மீனவ நண்பர்களுடன் ஒரு நாள்

/files/17 2020-05-29 18:51:52.jpg

மீனவ நண்பர்களுடன் ஒரு நாள்

  • 1
  • 0

படிமை வகுப்புகளின் ஒரு பகுதியாக, விகடன் குழுமத்தில் பணிபுரியும் மூத்த பத்திரிகையாளர் திரு. நீலகண்டன் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தலைப்பைக் கொடுத்து, கட்டுரை எழுதச் சொல்லியிருந்தார். அதில் எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு ‘காசிமேடு மீனவர்கள்’.

இவ்வருடம் மீன்பிடி தடைக் காலம் ஜூன் பதினான்கு இரவுடன் முடிவடைந்தது. அதற்கு ஒரு நாள் முன்னதாக, ஜூன் பதிமூன்று அன்று பரபரப்பாக இருந்த காசிமேடு துறைமுகத்தில் பத்திற்கும் மேற்பட்ட மீனவ நண்பர்களிடம் கலந்துரையாடியதின் தொகுப்பு தான் இக்கட்டுரை.

சென்னைக்குள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மட்டும் தான் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல முடியும். மீனவர்கள் ‘பாயின்ட்’ கணக்கில் தூரத்தைச் சொல்கிறார்கள். அதன்படி அந்தமான் எண்பத்தி ஐந்தாவது பாய்ண்ட்டில் இருக்கிறது. கடலுக்குள் தெற்கில் காரைக்கால், பாண்டிசேரி, மேற்கில் விசாகபட்டினம், காக்கிநாடா மற்றும் தென்கிழக்கில் அந்தமானை நோக்கி 3௦௦ கடல்மைல் வரைக்கும் வழக்கமாக செல்கிறார்கள். எந்த துறைமுகத்திலிருந்து ஒரு படகு கிளம்புகிறதோ, அதே துறைமுகத்திற்கு தான் திரும்பி வரவேண்டும். இன்ஜின் கோளாறு மற்றும் எதிர்பாராத வேறு பிரச்சனை என்றால் தான் மற்ற துறைமுகங்களில் ஒதுங்குகிறார்கள். இது போக, கிளம்பிய துறைமுகத்தில் மட்டும் தான் பிடித்த மீன்களை விற்க முடியும் என்கிற விதிமுறையும் இருக்கிறது.

‘கில்நெட்’ படகுகளில் எட்டு முதல் பன்னிரண்டு பேர் வரைப் போகிறார்கள். மடிவலை (Trawling) படகுகளில் அதைவிட கம்மியானவர்கள் போகிறார்கள். மடிவலையைச் செங்குத்தாக கடலுக்குள் விடுவார்கள். அந்த வழியே போகும் அத்தனை சின்னமீன் கூட்டங்களும் சிக்கும். இவ்வகை வலைகளால் மீன்வளம் சீக்கிரம் குறையும் என்கிற புகார் இருக்கிறது.

இது தவிர நீள்தூண்டில் போட்டும் மீன் பிடிப்பார்கள். 7 மைல் நீளத்துக்கு, 1௦ மீட்டருக்கு ஒரு தூண்டில் என்றிருக்கும். அந்தப் படகில் செல்பவர்கள் ஒவ்வொரு நாளும் இருமுறை மீன் பிடிக்கிறார்கள். இதுபோக சிறிய மோட்டார் படகுகள் மற்றும் கட்டுமரங்களிலும் சிலர் போகிறார்கள். இவற்றில் சென்றால் ஒரே நாளில் திரும்ப வேண்டும். இவைத் தவிர சற்று பெரிய அளவிலான பிஷிங் வெசல்ஸும் உண்டு.

