சென்னையில் இருந்து விரட்டப்பட்ட ஒரு பூர்வகுடியின் கடிதம் !

/files/Capture-2021-02-20-19:55:42.JPG

சென்னையில் இருந்து விரட்டப்பட்ட ஒரு பூர்வகுடியின் கடிதம் !

  • 7
  • 0

செல்வமணி .T

அன்புள்ள தோழர்களுக்கு !


சென்னை பெரும் சேரியில் இருந்து வீடுகளை இடித்து வலுக்கட்டாயமாக 40கிமீ தூரத்தில் நகருக்கு வெளியே வீசி கொட்டப்பட்ட மக்களுக்காக  பேசுகிறேன்.  


மழை, வெயில்,  கொரோனா ஊரடங்கு போன்ற எந்த ஒரு விடயத்தையும் கருத்தில் கொள்ளாமல்,  பெரியவர் சிறியவர், கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தோர், நோயாளிகள், பள்ளி மற்றும்  கல்லூரி  மாணவர்கள் என யாரைப்பற்றியும் கவலைப்படாமல்,  அரசே அவர்களை அப்புறப்படுத்தி அவர்கள் அனைவரையும் ஒரு எட்டு அடுக்குமாடி சிறையில் அடுக்கி வைத்திருக்கிறது.சென்னை பெரு நகரத்திலிருந்து பெயர்த்தெடுத்து , அம்மக்களின்  வாழ்வாதாரம்,  சுகாதாரம்,  சமூக பாதுகாப்பு, கல்வி என அனைத்தையும் பறித்து  கண்ணகி நகர்,  செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், என சிதறடிக்கப்பட்டு இருக்கின்றனர்.  


அப்படி துரத்தபட்டு இருக்கிற பட்டியல் மக்களின் நிலை யாராலும் கண்டுகொள்ளப்படாமல்,  பேசுபொருள் ஆக்கப்படாமலும் இருக்கிறது.சாதி அமைப்பை ஏற்றுகொண்டு செயல்ப்பட்டு வருகிற கிராமத்தாருக்கும்,  அதே உணர்வை தாங்கி நகரத்தில் குடிபெயர்ந்து வந்திருக்கும் சாதிய சமூகத்துக்கும் இதை பற்றி பேச நேரம் இல்லாமல் போயிருக்கிறது.


வேதனையான விடயம் என்னவென்றால் குடிசை மாற்று வாரியத்தால் மேற்கூறிய இடங்களில் மறுகுடியமர்வு செய்யப்பட்டிருக்கிற மக்களுக்கு ஏற்ற பள்ளியையும்,  கல்லூரியையும்,  ஆரம்ப சுகாதார, மருத்துவமனையையும், காவல் நிலையத்தையும் அமைக்க திட்டமிட நேரமில்லாமல் போனது. 


சென்னைக்கு வெளியே மறுகுடியமர்வு செய்ததால் அதுவரை கிடைத்து வந்த நகர் புற வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் தவிக்கின்றனர். அளவில்லாமல் அடைத்து வைத்திருக்கிற ஆட்டுமந்தையைப்போல ஆக்கப்பட்டு இருக்கிறார்கள்.அவர்களின் பிள்ளைகள் கல்விக்கட்டணம் செலுத்த வழியில்லாமல் பயிலுகிற கல்வி நிறுவனங்களால் ஆன்லைன் வகுப்பில் இருந்தும் கூட  விலக்கப்பட்டு வருகிறார்கள். இவையனைத்தும் ஊர் அறிந்த உண்மை. 


நாம் சந்திக்க வேண்டிய இவர்களின் தேவை அதிகமாக உள்ளது. தற்போது நம்மிடம் கல்வி கட்டண உதவி வேண்டி கையேந்தி நிற்கிற குழந்தைகளுக்கு உதவி நாடி இந்த செய்தியை உங்களிடம் பகிர்கிறேன்.


சமூக மாற்றம் விரும்புகிற, உங்களுக்கு தெரிந்த பட்டியலின மற்றும் பட்டியலினமல்லாத ஆளுமைகள்,  நண்பர்களுக்கு செய்தியை தெரிவித்து சென்னை பெருஞ்சேரியில் இருந்து துரத்தப்பட்ட மக்களின் கல்வி கனவை நிறைவேற்ற அர்ப்பணிப்போடு செயல்பட, பங்கேற்பாளராக உடன்நின்று உதவிட அனைவரையும் அழைக்கிறேன்.

சந்தேகம்,  கருத்து பகிர்வு,  ஆலோசனைகள்  ஏதேனும் இருப்பின்,  தாமதிக்காமல் தொடர்பு கொள்க!....மறக்காமல் கல்வி நிதியை பெற்று தர உதவிடுக !


தோழமையில் 


எழில் அரசு

9941317955

9710653734

Leave Comments

Comments (0)