நேர்மைக்கு சன்மானம் மரணம்!

/files/news-2020-11-16-13:07:35.jpg

நேர்மைக்கு சன்மானம் மரணம்!

  • 9
  • 0

ஊடகத்துறையின் மீது மக்களிடம் இருக்கக்கூடிய மிகப்பெரிய விமர்சனம் இவர்கள் காசுக்காக நீதியை விற்கிறார்கள், பணம் வாங்கிக் கொண்டு ஆதரவாகவும் எதிராகவும் எழுதி வருகிறார்கள், நடிகைகளுக்கும் நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து மக்கள் பிரச்சனைகளை இருட்டடிப்பு செய்கிறார்கள், என்கிற விமர்சனங்களை தாண்டி ஒரு சிலர் ஊடகத்துறைக்கு வேலைக்கு வருவதே மக்களின் குரலாக மாறவேண்டும், தவறுகளை வெளிக்கொண்டு வந்து மக்களின் நல்வாழ்விற்கு பாடுபட வேண்டும் என தன் வாழ்வை அர்ப்பணிக்கிறார்கள்,அப்படியானவர்களை அந்த செய்தி ஊடகத்தின் தலைமையே ஊக்குவிப்பதில்லை அவர்களுக்கு பல நெருக்கடிகளை கொடுக்கிறது,அதையும் மீறி குற்றங்களை வெளிப்படுத்தும் நேர்மையான ஊடகவியலாளர்களுக்கு கிடைக்கும் இரண்டு பரிசுகள் ஒன்று பணிநீக்கம், இன்னொன்று உயிர் நீக்கம். அப்படி பல உண்மையை வெளியிட்ட செய்தியாளர் செல்வன் மோசஸ் கயவர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருவள்ளூர் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் தமிழன் தொலைக்காட்சி செய்தியாளராக பணியாற்றி வந்தவர் மோசஸ் இவர் இந்த பகுதியில் நடக்கும் சமூக விரோத, சட்ட விரோத, சம்பவங்களை தொடர்ந்து செய்தியாக அளித்து வந்துள்ளார். இதனால் இவருக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தது. இதனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்த மோசஸ் அவர்கள் காவல்துறையிடம் இதனை தெரிவித்துள்ளார், ஆனால் காவல்துறை காட்டிய அந்த அலட்சியம் மோசஸ் அவர்களின் கொலையில் போய் முடிந்துள்ளது. நில அபகரிப்பு சம்பவங்களை மிகத் துணிச்சலாக அம்பலப்படுத்தியுள்ளார். திருவள்ளூர் பகுதியில் கஞ்சா விற்பனை வெகு இயல்பாக நடந்து கொண்டிருப்பதை கண்டுபிடித்த மோசஸ் அதுவும் பள்ளிக்கூடங்கள் அருகில் இருக்கும் பெட்டிக்கடைகளில் கஞ்சா விற்பனை செய்வதை செய்தியாக வெளியிட்டு அந்த குற்றத்தை அம்பலப்படுத்தினார் இதனால் அந்த சமூக விரோதிகள் மோசஸ் மீது கடும் ஆத்திரம் அடைந்துள்ளனர். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை மோசஸ் போலீசாரிடம் எடுத்துச் சொல்லியும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது அவர்கள் மீதும் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது இவரின் கொலைக்கு போலீசாரும் உடந்தையாக இருக்கலாம் என சிந்திக்க வைக்கிறது. ஒரு நள்ளிரவில் கயவர்களால் மோசஸ் வெட்டிப் படுகொலை செய்யப்படுகிறார்.

தமிழக அரசு அந்த குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இதற்கு உடந்தையாக போலீசார் யாரேனும் இருப்பின் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பேனா முனைகள் தான் நம் எதிர்காலத்தை செதுக்குகிறது, அவை உடைக்கப்பட்டால் மக்கள் வாழ்வு நசுக்கப்படும். பத்திரிக்கையாளர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. பொறுப்பை உணர்ந்து தமிழக அரசும் காவல் துறையும் செயல்படவேண்டும்....

Leave Comments

Comments (0)