பொதுவாக இரவு பத்து, பதினோரு மணிக்கு கடலுக்கு கிளம்புகிறார்கள். சில சமயங்களில் காலை ஐந்து மணிக்கும் கிளம்புகிறார்கள். மீனவர்கள் சங்கத்தில் மாலை மூன்றரை மணிக்கு வலையை கடலுக்குள் விரிக்க முடிவுச் செய்துளார்கள். அதன்படி எல்லாப் படகுகளும் மூன்றரை மணியொட்டி வலையை விரிக்க ஆரம்பிப்பார்கள். ஆறு மணி வரைக்கும் விரிக்க வேண்டியிருக்கும். நேரத்தைப் பொருத்து என்ன வகையான மீன்கள் சிக்கும் என்பது மாறுபடும். விரிக்கப்பட்ட வலையை மீண்டும் இரவையொட்டி வின்ச் முலம் இழுக்க ஆரம்பித்தால், மொத்தமாக இழுக்க எட்டிலிருந்து பத்து மணிநேரம் ஆகும். வின்ச் முலம் வலையை இழுப்பதற்கு ஸ்டீல் மற்றும் பிளாஸ்டிக் கலவையிலான கயிறைப் பயன்படுத்துகிறார்கள். பெரிய மீன்களான சூர, கேர, கோலா, வஞ்சரம், சுறா எல்லாம் கில்நெட்டில் சிக்கும். பொடி மீன்களும் இறாலும் மடிவலையில் சிக்கும்.

வலையை இழுக்க இழுக்க விழும் மீன்களை ஐஸ் கட்டியோடு அப்பப்பவே வைத்து விடுகிறார்கள். வலையை இழுக்கும் போதே சமைத்து சாப்பிட்டு விடுவார்கள். இழுத்த வலையில் ஏதும் கிழிசல் இருந்தாலோ சிக்கல் இருந்தாலோ, அதைத் தைத்து விட்டு மறுபடியும் அடுத்தநாள் மாலை மூன்றரை மணிக்கு விரிக்க ஆரம்பிக்கிறார்கள்.

பிடிக்கும் மீன்களை கேன்களில் ஏற்கனவே இருக்கும் ஐஸ் கட்டிகளின் மேல் போடுகிறார்கள். அதனோடு பம்ப் முலம் எடுக்கப்பட்ட உப்புநீரையும் ஊற்றி வைத்துவிட்டால், பத்து நாட்கள் ஆனாலும் மீன் கெடாமல் இருக்கும். கேன்களிலிருக்கும் ஐஸ்கட்டி உருக உருக, அதை மாற்ற வேண்டும். அந்த கேன்களைப் படகின் அடித்தளத்தில் வைத்து விடுகிறார்கள். ஒரு கேன் மீன், நான்கு கூடை அளவு என்று கணக்கு.

பொதுவாக ‘கில்நெட்’ வலை ஆறேழு கடல் மைல் நீளத்துக்கு இருக்கும். ஒரு தடவை கடலுக்குச் சென்றால், கில்நெட் படகுகளில் 25-3௦ டன் வரை மீன் பிடிக்கிறார்கள். அதற்கு பத்து முதல் இருபத்தைந்து நாட்கள் ஆகலாம்.

இரண்டு வருடங்களுக்கு முன் இங்கேயே மீன் விற்பனைக் கூடம் அமைக்கப்பட்டது. அதற்கு முன்னர் விசைப்படகுகளில் வரும் மீன்களைக் கட்டுமரங்களில் ஏற்றி, தள்ளிப் போய் விற்பார்கள். இப்போது இங்கேயே விற்பனையும் நடக்கிறது, ஆனால் இப்போதும் ‘கட்டுமரம் விடும் தொழிலாளிகள் சங்கம்’ இருக்கிறது. இப்போது அச்சங்க உறுப்பினர்கள் கரையில் இன்னப்பிற வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

ஒவ்வொரு முறை படகு கரைக்கு வந்த பிறகும், மீன்களை இறக்கி விட்டு இன்ஜினை ‘கட்டுமரம் விடும் தொழிலாளிகள்’ சரி பார்க்கிறார்கள். எல்லாம் சரியென்று உறுதி செய்தப்பின், கடலுக்கு மறுபடியும் படகு கிளம்புவதற்கு முன் 40,000 ருபாய் பெருமான ஐஸை ஏற்றுகிறார்கள். டேங்கர் லாரி முலம் 4000-5000 லிட்டர் டீசல் நிரப்புகிறார்கள். அதுபோக மெட்ரோ நீர் 5000 லிட்டர் நிரப்புகிறார்கள். கடைசி சில வருடங்களாக குடிக்க 3௦ தண்ணீர் கேன்களையும் கொண்டுச் செல்கிறார்கள். சமைப்பதற்கு 2௦,௦௦௦ ருபாய் பெருமான பொருட்களை எடுத்துச் செல்கிறார்கள்.

