கொழுப்பெனும் நண்பன் - 20

/files/detail1.png

கொழுப்பெனும் நண்பன் - 20

  • 2
  • 0

-அ.ப.ஃபரூக் அப்துல்லா

நம்மில் பலரும் கொழுப்பும் கொலஸ்ட்ராலும் ஒன்று என்று நினைக்கிறோம் 

ஆனால் அவை இரண்டும் ஒன்றோடொன்று மாறுபட்டவை 

இவையிரண்டையும் ஒன்றாக "LIPIDS" என்று அழைக்கலாம் 

கொழுப்பு ( Fat) என்பது நமது உணவின் மூலம் கிடைப்பது . கொழுப்பை தனியாக நமது உடலால் உற்பத்தி செய்ய இயலாது. மேலும் சாதாரண அறை வெப்பத்தில் , இது திடப்பொருளாக இருக்கும். உதாரணம் - வெண்ணெய்  

ஆனால் கொலஸ்ட்ராலோ மெழுகு போன்ற நீர் வடிவத்தில் இருக்கும். இந்த கொலஸ்ட்ராலை நாம் உணவின் மூலம் எடுக்காவிட்டாலும் நமது கல்லீரல் இதை உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டது. 

உணவுப்பொருட்களில் மிருகங்கள் மூலம் கிடைக்கும் பால் மற்றும் பால் பொருட்கள், முட்டை , மாமிசம் போன்றவற்றில் மட்டுமே கொலஸ்ட்ரால் உள்ளது. தாவரங்களில் இருந்து கிடைக்கும் எந்த எண்ணெயிலும் கொலஸ்ட்ரால் கிடையாது. 

கொலஸ்ட்ராலின் பயன் என்ன? 

நமது உடலில் உள்ள அனைத்து செல்களிலும் வேலியாக அமைந்திருப்பது இந்த கொலஸ்ட்ரால் தான். ஆண்மை மற்றும் பெண்மைக்கான ஹார்மோன் இந்த கொலஸ்ட்ரால் தான். கொழுப்பை செரிமானம் செய்ய உதவும் பித்த நீர் கொலஸ்ட்ராலினால் தான் உருவாக்கப்படுகிறது. 

கொலஸ்ட்ரால் என்பது மிருகங்கள் மூலம் கிடைக்கும் உணவுகள் மூலமாக மட்டுமே கிடைக்கிறது . 

ஓகே.. பால் கூட பருகாத தாவரபட்சினிகளுக்கு  அப்போது கொலஸ்ட்ராலே இருக்கக்கூடாதே ..ஏன் அவர்களுக்கும் கொலஸ்ட்ரால் அதிகமாகிறது? 

நான் முன்னரே கூறியது போல நீங்கள் உணவின் மூலம் கொலஸ்ட்ராலை எடுக்கா விட்டாலும் உடல் அதற்கு தேவையான கொலஸ்ட்ராலை தானே சமைத்துக்கொள்ளும். 

சரி கொலஸ்ட்ரால் உற்பத்தி எப்படி நிகழ்கிறது? 

கொலஸ்ட்ரால் உற்பத்தி ஆவதற்கு இரண்டு பொருட்கள் தேவை 

1. அசிடைல் கோ ஏ 

2. அசிட்டோ அசிட்டேட்

முதல் சொன்ன அசிட்டோ அசிட்டேட் நமக்கு எப்படி கிடைக்கிறது பார்ப்போம் 

நாம் உண்ணும் மாவுச்சத்தை நமது உடல் சத்துக்காக உடைக்கும் போது (glycolysis) 

நாம் உண்ணும் கொழுப்பை சத்துக்காக உடைக்கும் போது ( beta oxidation of fatty acid) 

நமக்கு அசிட்டை கோ ஏ கிடைக்கிறது

சரி.. அசிட்டோ அசிட்டேட் எப்போது கிடைக்கிறது ?  

நாம் மாவுச்சத்தை குறைத்து கொழுப்பை அதிகரித்து உண்ணும்
போது 

நமது உடல் " கொழுப்பை எரிபொருளாக்கும் நிலைக்குச் செல்லும்" இதை கீடோசிஸ் என்போம். 

