கொழுப்பெனும் நண்பன்-25

/files/detail1.png

கொழுப்பெனும் நண்பன்-25

  • 1
  • 0

-அ.ப.ஃபரூக் அப்துல்லா

பேலியோ குறித்து அதிகம் கேட்கப்படும் கேள்வி மற்றும் பதில்கள் 

1.  பாதாம் இந்த பேலியோ உணவுமுறையில் முக்கிய உணவாக பரிந்துரைக்கப்படுகிறது. அதனை ஊற வைத்து சாப்பிட வேண்டும் என்கிறார்கள். ஏன்? நிலக்கடலையும் பாதாம் போன்றது தானே. பின் ஏன் நிலக்கடலை சாப்பிடக் கூடாது என்கிறார்கள்? பாதாமிற்கு பதில் வால்நட் சாப்பிடலாமா? வருடக்கணக்கில் தினமும் 100 பாதாம் சாப்பிடுவதால் பக்க விளைவு எற்படாதா?

விடை : பொதுவாக தாவரங்களில் பயறு வகைகள்(legumes) , தானயங்களில் (cereals)களில் அதிகமான அளவு ஃபைட்க் ஆசிட் எனும் நமக்கு தேவையற்ற anti-nutrient அதிகமான அளவில் அடங்கியுள்ளன.

பாதாம், முந்திரி, வால்நட் போன்ற கொட்டை வகைகளில் இந்த ஃபட்டிக் ஆசிட் குறைவாக இருக்கிறது. 

இருப்பினும் இந்த ஃபைட்டிக் ஆசிடானது நாம் உண்ணும் மற்ற சத்துணவுகளில் இருந்து சத்துகள் நம் உடலில் சேர்வதை தடுப்பதால் , அந்த ஃபைட்டிக் ஆசிட்டை நீக்குவதற்காக பாதாமை 10 மணிநேரம் நீரில் ஊற வைக்க சொல்கிறோம். 

நிலக்கடலை ஏன் பேலியோவில் இல்லை?

விடை : நிலக்கடலை என்பது பெயரளவில் ground nut / pea nut என்று அழைக்கப்பட்டாலும் அவை கொட்டை வகை அல்ல.

நிலக்கடலை என்பது legumes வகையைச் சேர்ந்தது

Legumes களில் மிக அதிக அளவு ஃபைட்டிக் ஆசிட் நிரம்பியுள்ளது. 
மேலும் legumes என்பது FODMAPS ( fermentable oligosachharides disaccharides mono sachharides and polyols) வகையைச் சேர்ந்தது. இவ்வகை உணவுகள் பெரும்பாலானோருக்கு ஜீரண மண்டலத்தில் பிரச்சனைகளை உருவாக்க வல்லது. இரிட்டபிள் பவல் சின்ட்ரோம் போன்ற பிரச்சனைகள் தோன்ற வழிவகுக்கலாம்.

நிலக்கடலைக்கென இருக்கும் பிரத்யேக பிரச்சனைகள் இரண்டு

ஒன்று : நிலக்கடலையில் நிறைந்திருக்கும் peanut lectin எனப்படும் பொருள்.

இந்த lectin நாம் நிலக்கடலையை வறுத்தாலும் சரி ஊற வைத்தாலும் சரி போகாது. இது ஜீரண மண்டலத்தில் agglutinin களை உருவாக்கி அலர்ஜி / இரிட்டபிள் பவல் சின்ட்ரோம் போன்றவற்றை உருவாக்க வல்லது.

இரண்டு : நிலக்கடலையை ஒரு இடத்தில் ஸ்டாக் செய்து வைத்தால், அதில் ஈசியாக பூஞ்சை தொற்று வந்துவிடுகிறது.
அந்த பூஞ்சையானது வெளியிடும் aflatoxin என்ற பொருள். 
மனிதனுக்கு கேன்சரை உருவாக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் 80% இந்த பூஞ்சைத் தொற்று இருக்க வாய்ப்புண்டு என்கிறது ஆய்வு. 