எல்லாம் சேர்த்து ஒரு முறை கடலுக்கு செல்வதற்கு ஆகும் செலவே நான்கு லட்சம் வரையாகிறது. திரும்பி வந்து சுமார் பத்து லட்சத்திற்கு மீன்களை விற்றால் தான் ஒரு மீனவருக்கு 10,000-12,000 கிடைக்கிறது. ஒரு வருடத்திற்கு ஒரு படகு ஐம்பது தடவை கடலுக்கு சென்றால் தான் கணிசமான லாபம் கிடைக்கும்.

ஒரு படகைப் புதிதாக தயார் செய்து, கடலில் செலுத்த 1.25 கோடி வரையாகிறது. இந்த முதலீட்டை திரும்ப எடுக்க உத்தேசமாக ஒன்றரை முதல் இரண்டு வருடங்கள் வரை ஆகிறது. ஒரு டன் கில்நெட் மற்றும் அதற்கு தேவையான கயிறு வாங்க 5 லட்சம் ஆகிறது. ஒரு தடவை கடலில் செலுத்த 5 டன் வலை தேவைப்படும். ஒரு வலையை 2 வருடங்கள் வரைப் பயன்படுத்த முடிகிறது. மடிவலையை ‘கண்ணி’ வைத்து அளக்கிறார்கள். அதில் 1௦,௦௦௦ கண்ணி வரை ஒருமுறை பயன்படுத்துகிறார்கள்.

படகுகளில் Leyland 412 (கில்நெட்) மற்றும் Eicher 680 (மடிவலை) இன்ஜின்களை பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். சமீபத்தில் VOLVO மோட்டார் பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால் அது எல்லோரையும் ஈர்க்கவில்லை. இடையில் சைனா அதிவேக மோட்டார் வந்தது. ஆனால் அதைச் சங்கம் தடைச் செய்து விட்டது.

படகு உரிமையாளரும், மொத்தவிலை மீன் வியாபாரிகளும் கலந்தாலோசித்து மீன்களின் விலையை நிர்ணயிக்கிறார்கள். படகு உரிமையாளர்கள் மீனவர்களுக்கு சம்பளம் கொடுப்பதில்லை. மாறாக பிடித்த மீன்களின் முலம் கிடைக்கும் தொகையில், செலவு போக உரிமையாளருக்கு 5௦%, மீனவர்களுக்கு 5௦%. அதை மீனவர்கள் அவர்களுக்குள் பிரித்துக் கொள்ள வேண்டும். படகு மற்றும் வலைப் பராமரிப்பு செலவு உரிமையாளரின் பொறுப்பு. ஒரு மீனவர் எந்த படகில் வேண்டுமானாலும் செல்லலாம். அவர்களில் அதிக அனுபவம் உள்ளவர் கேப்டன்.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மொத்தம் 5 சங்கங்கள் இருக்கிறது. அந்த 5 சங்கங்களும் செல்வாக்கு மிக்கது, அவர்களின் விதிமுறைகளுக்கு எல்லோரும் கட்டுப்படும் வழக்கமிருக்கிறது.

அங்கிருக்கும் நிறைய படகு உரிமையாளர்கள் மீனவர்களாக இருந்து முன்னேறியவர்களே. பணம் இருக்கிறதென்று படகை வாங்கி, இதை தொழில்முறையாக தெரிந்துக் கொள்ளாமல் செய்ய வந்த பலரும் நஷ்டபட்டு திரும்பி சென்றுவிட்டார்கள்.

