சொல்லிசையில் வில்லிசை

சொல்லிசையில் வில்லிசை

  • 3
  • 0

பண்டையக் காலத்தில் மலர்ந்த
வில்லுப்பாட்டுக்கும் உள்ள ஒற்றுமையை
இரு கண்களால் கண்டு அனுபவிக்கப் போகிறேன்
பூங்கனி அம்மாவை சந்திக்கப் போகிறேன்
சிங்கப்பூரில் பிறந்து தமிழிலும் ஆங்கிலத்திலும்
சொல்லிசைப் பாடிக் கொண்டிருக்கும்
இந்தியப்பெண் எனக்கு மனதில் வர்ணிக்க முடியாத
ஒரு உணர்வு தோன்றுகிறது
கன்னியாகுமரி மாநகரத்தை நோக்கிச் செல்கிறோம்’ என்று
பிரபல சொல்லிசைப் (RAP) பாடகர் LADYKASH கலைவாணி அவர்களின் ‘வில்லுப்பாட்டு’ இசை ஆல்பம் தொடங்குகிறது. இந்த ‘ராப்’ இசை ஆல்பம் சித்திரை முதல் நாளன்று இணையத்தில் வெளியானது. இந்த ஆல்பத்தில் வரக்கூடிய எண்பத்தி இரண்டு வயதான பூங்கனி பாட்டி தமிழகத்தின் மூத்த வில்லுப்பாட்டுக் கலைஞர். பூங்கனி பாட்டி தலைக்கு மேலே ‘வீசுகோல்கள்’ வீசி சுழற்றி தமிழகத்தில் வில்லுப்பாட்டு பாடாத இடமே கிடையாது. இவர் தற்போது கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் கிராமத்தில் வசித்து வருகிறார்.
கடந்த 2016ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையின் ‘முற்றம்’ தமிழக நாட்டார் கலைக்குழு பூங்கனி பாட்டிக்கு தமிழகத்தின் மூத்த தெருக்கூத்துக் கலைஞர் ‘பாவலர் ஓம் முத்துமாரி’ விருது வழங்கி சிறப்பித்து ஆவணப்படுத்தியது. இந்த செய்தியை ஊடகத்தின் வழியே அறிந்த கலைவாணி மற்றும் அவரது குழுவினர் ‘வில்லுப்பாட்டு’ இசை ஆல்பத்தை உருவாக்க சிங்கப்பூரில்இருந்து சென்னைக்கு வந்து கன்னியாகுமரிக்குச் சென்றுள்ளனர். இந்த ஆல்பம் உருவான விதங்கள் குறித்து கலைவாணியிடம் நடந்த உரையாடலின் வடிவம்..
ராப் இசையை நீங்கள் தேர்வு செய்யக் காரணம்  என்ன? எந்த வயதிலிருந்து ராப் பாடுகிறீர்கள்?
சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தாலும் சிறு வயதிலிருந்தே தமிழ் இலக்கியங்கள் கதைகளை எங்கள் வீட்டில் சொல்லிக்கொடுத்துதான் வளர்த்தனர். அதனாலேயே அடிப்படையில் இருந்தே தமிழ் மொழி மீதும் தமிழ்நாட்டின் மீதும் அதிக அன்பு இருக்கிறது. மேலும் ரிதங்கள் மீதும் ஆங்கிலம்,தமிழ் மொழி சொற்கள் மீதும் ஒருவித ஈர்ப்பு இருந்து வந்தது. சிறு வயதிலேயே எனக்கு ஆப்பிரிக்க அமெரிக்க மக்களின் இசையான ராப் அறிமுகமானது. எனவே ராப் இசை வடிவம் பற்றிய செய்திகளைப் படிக்க ஆரம்பித்து, பாடல்களைக் கேட்டு ஆங்கிலத்திலும் தமிழிலும் நானே எழுதி பாட ஆரம்பித்தேன். ராப் இசை வடிவம் மனதுக்கு நெருக்கமாகவும், எனது எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்தவும் உதவுகிறது.
தமிழகத்தின் நாட்டார் நிகழ்த்துக் கலைகளில் (TAMIL FOLK ART PERFORMANCES) ஒன்றான வில்லுப்பாட்டை வைத்து இசை ஆல்பம் உருவாக்கக்கூடிய எண்ணம் எப்போது வந்தது? பூங்கனி பாட்டியை எப்படித் தெரியும்?
