அமைதி பள்ளத்தாக்கின் பாதுகாவலர்: மாரி, 33 வருடங்களாக காட்டில் வாழ்ந்து வரும் மனிதர் செரின் சாரா சக்காரியா

/files/SD 2020-10-28 18:14:09.jpg

அமைதி பள்ளத்தாக்கின் பாதுகாவலர்: மாரி, 33 வருடங்களாக காட்டில் வாழ்ந்து வரும் மனிதர் செரின் சாரா சக்காரியா

  • 47
  • 0

தமிழில்: கோபி

பாலக்காடில் உள்ள அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்கா இந்தியாவில் நன்கு அறியப்பட்ட வெப்ப மண்டல காடுகளில் ஒன்றாகும். அருகிவரும் சிங்கவால் குரங்கு உள்பட அரிய வகை தாவரங்கள் மற்றும் உயிரினங்களுக்கு வாழ்விடமாக இது உள்ளது.

1970-ல் அமைதி பள்ளத்தாக்கு வழியாக 8கிமீ காட்டை மூழ்கடித்து நீர் மின் அணையை கட்டுவதற்கான திட்டத்தை கேரள மாநில மின்சார வாரியம் முன்மொழிந்தது. இதற்கு எதிராக பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். பாலக்காடில் வாழ்ந்து வரும் ஆதிவாசி இன மக்கள்தான் இந்த போராட்டத்தில் முன்னனியில் நின்றனர். இறுதியில், இந்த திட்டம் கைவிடப்பட்டது.

முதுகா பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாரி, தங்கள் பசுமை வீட்டை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் தனது தந்தை முன்னனியில் நின்ற கதையை கேட்டு வளர்ந்தவர். இது அவர் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

ஆகையால் மாரி வனப் பாதுகாவலராக மாறியதும் தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையே சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அர்ப்பணித்ததும் ஒன்றும் ஆச்சர்யமில்லை. இதே காரணத்திற்காகதான், இந்த வருடத்தின் முதலமைச்சர் வனப் பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டது.

சிறு வயதிலிருந்தே கேரளாவின் பாலக்காடு நகராட்சியில் உள்ள அமைதி பள்ளத்தாக்கின் பாதுகாப்பில் ஒரு பகுதியாக இருந்து வருகிறார் மாரி. அமைதி பள்ளத்தாக்கின் பல்லுயிர் பெருக்கத்தை ஆய்வு செய்ய, 1970- களில் இந்தியாவெங்கும் இருந்து வரும் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளுக்கும் பாதுகாவலர்களுக்கும் இவரது தந்தை லெச்சியப்பன் பெரும் உதவியாக இருந்தார்.

சுற்றுலா வழிகாட்டியாக தனது தந்தை செல்லும்போது பெரும்பாலான சமயங்களில் மாரியும் கூடவே சேர்ந்து கொள்வார். மேலும் அவர், காட்டில் இருக்கும் அரிதான உயிரினங்களின் தனித்தன்மைகளை சுட்டி காட்டுவார்.

ஏழாம் வகுப்பு முதல் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு, அமைதி பள்ளத்தாக்கில் தற்காலிக ‘காவல்காரராக’ நியமிக்கப்பட்டிருந்த தனது தந்தையோடு 16 வயதிலேயே சேர்ந்து கொண்டார் மாரி.

“இப்பகுதியில் உள்ள ஒவ்வொரு விஷயத்தையும் என் தந்தை நன்கு அறிந்து வைத்திருந்தார். அதற்கு காரணம், காட்டின் உட்பகுதிக்குச் செல்லும் தைரியம் அவருக்கு இருந்ததே காரணம்” என விளக்குகிறார் மாரி.

தற்போது அமைதி பள்ளத்தாக்கின் பூச்சிப்பாரா பகுதியில் வனப் பாதுகாவலராக இருக்கும் மாரி, தினமும் சுற்றுலாவாசிகளிடமும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமும் உரையாடி வருகிறார்.

கடந்த சில வருடங்களாக வழிகாட்டியாக செல்கையில் ஆய்வாளர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளும் வாய்ப்பு தனக்கு ஏற்பட்டதாக சுட்டிக் காட்டுகிறார்.

அவர்களுக்கு அரிய உயிரினங்களை இவர் சுட்டிக் காட்டும்போது, அதன் பெயரை இவர்கள் மாரிக்கு கற்றுக் கொடுக்கிறார்கள். இன்று, அமைதி பள்ளத்தாக்கில் உள்ள 134 வகையான மலர்களின் பெயர்களையும் பல வகைப்பட்ட பறவைகள் மர்றும் பூச்சிகளின் பெயர்களையும் அவர் கூறிவிடுவார்.

“2013-ம் ஆண்டு கேரளாவிற்கு வந்திருந்த இளவரசர் சார்லஸை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மொழிபெயர்ப்பாளரின் உதவியோடு அவரிடம் சில நிமிடங்கள் பேசவும் செய்தேன். அந்த சமயத்தில் இது பெரிய விஷயமாக எனக்கு தெரியவில்லை. ஆனால் இப்போது தெரிந்து கொண்டேன்” எனக் கூறிச் சிரிக்கிறார் 48 வயதாகும் மாரி.

அமைதி பள்ளத்தாக்கின் ‘பாதுகாவலராக’ இருந்தாலும், தனது கண்களுக்கு மட்டுமே தெரிந்த கவர்ச்சியான உயிரனங்களை புகைப்படங்களை ரசித்து எடுக்கிறார் மாரி.