இப்போது மீனவர்களாகவும், படகு உரிமையாளர்களாகவும் இருப்பவர்களிள் சிலரின் தந்தைகளும் மீனவர்களாக இருந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் சிறுவயதிலேயே கடலுக்கு சென்றிருக்கிறார்கள். மற்றவர்களில் பெரும்பாலானோர் முதலில் கரையில் வேலைக்கு சேர்ந்து, பின்னர் கடலுக்கு சென்றிருக்கிறார்கள்.

சிறுவயதில் தனது அப்பாவுடன் கட்டுமரத்தில் கடலுக்கு சென்ற ஒருவரைச் சந்தித்தேன். படிப்படியாக முன்னேறிய அவர், தற்போது சொந்தமாக மூன்று விசைப்படகுகளை வைத்திருக்கிறார். மூன்று படகுகளுக்கு உரிமையாளரான பின்னரும் டிரைவர் இல்லையென்றால் கடலுக்கு செல்கிறார். ஆனால் அவருக்குப் பின் அவர் குடும்பத்தில் யாரும் மீன்பிடிக்க வரவில்லை.

அவரது அப்பா காலத்தில் எல்லாமுமே உடல் உழைப்பால் தான் செய்ய வேண்டியிருந்ததாகவும், இப்போது மோட்டார் முலம் உடலுழைப்பு கம்மியானது வசதியாக இருக்கிறதென்றும் குறிப்பிட்டார். மேலும் அந்த காலத்தில் பல நாட்கள் கடலுக்கு போவது சாத்தியப்படவில்லை என்றார்.

இப்போதைய டெக்னாலஜி மீனவர்களுக்கு பலவகைகளில் கைக்கொடுக்கிறது. இகோசவுண்ட் முலம் ஆழம், என்னமாதிரியான தரை என்பதையறிந்து அதற்கு தகுந்த மாதிரி வலையை விரிக்கிறார்கள். ஜிபிஎஸ் முலம் இருக்கும் இடம் தெரிகிறது. அதுபோக கரையையும் கடற்படையையும் தொடர்புக் கொள்ள வயர்லெஸ் வாக்கி டாக்கி இருக்கிறது. ஹைட்ராலிக் கியர் வந்துவிட்டது. இதுபோக கரையில் இருந்து 5 மணிநேரம் பயணிக்கும் வரை போன் சிக்னலும் கிடைக்குமாம்.

கரையிலிருந்து கிளம்பும் படகு, பல நாட்கள் மீன் பிடித்துவிட்டு மறுபடியும் கரைக்கு வந்தபிறகு தான் என்ஜினை ஆஃப் பண்ண முடியும். ஒரே இடத்தில் ரொம்ப நேரம் நிற்க நேரிட்டாலும், என்ஜினை ஆஃப் பண்ண மாட்டார்கள். என்ஜின் கோளாறானால் மட்டும் தான் நங்குரத்தை இறக்கிவிட்டு என்ஜினை ஆஃப் செய்து வேலைப் பார்ப்பார்கள்.

கவுண்டமணி செந்தில் காமெடி ஒன்றில், “நடு கடல்ல ஷிப் நின்னா, அத எறங்கி தள்ளுறது தான் வேல.” என்றொரு வசனம் வரும். அது மீனவர்களைப் பொறுத்தவரை உண்மைத் தான். பேன் பிளேடில் ஆழி சிக்கிக் கொண்டால், மீனவர்கள் நடுகடலில் குதித்து, கரண்டியால் சுரண்டி அவற்றை நீக்கவேண்டும்.

கடலுக்கு செல்லும் மீனவர்கள் அவரவர்களின் இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொள்கிறார்கள். எல்லா சமயத்தவரும், பல சமுதாயங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக தான் கடலுக்கு செல்கிறார்கள். கடலுக்கு செல்ல பெண்களுக்கு அனுமதியில்லை. மீன்கள் விற்பனையில் தான் அவர்கள் பங்கு பெறுகிறார்கள். பல வருடங்களாக இந்த விதிமுறை பின்பற்றப்படுகிறது.

