கற்பி, புரட்சி செய், ஒன்று சேர் – பி.ஆர். அம்பேத்கர்

/files/18 2020-05-29 18:59:05.jpg

கற்பி, புரட்சி செய், ஒன்று சேர் – பி.ஆர். அம்பேத்கர்

  • 7
  • 0

 கற்பி, புரட்சி செய், ஒன்று சேர் என்ற அம்பேத்கரது கருத்து, வளர்ச்சியில் அக்கறை காட்டுகிற மக்களுக்கு அர்த்தமுள்ள செய்தியாக இருக்கிறது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட, தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்ட வகுப்பில் பிறந்தவர். அடித்தட்டு மக்களாக ஒடுக்கப்பட்டவர்களாக, நசுக்கப்பட்டவர்களாக இருப்பதைக் கண்டு அம்பேத்கர் சலிப்பின்றி அவர்களுக்காகப் போராடினார். கசப்பான அனுபவங்களை அனுபவித்த அந்த மனிதன் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ஆனார். நாட்டின் அரசியலமைப்பை வடிவமைத்தார். அவர் வலுவான மனம் கொண்ட போராட்டக்காரர், புரட்சிக்காரர், ஆழ்ந்த அறிஞர், மனிதர்களைப் பற்றி விரல்நுனியில் குறிப்புகளை வைத்திருந்தவர். இந்த மீட்பரிடமிருந்து வந்த இறுதியான மூன்று வார்த்தைகள், கற்பி, புரட்சி செய், ஒன்று சேர். புத்திஸ்ட்டான பாபா சாகேப் அம்பேத்கர், பெளத்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கோஷங்களை எழுப்பினார். இந்தக் கட்டளைகளை இந்த வரிசையில்தான் வைக்க வேண்டும். 

இதில் இரண்டாவது கட்டளையான புரட்சி செய் என்பதை மூன்றாவது இடத்தில் மாற்றியமைத்து கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் என்று பயன்படுத்துகிற மற்றவர்களின் கடமையுணர்வையும், பொறுப்புணர்வையும் கண்டுபிடிக்க நாங்கள் முயற்சிக்கவில்லை. உலகமெங்கிலும் உள்ள அம்பேத்கரியர்கள் இந்த இரகசியச் சொற்களை நம் மீட்பர் கொடுத்த அதே வரிசையில் பயன்படுத்த வேண்டும். அவர்கள் இந்த வரிசையைப் பயன்படுத்தினால் மட்டும் போதாது, இந்த வரிசையை அனுபவத்திலும் பெற வேண்டும். கற்பி, கிளர்ச்சி செய், ஒன்று சேர். 

டாக்டர். அம்பேத்கரின் இந்தக் கடைசி வார்த்தைகளின் குறிப்பிட்ட கட்டளை வரிசைகளை நாம் ஏன் பின்பற்ற வேண்டும்? என்று ஒருவர் கேள்வி கேட்கலாம். அம்பேத்கர், இயக்கம் வெற்றிகரமாக செயல்படுவதற்கான மூலோபாய ஒழுங்கு நடவடிக்கை வேண்டும் என்று நன்கு உணர்ந்திருந்தார். மக்களை ஒன்று திரட்டி, அவர்களின் ஆதரவுடன் போராடலாம் என்ற எண்ணம் ஒருவருக்கு முதலிலேயே வருமானால், அவர் அந்த இயக்கத்தில் அதற்கு முன்னரே கற்றறிந்தவராக இருக்க வேண்டும். அதன் பின்னரே புரட்சி செய்வதும், மக்களை ஒன்று சேர்ப்பதும் வருகிறது. 

பாபா சாகேப்பின் இந்தக் கட்டளை வரிசைகள் மாற்றப்பட்டால், அது, அந்த இயக்கத்தின் நோக்கத்தை அடைய நீண்டகாலக் காத்திருப்பிற்கு உட்படுத்துவதோடு, அந்தக் குழுவின் வழியையும் திசை திருப்புகிறது. இது இயக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும். 

இந்து மத சாதி அமைப்பில், தலித் என்ற பாகுபாடு அவர்களின் கல்விக்கு மிக முக்கியமான தடையாக இருந்தது. அவர்களின் நடத்தையைச் சுட்டிக்காட்டி கடுமையான சமூக தாக்கத்தைக் கொண்டிருந்ததோடு, அவர்கள் அறிவு பெறுவதற்குத் தடையாகக் கடுமையான சட்டங்களும் அமைக்கப்பட்டிருந்தன. அந்த ஒடுக்கப்பட்ட மக்கள் பகல் நேரங்களில் சாலையில், நடைபாதையில் நடந்துவந்தால் கூட, சில சமுதாயங்களில் அவர்களின் நிழல்கள் கூட மாசுபாடுடையதாகக் கருதினர். அதிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள பொதுப்பாதையில் நடப்பதற்குக் கூட தடைவிதித்தனர். தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப்பட்ட இம்மக்களின் பரிதாப நிலை குறித்து, அம்பேத்கர் நிறைய உண்மைகளை அளித்தார். அவர் எழுதுகிறார், ”மராட்டிய நாட்டில், பேஷ்வாக்களின் ஆட்சியில் ஒதுக்கப்பட்ட மக்கள் பொதுத் தெருவைப் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. அந்தப் பாதையில் ஒரு இந்து நடந்து வருவாராயின், அவரை இந்தத் தீண்டத்தகாதவன் தன் நிழலாலேயே மாசுபடுத்தி விடுவான் என்று கருதினர். 

