பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தலித் பேராசிரியருக்கு நிகழ்த்தப்பட்ட கொடூரம்

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தலித் பேராசிரியருக்கு நிகழ்த்தப்பட்ட கொடூரம்

  • 0
  • 0

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை துணை பேராசிரியர் மனோஜ்குமார் வெர்மா, ஏபிவிபி மாணவர்கள் மற்றும் வெளியாட்களால் தாக்கப்பட்டதோடு, செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள், அத்துமீறல்கள் நடப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அதோடல்லாமல் இப்பல்கலைக்கழகத்தில் இந்துத்துவ ஆதிக்கமும் அதிகரித்திருக்கிறது.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நிலவும் இத்தகைய சூழலில் தற்போது அங்கு தலித் பேராசிரியர் ஒருவர் அவமானப்படுத்தப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டிருக்கிறார். சமீபத்தில் சமூகவியல் துறை மாணவர்கள் துறைத் தலைவர் அரவிந்த் குமார் ஜோஷியோடு கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதன்போது கடற்கரையில் துறைத் தலைவர் அரவிந்த் குமார் ஜோஷியோடு நிற்கும் புகைப்படத்தை மாணவி ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். மாணவியிட்ட அந்த பதிவை தனது கருத்தோடு பகிர்ந்ததற்காக துணை பேராசிரியர் மனோஜ்குமார் வெர்மா தாக்கப்பட்டிருக்கிறார்.
மாணவியின் பதிவுக்கு துறைத் தலைவர் விரும்பக்குறியிட்ட போதிலும், அதே புகைப்படத்தை பகிர்ந்த தான் சாதிய வன்மத்தோடு தாக்கப்பட்டிருப்பதாக மனோஜ்குமார் வெர்மா தெரிவித்துள்ளார். 
மாணவி பதிவேற்றிய அந்த புகைப்படத்தை 'மதிப்பிற்குரிய பேராசிரியர் தண்ணீரில் விளையாடும்போது' என்கிற வாசகத்தோடு மனோஜ்குமார் வெர்மா பகிர்ந்துள்ளார். பின்னர் தனது பதிவு தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது என்பதை அறிந்ததும் மனோஜ்குமார் வெர்மா அதனை நீக்கியுள்ளார். எனினும் துறைத் தலைவரின் தூண்டுதல் மற்றும் இதர காரணங்களால் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
"பல்கலைக்கழகத்தில் பயிலும் ஏபிவிபி மாணவர்கள், வெளியிலிருந்து வந்த சிலர் சேர்ந்து என்னை தாக்கினார்கள். பலவந்தமாக செருப்பு மாலை அணிவித்து, அதனோடு கல்லூரியை சுற்றி வருமாறு வற்புறுத்தினார்கள். பிராமணராக இருந்திருந்தால் இந்த தாக்குதலும் அவமானமும் எனக்கு நேர்ந்திருக்காது. தலித் என்பதால் தான் சாதிய வன்மத்தோடு இவ்வாறு கொடுமை செய்யப்பட்டிருக்கிறேன்" என துணை பேராசிரியர் மனோஜ்குமார் வெர்மா தெரிவித்துள்ளார்.

Leave Comments

Comments (0)