இப்படி கொழுப்பை எரிபொருளாக மாற்றும் நிலையில் நமது கல்லீரல் , நாம் உண்ணும் கொழுப்புணவை கீடோன்களாக மாற்றி நமது செல்களுக்கு உணவாக அனுப்பும். 

( மாவுச்சத்தை அதிகமாக உண்ணும் நிலையில் , நமது கல்லீரலானது மாவுச்சத்தை க்ளூகோசாக மாற்றி செல்களுக்கு அனுப்பும். மிஞ்சியதை க்ளைகோஜெனாக மாற்றி தன்னிடத்திலும் , ட்ரைகிளசரைடுகளாக மாற்றி உடல் முழுவதும் சேமிக்கும் ) 

கீடோன்கள் மூன்று வகைப்படும் 

1. பீட்டா ஹைட்ராக்சி புடைரேட்

2. அசிட்டோ அசிட்டேட்

3. அசிட்டோன்

இதில் முதல் இரண்டும் செல்களுக்கு தேவைப்படும் சக்தியை வழங்கவல்லவை. மூன்றாவதான அசிட்டோன் சிறுநீரிலும் நமது சுவாசத்தின் வழி காற்றிலும் கலந்து விடும். இந்த காரணத்தால் தான் கீடோசிஸில் இருப்பவர்களுக்கு சுவாசத்தில் பழ வாசனை ( fruity breath)  அடிக்கும். சிறுநீரிலும் கீடோன்கள் செல்வது சோதித்து அறியலாம். 

இதன் மூலம் நாம் அறிவது கொலஸ்ட்ரால் உருவாக தேவையான அசிடைல் கோ ஏ மற்றும் அசிட்டோ அசிடேட் ஆகிய இரண்டும் நீங்கள் எந்த உணவு உண்டாலும் கிடைத்துக் கொண்டே இருக்கும் என்பது. 

தினமும் இவ்வாறு கல்லீரலால் 2000 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உற்பத்தி செய்யப்படுகிறது. தேவைக்கு மீறி கொலஸ்ட்ரால் எடுத்தாலும் நமது உடலில் அதை ரெகுலேட் செய்யும் அமைப்பு இருக்கிறது. அதனால் கவலை இல்லை. 

சரி.. நான் அசைவமே சாப்பிடுவதில்லை. பால் கூட குடிப்பதில்லை.எனக்கு ஏன் கொலஸ்ட்ரால், கெட்ட கொழுப்பு ( triglycerides,LDL) அதிகமாக இருக்கிறது? 

நீங்கள் மாவுச்சத்தை அதிகமாக எடுக்கும் போது நீங்கள் உண்ணும் மாவுச்சத்து க்ளூகோசாக உடைந்து அந்த க்ளூகோஸ் glycolysis மூலம் சக்தியை வெளியிடும் பொழுது.. அதிகமான அசிடைல் கோ ஏ வை வெளியிடும்.. அசிடைல் கோ ஏ அதிகமாவதால் அதன் மூலம் உருவாகும் கொலஸ்ட்ரால் அதிகமாகிறது. மேலும் மாவுச்சத்தை எரிக்கும் நிலையில் , நமது கல்லீரல் அதிகமான மாவுச்சத்தை ட்ரைகிளசரைடாக்கிவிடும். நமது உடலில் பல்வேறு உள்காயங்கள் ஏற்படும் எனவே உள்காயங்களை ஆற்றும் பொருட்டு  LDL அளவுகளும் கூடும்.

LDLஇன் பணி கல்லீரலில் இருந்து ரத்த நாளங்களுக்கு சென்று உள்காயங்களுக்கு மருந்து பூசுவதாகும். இப்படி நமது தவறான உணவுப்பழக்கத்தால் இந்த நல்ல LDL ஐ நாம் தான் கெட்ட LDLஆக மாற்றுகிறோம். இந்த கெட்ட LDL க்கு பெயர் oxidized LDL.இவை தான் ரத்த நாளங்களை அடைத்து மாரடைப்பை ஏற்படுத்துபவை. ஆகவே உங்கள் உணவில் அதிக மாவுச்சத்து, அதிக எண்ணெயில் பொறித்த உணவுகள், புகை மது போன்ற பழக்கங்கள் இருந்தால் உங்களுக்கு கொலஸ்ட்ரால், ட்ரைகிளசரைட் மற்றும் கெட்ட LDL கூடி இதய நோய் வரவழைக்கும்

பேலியோவில் ஏன் கொலஸ்ட்ரால் , LDL கூடுகிறது. triglycerides குறைகிறது. ? 