வலையைப் போட்டபின், கடலுள் வலையிருக்கும் நேரத்தில் தூங்குகிறார்கள், பேசுகிறார்கள். நிறைய மீன்கள் கிடைக்கும் சமயங்களில் பாடவும் ஆடவும் செய்கிறார்கள். கடலுக்குள் போனபின்பு குறிப்பிட்ட நேரம் தூங்குவதோ, நீண்ட நேரம் தூங்குவதோ சாத்தியமில்லை. அத்தனை நாட்களும் 2 மணிநேரம், 3 மணிநேரம் என்று குட்டி குட்டி தூக்கம் தான் சாத்தியம். அப்படி மொத்தமாக ஒரு நாளில் 6 மணிநேரம் தூங்குவதே பெரிது.

கடலுக்குள் செல்லும் மீனவர்கள் பெரும்பாலும் சாதம், காய்கறி மற்றும் மீனைத் தான் சிலண்டர் வைத்து சமைத்து சாப்பிடுகிறார்கள். அது தவிர சப்பாத்தி, நூடில்சும் அவ்வபோது சாப்பிடுகிறார்கள். அவர்களிலேயே ஒருவர் சமைக்கிறார்.

எல்லோர் உடம்பிலும் இருக்கும் பித்தம், கடலில் சென்ற சில மணிநேரங்களில் அலைகளின் தள்ளாட்டத்தால் வெளியே வந்துவிடுகிறது. பல வருடங்களாக செல்லும் மீனவர்கள் கூட சில மாதங்கள் இடைவெளிக்கு பின்னர் கடலுக்கு செல்லும்போது கொஞ்ச நேரம் தலைச் சுற்றி, வாந்தி முலம் பித்தம் வெளியேறுமாம்.

கடைசியாக ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மானிய விலையில் சில படகுகள் வந்திருக்கின்றன. அவற்றில் மட்டும் திரைமறைவு கழிவறை இருக்கிறது. அதன் அடிப்பகுதி திறந்திருக்கும். மற்றப் படகுகளில் எல்லாம் படகின் விளிம்பு தான் கழிப்பிடம்.

‘கடலுக்குள் மதுபானம் யாரும் குடிக்க மாட்டோம். ஆனால் இப்போது சில இளைஞர்கள் குடிப்பதாக கேள்விப் படும்போது டிஸ்டர்ப் ஆகிறது’ என்று வயதான மீனவர் ஒருவர் சொன்னார்.

இங்கிருந்து கிளம்பும் படகுகள் பெரும்பாலும் இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்படுவதில்லை. நாகப்பட்டினம் மற்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் தான் அவ்வகையில் பெரிதும் பாதிப்புக்குளாகிறார்கள். சில மீனவர்கள் ‘இலங்கை கடற்படை மடிவலைப் படகுகளை மட்டும் தான் பிடிக்கும், கில்நெட்டை விட்டு விடும். ஏனென்றால் இலங்கையில் மடிவலை தடைச் செய்யப்பட்டுள்ளது’ என கருத்துத் தெரிவித்தார்கள்.

ஒரு மீனவர் இலங்கை கடற்படையினரிடம் பிடிப்பட்ட அனுபவத்தைப் பின்வருமாறு பகிர்ந்தார். “கன்னியாகுமாரி தாண்டி கொஞ்ச தூரத்தில் போய்கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படை கப்பல் விசில் அடித்தவாறு கிட்ட வந்தார்கள். வந்தவுடன் நான்கு பேர் எங்கள் மரபடகில் ஏறி, ப்ரூஃப் கேட்டார்கள். காண்பித்த பிறகு எல்லோரையும் முட்டிப்போட வைத்து, கைகளை தலைக்கு பின்னாடி வைக்கச் சொன்னார்கள். துப்பாக்கி ஏந்தியவாறு மீன் கேன்கள், இன்ஜின், ட்ரைவர் அறை எல்லாவற்றையும் சோதித்தார்கள். அப்போது பலமான காற்றும் மழையும் அடிக்க ஆரம்பித்தது. அதனால் எங்கள் மரபடகும் அவர்கள் ஷிப்பும் மோதியதில் எங்கள் படகு கீறி, உள்ளே தண்ணீர் வர ஆரம்பித்தது. உடனே எங்களை விட்டு விட்டார்கள், எங்கள் படகு சரியாக வேளாங்கண்ணி முன் நின்றுவிட்டது. மாதாவை வேண்டிவிட்டு, மறுபடியும் ஸ்டார்ட் செய்து, நாகப்பட்டினம் கரைக்கு ஒரு வழியாக சென்றோம். அங்கே 3 லட்சம் செலவு செய்து படகைச் சரிசெய்த பின் கடைசியாக சென்னை வந்தோம்.”

