை அத்வானி வைத்துக் கொண்டதைப் போல.

அவ்வப்போது ஏதாவது பரபரப்பாக பேசி தான் இருப்பதை நமக்கு நியாபக்படுத்துவார் அத்வாலே. ஆனால் அமைச்சரவையில் அவருக்கு உண்டான இடமே கொடுக்கப்பட்டுள்ளது. அவரது கட்சிக்கு மகராஷ்டிராவில் சிறிய அளவில் தலித் வாக்கு வங்கி உள்ளது. ஆகையால் அவருக்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர்த்து, கேபினட்டில் இருக்கும் ஒரே இஸ்லாமியரும் சிறுபாண்மை துறையைக் கவனிக்கிறார்.

இதுகுறித்து நாம் மோடி-ஷாவின் பாஜகவிற்கு எதிராக பேச முடியுமா? முன்பு ஒருமுறை ஹர்யானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் (ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக சிறை சென்று, தற்போது பரோலில் இருப்பவர்) ஓம் பிரகாஷ் சவுதாலா என்னிடம் கூறியதுதான் இதற்கான பதிலாக இருக்கும்: “இங்கு நாங்கள் யாத்திரைக்கு வரவில்லை. அதிகாரம் கிடைக்க நீங்கள் அரசியல் செய்தாக வேண்டும்.” அந்தப் பரீட்சையை புதிய பாஜக கடந்து வந்துவிட்டது. முறிந்துபோன விரல்களையோ, உடைந்த கால்களையோ, தலைகீழான கூட்டணிகளையோ, சிதைந்த ஈகோக்களையோ அது காண்டுகொள்ளவே இல்லை.

1998-லிருந்து 2014-க்கு வருவோம். பாஜக பெரும்பாண்மை இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது. ஆனால் ஏழு கூட்டணி கட்சிகள் அரசாங்கத்தில் பங்கு வகித்தன: சிவ சேனா, ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜன சக்தி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் ஷிரோமி அகாளிதளம் ஆகிய கட்சிகளுக்கு கேபினட் அமைச்சரவையில் இடம் கிடைத்தது. அனுப்பிரியா படேலின் அப்னா தளம், உபேந்திர குஷ்வாகாவின் ராஷ்ட்ரிய லோகந்திரிக் சமாஜ்வாடி கட்சி மற்றும் அத்வாலேயின் இந்திய குடியரசு கட்சிகளுக்கு இணை அமைச்சர் பதவி கிடைத்தது.

இன்றும் இது தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் என அழைக்கப்பட்டாலும், ஆறு வருடங்கள் கழித்து அத்வாலே மட்டுமே இப்போது உடனிருக்கிறார். எந்தளவிற்கு நமது தேசிய அரசியல் மாறியிருக்கிறது என்பதையே இது கூறுகிறது. இந்திரா காந்தியின் கீழ் காங்கிரஸ் எப்படியிருந்ததோ அப்படியிருக்கிறது மோடி-ஷாவின் பாஜக. பின் ஏன் அவர்கள் கூட்டணி கட்சியினரை திருப்தி படுத்துகிறார்கள்? அவர்களின் பேராசை மற்றும் ஈகோக்கள் என்ன ஆனது? அவர்கள் ஒன்றும் ‘தீர்த்த யாத்திரைக்காக’ அரசியலில் சேரவில்லை.

இது கடந்த காலம் குறித்த வாதம் அல்ல. மாறாக, இது எதிர்காலத்திற்கான அரசியல் பாதையாகக் கூட இருக்கலாம். ஆனால், கடந்த காலத்தை மறுபடியும் நாம் குறிப்பிட்டாக வேண்டும். முதன்முதலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அத்வானியும் வாஜ்பாயும் அழைத்து வந்த அனைத்து கட்சிகளும் இப்போது இருக்கிறதா என தெரியவில்லை. சில கட்சிகளின் பெயர்கள் கூட இன்று மாறியிருக்கும். ஆனால் சில பெயர்களை மறக்கவே முடியாது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் கேபினட் அமைச்சரவையில் ரானுவ மந்திரியாக இருந்தார் ஜார்ஜ் பெர்னாண்டஸ். மரியாதைக்குரிய பாதுகாப்பு கேபினட் கமிட்டியில் கூட்டணி கட்சியின் நபர் ஒருவர் இருந்தது கடைசியாக இவராகத்தான் இருக்கும். இவரது சக தோழரும் சில சமயங்களில் எதிரியாகவும் இருந்த நிதிஷ் குமார், ரயில்வே மற்றும் விவசாயத் துறை அமைச்சராக இருந்தார். மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், சரத் யாதவ் மற்றும் ராம் விலாஸ் பஸ்வான் போன்றோரும் முக்கியமான பதவிகளில் இருந்தனர். முன்பு சிவ சேனாவில் இருந்த சுரேஷ் பாபுவும் கூட முக்கிய பதவி வகித்தார். தெலுங்குதேச கட்சியின் பாலயோகி மக்களவை சபாநாயகராகவும் தேசிய கூட்டமைப்பின் அப்புதுல்லாக்கள் முக்கிய பொறுப்புகளையும் வகித்தனர்.  

