அர்னாப்க்கு ஜாமீன் சமூக செயற்பாட்டாளர்களுக்கு சிறை! 

/files/Wert-2020-11-21-14:39:24.jpg

அர்னாப்க்கு ஜாமீன் சமூக செயற்பாட்டாளர்களுக்கு சிறை! 

  • 4
  • 0

-T.செல்வமணி


கொலைக் குற்றவாளிகளும், கொள்ளைக்காரர்களும், குற்றமிழைத்த அரசியல்வாதிகளும், வெகு இயல்பாக நம் நாட்டில் நடமாடிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் எழுத்தாளர்களும், பேச்சாளர்களும், பத்திரிகையாளர்களும் எளிதில் வெளிவர முடியாத அளவுக்கு கடினமான வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைக்கப் படுகிறார்கள். ரஜினிகாந்த் அவர்கள் நடித்த சிவாஜி படத்தின் முதல் காட்சியில் சிறைக்குள்ளே இருப்பவரிடம் மற்றொரு கைதி கேள்விகள் கேட்பது போல அமைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு குற்றங்களாக சொல்லி நீ என்ன செய்தாய் என்று கேட்டு இறுதியாக நான் நல்லது செய்தேன் என்று கதாநாயகன் கூறுவார், அப்போ கண்டிப்பா இங்க தான் இருக்கணும் என்று கேள்வி கேட்ட கைதியும் சொல்வார். அப்படி உண்மையாகவே நல்லது செய்யும் செயற்பாட்டாளர்கள் சிறையில்தான் இருக்க வேண்டும் போல...

அர்னாப் கோஸ்வாமி 


இவர் இந்திய அளவில் பெரிய ஊடகவியலாளர் இவரின் வேலை என்னவென்றால் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாகப் பேசுவது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது வெறுப்பை விதைப்பது, சக பத்திரிகையாளர்களை மிரட்டுவது, என ஒரு மோசமான வலதுசாரி சிந்தனை கொண்டவர். இவர் கடந்த 5 தேதி மும்பை காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். காரணம் என்னவென்றால்  ஒருவரை  தற்கொலை செய்ய தூண்டிய தன் பேரில் இவரை கைது செய்துள்ளார்கள். இவர் ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சியில் வேலை பார்த்தார் அதில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, 2018 ரிபப்ளிக் டிவி என்கிற ஒன்றை சொந்தமாக ஆரம்பித்தார். அந்த நிறுவனத்திற்கு கட்டட வடிவமைப்பு செய்து கொடுத்தவர் தான் கான்கார்ட் டிசைன் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் அன்வாய் நாயக் என்பவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவரே கைப்பட எழுதிய கடிதத்தில் கூறியபடி 5.4 கோடி ரூபாய் பணத்தை தராமல் அர்னாப் ஏமாற்றி உள்ளார் எனக்கு வர வேண்டிய பணத்தை  கேட்டதற்கு மிரட்டினார் என்றும் இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி தான் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்டார், அதன் பிறகு அவருடைய தாயும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ரவுடிகளை வீட்டுக்கு அனுப்பி எங்களை மிரட்டினார், தொலைபேசியில் ஒட்டு கேட்டார், அவரின் கைது காத்திருந்தோம் தந்தையின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்று அன்வாய் அவர்களின் மகள்  கண்ணீரோடு செய்தியாளர்களை சந்தித்து உண்மைகளை கூறினார். மும்பை போலீசாரால் அன்வாய் எழுதிய தற்கொலை கடிதமும் வெளியிடப்பட்டது. 