கதைகள், கட்டுரைகள் மூலமாகத்தான் தமிழகத்தின் பழமையான கலைகளில் ஒன்றான வில்லுப்பாட்டு முதன்முதலில் எனக்கு அறிமுகமானது. சிங்கப்பூரில் ஒருசில இடங்களில் வில்லுப்பாட்டு மற்றும் கரகாட்ட நிகழ்ச்சிகள் நடக்கும். அதை ஒரேயொரு முறை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதுவும் காலப்போக்கில் நடக்கவில்லை. வில்லுப்பாட்டு மீது அதிக நெருக்கம் வரக்காரணம் அதில் ஒரு கதைசொல்லலும் இசையும் கலந்து வந்து கொண்டேயிருக்கும். அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வில்லுப்பாட்டு பற்றிய பாடல் வரிகளை ஆங்கிலத்திலும் தமிழிழும் எழுதிவிட்டேன். ஆனால் அது முழுமையான பாடல் ஆல்பமாக வர இப்போதுதான் நேரம் கூடிவந்திருக்கிறது. இந்தப் பாடலை உருவாக்க சில விசயங்களைத் தேடிக்கொண்டிருக்கும் பொழுதுதான் இணையத்தில் பூங்கனி பாட்டி பற்றிய செய்திகள் கிடைத்தது. சென்னைப் பல்கலைக்கழகம் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையின் ‘முற்றம்’ கலைக்குழு அவருக்கு விருது வழங்கி சிறப்பித்து ஆவணப்படுத்தியுள்ளது என்பது தெரிய வந்தது. உடனே துறையின் தலைவர் பேராசிரியர் கோபாலன் ரவீந்திரனைத் தொடர்பு கொண்டு பேசி, பூங்கனி பாட்டியைச் சந்திக்க சிங்கப்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு உடனே கிளம்பினோம்.
பூங்கனி பாட்டியைப் பற்றிச் சொல்லுங்கள்?
எங்கள் குழுவினர் முதன்முதலில் அவரது வீட்டிற்கு போய் பார்த்தப்போது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தமிழகத்தின் மிகப்பெரிய வில்லுப்பாட்டுக் கலைஞர் ஒரு சின்ன வீட்டில் இப்படி கஷ்டப்படுகிறாரே என்று. ‘அவ்வளவு தூரத்தில் இருந்து நம்மள பார்க்க வந்துருக்காங்களே’ என்று எங்களைப் பார்த்தவுடன் பூங்கனி பாட்டி மிகுந்த சந்தோசமடைந்து உற்சாகமாகிவிட்டார். அவரது குழுவோடு இந்த வயதிலும் அவர் வில்லுப்பாட்டு பாடியது எங்களுக்கு பிரமிப்பாக இருந்தது. அவரது கதைகளை ஒன்றவிடாமல் எங்களிடம் சொன்னார். அவருடன் தங்கி அவரது கலை வாழ்க்கையின் அனுபவங்களைக் கேட்டவுடன் எங்கள் குழுவினர் ஒரு முடிவுக்கு வந்தோம். பாடல் பிரபலமாகிறதோ இல்லையோ பூங்கனி பாட்டியின் வில்லுப்பாட்டினையும், அவரது திறமையினையும் இந்த உலகமே பார்க்க வேண்டுமென்று அவரைக் காட்சிப்படுத்தி இந்தப் பாடலை உருவாக்கினோம். இனி இண்டர்நெட்டில் ராப் என்று தேடினால் அதில் பூங்கனி பாட்டியும், அவரது வில்லுப்பாட்டும் வரும். இப்போது பூங்கனி பாட்டியையும் அவரது வில்லுப்பாட்டினையும் உலகமே பார்க்கிறது என்பதில் மனப்பூர்வமான சந்தோசமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. வில்லுப்பாட்டினைப் போல பூங்கனி பாட்டியும் தமிழ்நாட்டின் பொக்கிஷம்.
தமிழக நாட்டார் கலைகள் பற்றி ஒரு ராப் பாடகராக உங்கள் கருத்து?