“நாங்க பரவாயில்லை. நாகப்பட்டினம், ராமேஸ்வரம் மீனவங்க தான் ரொம்ப துணிச்சலானவங்க. ராமேஸ்வரத்தில் இருந்து முக்கால் மணிநேரத்தில் இலங்கை எல்லை வந்துவிடும்.” என்றும் அவர் சொன்னார்.

இந்திய கடற்படை, மீனவர்களை எச்சரிப்பதோ படகை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளிலோ பெரிதாக ஈடுபடுவதில்லை. ஏதேனும் தவறு கண்டுபிடிக்கப்பட்டால், முதலில் டிரைவருக்கு அடி. அப்புறம் மற்றவர்களுக்கும் அடி விழுகிறது.

‘மழையை வேண்டுமானால் வானிலை ஆய்வு மையம் கணிக்கலாம். ஆனால் புயலைப் பொறுத்தவரை, முதலில் மீனுக்கு தெரியும், அடுத்து மீனவனுக்கு தான் தெரியும். கடைசியாக தான் அவர்களுக்கு தெரியும்.’ என்றார் ஒரு மீனவர்.

வானிலை ஆய்வு மையம் தொடர்பாகவும், மீன்வள துறை தொடர்பாகவும் பல மீனவர்கள் ஒரு கருத்தை முன்வைத்தனர். ‘விவசாய நலத் துறையில் கூட ஒரு விவசாயி இருக்கிறான். ஆனால் நாங்கள் சம்பந்தப்பட்ட இந்த இரண்டு துறைகளிலும் மீனவர்களுக்கு இடமேயில்லை!’ என்பது தானது. வானிலை ஆராய்ச்சி மையம் இன்றளவு கூட கடல் நீரோட்டம் பற்றிய தினசரி நிலவரம் சொல்வதில்லை.

“கடலில் இருக்கும்போது புயல் வந்தால், பாதுகாப்பு தான் முக்கியம். அதனால் புயலின் போக்கிற்கு படகை விட்டுவிடுவோம். புயலில் சமையல் பொருட்கள் எல்லாம் வீணாகிவிடும். சில சமயங்களில் மூத்திரத்தை மட்டும் குடித்துவிட்டு சில நாட்கள் கழித்த கதையெல்லாம் நிறைய. ஏனென்றால் கரையிலும் அதே புயல் தான் வரும், அங்கு படகு சேதமாகும். பக்கத்தில் துறைமுகம் இருக்குமானால் அங்கேச் செல்வோம். விவசாயிக்கு கூட இயற்கை சீற்றத்தால், அவனது பயிர் தான் போகும். ஆனால் மீனவனுக்கு தான் உயிர் போகும். இப்போது வாக்கி டாக்கி முலம் புயலினால் சேதமாகும் எண்ணிக்கை கம்மியாகி விட்டது.” என புயல் சார்ந்த தனது அனுபவத்தை ஒரு மீனவர் பகிர்ந்துக் கொண்டார்.

ஒருமனதாக அத்தனை மீனவர்களும் ஒத்துக்கொண்ட ஒரு விசயம் - டீசல் விலை உயர்வு தான் தற்போதைய அவர்களின் தலையாய பிரச்சனை. ஒருமுறை சென்றுவர 4000-5000 லிட்டர் தேவைப்படுகிறது. ஒரு மாதத்திற்கு மார்கெட் விலையிலிருந்து ஒன்பது ருபாய் குறைத்து 1500 லிட்டர் மட்டும் தருகிறார்கள். அதுவும் எல்லா படகுகளுக்கும் முறையாக கிடைப்பதில்லை.