இங்கே நம் தமிழகத்தில் தமிழன் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரிந்த மோசஸ் போதைப்பொருள் வைத்து விற்பனை செய்த கும்பலை அம்பலப்படுத்தினார் என்பதற்காக கொலை செய்யப்பட்டார். அவரை பற்றி எந்த மத்திய ஆட்சியாளரும்  வாய் திறக்கவில்லை ஆனால் நாட்டின் உள்துறை அமைச்சர், மத்திய அமைச்சர்கள் முதல் கொண்டு தற்கொலைக்கு தூண்டிய ஒரு குற்றவாளி கைதை கண்டித்திருக்கிறார்கள். மீண்டும் ஒரு நெருக்கடி நிலை என்றெல்லாம் கூச்சலிடுகிறார்கள். ஆட்சி அதிகாரத்திற்கு ஆதரவாக பொய் பரப்புரை செய்பவரை அந்த ஆட்சி அதிகாரமே  காப்பாற்றத் தானே முயற்சி செய்யும்.  அர்னாப் கைது செய்யப்பட்ட இரண்டு நாட்களில் ஜாமீனில் வெளிவருகிறார் உயர் நீதிமன்றம் மறுத்தும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தனது பிணையை பெற்றுக் கொள்கிறார். இந்த வழக்கு மட்டும் வரிசையில் வராமல் ஏன் அடுத்த நாளே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது அதற்கு யார் காரணம் என்ற என்று மனிதநேய செயற்பாட்டாளர்  துஷ்யந்த் தாவேவின் கேள்விக்கு பதில் ஏதும் கிடைத்ததாக தெரியவில்லை...  ஏன் ஒரு ஆதிவாசிக்கோ, இடதுசாரி எழுத்தாளருக்கோ, செயற்பாட்டாளர்களுக்கோ ஜாமீன் கோரி நேரடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி பெற்றுக்கொள்ள முடியுமா? அர்னாப் போலீஸ் கஸ்டடிக்கு அனுப்பப்படாமல் நீதிமன்றக் அஷ்டதிக்கு அனுப்பப்படுகிறார் ஏன் அப்படி சமூக செயற்பாட்டாளர்களை செய்யலாமே..  சட்டத்தின் முன் அனைவரும் சமம் இல்லை, ஆட்சி அதிகாரத்திற்கு பின்நின்று அநீதிகளை செய்பவர்களுக்கு ஆதரவாக உழைப்பவர்களுக்கு மட்டும் முன்னுரிமையாம், மக்களுக்காகவே குரலெழுப்பும் இவர்களுக்கு காவல் துறை அடக்குமுறையும், கொலை மிரட்டல், சிறைச்சாலையும் தான் கதியாம்! அப்படியானவர்களை பற்றிய சிறிய பதிவு... 

சுதா பரத்வாஜ்


815+ நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளார் .சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 29 ஆண்டுகளாக களமாடும் தொழிற்சங்கவாதி மற்றும் நில ஆக்கிரமிப்புக்கு  எதிரான சமூக உரிமை செயற்பாட்டாளர். சத்தீஸ்கரில் உள்ள மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருக்கிறார் ஐஐடி மாணவராக இருந்த காலகட்டத்திலேயே உத்தரபிரதேசம் மேற்கு வங்காளம் பீகார் போன்ற மாநிலங்களில் தொழிலாளர்களின் ஆபத்தான பணி நிலையை அம்பலப்படுத்தினார். சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சா உடன் இணைந்து செயல்பட்ட போது இவர் ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக தீவிரமாக போராடி, பிலாய் பகுதியில் சுரங்கம் மற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படுவதை உறுதிபடுத்தினார். இப்படி தன் வாழ்வை பல ஆண்டுகளாக மக்களுக்காக அர்ப்பணித்தவர். மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த  பீமா கோரேகான் கலவர வழக்கு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டுக்களின் பேரில் புனே காவல்துறையால் கடந்த 2018 ஆகத்து 25 கைது செய்யப்பட்டார். 

வரவர ராவ் 


730+ நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார். இந்தியாவின் தெலுங்கானாவை சேர்ந்த பொதுவுடமை செயற்பாட்டாளர், நக்சலைட் ஆதரவாளர்கள், கவிஞர், இலக்கிய விமர்சகர் மற்றும் பேச்சாளர் ஆவார். தெலுங்கு இலக்கிய பட்டதாரியான இவர் இளங்கலை மாணவர்களுக்கு சுமார் 40 ஆண்டுகளாக பாடம் கற்பித்து வருகிறார். நவீன தெலுங்கு இலக்கியத்துக்காக 1966ஆம் ஆண்டு   சுர்ஜனா என்ற காலாண்டிதழை  நடத்தினார்.  விரசம் என்னும் புரட்சி எழுத்தாளர்கள் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவராக நக்சலைட் சித்தாந்தங்களை பரப்பி வந்தார். இவரும் கோரேகானில் 

நடந்த கலவர வழக்கு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார்... 

