பாரம்பரிய விதைகளை சேகரித்து வரும் திருச்சி விவசாயி!

பாரம்பரிய விதைகளை சேகரித்து வரும் திருச்சி விவசாயி!

  • 3
  • 0

திருச்சி மாவட்டத்தில் உள்ள தின்னக்கோனம் கிராமத்தில் இருக்கும் விவசாயி யோகநாதனிற்கு பாரம்பரிய தாவர வகைகளின் விதைகளை சேகரிக்கும் ஆர்வம் ஒருபோதும் குறைவதில்லை. பாரம்பரிய இனத்தைச் சேர்ந்த காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை பாதுகாக்க வேண்டும் என்ற குறிக்கோளில் 2008-ம் ஆண்டிலிருந்து விதைகளை சேகரிக்க தொடங்கினார் யோகநாதன்.
இப்போது பத்து வருடங்கள் கழித்து, நபார்ட் வங்கியின் உதவியால் அமைக்கப்பட்ட அகஸ்தியர் விவசாய உற்பத்தி நிறுவனத்தின் மூலம் விவசாய நிலங்களுக்கும் வீட்டு தோட்டத்திற்கும் கிலோ கணக்கில் விதைகளை கொடுத்து வருகிறார் யோகநாதன். தமிழகத்தில் பாரம்பரிய விதை உற்பத்தியில் ஈடுபடும் ஒரு சில நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். 
550 சிறு மற்றும் குறு விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டுள்ள இந்த நிறுவனம், விதை உற்பத்தியை தனது முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு மற்றும் சில மாநிலங்களில் தொடர்ச்சியாக ஒருங்கிணைக்கப்பட்ட விதை திருவிழாவை தொடர்ந்து 2017-ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. “இயற்கை விஞ்ஞானியும் பசுமைப் போராளியுமான நம்மாழ்வாரை சந்தித்தப் பிறகே பாரம்பரிய விதைகளை சேகரிக்கும் தூண்டுதல் எனக்கு ஏற்பட்டது. பாரம்பரிய விதைகளை அடையாளம் கண்டுகொள்ளவும் தேர்ந்தெடுக்கவும் பல வருடங்கள் ஆகும்” எங்கிறார்.
பாரம்பரிய காய்கறிகள், கொடிகள், தானியங்கள் மற்றும் பருப்புகளைச் சேர்ந்த 93 வகையான விதைகளை இந்நிறுவனத்தின் 80 உறுப்பினர்கள் உற்பத்தி செய்து வருகிறார்கள். தேர்வு செய்யப்பட்ட பயிர்களை வளர்க்க பரிந்துரைக்கப்பட இயற்கை நடைமுறையும் நிறுவனம் வழங்கியுள்ள விவசாய உள்ளீடுகளையும் இவர்கள் பின்பற்றுகிறார்கள். விதைகளை பதப்படுத்துவதற்கு எந்தவொரு இயந்திரங்களையும் இவர்கள் பயன்படுத்துவதில்லை.
“பயன்படுத்தப்பட்ட தண்ணீர் மற்றும் சூரிய ஒளி ஆகிய பாரம்பரிய முறைகளையே பதப்படுத்துவதற்கு பின்பற்றுகிறோம். இதில் எந்த ரசாயனமும் கலப்பதில்லை. மேலும், பாரம்பரிய முறையில் பதப்படுத்திய விதைகள் நீடித்த காலம் உள்ளதோடு அதிக விளைச்சலும் கொடுக்கும்” எங்கிறர் யோகநாதன். பதப்படுத்திய விதைகளை “பண்டமாக” விற்பனை செய்வதில்லை, மாறாக, அதை ஒரு செல்வமாக பரிமாற்றம் செய்யப்படுகிறது. பாரம்பரிய வகைகளை பாதுகாப்பதே இதிலுள்ள ஒரே நோக்கம்.
“உதாரணமாக, மனப்பாறை கத்தரிக்காவிற்கு நாங்கள் கொடுத்த கவனத்தால், மாநிலம் முழுவதும் அதன் மீதான ஆர்வம் புத்துயிர் பெற்றுள்ளது. நகர்ப்புறங்களில், குறிப்பாக சென்னையில், இந்த வகை கத்தரிக்காவிற்கு மிகப்பெரிய தேவை உருவாகியுள்ளது. தங்கள் வீட்டுத் தோட்டத்தில் வளர்ப்பதற்காகவே இந்த வகை விதைகளை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாங்கிச் சென்றுள்ளனர். விதையோடு இயற்கை உரம் மற்றும் பூச்சிகொல்லிகள் ஆகியவற்றையும் நாங்கள் வழங்குகிறோம்” என்கிறார் யோகநாதன். 
பல்வேறு வகையான நெல்களின் விதைகள் எளிதாக கிடைக்கின்றன. ஆனால், பாரம்பரிய காய்கறிகளின் விதைகள் கிடைப்பது கடினமாக உள்ளது. விதைகள் சேகரிப்பது குறு விவசாயிகளுக்கு நல்ல பலன்களை அளிக்கும். இதற்காக தங்களிடமிருக்கும் 10 செண்ட் நிலங்களை ஒதுக்கீடு செய்தாலே, இதிலிருந்து எளிதாக 30,000 ரூபாய் வரைக்கும் வருமானம் ஈட்டலாம். 
இயற்கை விவசாய நிபுணர் பாமயன் கூறுகையில், “நாட்டின் இறையாண்மை விவசாயத்தில் தான் உள்ளது. அதுபோல், விவசாயத்தின் இறையாண்மை விதைகளில் தான் உள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் பாரம்பரிய விதைகளை உற்பத்தி செய்ய சிறு மற்றும் குறு விவசாயிகளை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும்”.
எல்லா விவசாயிகளும் பயன்படுத்தும் வகையில் விதைகளுக்கான மையப்படுத்தப்பட்ட பதப்படுத்தும் ஆலையை நிறுவும் முயற்சியில் உள்ளது அகஸ்தியர் விவசாய உற்பத்தி நிறுவனம். இப்போது வரையில், தனிநபர்களின் விவசாய நிலங்களில் தான் விதை பதப்படுத்தப்படுகிறது. 

Leave Comments

Comments (0)