“நான் தொழில்முறை புகைப்பட கலைஞன் அல்ல. ஆனால் காட்டில் நான் பார்க்கும் காட்சிகளை ஒரு ஆவணமாக பதிவு செய்ய விரும்புவேன். முன்பு பணிபுரிந்த வனச்சரகர், 2002-ம் ஆண்டு எனக்கு இந்த கேமராவை பரிசாக அளித்தார். அன்றிலிருந்து புகைப்படம் எடுத்து வருகிறேன். எந்தப் புகைப்படத்தையும் நான் வைத்துக் கொள்வதில்லை. எல்லாவற்றையும் வனத்துறை அலுவலகத்தில் கொடுத்து விடுவேன்” என்கிறார்.

“சுற்றுலாவாசிகளையும் ஆய்வாளர்களையும் காட்டிற்கு அழைத்துச் செல்லும் போதெல்லாம் எளிமையான சில விஷயங்களை அவர்களிடம் கூறுவேன். விலங்குகளை நீங்கள் பார்த்துவிட்டால், பயந்து கூக்குரல் இடாதீர்கள் அல்லது ஓடாதீர்கள். அங்கு அமைதிதான் முக்கியம். இரண்டாவதாக, மிகவும் முக்கியமான ஒன்றை நாம் நியாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். இது விலங்குகளின் வாழ்விடம். அவைகளை நீங்கள் எதுவும் செய்யாவிட்டால், அதுவும் உங்களை ஒன்றும் செய்யாது.”

“பலமுறை நான் விலங்குகளை நேரில் பார்த்துள்ளேன். சில வருடங்களுக்கு முன்பு, ஆராய்ச்சியாளர்கள் சிலருடன் காட்டிற்குள் நான் வழிகாட்டியாக சென்றிருந்த போது, தனியாக இருக்கும் யானையை கண்டோம். யானையைப் பார்த்ததும் அனைவரும் மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டனர். எங்கள் காலடியைக் கேட்டதும், தனது தும்பிக்கையை வைத்து எங்களைத் தேடுவதை நான் பார்த்துவிட்டேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக அதனால் எங்களிடம் வர முடியவில்லை” என நிம்மதி பெருமூச்சு விடுகிறார்.

ஆனால் புலியை நேரில் பார்த்த போது பயந்தேவிட்டார் மாரி.

“காட்டுப் பாதைகளில் உள்ள கிளைகள் மற்றும் இலைகளை அன்று நான் தனியாக சுத்தம் செய்து கொண்டிருந்தேன். திடீரென்று திரும்பி பார்த்த போது, என்னைப் பார்த்தவாறு புலி ஒன்று அருகில் நின்றது. அடுத்த 15 நிமிடங்களுக்கு நானும் புலியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தோம். நான் அமர்ந்தால், அதுவும் அமர்ந்தது. நான் எழுந்தால், அதுவும் பின்னால் ஒரு அடி சென்றது. பின்பு திடீரென்று சத்தமாக குரல் எழுப்பியதும், புலி ஓட்டம் பிடித்தது. அடுத்த நாள் காலை அதே இடத்திற்கு நான் வந்தபோது, அங்கு கடமானின் எச்சங்கள் கிடந்தன. பசியோடு இருந்த புலியையே நான் சந்தித்துள்ளேன் என்பதை அப்போது உணர்ந்து கொண்டேன்” என நம்மிடம் விவரிக்கிறார்.

சிறுத்தைப் புலி, கரடி, புலி, ஓநாய்கள், பாம்புகள் என மாரி சந்தித்த விலங்குகளின் பட்டியல் மிக நீளமானது. ஆனால் அதைப் பார்த்து பயப்படுவதற்கு பதில், இவரோ இதை ஒரு அணுபவமாக உள்வாங்கிக் கொள்கிறார். இதுவே அவரை காட்டிற்கு நெருக்கமாக வைத்திருக்கிறது.

மாரியின் காட்டு வாழ்க்கை பல தடைகளையும் சிரமங்களையும் கொண்டது. 2018-ம் ஆண்டு ஏற்பட்ட கேரள வெள்ளத்தின் போது, காட்டிலுள்ள அனைத்து பாதைகளிலும் வெள்ளம் சூழ்ந்து கொண்டதால் பல நாட்கள் காட்டிற்குள் தனியாக இருந்துள்ளார் மாரி.

மேலும், 15 நாட்களுக்கு ஒருமுறைதான் இவர் தனது வீட்டிற்கு வருகிறார். தனது மனைவி புஷ்பா மற்றும் தனது குழந்தைகள் மிதுன், லக்ஷ்மன் மற்றும் ஸ்ரீராக் ஆகியோரும் காட்டு வாழ்க்கையை விரும்புவதாக கூறும் மாரி, ஆனால் தனக்கிருக்கும் ஆர்வம் அவர்களுக்கு இல்லை என்கிறார்.

சமூக வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் கடுமையாக உழைத்த தனிநபர்களுக்கு ஒவ்வொரு வருடமும் முதலமைச்சர் வனப் பதக்கத்தை கேரள அரசு வழங்குகிறது. மாரிக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதைகளில் இதுவும் ஒன்று.

முன்னாள் தலைமை வனப் பாதுகாவலர் என். மாதவன் பிள்ளை நினைவாக வழங்கப்படும் பாதுகாப்பு விருது மற்றும் மதிப்புமிக்க பிவி தம்பி சுற்றுச்சூழலியல் விருது உட்பட பல சூழலியல் விருதுகளை கடந்த காலங்களில் வாங்கியுள்ளார்.

அமைதி பள்ளத்தாக்கின் அரிய சூழல் மண்டலத்தை பாதுகாக்க மாரியின் தன்னலமற்ற முயற்சியும் பங்களிப்பும் ஈடு இணையில்லாதது. பல வனத்துறை அதிகாரிகளுக்கும் பாதுகாவலர்களுக்கும் உத்வேகமாக இருக்கும் மாரியை நாமும் பாராட்டுவோம்.

Leave Comments

Comments (0)