தீண்டத்தாகதவர்களாக மதிக்கப்பட்டவர்கள், தங்கள் மணிக்கட்டிலோ, அல்லது கழுத்திலோ கருப்புத் துணியைக் கட்டியிருக்க வேண்டும், அல்லது தான் ஒரு தீண்டத்தகாதவன் என்பதற்கு அடையாளமாகச் சின்னங்களையோ, அடையாளக்குறியோ அவர்கள் கழுத்திலோ கையிலோ இருக்க வேண்டும். தவறுதலாகக் கூட சாதி இந்துக்கள், தாழ்த்தப்பட்டவர்களைத் தொட்டுவிட்டால் தீட்டு பட்டுவிடும் என்ற காரணத்திற்காகவும், மாசு அடைந்துவிடுவோம் என்பதற்காகவும், அதிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள ஒடுக்கப்பட்ட மக்களை இதுபோன்ற அடையாளச் சின்னங்களோடு நடமாட வைத்தனர். பேஷ்வாவின் தலைநகரான பூனாவில், தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்டவர்களின் இடுப்பில் விளக்குமாறு கட்டியிருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் நடந்துசெல்கிறபொழுது, அந்தப் பாதையை விளக்குமாறு பின்னால் பெருக்கி சுத்தப்படுத்திக்கொண்டே வரும். ஏனென்றால், அப்போதுதான், அதே பாதையில் வருகிற சாதி இந்துக்கள் மாசு அடையாமல் இருப்பார்களாம். 

பூனேவில், தீண்டத்தகாதவர்கள் எங்கு சென்றாலும், தன் கழுத்தில் மண் தொட்டி ஒன்றைக் கட்டி தொங்கவிட்டுக் கொண்டேதான் செல்ல வேண்டும். தீண்டத்தகாதவரின் உமிழ்நீர் தரையில் விழுந்தால், ஜாக்கிரதையாக இல்லாத ஒரு இந்து அதை மிதித்துவிட்டால் தீட்டுப்பட்டு விடுவார்கள், என்ற காரணத்திற்காக இப்படிச் செய்தனர்.

தீண்டத்தகாதவர்களின் குழந்தைகள் பொதுப்பள்ளியில் படிக்க அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் பொதுக்கிணறுகளை உபயோகிக்க அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் விரும்பிய ஆடை ஆபரணங்களை அணியவும், விரும்பிய உணவைச் சாப்பிடவும் கூட அவர்கள் அனுமதி மறுக்கப்பட்டனர். இந்த அட்டூழியங்களைப் பட்டியலிட்டால் இன்னும் நீண்டுகொண்டேயிருக்கும். சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் இந்தப் பட்டியல் கொஞ்சம் குறைந்துவிட்டது. ஆனால், முற்றிலுமாகத் தீர்ந்துவிடவில்லை. 

அம்பேத்கர் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தீண்டத்தகாதவர்களாக மதிக்கப்பட்டவர்கள் மத்தியில் ஒரு முக்கியப் பாத்திரத்தை வகித்தார். அவர்களின் மேம்பாட்டிற்காக நவீன கல்வியை வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மாநாடுகள், விரிவுரைகள், கூட்டங்கள் மூலம், அம்பேத்கர் தீண்டாமையை அனுபவிக்கிற இளைஞர்களிடத்தில் தங்களின் சமூக நிலை மற்றும் தங்களைப் பற்றிய பிம்ப உணர்வை உயர்த்துவதற்காக கல்வியைப் பெறவேண்டும் என்று ஊக்கப்படுத்தினார். 1924ஆம் ஆண்டின் துவக்கத்தில், பஹீஷ்க்ரிட் ஹிட்கர்னி சபாவை அம்பேத்கர் நிறுவினார். நூலகங்கள், சமூக மையங்கள், தங்குமிடங்கள், தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் படிப்பதற்குத் தேவையான வகுப்பறைகள் திறப்பு போன்ற இலக்குகளைக் கொண்டிருந்தது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு அம்பேத்கரின் சிந்தனைகளானது, ”தங்களின் சொந்த நிலைகளைத் தெரிந்துகொள்ளும் வகையில், தாழ்த்தப்பட்டவர்கள் கல்விநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும். உயர்மட்ட இந்துக்களின் நிலைக்கு உயர்த்துவதற்கும், அரசியல் அதிகாரத்தை அந்த முடிவிற்கு ஒரு வழிமுறையாகப் பயன்படுத்திக்கொள்ளும் நிலைமையும் இருக்கும்” (ஜெல்லியோட் 1972.77). இதுதான் அம்பேத்கரின் புகழ்வாய்ந்த முழக்கமான “கற்பி, புரட்சி செய், ஒன்றுசேர்” என்பதில் பிரதிபலிக்கிறது.