-----------------------------

2. வாழ்நாள் முழுமைக்கும் இந்த டயட் சாத்தியம் என்று கூறுகிறீர்களா? இனிப்பு சாப்பிடாமல், சோறு சாப்பிடாமல் இருப்பது சாத்தியமா? இந்த டயட் முறையை எத்தனை வருடங்களாக தொடர்ச்சியாக மக்கள் பின்பற்றுகிறார்கள். உதாரணங்கள் தர முடியுமா?

சுமார் 10000 வருடங்களுக்கு முன்பு , இப்போதை நாகரிகங்கள் , மதங்கள், நாடுகள், விவசாயம் போன்றவை தோன்றும் முன் நமது மூதாதையர் வாழ்நாள் முழுவதும் உண்டது இந்த முறையை தானே, அதை நாமும் வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பதில் எந்த சிரமமும் இல்லை. 

தங்களுக்கு சோறு மேல் பிரியம் என்றால் வாரம் ஒருமுறை சாப்பிட்டுக்கொள்ளுங்கள். நீள அரிசியை நன்கு ஸ்டார்ச் வடிகட்டிவிட்டு உண்ணலாம். 

இனிப்பு என்பது நமக்கு ஆபத்து. அது சீனி/ வெல்லம்/ கருப்பட்டி இப்படி எந்த ரூபத்தில் இருந்தாலும் சரியே. இனிப்பும் மதுவும் ஒன்று தான். இரண்டுமே மனிதனை அடிமைப்படுத்துபவை. இரண்டுமே அழிவைத்தருபவை. 

இந்த டயட் முறையை பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து இன்று வரை கடைபிடித்து வருபவர்கள் பலர். 

அவர்களுள் ஒரு இனம் ஆப்பிரிக்க பூர்வ குடிகளான "மசாய்" பழங்குடியினர். இவர்கள் உண்பது வெறும் மாமிசமும் கிழங்குகளும் தான். தினமும் 3000 கிலோ கலோரி அளவு மாமிசம் உண்கின்றனர் . நன்றாக இருக்கின்றனர். நாகரிக மனிதர்கள் என்று கூறப்படும் நீரிழிவு, ரத்த அழுத்தம், கேன்சர் போன்ற எந்த நோயும் வராமல் ஆரோக்கியமாக இருக்கின்றனர். 

இவ்வளவு ஏன்.. நம் சகோதரர்களான நரிக்குறவர் இனத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் கடந்த சில பத்து வருடங்களுக்கு முன்பு வரை உண்டு வாழ்ந்தது அதிக கொழுப்பு குறை மாவு உணவு முறையே ஆகும். 

காடை, நரி, கவுதாரி, கொக்கு, நாரை, உடும்பு போன்றவற்றை உணவாக உண்டு ஊர் ஊராக நடந்து சுற்றி வந்தனர். 

அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கிறோம் என்ற பெயரில் நமக்கு பக்கத்திலேயே குடியிருப்புகள் அமைத்து நமது உணவுகளான இட்லி தோசை போன்ற உணவுகளை அவர்களுக்கு கற்றுக்கொடுத்தோம். தற்போது 
அவர்களும் நம்முடன் இணைந்து நீரிழிவு ரத்த கொதிப்புக்கு மருந்து மாத்திரைகள் உண்ண ஆரம்பித்து வருகின்றனர். 

நமது குழுவில் இருக்கும் முன்னோர்கள் பலர் ஆறு வருடங்களுக்கு மேல் இந்த உணவு முறையில் ஆரோக்கியமாக இருக்கின்றனர். 

-----------------------------------

3. சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான எண்ணெய் இல்லாமல் செக்கில் ஆட்டி தரப்படும் எண்ணெய் ஏன் சமையலுக்கு நல்லது எனக் கூறுகிறீர்கள்? சமையலுக்கு பயன்படுத்துவதற்கு சிறந்த எண்ணெய் எது?

