ஆசிரியரால் கிராமத்தில் நிகழ்ந்த மாற்றம்!

/files/f325c271-1cc2-4623-bad7-0fa956b06ec8 2020-06-06 12:30:54.JPG

ஆசிரியரால் கிராமத்தில் நிகழ்ந்த மாற்றம்!

  • 1
  • 0

இந்தியாவில் பெண்கள் அதிகமாக தற்கொலை செய்யும் மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மாநிலம் எது தெரியுமா? நம் தமிழ்நாடு! என்ன கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆனால் இந்த சிறிய கிராமத்தில் உள்ள மக்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சியான விஷயம் இல்லை. 1995 முதல் 2011-ம் ஆண்டு வரை இக்கிராமத்தில் இறந்த 92 பேரில் 83 நபர்கள் தற்கொலை செய்து கொண்டவர்கள். 
திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் நீடாமங்கலத்தில் தற்கொலை என்பது நோய் போல் பரவியுள்ளது. நண்பர்களோடு சச்சரவு என்றாலும் சரி, குடும்ப பிரச்சனை என்றாலும் சரி, இப்படி எந்த பிரச்சனையாக இருந்தாலும் இங்குள்ள மக்களுக்கு தற்கொலை தான் ஒரே தீர்வாக இருக்கிறது.
அங்குள்ள கிராமத்துப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஆனந்த் தியாகராஜன் இப்பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்தார். பள்ளியில் நடைபெறும் பெற்றோர்-ஆசிரியர்கள் கூட்டத்தில் குறைவான பெற்றோர்களே கலந்துகொள்வதை கண்டுகொண்ட ஆன்ந்த், இதுபற்றி விசாரித்த போது தான், பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்களில் ஒருவரோ அல்லது இருவருமே தற்கொலை செய்துகொண்ட விபரம் தெரிந்தது. 
“என்னுடைய இள வயதியிலேயே நானும் பெற்றோர்களை இழந்தேன். இதனால் என்னால் எளிதாக மாணவர்களின் சிக்கலை புரிந்துகொள்ள முடிந்தது. இந்த நிலைமையை மாற்ற இதுவே என்னை தூண்டியது. கிராமத்தின் தற்கொலை விகிதத்தை குறைக்க வேண்டும் என்ற உறுதியில் எனது மாணவர்களை தயார் படுத்தினேன்” என்கிறார் ஆசிரியர் ஆனந்த்.
alt text
கிராமத்தில் உள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்கும் முயற்சியை 2011-ம் ஆண்டு தொடங்கினார் ஆசிரியர். முதலில் இந்த முயற்சிக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. உடனடியாக சுதாரித்துக் கொண்ட ஆசிரியர், இரண்டாவது முயற்சியாக இப்பிரச்சனையை தீர்க்க மாணவர்களை ஈடுபடுத்த முடிவு செய்தார். தற்கொலையால் பல குடும்பங்கள் நாசமான போதும், இதுகுறித்த எந்த விழிப்புணர்வும் கிராமத்து மக்களிடமும் மானவர்களிடமும் சுத்தமாக இல்லை. ஏனென்றால் தற்கொலை பிரச்சனை குறித்த உரையாடலே அங்கு தொடங்கப்படவில்லை என்பதை புரிந்து கொண்டார் ஆசிரியர் ஆனந்த். வாழ்க்கை குறித்த மதிப்பு தெரிய வேண்டுமென்றால் அதற்கு மக்களின் மனநிலையில் போதுமான மாற்றம் நிகழ வேண்டும். இது ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் மிகப்பெரிய சவாலாக இருந்தது. 
மக்களிடம் மாற்றம் ஏற்பட அவர்களிடம் தாக்கத்தை ஏர்படுத்தும் வகையில் பள்ளி ஆண்டு விழாவில் தற்கொலையை கருப்பொருளாக கொண்ட நாடகத்தை நிகழ்த்தினர் மாணவர்கள். சாதாரண குடும்ப பிரச்சனையால் பெற்றோர்கள் தற்கொலை செய்து கொள்வதால் மாணவர்கள் எப்படி அனாதை ஆகி, பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என இந்நாடகத்தில் மாணவர்கள் சித்தரித்திருந்தனர். இது கிராமத்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பார்வையாளர்களாக இருந்த கிராமத்து மக்களிடம் இந்த நாடகம் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு தற்கொலை என்ற வார்த்தையை கூட பயன்படுத்த மக்கள் தயங்கினார்கள்.
நாடகத்தை தொடர்ந்து நம்பிக்கை அளிக்கும் கதைகளை பயன்படுத்தி தெரு நாடகங்களும் விழிப்புணர்வு பேரணிகளும் நடைபெற்றது. விழிப்புணர்வு முயற்சியால் மக்களிடம் ஏற்படும் தாக்கத்தை வலுப்படுத்த கிராமத்தில் உள்ள இளைஞர்களை கொண்டு “டைமண்ட் பாய்ஸ்” என்ற சங்கத்தை தொடங்கினார் ஆசிரியர் ஆனந்த். இந்த சங்கம் கிராமத்தில் உள்ள 380 குடும்பங்களிடமும் ஆலோசனை வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல், இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தற்கொலை இல்லா சமூகம் என்ற செய்தியை தாங்கிய தெரு நாடகங்களை நிகழ்த்துகிறார்கள். 
இப்படி பல கட்ட முயற்சியால் கிராமத்தில் கொஞ்ச கொஞ்சமாக தற்கொலை விகிதம் குறையத் தொடங்கியது. 2013-ம் ஆண்டு முடிவில் கிராமத்தில் ஒருவர் கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை என்ற சாதனை படைக்கப்பட்டது. மேலும், கிராமத்து மக்களிடம் தனம்பிக்கையை உட்டிய பள்ளி மாணவர்கள் ஊடக கவனம் பெற்று சர்வதேச அளவில் புகழ் பெற்றார்கள். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், குடும்பத்தில் பிரச்சனை இல்லாததால் மாணவர்களின் தேர்ச்சி திறனும் அதிகரித்தது. 
தற்கொலையால் தங்கள் சொந்தங்களை இழந்தவர்களிடம் பரிவும் இரக்கமும் காட்ட வேண்டும் என்ற முக்கியமான பாடத்தையும் மாணவர்களுக்கு கற்று கொடுத்துள்ளார் ஆசிரியர் ஆனந்த். மாணவர்களின் திறமையை பாராட்டி Design for Change என்ற அமைப்பு அனைத்து குழந்தைகளையும் அஹமதாபாத்திற்கு அழைத்து கௌரவித்தது. தங்கள் கிராமத்தை விட்டு வெளியே செல்லும் வாய்ப்பு தங்கள் மாணவர்களுக்கு கிடைத்ததை எண்ணி மொத்த கிராமமே கொண்டாடியது. 
“மாணவர்கள் ஊருக்கு திரும்பி வந்த போது பட்டாசு வெடித்து திருவிழா போல் கொண்டாடினோம். பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் உள்ள குடும்பங்கள் கூட இதை மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள்” என்கிறார் வார்டு கவுன்சிலர் சிவக்குமார்.
ஆசிரியரின் தூண்டுதல் நம்மை எந்த எல்லைக்கும் பயணம் செய்ய வைக்கும். ஆனந்த் தியாகராஜன் போன்ற ஆசிரியரின் நல்லவிதமான தூண்டுதலால், இன்று ஒட்டுமொத்த கிராமத்தின் நிலைமையே முன்னேற்றம் அடைந்துள்ளது. 

Leave Comments

Comments (0)