தற்போதும் நிதிஷ் குமார் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறார். கேபினட் அமைச்ச்சரவையில் அவர் கட்சியிலிருந்து யாரும் இல்லை. மேலும் இவரது புகழ் பீகாரில் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஒருவேளை இவர் மறுபடியும் பீகார் முதலமைச்ச்சராக வெற்றி பெற்றாலும், அதுவே அவரது கடைசியாக இருக்கும். அவரது குடும்பத்திலோ அல்லது கட்சியிலோ அவருக்குப் பின் யாரும் இல்லை. அவர் முழுதும் தேய்ந்து மறையும் வரை காத்திருந்து அதன்பின் ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறது பாஜக.

தங்களது முன்னாள் கூட்டாளியான மம்தா பானர்ஜியோடு மேற்கு வங்காளத்தில் மூர்க்கமாக சண்டையிடுகிறது பாஜக. அவர் வெற்றி பெற்றாலும் அல்லது தோற்றாலும், நிச்சியம் பலவீனம் அடைவார். அப்போது மாநிலத்தின் தேசிய கட்சியாக பாஜக இருக்கும். ஒடிஸாவில் நவீன் பட்நாயக் மட்டுமே உள்ளார். அவருக்கும் வயதாகிவிட்டது. அவர் விட்டுச் செல்லும் இடம் தங்களுக்குதான் என பாஜக தெரிந்து வைத்துள்ளது. நிச்சியம் 2024 தேர்தலுக்கு முன் அதற்கான வேலைகளில் பாஜக ஈடுபடும் என எதிர்பார்க்கலாம்.

திட்டங்கள் எல்லாம் பழக்கப்படதுதான். ஒரிருவர் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டு வைப்பார்கள், சிபிஐ, அமலாக்க துறை போன்றவை அவர்களை நோக்கிச் செல்லும், சமூக ஊடகத்தில் பெரும் போரே வெடிக்கும். ஆனால் தனியாக இருக்கும் முதலமைச்சரால் என்ன செய்து விட முடியும். அதுவும் 2024-ல் பட்நாயக்கின் வயதையும் நான் நினைத்துப் பார்க்க வேண்டும். அப்துல்லா ஒரு வருடம் வீட்டுக்காவலில் இருந்தார். மோடி-ஷா காலத்தில் பாஜக-வின் கூட்டணி கட்சியாக இருந்தாலும் மெஹபூபா முக்திக்கும் இதே நிலைமைதான் நேர்ந்தது.

சிவ சேனா இப்போது எதிரியாக உள்ளது. சுரேஷ் பாபு பாஜகவில் உள்ளார். சரத் யாதவின் நிலை என்னவென்று தெரியவில்லை. அவரது மகள் சுபாஷினி சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார். வழக்கம்போல் பஸ்வானின் குடும்ப அரசியல், வரவுள்ள பீகார் தேர்தலோடு அவரது கட்சிக்கு முடிவுரை எழுதப்படலாம். சந்திரபாபு நாயுடுவும் இப்போது எதிர் முகாமில் உள்ளார். ஆந்திராவில் இவரைத் தோற்கடித்த ஜெகன் மோகன் ரெட்டி சிபிஐ மற்றும் அமலாக்கதுறையின் கருணையில் இருந்து கொண்டிருக்கிறார். நீதிமன்றத்தில் அவர் கடுமையாக போராடி வந்தாலும் நெம்புகோல் என்னவோ மோடி அரசாங்கத்தின் கையில்தான் உள்ளது. தெற்கில், பலவீனமான அதிமுகவோடு சந்தோஷமாக கூட்டு சேர்ந்துள்ள பாஜக, தனக்கான நேரம் வரும் என காத்திருக்கிறது.