நாம் இன்று நாகரீக உணவு முறையில் சேர்க்கும் சன் ஃபிளவர் எண்ணெய் , ரைஸ் ப்ரேன் ஆயில் போன்றவற்றில் செயற்கையாக "ஹைட்ரஜனேற்றம்(hydrogenation)" என்ற ஒரு செய்வதையும் செய்கின்றனர். 
இந்த வினை மூலம் எண்ணெயை கொதிக்க வைக்கும் போது அந்த எண்ணெய் புகையாகும் நேரம் அதிகமாகிறது. Hydrogenation increases smoking point of oils . ஆனால் இப்படி உருவான கொழுப்பு கொதிக்க வைக்கும் போது "trans fat" ஆக மாறிவிடும். 

இந்த trans fat நமது உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி இன்ஃப்லமேஷனை உருவாக்கும். 

இதய நோய்களின் பெருக்கத்திற்கும் இது தான் காரணம். 

சமையலுக்கு பயன்படுத்த சிறந்த எண்ணெய் 
1. விலங்குகளிடம் இருக்கும் சுற்றுக்கொழுப்பு 
2. நெய் 
3. செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் 
4. இவையெல்லாம் இல்லையெனில் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் நல்லது 

-----------------------------------

4. இந்த முறையை  பின்பற்ற  அதிக அளவிலான செலவு ஆகும். மட்டன், பாதாம், சிக்கன், எல்லாமே costly ...அதற்கு தான் யோசனையாக இருக்கிறது. அறிவுரை தேவை. 

பொதுவாக பேலியோவின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு இது. 

நீங்கள் அசைவம் முட்டை உண்பவராக இருந்தால் உங்களுக்கு பாதாம் கட்டாயத் தேவையில்லை. 

உங்களுக்கு காலை பட்டர் டீ
மதியம் காய்கறி வித் சீஸ்
இரவு சிக்கன் என்று உணவை அமைத்துக்கொள்ளலாம்.

பழைய உணவு முறைக்கும் புதிய பேலியோ உணவு முறைக்கும் இடையே வித்தியாசம் ₹50 ரூபாய் தினமும் அதிகமாக இருக்கும். 

ஆனால் நாம் எக்ஸ்டரா எந்த பேக்கரி ஐட்டங்களும் ஸ்நேக்சும் இல்லாமல் இருப்பதால், நமக்கு தினமும் செலவு ₹20 குறைகிறது. 

ஆகவே, பேலியோ உணவு முறையில் மாதம் ₹900 அதிகமாகிறது. 

நீரிழிவு ரத்த கொதிப்பு போன்ற உடல் பிரச்சனைகளுக்கு நாம் எடுக்கும் மருந்து மாத்திரைகளால் ஏற்படும் செலவு குறைகிறது.

கூட்டி கழித்து பாருங்கள். 
பேலியோ உணவு முறை தரும் லாபங்கள் அளவிட முடியாதவை

--------------------------------------
5. இந்த உணவு முறையில் அசைவம் சார்ந்த உணவுகள் தொடர் ந்து எடுக்கும்போது ஆரம்ப நாட்களில் பைல்ஸ் / மலச்சிக்கல்  பிரச்சனையால் பாதிப்புகள் வருகிறது.அந்த பிரசசினையை எவ்வாறு தவிர்ப்பது ?

பைல்ஸ் மற்றும் மலச்சிக்கல் ஏற்படுவது நமது தினசரி உணவில் நார்ச்சத்து அளவுகள் சரியாக எடுக்காமல் இருப்பதாலோ அல்லது தண்ணீர் தேவையான அளவு பருகாமல் இருப்பதால் வரும் விளைவாகும்.

தினமும் 300 கிராம் காய்கறிகளும்
300 கிராம் ஏதோ ஒரு கீரை வகையும்
தண்ணீர் 3 லிட்டருக்கு குறையாமல் பருகினால் மலச்சிக்கல் வரும் வாய்ப்பு குறைவு. 
 

 -----------------------------------
6. எனக்கு சர்க்கரை குறைபாடு உள்ளது. எடையானது எனது உயரத்திற்கு ஏற்ற எடையை விட குறைவு. சர்க்கரை குறைபாடு உள்ள நான் இந்த பேலியோ உணவுமுறை மூலம் சர்க்கரையை கட்டுக்குள் வைத்துக் கொண்டு உடல் எடை ஏற்ற வாய்ப்பு உள்ளதா? 