சமீப காலங்களில் நிறைய மூத்த மீனவர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக வேறு வேலைக்கு செல்கிறார்கள். முன்னர் மீன்பிடி தடைக் காலத்தில் மட்டும் வேறு வேலைக்கு சென்றதுண்டு. ஆனால் இப்போது மற்ற மாதங்களில் கூட செல்கின்றனர். மீனவர்களின் மனைவிகள் பெரும்பாலானோர் ஏதேனும் ஒரு வேலைக்குச் செல்கிறார்கள்.

இந்த துயர்நிலைக்கு பல காரணங்கள் இருக்கிறது. வர்தா புயல் தான் ஆரம்ப புள்ளி, அதையொட்டிய மீன்பிடி சீசன் கைகொடுக்கவில்லை. அடுத்து எண்ணூர் எண்ணெய் கசிவினால் மீன்களின் விலை வீழ்ச்சியடைந்தது. இடையில் ஓக்கிப் புயலும் பெருத்த சேதம் விளைவித்தது. இதையெல்லாம் விட ஒரே வருடத்தில் பத்து ரூபாய்க்கு மேல் ஏறிய டீசல் விலை தான் முக்கிய பிரச்சனை. கடந்த இருபது ஆண்டுகளில், 2017ம் ஆண்டளவு சென்னை மீனவர்கள் கஷ்டப் பட்டதில்லை. ஆனால் மீனவர்கள் இவ்வளவு கஷ்டத்தில் இருப்பது வெளியே பெரிதாக யாருக்கும் தெரியவில்லை.

“எண்ணெய் கசிந்தது கரையையொட்டி, நாங்கள் மீன்களைப் பிடிப்பதோ கரையிலிருந்து பல மைல்கள் தாண்டி. உண்மையில் எண்ணூர் எண்ணெய் கசிவால் மீன்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. அதுபோக, அந்த கப்பல் 13௦ கோடி நஷ்டஈடு கொடுத்திருக்கிறது. எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டது அந்த கிராமத்து மக்களும் மீனவர்களும் தான். எங்களுக்கு தலைக்கு ஒரு லட்சம் கொடுத்தால் கூட 1௦ கோடி தான் வரும். ஆனால் எங்களுக்கு கொடுக்கப்பட்டதோ வெறும் 35,000 ருபாய்.” என்று அந்த சம்பவத்தை ஒரு மீனவர் நினைவுக் கூர்ந்தார்.

பல சமயங்களில் இழப்பீடு சரியாக கிடைப்பதில்லை. வறுமையின் காரணமாக மானிய விலையில் டீசல் கிடைக்கும் கார்டைக் கூட சில படகு உரிமையாளர்கள் வெளியே அடகு வைத்து விடுகிறார்கள்.

ஒரு மீனவர் மனவேதனையுடன் “மீனவனுக்கு சுத்திலும் எதிரிங்க இருக்காங்க. ஒக்கிப் புயல்ல காணாம போன மீனவனப் பத்தி யாரும் கவலப்படல. ஒரு மீனவன் காணாம போனா, இன்னொரு மீனவன் தான் தேட வேண்டிருக்கு.” என்றார்.

மீன்பிடி தடைக்காலம் முடிகிறதென்றால், மொத்த படகுகளும் தயாராகிக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் தடைக்காலம் முடிய ஒரே ஒருநாள் மட்டும் இருக்கும் நேரத்தில் (ஜூன் 13) பாதி படகுகளுக்கு மேல் தயாராகவில்லை. இதில் இன்னும் துயரம் என்னவென்றால், நிறைய படகு உரிமையாளர்கள் தங்கள் படகுகளை விற்க தயாராக இருக்கும் போதும், வாங்க தான் ஆளில்லை.

