எழுவர் விடுதலை: ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது- தமிழக அரசு

/files/detail1.png

எழுவர் விடுதலை: ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது- தமிழக அரசு

  • 0
  • 0

 


ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்கமுடியாது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, கடந்த 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டபோது குண்டு வைத்து கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. 7 பேரும், 28 ஆண்டுகளாகச்  சிறைத் தண்டனைப் பெற்று வரும் நிலையில், ‘அரசியல் சாசன பிரிவு 161-ன் கீழ், 7 பேரையும் விடுதலை செய்யும் விஷயத்தில் ஆளுநருக்கு உரிமை உள்ளது' என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி, தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், 7 பேரின் விடுதலைக்கான தீர்மானத்தை நிறைவேற்றி அதைத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்குப் பரிந்துரை செய்து அனுப்பிவைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், ஆளுநர் அந்தத் தீர்மானத்தின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இதனால் நளினி ஏழு பேரையும் விரைந்து விடுதலை செய்யவேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதத்தில் அரசுக்கு மனு அளித்தார். அந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 19) நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை அனுப்பிய தீர்மானத்தின் நிலை குறித்து ஆளுநரிடம் தமிழக அரசு கேட்டறிய வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அரசு தரப்பில், `இந்திய அரசியலமைப்பு சட்டம் 361படி, தமிழக அரசு அனுப்பிய தீர்மானத்தின் மேல் நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave Comments

Comments (0)