நிச்சயமாக நீரிழிவை கட்டுக்குள் வைத்துக்கொண்டே எடை ஏற்றம் அடையலாம். தங்களது சரியான எடையை அடைந்தவுடன் தேவையான அளவு மாவுச்சத்து, புரதம் மற்றும் கொழுப்புணவை உண்பது மூலம் எடை கூடலாம். 

மேலும், புரதச்சத்தை சிறிது அதிகமாக எடுத்துக்கொண்டே வொர்க் அவுட்களில் ஈடுபட்டால் தசைகள் முறுக்கேறும். 

-----------------------------------

7.  பொட்டாசியம் அளவுகள் இரத்தத்தில் அதிகம் இருந்தால் பாதாமை தவிர்க்க வேண்டுமா?

பொடாசியம் அளவுகள் சிலருக்கு 
ரத்தத்தில் அதிகமாகவே காணப்படும். இதற்கு பெயர் "ஹைபர் கேலீமியா" என்று பெயர்.

Hyperkalemia இருப்போருக்கு அடிக்கடி இதய துடிப்பில் சீரின்மை, தசை வலிமை இழப்பு போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். 

இவர்கள் பொதுவாக அதிக பொடாசியம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். 

நூறு கிராம் பாதாமில் கிட்டத்தட்ட 700 மில்லிகிராம் பொடாசியம் உள்ளது. 

எனவே, ஹைபர் கேலீமியா இருப்பவர்கள் பாதாமை தவிர்ப்பது நல்லது. 

-----------------------------------
8. குறிப்பாக சைவ பேலியோவில் புரதம் குறைவாக கிடைப்பதால் அதில் ஒருவேளை உணவாக முளைகட்டியப்பயிறு வகைகள் எடுத்துக் கொள்ளலாமா?

முளைகட்டிய பயறை நாம் உண்ணக்கூடாது ஏன்??

முளைகட்டிய பயறு  legumes வகையைச் சேர்ந்தது.

ஆதிமனிதன் பயறுகளை உண்ணவில்லை. அப்போது விவசாயம் கிடையாது. விவசாயம் இன்றி பயிறு வகைகளை விளைவிப்பது சாத்தியமில்லை. 

மேலும் 
பயறு வகைகளில் மாவுச்சத்து அதிகம். 
தங்களது புரதச்சத்து தேவையை அடைய பயறு வகைகளை ஒரு வேலை உணவாக உண்டால் , தன் மூலம் மாவுச்சத்து கணக்குகள் அதிகமாகும் வாய்ப்பு இருக்கிறது. 

பயறு வகைகளில் கிடைக்கும் தாவரப்புரதமானது நமது உடலால் செரிமானமாகும் தன்மை(bio availability) குறைவாக இருக்கிறது. 

மேலும் , நமக்கு உணவு மூலமே கிடைக்கும் ஒன்பது  essential amino acidsகளை பயறு வகைகள் மூலம் பெற தினமும் இரண்டு மூன்று பயிறு வகைகளை சேர்த்து உண்ண வேண்டும். இதுவும் நமது குறை மாவு இலக்கை அடைய விடாமல் செய்து விடும்.

Legumes. களில் இருக்கும் phytates , lectins போன்ற anti nutrients பயறு வகைகளில் இருக்கும் சத்துகளை நமக்கு கிடைக்காமல் செய்து விடுகன்றன. 

ஆகவே சைவ மக்கள், பால் மட்டும் பால் பொருட்கள், பாதாம் போன்றவற்றில் இருந்து புரதச்சத்தை அடைய வேண்டும்.

-----------------------------------
7. பேலியோ டயட்  மூலமாக ஆரோக்கியமான முறையில் உடல் எடையை கூட்ட முடியுமா?

நிச்சயம் உடல் எடையைக் கூட்ட முடியும். 
மாவுச்சத்தின் அளவுகளை 50 கிராமிலிருந்து 150 கிராமிற்கு உயர்த்தி கிழங்கு வகைகள், பழங்கள் , பால் பொருட்களை சேர்த்து வந்தால் உடல் எடை கூடும். 