மாநிலம் முழுதும் வாகனங்களுக்கு ஒரே பதிவெண் கொடுக்கிறார்கள். ஆனால் படகுகளுக்கு ஒவ்வொரு துறைமுகத்துக்கும் ஒரு பதிவெண் கொடுக்கும் முறை இன்றும் இருக்கிறது. “நான் நாகப்பட்டினத்தில் இருந்து ஒரு படகு வாங்கி வந்தால், இங்கு வந்தபிறகு புதிதாக விண்ணப்பித்து, புதிதாக ஒரு பதிவெண் வாங்க வேண்டும். அதில் கொடுமை என்னவென்றால், கடந்த சில வருடங்களாக அந்த எண்ணையும் அதிகாரிகள் கொடுக்கவில்லை. தற்காலிக எண்கள் தான் ஒதுக்கப்படுகிறது.” என்று ஆதங்கப்பட்டார் ஒரு படகு உரிமையாளர்.

இப்படி ‘நம்பர் பதிவு செய்யப்படாத விசைப்படகு’ என்றே 2௦௦ படகுகள் இங்கிருக்கிறது. புயலில் பாதிக்கபட்டால் ‘இந்த படகு என்னுடையது, எனக்கு நஷ்டஈடு தாங்க’ என்று கேட்பதற்கு அவர்களிடம் ஒரு அத்தாட்சியும் இல்லை. கடலில் கடற்படை பிடிக்கும்போது, அவர்களிடம் காண்பிக்கவும் டாக்குமென்ட் இல்லை.

சுனாமி வந்தபிறகு ஒரு அதிகாரி வந்து, ‘படகுகளில் பதிவு எண்ணை அரை இன்ச் ஆழத்துக்கு செதுக்குங்கள்’ என சொல்லிவிட்டு போனார். மொத்த பலகையே ஒன்னேகால் இன்ச். அதில் அரை இன்ச் செதுக்கிவிட்டு, மீதியிருக்கும் முக்கால் இன்ச் உடைந்து படகுக்குள் தண்ணீர் வந்தால் என்ன செய்வது? முன்னேயே சொன்னதுபோல் மீன்கள் பற்றியும், மீனவர்கள் பற்றியும் ஒண்றுமே தெரியாதவர்கள் தான் மீனவர்கள் பற்றி முடிவெடுக்கும் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள்.

படகுகளுக்கு முதலில் MS என்று தொடங்கும் எண்ணைக் கொடுத்தார்கள். அடுத்து MDS, MFB. கடைசியாக இப்போது MM. பெரிய மீன்பிடி கப்பல்களுக்கு வேறு வழிமுறை.

படகுகளுக்கு எண்களை வழங்க வேண்டிய அதிகாரி விரைந்து நடவடிக்கை எடுத்து, பதிவுசெய்யப்படாத விசைப்படகுகளுக்கு உரிய எண்களை வழங்க வேண்டும் என்பது தான் அனைத்து படகு உரிமையாளர்களின் எதிர்பார்ப்பு.

சென்ற வருடம் தொடக்கத்திலிருந்து தற்போது வரை அடுத்தடுத்து காசிமேடு மீனவர்களுக்கு பிரச்சனைகள் வந்தது பற்றி ஒரு மீனவரிடம் கேட்டதற்கு, “ரெண்டே ரெண்டு சீசன் எங்களுக்கு நல்லா அமைஞ்சா போதும், மறுபடியும் காசிமேடு கலகட்டிரும்.” என்று கடல் நோக்கி ஆள்காட்டி விரலைக் காண்பித்தவாறு, சொடக்கு போட்டு சொன்னார்.

நான் நேர்க்காணலை முடித்து கிளம்பும்போது, 10-12 மீனவர்கள் ஒரு வேனிலிருந்து இறங்கி ரொம்ப மகிழ்ச்சியாக படகு முன்பு நடனமாடிக் கொண்டிருந்தார்கள். என்னவென்று கேட்டதற்கு, மீனவர் ஒருவர் வாய் முழுக்க சிரிப்புடன், “தட நாளியோட முடிதுல. அதான் குலசாமி கோயிலாண்ட போய்ட்டு, கேன் கேனா மீன் ரொம்பணும்னு ஒரு ரெக்வஸ்ட் போட்டுட்டு வறோம்.” என பதிலளித்தார்.Leave Comments

Comments (0)