கல்வி மனித சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் கல்வியற்றவராக இருக்கும் வரையில், அவர் ஒரு தகுந்த உணர்வுநிலையில் / தகுதியுள்ளவராக இல்லை என்று எளிதாகவே யூகிக்கமுடியும். கல்வி சரியான முடிவை எடுக்கவும், அது குறித்து சிந்திக்கவும் மனித மனத்தைப் பயிற்றுவிக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மனிதன் கல்வி கற்ற பிறகு, பகுத்தறிவு மிருகமாகிறான்.

கல்வியின் மூலமாக அறிவும், செய்திகளும், தகவல்களையும் பெற்றுக்கொண்ட பிறகு, அது உலகம் முழுவதும் பரவுகிறது. படிப்பறிவில்லாத ஒருவரால் வாசிக்கவும் எழுதவும் முடியாது. புத்தகங்கள் மற்றும் பிற ஊடகங்கள் மூலமாகக் கிடைக்கக்கூடிய ஞானம் தன்னை வந்தடையாதவாறு அவர் தன்னைத்தானே மூடிக்கொண்டுள்ளார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், வெளியுலகத் தொடர்பேயில்லாமல் தன்னை அடைத்துக்கொண்டுள்ளார். இதற்கு நேர்மாறாக, படித்தவர், தன் அறையின் எல்லா சன்னல்களையும் வெளியுலகத்திற்காகத் திறக்கிறார்.

ஒரு நாட்டின் மனித வளத்தின் தரம், அங்கு வாழும் மக்களில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையினாலேயே எளிதாகத் தீர்மானிக்கப்படுகிறது. ஒரு நாடு வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி அடைய விரும்பினால், மற்றும் முக்கியமாக அடைந்த வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ளவும், பராமரிக்கவும் கல்வி அவசியம் என்று சொல்ல வேண்டும். உலகின் பணக்கார மற்றும் வளர்ந்த நாடுகளில் உள்ள மிக அதிகமான கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை விகிதம், மனித வள உற்பத்தி நன்றாக உள்ளன என்பதை நமக்கு விளக்கும். உண்மையில் இந்த நாடுகள், 21ஆம் நூற்றாண்டின் புதிய தொழில்நுட்ப மற்றும் வணிக நிர்ப்பந்தங்களை எப்படிச் சந்திப்பது என இப்போதே தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சி மற்றும் கல்வித் திட்டங்களை கல்வியின் வாயிலாக வழங்கத் தொடங்கியுள்ளது. 

கல்வியைப் பெறுவது என்பது பெயரளவில் ஒரு அகாடமிக் கல்வியைப் பெறுவது மட்டுமல்ல. பாபா சாகேப்பின் பணிகளைப் பற்றியும், இலக்கைப் பற்றியும், எண்ணங்களைப் பற்றியும் படித்திருக்க வேண்டும். டாக்டர் அம்பேத்கரின் சித்தாந்தம் மற்றும் நமது மக்களை வலுப்படுத்தும் மூலோபாயம் பற்றியும் படித்து நாம் அறிந்துகொள்ள வேண்டும். டாக்டர். அம்பேத்கரின் பெயரில் பல ஆண்டுகளாக இயங்கும் நிறுவனங்களை நாம் கொண்டுள்ளோம். அவர்கள் எப்படி வேலை செய்கிறார்கள், எப்படிச் செயலாற்றுகிறார்கள் என்பதைப் பார்க்கிறபொழுதே அவர்கள் எப்படியானவர்கள் என்பதைச் சொல்லிவிட முடியும். அவர்களிடத்தில் டாக்டர். அம்பேத்கரின் இலக்கு மற்றும் மேற்கொண்ட பணி பற்றியும் எந்தவொரு குறிப்பும் இல்லை. 

மற்றவர்களுடன் நிகழ்த்திய தொலைபேசி உரையாடல்களின் வாயிலாக அவர்கள் அம்பேத்கரை அறிந்துகொண்டதிலிருந்து ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார்கள். மற்றவர்களிடத்திலும், ஏன் நம்மையே கூட நம்பவைக்கும் வகையில் அம்பேத்கரைத் தீவிரமாகப் பின்பற்றுபவர்கள் போலக் காட்டிக்கொள்கிறார்கள். இந்தக் கடன் பெற்றுக் கிடைத்த அறிவை அவர்கள் தங்களைத் தக்கவைத்துக்கொள்ள பயன்படுத்தினால் நன்றாக இருக்கும், ஆனால், அவர்களது நிறுவனங்களில் அவர்கள் நிலைநிறுத்தப்படும்பொழுது மற்றவர்களுக்கு இதை பிரசங்கிக்கத் தொடங்கக் கூடாது. இது உண்மையில் இயக்கத்திற்கு உதவுவதற்குப் பதிலாகக் காயப்படுத்துகிறது. 

Leave Comments

Comments (0)