பழமையும், பெருமையும் வாய்ந்த ஏராளமான தமிழ் மண் கலைகள் இங்கு அழியக்கூடிய நிலையில் இருக்கின்றன. ஒருசில கலைகள் அழிந்தும் போயிருக்கின்றன. கன்னியாகுமரியில் மட்டும் நான் பார்த்தளவிற்கு நிறைய தமிழர் கலைகள் எனக்கு அறிமுகமாயின. தமிழ்நாடு முழுக்க இன்னும் எவ்வளவோ கலைஞர்களும், கலைகளும் கண்டுகொள்ளப்படாமல் இருக்கின்றன. ராப் இசையும் குறிப்பிட்ட மக்களின் இசைதான். ஒரு ராப் பாடகராக வில்லுப்பாட்டு கலையினை எனது ராப் பாடலின் வழியே நான் ஆவணப்படுத்தி மக்களிடம் கொண்டுபோய் சேர்த்துவிட்டேன். ஒரு நவீன நடனக் கலைஞர் கரகாட்டத்தை தனது நவீன நடனத்திற்குள் கொண்டு வர வேண்டும். இப்படி ஒவ்வொரு தமிழ் கலைகளையும், கலைஞர்களையும் பழமை கெடாமல் தங்களுக்குத் தெரிந்த கலைகளின் வழியே ஆவணப்படுத்தி சமகால மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். திரைப்படங்களில் பாடினாலும், பல நாடுகள் சுற்றினாலும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கலைகளையும், கலைஞர்களையும் தேடி பயணிக்க வேண்டுமென்ற தூண்டுதலை இந்த வில்லுப்பாட்டு ஆல்பமும், பூங்கனி பாட்டியும் எனக்குள் உருவாக்கி விட்டனர்.
யூ-டியூப்களில் மட்டும் ராப் பாடும் கலைஞர்களைப் பற்றி?
ராப் இசை அடிப்படையில் சுதந்திரமாக பாடப்படும் மக்களின் இசை. திரைப்படங்களில் பாடினாலும் ராப் இசைக்கு சினிமா முழுவதுமான சுதந்திரத்தை அளிக்காது. இன்று நிறைய பெண்களும், ஆண்களும் தங்களது ராப் திறமைகளை சமூக வலைதளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர். நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் யூ-டியூப்களில் பாடும் ராப் பாடல்களையும், பாடகர்களையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றேன். வியக்கும்படியாக நிறைய ராப் பாடல்களும், பாடகர்களும் அங்கு இருக்கின்றனர். இன்டிபென்டன்ட்டாக இயங்கும் கலைஞர்களுக்கு இங்கு அங்கீகாரங்கள் கிடைப்பது கஷ்டம்தான். அதனால்தான் ‘ஆகாஷிக்’(AKASHIK) என்ற பேனரின் கீழ் திறமை வாய்ந்த ராப் பாடகர்களின் பாடலை வெளியிட என்னால் முடிந்தளவுக்கு செயல்பட இருக்கிறேன். அதற்க்குண்டான வேலைகள் போய்க் கொண்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் தற்போது நடக்கக்கூடிய மக்கள் போராட்டங்கள் பற்றிய உங்களது பார்வை? அதற்கு நீங்கள் பாடல் வெளியிடுவீர்களா?ஒரு பிரச்சனையைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போதே இன்னொரு பிரச்சனை வரிசையாக வந்துக் கொண்டே இருக்கின்றன. மிகுந்த கவலை அளிக்கக்கூடியதாக இது இருக்கிறது. பல விதங்களில் இங்கே பிரிவினைகள் இருக்கின்றன. ஒற்றுமையை பேச வேண்டிய நேரத்தில் இருக்கிறோம். பெண்களுக்கான பாடல் ஒன்றை வெளியிடும் திட்டம் இருக்கிறது.
தமிழக அரசின் அங்கீகாரங்கள் இல்லாமலும், அரவணைப்புகள் கிடைக்காமலும் கன்னியாகுமரியில் ஒரு சின்ன வீட்டிற்குள் தனது கடைசி காலத்தைக் கழிக்கும் தமிழ்நாட்டின் மூத்த வில்லுப்பாட்டுக் கலைஞரான பூங்கனி பாட்டி இன்று யூ-டியூப்பில் LADYKASHன் ராப் வழியே உலகம் முழுக்க வில்லிசையோடும், கதைகளோடும் தனது குழுவோடு வில்லுக்கட்ட வீசுகோல்களோடு கிளம்பிவிட்டார். 
வில்லுப்பாட்டு பாடலைக் காண லிங்க் -
 
கட்டுரை- முத்துராசா குமார்
புகைப்படங்கள் - AKASHIK 

Leave Comments

Comments (0)