பிழைப்பைத் தேடி நகரங்களுக்கு நகரும் விவசாயிகள்

பிழைப்பைத் தேடி நகரங்களுக்கு நகரும் விவசாயிகள்

  • 0
  • 0

இந்த மாலை வேளையில் பொழிந்து கொட்டும் இந்த மழை அன்று ஒருநாள் எங்கள் ஊரில் பெய்திருந்தால் எங்களிடம் இருந்த அரை ஏக்கர் நிலத்தையும் விற்காமல் துணிந்து இன்னும் வட்டிக்கு கடன் வாங்கியாவது விவசாயம் செய்திருப்பேன் என்கிறார் மிதிவண்டியில் சென்னை அடையாறின் சாலையோரங்களில் தேனீர் விற்கும் ரங்கப்பன்.      
இயற்கையை நிர்ணயிக்க யாராலும் முடியாது. ஆனால், மனிதன் அந்த இயற்கையை மாற்ற நினைத்த முயற்சியாலோ என்னவோ இவரை போன்ற பல விவசாயிகள் தங்களது தொழிலை விட்டு பல நகரங்களுக்கு சென்று வேறு தொழில்களை செய்து பிழைக்கின்றனர்.        
தென்தமிழக பூமியான மதுரை மாவட்டத்தில் ஓர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கப்பன். இவருக்கு வயது 59 ஆகின்றது. ரங்கப்பனின் தந்தையார் இவருக்கு சொத்து என சேர்த்து வைத்து எதையும் கொடுத்திருக்காவிட்டாலும், தன்னுடைய உழைப்பால் அரை ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். அவர் வாங்கிய நிலமானது விவசாயம் செய்ய ஏதுவானதாக இருந்திருந்தாலும் அதற்கு முக்கிய தேவை நீர் ஆதாரம் ஏதுமில்லை. குறிப்பாக கிணறு, ஆழ்துளைக் கிணறு போன்ற எவ்வித வசதியும் இல்லாத நிலத்தை வாங்கியிருந்தாலும் மழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்து வந்துள்ளார்.      
ஒவ்வொரு போகத்திற்கும் சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்களை பயிர் செய்து அதன்மூலம் வரும் வருவாய் மட்டுமல்லாமல், பல பெருநில விவசாயிகளின் வயல்களிலும் கூலி வேலை செய்து தன்னுடைய குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.       
புழுதிக் காட்டில் காய்ச்சும் வெயிலைக் கூட பொருட்படுத்தாமல் இன்று மழை பெய்தால் போதும் உழவு செய்துவிட்டு அடுத்த மழைக்கு விதைத்து விடலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்த காலமெல்லாம் இருபது வருடங்களுக்கு முன்பு தான். ஆனால், இன்று மழை பெய்யும் அறிகுறியே தெரிவதில்லை. காரணம், என்னவென்று கூட தெரிந்து கொள்ளாமல் மழையை எதிர்பார்த்து காத்திருந்த காலக்கட்டத்தில் கடன் என்று வாங்கவும் வழியில்லை வாங்கிய கடனையும் கட்ட வழியில்லாமல் இருந்த அரை ஏக்கர் நிலத்தையும் விற்றுவிட்டு இங்கு வந்து தேனீர் வியாபாரம் செய்கின்றேன் என்கிறார்.       
பருவத்தே பயிர் செய் என்பார்கள் ஆனால், அப்படிப்பட்ட சூழல் பொய்த்துவிட்டது. அப்படியே இருந்தாலும் இப்பொழுது விவசாயம் பண்ணுவதற்கு முதலீடு சாதாரணமாக ஆவதில்லை. பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, விதை நேர்த்திக்கான மருந்துகள் இப்படி பலவிதமான செலவுகளை தாண்டி எவ்விதமான லாபமும் ஏற்படாமல் நட்டத்திற்கே யார் தான் விவசாயம் செய்வார்கள். இது போன்ற பல காரணங்களால், என்னை போன்ற ஏராளமான விவசாயிகள் இன்று வேறு தொழில்களை மேற்கொள்ள ஆரம்பித்து விட்டனர் என்கிறார் ரங்கப்பன்.       
உண்மையில் ரங்கப்பனை போன்று எத்தனையோ விவசாயிகள் தங்களால் விவசாயத்தை தொடருவதற்கு வயது ஒரு விதிவிலக்காக இல்லை என்றாலும், பருவமழை பெய்யும் காலங்களின் மாற்றத்தினால் இன்று விவசாயம் செய்ய முடியாமல் இருந்த நிலத்தையும் விற்றுவிட்டு சென்னை போன்ற பல நகரங்களில் குடியேறி வருகின்றனர். உணவுக்கான பஞ்சம் தலைவிரித்து ஆடப்போகின்றது என்பதற்கான அறிகுறி தான் ரங்கப்பன் போன்ற விவசாயிகளின் வாழ்வியல் இடங்களுக்கான மாற்றம்.


Leave Comments

Comments (0)