மத்திய அரசின் தமிழக பணியிடங்களில் தமிழர்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் - மே 17 இயக்கம்

/files/detail1.png

மத்திய அரசின் தமிழக பணியிடங்களில் தமிழர்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் - மே 17 இயக்கம்

  • 0
  • 0

 

மதுரை, திருச்சி கோட்ட ரயில்வே பணி காலியிடங்களை வட இந்தியர்களைக் கொண்டு நிரப்பிய தென்னக ரயில்வேவைக் கண்டித்து மே 17 இயக்கம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

இதுதொடர்பாக இன்று (செப்டம்பர் 20) வெளியிடப்பட்ட அறிக்கையில், ”தென்னக ரயில்வேயில் மதுரை மற்றும் திருச்சி கோட்டங்களில் காலியாக இருந்த உதவியாளர் மற்றும் இருப்புப்பாதை தொடர்பான பணியிடங்களுக்கான குரூப் டி தேர்வு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ரயில்வே பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தேர்வு நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு பல்வேறு கட்டங்களாகப் பணி நியமன ஆணை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இப்படிப் பணி நியமனம் பெற்றவர்களில் 90% மேற்பட்டோர் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் மிகச் சொற்ப அளவிலேயே தமிழர்கள் பணி ஆணை பெற்றுள்ளார்கள் என்ற அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதுரை கோட்டத்தில், 572 பணியிடங்களில் வடமாநிலத்தவர்களுக்கு அடுத்தபடியாக கேரளாவைச் சேர்ந்தவர்களுக்கும், 20க்கும் குறைவான தமிழர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது. திருச்சி கோட்டத்தில், 538 பணியிடங்களில் 475 பேர் வெளிமாநிலத்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போல் சேலம் கோட்டத்தில், 53 தமிழர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தென்னக ரயில்வேயில் 90% மேற்பட்ட காலி பணியிடங்களை வடமாநிலத்தவர்களைக் கொண்டு நிரப்பிவிட்டு, தமிழர்களை முற்றிலும் புறக்கணித்துள்ளது அம்பலமாகியுள்ளது.

மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்துக் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்களை மே பதினேழு இயக்கம் முன்னெடுத்துள்ளது. மேலும், மத்திய அரசின் தமிழக காலி பணியிடங்களைத் தமிழர்களைக் கொண்டே நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையையும் முதன்மைப்படுத்தி வந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் பொன்மலை ரயில்வே பணிநியமனத்தில் வடமாநிலத்தவர் ஆதிக்கத்தைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்பிற்குப் பின்னர், தமிழக வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தென்னக ரயில்வே உறுதியளித்துள்ளதை இந்நேரத்தில் நாம் நினைவுகூற வேண்டும்,

தமிழர்கள் அதிகளவில் விண்ணப்பிக்காததே காரணம் என்று ரயில்வே துறை விளக்கமளித்தாலும், காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்புகள் தமிழகத்தில் வெளியிடப்படாமல் இருந்ததும், வடமாநிலங்களில் அதிகளவில் விளம்பரம் செய்ததும், உயர் அதிகாரிகள் முதற்கொண்டு மத்திய அரசின் ஊழியர்கள் வழியாகத் தகவல்கள் பரிமாறப்பட்டு, வேலையில்லாத தமிழர்கள் அதிகளவில் இருக்கும் நிலையில், போட்டித்தேர்வில் வடமாநிலத்தவர்கள் அதிகளவில் பங்கேற்கும்படியாக ரயில்வே தேர்வாணையம் பார்த்துக்கொண்டது என்பதே உண்மை.

இரயில்வே தேர்வாணையத்தின் இதுபோன்ற நடவடிக்கைகளை மே பதினேழு இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழர்களை முற்றிலுமாக புறக்கணித்த கடந்தாண்டு தேர்வை ரத்து செய்து, வழங்கப்பட்ட பணி நியமனங்களைத் திரும்பப் பெற்று, முறையான அறிவிப்புகள் வெளியிட்டு மீண்டும் தேர்வை நடத்த வேண்டும் என்று கோருகிறது. தமிழக பணிகளில் தமிழர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்ற ஏற்கனவே உறுதியளித்ததைத் தென்னக ரயில்வே கடைப்பிடிக்க வேண்டும். மத்திய அரசின் தமிழக பணியிடங்களில் தமிழர்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் என்பதைத் தமிழக அரசும், நாடாளுமன்றம் உறுதி செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave Comments

Comments (0)