நாம் மாவுச்சத்தை குறைத்து கொழுப்பை அதிகம் உண்பதால் நமது உடல் கொழுப்பை பிரதான எரிபொருளாக மாற்றி விடும். 
ஆகவே நமது கல்லீரல் நாம் உண்ணும் உணவில் இருந்து கீடோன்களாக மாற்றி விடும். இந்த கீடோன்களின் சக்தியை  நமது உடல் முழுவதும் கொண்டு செல்லும் வேலையை செய்வது LDL தான். அதனால் இயற்கையாக LDL கூடுகிறது. 

கொழுப்பை எரிக்கும் நிலையில் நம்மிடம் இருக்கும் triglyceride அனைத்தும் எரிக்கப்பட்டு அதுவும் அளவில் குறைகிறது.

நம் உணவின் மூலம் அதிகமான கொழுப்பும் அதை எரித்து கீடோன்களும்( அசிட்டோ அசிட்டேட்)  கிடைப்பதால், நமது கொலஸ்ட்ரால் அளவுகளும் கூடுகின்றன. 

பேலியோவில் கொலஸ்ட்ரால் மற்றும் LDL அதிகரிப்பது இயற்கையானது என்பதை உணரலாம். 

மேலும் நமது ட்ரைகிளசரைடு அளவுகள் 100 க்கு கீழும் HDL அளவுகள் 50 க்கு மேலும் இருந்தால் நமக்கு இருக்கும் LDLஇல் 80% க்கு மேல் நல்ல LDL ஆகும். 

அதாவது triglyceride / HDL ratio வை 3 க்குள் வைத்திருந்தால் நமக்கு இருக்கும் LDL பற்றி கவலையில்லை. இந்த நிலையை பேலியோவில் மட்டுமே எட்ட முடியும். 

ஆனாலும் சிலருக்கு 

பேலியோ எடுத்தாலும் 

வரம்பு மீறி கொலஸ்ட்ரால் மற்றும் LDL அளவுகள் அதிகரிப்பதை காண முடிகிறது. இவர்களை Hyper responders என்கிறோம் 

அதாவது நாம் உணவின் வழி எவ்வளவு  கொழுப்பு சாப்பிட்டாலும் நமது கொலஸ்ட்ரால் அளவுகள் ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் கட்டுப்படுத்த நம் உடலில் மெகானிசம் உள்ளது. 

சிலருக்கு அந்த மெகானிசம் பிரச்சனையாகி இருக்கும். 

இதை Inborn error of fat metabolism என்போம். familial hypercholesterolemia வும் அதில் ஒரு வகை. இவர்களுக்கு triglycerides அளவுகளே 500, 1000 என்று வரும். பேலியோ உணவு முறை எடுத்தால் LDL 200,300  என்று வரும்.

இவர்கள் அனைவரும் hyper responders ஆக கருதப்பட்டு கொழுப்பின் அளவுகள் குறைக்கப்பட்டு பிறகு மறுசோதனைக்கு உட்படுத்த படுவார்கள். அப்போதும் அளவுகள் குறையாவிடில் ஸ்டாடின்கள் பரிந்துரைக்கப்படும். 

இவர்கள் 100இல் 10 பேர் இருப்பார்கள்.
 
எப்படி நீரிழிவு நோயாளிகளுக்கு  மாவுச்சத்து அதிகம் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை வருகிறதோ அதே போன்று இவர்களுக்கு கொழுப்பு உண்டால் கொலஸ்ட்ரால் ஏறுகிறது. 

இவர்களை ஸ்டாடின் கொடுத்து பேலியோவை தொடரவைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை  

இந்த கட்டுரை வழி கொலஸ்ட்ரால் என்றால் என்ன? அது எப்படி உற்பத்தி ஆகிறது ? 

காமன் மேன் உணவு முறையிலும் பேலியோவிலும் கொலஸ்ட்ரால் எப்படி செயல்படுகிறது?

விதிவிலக்காக சிலருக்கு கொலஸ்ட்ரால் மிக அதிகமாக ஏறுவது ஏன் ? என்பதை விரிவாகக் கண்டோம்..
 

Leave Comments

Comments (0)