 


ஆனந்த் டெல்டும்டே


 210 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார், ஒரு இந்திய எழுத்தாளரும் அறிவுஜீவிம் மற்றும் சமூக உரிமைப் போராளியுமான இவர் கோவாவின் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்யில் மேலாண்மை பேராசிரியராக உள்ளார். இந்தியாவில் சாதி அமைப்பு பற்றி விரிவாக எழுதியுள்ளார். இவர் தலித் மக்களின் உரிமைக்காக பொதுவெளியில் பேசி வாதாடுபவர், இவரும் கோரோகானில் நடந்த கலவர வழக்கு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார்... கவுதம் நவ்லகா 


210 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார், இவர் மனித உரிமை ஆர்வலர், பத்திரிக்கையாளர், தில்லி மக்கள் ஜனநாயக உரிமை யூனியன் அமைப்பில் இருந்து செயல்பட்டு வருகிறார் , எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி இதழ் ஆசிரியரும் ஆவார் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல மாவோயிஸ்டுகளின் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாக  இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு   இவர் உள்ளிட்ட இடதுசாரி ஆதரவான 5 பேரை மகாராஷ்டிரா காவல்துறை கைது செய்தது. 


ஷர்ஜீல் இமாம் 


85+நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறார் ,சிஐஏ எதிர்ப்பு ஆர்வலரும் JNU மாணவருமான இவர் புதிய சட்டத்திற்கு எதிராக போராட்டத்தின்போது அழற்சி உரைகளை பேசியதாக கூறி தேசத்துரோக வழக்கு பதியப்பட்டு கைது செய் யப்பட்டார். 


உமர் காலித் 


50 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளார். 


டெல்லி ஜாமியா நகரில் பிறந்தார் கடந்த 30 ஆண்டுகளாக அங்கு வசித்து வருகிறார். டெல்லி பல்கலைக்கழகத்தின் கிரோரிமால் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலை பட்டம் பெற்ற அவர் பின்னர் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலை மற்றும் கலாநிதிப் பட்டம் பெற்றார். ஹோஸ் மக்களை பற்றிய ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளார். 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 இவர் கைது செய்யப்படுகிறார், அப்சல்குரு மற்றும்  மக்பூல் பட்  இருவரின் மரண தண்டனைக்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்தினார் என்ற காரணத்திற்காகவும், பிறகு புனேயில் கோரேகான் என்ற பகுதியில் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்திற்கும், பேஷ்வாக்களுக்கும் இடையே நடைபெற்ற போரின் 200 ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசிய உமர் காலித் வன்முறையை தூண்டும் விதமாகப் பேசினார் என்று கூறி கைது செய்யப்பட்டார்... 

 

 

ஸ்டான் ஸ்வாமி 


35 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளார். 


தமிழகத்தை சேர்ந்த 83 வயதான இயேசு சபை பாதிரியா ஸ்டான் சுவாமி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஆதிவாசி மற்றும் தலித் மக்களுக்கு சேவை செய்து வருகிறார். அவரை தேசிய புலனாய்வுத்துறை பீமா கோரேகான் வழக்கிலும் மாவோயிஸ்டுகளுடன் இவருக்கு தொடர்பு உள்ளது என்ற பொய்க் குற்றச்சாட்டையும் சுமத்தி கைது செய்துள்ளது. இது மட்டுமல்லாது கிஷோர் சந்திர வான்ங்கேம், சித்திக் கபன் மற்றும் பல சமூக செயற்பாட்டாளர்கள் இந்தியா முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்தியா முழுவதும் மனித உரிமை ஆர்வலர்கள் சமூக சேவகர் மத்தியில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .பீமா கோரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்த நபர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் எதுவும் அரசு தரப்பில் இல்லை, தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இவர்களை காட்டுவதற்கும் ஆதாரங்கள் இல்லை, உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பவர்களை எச்சரிக்கும் நோக்கில் தான் இது போன்ற குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. என்று  அமெரிக்க பார் அசோசியேஷன் செய்தியை வெளியிட்டுள்ளது... 


அநீதியும் அக்கிரமங்களும் எங்கே இருக்கிறதோ அங்கே புரட்சி மலர்கள் வீறுகொண்டு போக்கும் என்பதைப்போல ஆளும் அரசின் அக்கிரமங்களை எதிர்த்து அடித்தட்டு மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும் போராளிகளை அரசு கைது செய்து கொண்டே இருந்தாலும் போராளிகளின் குரல் போர் முழக்கமாக எப்போதும் ஓங்கி ஒலித்துக் கொண்டே தான் இருக்கும். அவர்களுக்கு உறுதுணையாக களத்தில் நிற்க வேண்டியது மனிதம் போற்றும் ஒவ்வொரு மனிதனின் கடமை அதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்வோம்...


Leave Comments

Comments (0)