புரதச்சத்தை சிறிது அதிகரித்து தேகப்பயிற்சியை அதிகப்படுத்தினால் தசைகள் முறுக்கேறும். 

----------------------------------

9. இரத்த கொதிப்பு இருப்பவர்கள் பேலியோ உணவுமுறையை பின்பற்றும் போது உப்பு அளவுகள் குறைத்து எடுத்துக்கொள்ள வேண்டுமா அல்லது அளவில்லாமல் எடுத்துக் கொள்ளலாமா? 

பொதுவாக பேலியோ உணவு முறையில் உப்பின் தேவை குறைவாகவே இருக்கிறது. 

தினசரி நாம் சோடியம் அளவுகளை குறைவாகும் 
பொடாசியம் அளவுகளை அதிகமாகவும் உண்ணச் சொல்லி உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. 

நமது நார்மல் சவுத் இண்டியண் டயட்டில் , உப்பின் தேவை அதிகமாக இருக்கிறது. இட்லி , சட்னி , சாதம், காய்கறி கூட்டு, சாம்பார், தயிர், ரசம், தோசை என்று ஒவ்வொன்றுக்கும் உப்பு தேவை அதிகமாக இருக்கிறது. 

ஆனால் நாம் உண்ணும் பேலியோ உணவு முறையில் சோடியம் தேவை மிக குறைவாக இருக்கிறது. 

சராசரியாக நமது சவுத் இண்டியன் டயட்டில் சோடியம் அளவுகள் 4000 மில்லிகிராம் தேவையெனில்

நமது பேலியோ உணவு முறையில் 2000 மில்லிகிராம் மட்டுமே தேவைப்படுகிறது.

பேலியோவில் இருப்போர் தேவையான அளவு உப்பு இட்டு உணவுகளை உண்டாலும் பிரச்சனை இல்லை. 
இன்சுலின் சுரப்பு குறைவதால் கிட்னிகள் சோவியத்தை வெளியேற்றிவிடும். 
-------------------------------------
10.  பேலியோ டயட் மூலம் குறைக்க வேண்டிய எடை இலக்கை அடைந்து விட்டோம் என்றால், (எடை, மற்றும் அனைத்து உடல் சார்ந்த உபாதைகள்) அடுத்து நம்முடைய உணவு முறையினை எப்படி மாற்றாலாம். அடுத்து வாழ்நாள் முழுக்க என்ன சாப்பிடலாம் , வாழ்க்கையிலே சாப்பிடவே கூடாதது எது, போன்ற விவரங்களை அறிய ஆவலாய் உள்ளேன்.

உடல் பருமன் என்பது ஒரு அறிகுறி.
மறைந்திருந்து உடல் பருமனை கொண்டு வந்த நோய் -> இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ்.

ஆகவே உங்களுக்கு இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ் என்ற நோய் இருப்பதால் அது கொண்டு வரும் பிற நோய்களான நீரிழிவு, ரத்த கொதிப்பு போன்ற பல நோய்களுக்கும் ஓபனாக தான் நாம் இருக்கிறோம்.

வாழ்நாள் முழுவதும் குறை மாவும் நிறை கொழுப்பு உணவு முறையில் இருப்பதால் உங்கள் இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ் கட்டுக்குள் இருக்கும். 

உங்களுக்கு அதீத உடல் பருமன் இல்லை.
நீரிழிவு/ ரத்த கொதிப்பு இல்லை எனில் 

தங்களின் விருப்பப்படி தினம் ஒருமுறை ஸ்டார்ச் நீக்கிய நீள அரிசியில் செய்த சாதம் 40 கிராம் உண்ணலாம். 

கண்டிப்பாக உண்ணக்கூடாதவை
1. கோதுமை 
2. மைதா பொருட்கள்
3. குளிர்பானங்கள்
4. பொறித்த உணவுகள்
5. ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட எண்ணெய்கள்
6. சீனி/ வெல்லம்/ சர்க்கரை /கருப்பட்டி
7. சோயா 

இவை எதையும் தொடாமல் இருந்தால் நல்லது

Leave Comments

Comments (0)