தங்கப்பதக்கம் வென்ற ‘தமிழச்சி’ கோமதி மாரிமுத்து

/files/28 2020-05-29 19:53:10.jpg

தங்கப்பதக்கம் வென்ற ‘தமிழச்சி’ கோமதி மாரிமுத்து

  • 2
  • 0

23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாவது நாளான நேற்று இந்தியாவிற்கு சிறந்த நாளாக அமைந்தது. வீரர்களின் மாதக் கணக்கிலான உழைப்பிற்கும், உறுதிக்கும், அர்ப்பணிப்பிற்கும், பயிற்சிக்கும் நேற்று வெகுமதி கிடைத்தது. முக்கியமாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து 800மீ ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். 

30 வயதாகும் கோமதிக்கு சர்வதேச அளவிலான போட்டியில் இதுவே முதல் வெற்றி. ஆரம்பத்தில் மெதுவாக ஓடத் தொடங்கிய கோமதி, தனது விடா முயற்சியால் முதலிடம் பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். சமீபத்தில் பாட்டியாலாவில் நடைபெற்ற பெடரேஷன் கோப்பை போட்டியில் 2:03:21 நிமிடங்களில் ஓடி தங்கப் பதக்கம் வென்ற கோமதி, நேற்றைய போட்டியில் 2 நிமிடங்கள் 02.70 நொடிகளில் எல்லை கோட்டை கடந்து வெற்றி வாகை சூடினார்.

இப்போதெல்லாம் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லும் இந்திய தடகள வீர்ர்களின் சராசரி வயது குறைந்துள்ளது. ஓட்டப்பந்தய வீரர் ஹிமா தாஸ் மற்றும் துப்பாக்கி சுடும் வீரர் சவுரப் சவுத்ரி ஆகியோர்களே இதற்கு சிறந்த உதாரணம். சிறு வயதிலேயே விளையாட்டில் ஆர்வம் கொண்டு, சரியான நபரை வழிகாட்டியாக பெற்ற இந்த இளைஞர்கள் ஏற்கனவே தங்களின் திறமையை நிரூபித்துள்ளார்கள். திறமைக்கும் கடுமையான உழைப்பிற்கும் நடுவே, சர்வதேச அளவில் புகழ்பெற கொஞ்சம் அதிர்ஷடமும் தேவை. 

அனைவருக்கும் இந்த அதிர்ஷடம் கிடைக்காது. அப்படி ஒருவர் தான் கோமதி மாரிமுத்து. 20 வயதில் தான் விளையாட்டை தீவிரமாக எடுத்துக் கொண்டார் கோமதி. பள்ளிகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டிருந்தாலும், விளையாட்டில் இவர் அடுத்தகட்டத்திற்குச் செல்ல திருச்சியில் உள்ள ஹோலி கிராஸ் கல்லூரியில் படிக்கும் இவரது தோழியான நிஷாவே உந்துதலாக இருந்துள்ளார். 

“விளையாட்டின் மூலமும் வாழ்கையில் நல்ல நிலைமையை அடையலாம் என யாரும் எனக்கு சிறு வயதில் கூறவில்லை. கல்லூரியில் சேர்வதற்கு முன்பு வரை விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து புரிந்து கொள்ளாமல் தான் இருந்தேன். ஒரு நல்ல வேலைக்குப் போய் குடும்பத்தை காப்பற்ற வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாக அந்த சமயத்தில் இருந்தது” என்கிறார் கோமதி.

திருச்சி மாவட்டத்தின் முடிகண்டம் கிராமத்தில் உள்ள ஏழ்மையான விவசாய குடும்பத்தைச் சேர்ந்த கோமதிக்கு, ஒரு சகோதரரும் ஒரு தங்கையும் இருக்கிறார்கள். ஆனால் இவர் மட்டுமே கல்லூரிக்கு சென்றார். இதனால், தனக்காக தியாகம் செய்த குடும்பத்திற்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என விரும்பினார் கோமதி. கல்லூரி முடித்ததும் பெங்களூரில் உள்ள வருமான வரித்துறையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு சென்ற பிறகும் தனது பயிற்சியை தொடர்ந்து கொண்டிருந்தார்.

இவரது அயராத உழைப்பிற்கு பலனாக 2013-ம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். அப்போது நடந்த 800மீ ஓட்டத்தில் ஏழாவதாக வந்தார் கோமதி. இரண்டு வருடங்கள் கழித்து, சீனாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் அதே 800மீ பந்தயத்தில் நான்காவதாக வந்தார்.

அடுத்த முறை கண்டிப்பாக மூன்றாவது இடத்திற்குள் வந்துவிட வேண்டும் என உறுதியோடு இருந்தார் கோமதி. அந்த சமயத்தில் பெரிய துயரம் அவரை தாக்கியது. 2016-ம் ஆண்டு அவரது தந்தை புற்றுநோயால் காலமானார். அதே வருடத்தில் டிசம்பர் மாதம் கோமதிக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து கோமதி கூறுகையில், “எனது தந்தை இறந்த பிறகு என் தாயார் மன அழுத்தத்திற்கு ஆளானார். அவரால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. மொத்த குடும்பமும் என்னை நம்பியே இருந்தது” என்கிறார் கோமதி. ஆனால் அவரது துயரம் நின்ற பாடில்லை. அடுத்த சில மாதங்களிலேயே அவரது பயிற்சியாளர் காந்தி மாரடைப்பால் இறந்தார். “அதன்பிறகு எனக்கு பயிற்சி கொடுக்க யாரும் இல்லை. எனது குடும்பத்திற்கும் நான் தான் எல்லாம் செய்ய வேண்டும். எனது வாழ்க்கையே தலைகீழாக மாறியது” என்கிறார் கோமதி. 

தாமதமாக விளையாட்டு துறைக்கு வருபவர்களுக்கு காயம் ஏற்பட்டால் அவர்கள் மீண்டு வருவது மிகவும் கடினம். காயத்திற்குப் பிறகு மறுபடியும் பயிற்சி எடுக்க கோமதிக்கு இரண்டு வருடங்கள் ஆனது. இதனால் ஆசிய போட்டியில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அவர் தனது விடா முயற்சியை கைவிடவில்லை. 

இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்து தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்த கோமதி, தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கெடுத்து வந்தார். மார்ச் மாதம் நடைபெற்ற பெடரேஷன் கோப்பை – இது தான் தோஹாவில் நடைபெறும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதி சுற்றாக விளங்குகிறது – போட்டியில் 2.03.21 நிமிடங்களில் கடந்து 800மீ ஓட்டத்தில் தங்கப்பதகத்தை வென்றார் கோமதி. நீண்ட காலமாக போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தாலும், இந்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியா சார்பில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்பை பெற்றார் கோமதி. 

உண்மையில் கோமதியின் கதை அனைவருக்கும் உந்துசக்தியை தரக்கூடியது. தனது சோதனையான காலகட்டத்தில் எதற்கும் கலங்காமல் துணிந்து தைரியமாக விடா முயற்சியோடு போராடியதாலேயே இவ்வுளவு பெரிய வெற்றி அவருக்கு கிடைத்துள்ளது. 


Leave Comments

Comments (0)