விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் இனி ‘டாக்டர்’ திருமாவளவன்

/files/15 2020-05-27 22:34:14.jpg

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் இனி ‘டாக்டர்’ திருமாவளவன்

  • 0
  • 0

தனது அயராத அரசியல் பணிகளுக்கு இடையிலும், ஆய்வுப் பணியை தொடர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “மீனாட்சிபுரத்தில் நடந்த மதமாற்றம்; பாதிக்கப்பட்டவர்கள் குறித்தான ஆய்வு” என்ற தலைப்பில் ஆய்வு செய்து, சென்ற வாரம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

1981ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமமான மீனாட்சிபுரத்தில், 180க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இஸ்லாம் மதத்தை தழுவுவதாக அறிவித்தனர். மதம் மாறுவதாக கூறிய அனைவரும் தலித்களாக இருந்ததால், இது நாடு முழுதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
இந்த சம்பவங்கள் நடந்து 37 வருடங்கள் கழித்து, அவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறியதால் இன்று சுயமரியாதையும் பொருளாதார விடுதலையும் பெற்றுள்ளதாக தனது ஆய்வு முடிவில் திருமாவளவன் கூறியுள்ளார்.

தலித்கள் மீது தொடுக்கப்பட்ட அடக்குமுறையும், ஒடுக்குதலும், பாகுபாடுமே அவர்கள் இஸ்லாம் மதத்தை தழுவியதற்கு முக்கிய காரனம் என கூறும் திருமாவளவன், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் ஒருவர் ‘உயர் ஜாதி’ பெண்ணை காதலித்து கேரளாவிற்கு கூட்டிச் சென்று திருமனம் செய்து கொண்டார். இதன் பிறகு ஊரில் உள்ள தலித்கள் மீதான அடக்குமுறை அதிகரித்தது. இந்நிலையில், திருமனம் செய்து கொண்ட இருவரும் மீனாட்சிபுரத்திற்கு திரும்பி வந்ததும், அந்த இளைஞரை ‘உயர் ஜாதியை’ சேர்ந்த ஆண்கள் கடுமையாக தாக்கினர். இந்த நிகழ்வே தலித்களுக்கு தங்கள் சுயமரியாதையை தேடி செல்வதற்கான தூண்டுதலாக அமைந்தது என தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.

இனிமேலாவது தங்களுக்கு சுய மரியாதை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பாதிக்கப்பட்ட தலித் இளைஞரோடு சேர்ந்து 180-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இஸ்லாம் மதத்தை தழுவினர். இந்த மதமாற்றம் அவர்களுக்கு வசதி வாய்ப்புகளை தராவிட்டாலும், குறைந்தபட்சம் பஜாரில் ஒரு உணவகமோ, டீக்கடையோ தொடங்குவதற்கும் வளைகுடா நாட்டிற்கு சென்று வேலைவாய்ப்பு தேடுவதற்கும் உறுதியளித்தது. இதனால் அவர்களுக்கு பொருளாதார அளவில் விடுதலை கிடைத்ததோடு தாங்கள் இவ்வுளவு காலம் எதிர்பார்த்த சுயமரியாதையும் கிடைத்துள்ளதாக திருமாவளவன் கூறுகிறார். 
இவர்களின் மதமாற்றத்தில் எந்தவொரு இஸ்லாமிய இயக்கங்களுக்கோ அல்லது அரசியல் கட்சிகளுக்கோ எந்தவித பங்கும் கிடையாது என்பதை அழுத்தி கூறுகிறார் திருமாவளவன்.

இஸ்லாம் மதத்திற்கு மாறியதும் சில குடும்பத்தினர் வேலைவாய்ப்பை தேடி மீனாட்சிபுரத்தை விட்டு வெளியேறினாலும் பலர் இன்றுவரை அக்கிராமத்திலேயே வசித்து வருகிறார்கள். தனது முனைவர் பட்ட ஆய்விற்காக திருமாவளவன் அக்குடும்பங்களை நேரடியாகச் சந்தித்து உரையாடி ஆய்வுக்கான பல தகவல்களை சேகரித்துள்ளார்.

Leave Comments

Comments (0)