karuppu - உழவர் சந்தைகள் இருக்கின்றதா?

உழவர் சந்தைகள் இருக்கின்றதா?

  • 0
  • 0

உழவில்லையேல் உணவில்லை என்று மட்டும் தான் பல வசனங்கள் எழுகின்றன தமிழ்நாட்டில். ஆனால், உழவர்கள் இல்லையேல் உணவில்லை என்று யாரும் பேசுவதில்லை. ஏனெனில், நமக்கு தேவை உணவு மட்டுமே அவற்றை உற்பத்தி செய்பவர்களைப் பற்றி நாம் ஏன் சிந்திக்க வேண்டும் என்ற பொதுவான கருத்து தான் நிலவி வருகின்றது. பல உணவுப் பொருட்களின் அங்காடியிலோ அல்லது காய்கறிகள் சந்தையிலோ நாம் வாங்கிச் செல்லும் பொருட்களுக்கு கொடுக்கப்படும் பணமானது அந்தப் பொருட்களை உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு சரியான விகிதம் சென்றடைகின்றதா என்று நாம் சிந்திக்க மாட்டோம். அப்படி சரியான விகிதம் விவசாயிகளுக்கு பணம் கிடைத்தால் ஏன் நஷ்டம் ஏற்படுகின்றது என்று அவர்கள் பல போராட்டங்களை முன் வைக்கின்றார்கள் என்றும் நாம் சிந்தித்திருக்க மாட்டோம். 
ஒவ்வொரு உற்பத்திப் பொருட்களையும் வியாபாரிகள் என்ற இடைத்தரகர்கள் மிகவும் குறைந்த விலையில் வாங்கி அவற்றை அதிக விலைக்கு வெளி மாவட்டங்கள் அல்லது வெளி மாநில சந்தைகளில் விற்கும் பொழுது, அதனால் வியாபாரிகள் எந்தவித நஷ்டத்தையும் அடைவதில்லை. காரணம், வாங்கும் பொழுதே உற்பத்தி செய்தவர்களின் தலையில் கட்டப்பட்டு விடுகின்றது. இப்படி நஷ்டத்தை மட்டுமே அடையும் விவசாயிகளுக்கு நேரடியாக தாங்களே பொருட்களை விற்பதற்கான எந்த ஒரு வழிமுறையும் இல்லாத போது தான் 14.11.1999 ஆம் ஆண்டு தமிழக அரசு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இந்தத் திட்டத்தின் நோக்கமானது உழவர்கள் தங்களது உணவுப் பொருட்களை நேரடியாக நுகர்வோர்களிடம் விற்க முடியும். இப்படி நேரடியாக விற்பதால் நுகர்வோர்களுக்கும் உரிய விலையில் பொருட்கள் கிடைக்கும் அதேபோல், விவசாயிகளுக்கும் உரிய பணம் கிடைக்கும் என்பது தான். மேலும், அந்தந்த குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் குறைந்த விலையில் பொருட்களை வாங்கி பயனடைய முடியும். இதற்காக, அமைக்கப்பட்ட திட்டத்தின் பெயர் தான் உழவர் சந்தை.

உழவர் சந்தையானது முதன்முதலில் தமிழக அரசினால் 1999 ஆம் ஆண்டு மதுரையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, 2001 ஆம் ஆண்டு நூறாவது உழவர் சந்தையாக சென்னை பல்லாவரத்தில் திறக்கப்பட்டது. 1999-2001 இந்த கால இடைவெளியில் மட்டுமே மொத்தம் 103 உழவர் சந்தைகளாக தமிழகத்தில் இருந்துள்ளது. அதன்பிறகு, 2001-2005 இந்த ஐந்து ஆண்டுகளில் 103 உழவர் சந்தைகளில் 28 மூடப்பட்டுள்ளது. இப்படி மூடப்பட்ட 28 உழவர் சந்தைகளை 42 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் அரசாங்கத்தினால் திறக்கப்பட்டுள்ளது. இந்த உழவர் சந்தையின் மூலம் பலருக்கு வேலை வாய்ப்புகளும் அமையும். அதேபோல், தேவையில்லை என்று கழிக்கப்படும் காய்கறிகளை மட்கச் செய்து உரங்களாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் விவசாயத்திற்கு.
 
விவசாயிகள் உற்பத்திப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்வதற்காக அரசாங்கம் உழவர் சந்தைகளை அறிமுகப்படுத்தினாலும், விவசாயத்தில் உற்பத்தியை அதிகரிக்க எந்த ஒரு முயற்சியும் அரசாங்கம் எடுக்கவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் உழவர் சந்தை என்ற ஒன்று நம் மாநிலத்தில் இருந்ததா என்ற கேள்வியில் தள்ளப்பட்டுள்ளது
ஒவ்வொரு ஆட்சியாளர்களும் புதியத் திட்டம் என்று அறிமுகப்படுத்தினாலும் அவற்றின் நன்மை என்ன என்பதைக் கருத்தில் கொண்டு பராமரிக்காமல் இருப்பது மட்டுமல்லாமல், ஆட்சியாளர்கள் தங்களது பெயரைக் கொண்டு தான் ஒவ்வொரு திட்டமும் இருக்க வேண்டும் என்று ஆட்சிக்கு வரும் ஒவ்வொருவரும் அம்மா அப்பா இப்படி பெயரை மட்டுமே வைத்து பல கோடிகள் கணக்கில் செலவுகளை செய்வது மட்டுமல்லாமல் அவற்றை அடுத்து ஆட்சிக்கு வருபவர் மாற்றியமைக்கின்றோம் என்று இன்னும் பல கோடிகள் செலவு என்று மக்களின் வரியை மட்டுமே உயர்த்துகின்றனர். அறிமுகப்படுத்தும் எந்த ஒருத் திட்டங்களையும் மக்கள் முறையாக பின்பற்ற வழிவகைகள் மேற்கொள்ளப்படுவதில்லை.
உழவர் சந்தை நம் மாநிலத்திற்கு அவசியம். அதற்கேற்ப வேளாண்மையில் உற்பத்தியை அதிகரிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், எட்டு வழிச் சாலை அவசியமா என்றால் எந்த ஒரு விவசாயிகளும் அவசியமில்லை என்று தான் கூறுகின்றனர். இயற்கையை ஆதரிக்கும் அரசால் மக்களைக் காப்பாற்ற முடியும் ஆனால், நம் அரசு இயற்கையை அழிக்கும் அரசு அதனால் மக்கள் வாழ்வதை விட பல கார்ப்பரேட் கம்பெனிகள் மட்டுமேவாழ முடியும்.

Leave Comments

Comments (0)