போரில் அரசியல் என்பது கொடூரமான வடிவம். இப்போதைய சூழ்நிலையில் பாஜக-வை தவிர்க்க முடியாது என பட்நாயக், நிதிஷ், ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோருக்கு நன்றாக தெரியும். தங்கள் சிறிய பிரதேசத்திற்குள் அவர்கள் வேட்டையாடுகிறார்கள், கூடிய விரைவில் தங்களை வெளியேற்றிவிடுவார்கள் என்பதும் அவர்களுக்கு தெரியும். ஆனாலும் அவர்கள் தேர்தலில் போட்டியிடுவார்கள்.

அவர்களுக்கு வேறு வழியில்லை. அவர்களது எம்பி-க்கள், குறிப்பாக மாநிலங்களவையில் உள்ளவர்கள் மிக முக்கியமான விஷயங்களில் பாஜக-விற்கு ஆதரவாக வாக்களிக்கிறார்கள். நீங்கள் உங்கள் மாநிலத்தில் ராஜாவாக இருக்கலாம். ஆனால் உண்மையான அதிகாரம், ‘ஏஜென்சிகள்’, ஊடகம், பணப்பைகள் எல்லாம் மத்திய அரசிடம் உள்ளது.

மோடி-ஷா யார் என்பதை நீங்களே தீர்மானிக்கலாம். இந்திய வரலாற்றில் மிகுந்த “அரசியல்” அரசாங்கம் இவர்களுடையதுதான். ஆனால் அவர்கள் அதற்கெல்லாம் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. 24x7x365 நேரமும் இவர்களின் எண்ணம் முழுவதும் அரசியல் மற்றும் அதிகாரம் மீதுதான் உள்ளது. இதற்கு முன் இந்தியா பார்த்திராதது இது. இவர்களது பொருளாதார முடிவுகள் ஒவ்வொன்றும் கூட, அரசியல் சார்பாகவே உள்ளது.

அதனால்தான் வட்டி விகிதங்கள் மேலும் குறைக்கப்படவில்லை. ஏழைகளுக்கு பணவீக்கம் அதிகரிக்க கூடும் என நிதி ஊக்குவிப்பைக் கூட மத்திய அரசு வழங்கவில்லை. நிதி விஷயத்தில் அரசாங்கம் எந்த தியாகம் செய்தாலும், ஏழைகள் பசியில் வாடக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். பணவீக்கம், நலத்திட்டம், வளர்ச்சி இவற்றுக்கிடையிலான சமரசம் அதிக ஆபத்தைத் தரக்கூடிய அரசியலாகும். அதேப்போல் பெட்ரோலியப் பொருட்களுக்கு அதிக வரியை விதிக்கவும் அது தயங்கவில்லை. ஏனென்றால் மத்தியதர மற்றும் கீழ் மத்தியதர மக்கள் மட்டுமே வாகனங்களை ஓட்டப் போகிறார்கள். எப்படியிருந்தாலும் அவர்கள் வாக்கு நமக்குதான் வரப்போகிறது.

இப்படித்தான் தேசிய அரசியலின் நிலை செல்கிறது. உங்களுக்கு பிடித்திருந்தால், நல்லது. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், நிறைவுபெற்ற அஸ்வமேதாவை நீங்கள் எதிர்க்க நினைத்தால் வைரல் ட்வீட் மட்டுமல்லாமல் நீங்கள் நிறைய செய்தாக வேண்டும். இங்கேதான் அத்வானியும் இருக்கிறார். அவரிடம் கேளுங்கள். அவர் உங்களை ஏமாற்ற மாட்டார். இந்திய அரசியலை மாற்ற 1998-ம் ஆண்டு அவர்தான் பிரச்சாரம் தொடங்கினார். அவரது  வாழ்நாளிலேயே, அவர் கொடுத்த வாக்குறுதியை அவரது சகாக்கள் மீட்டுவிட்டனர். முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு கணிசமாக மீட்டுவிட்டனர். நேரு ரசிகர்களே, அவரிடமிருந்து இதைப் பறித்து கொண்டதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்

Leave Comments

Comments (0)