கொழுப்பெனும் நண்பன் - 19

/files/detail1.png

கொழுப்பெனும் நண்பன் - 19

  • 1
  • 0

-அ.ப.ஃபரூக் அப்துல்லா

கொழுப்பு அதிகமாக தின்றால். கொலஸ்ட்ரால் ஏறி மாரடைப்பு வராதா??

பேலியோவில் கொழுப்பு அளவுக்கு அதிகமாக உண்ணச் சொல்கிறீர்களே. இதனால் இதயம் அடைத்து விடாதா? 

உண்மையில் நமக்கு கொலஸ்ட்ரால் கெடுதி செய்வதில்லை. நன்மை தான் செய்கிறது. நமது தவறான புரிதலால் ஏற்பட்ட பிரச்சனை தான் கொலஸ்ட்ராலை கொடிய பொருள் போல் பாவிப்பது. நமது உடலில் ஏற்படும் உள்காயங்கள் @ இன்ஃப்லமேசன்கள் நாள்தோறும் நமது ரத்த நாளங்களிலும் ( இதய ரத்த நாளம் உட்பட) நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. நமது ரத்தத்தில் கலந்துள்ள கொலஸ்ட்ராலின் வேலை இந்த உள்காயங்களை செப்பனிடுவது. நாம் நமது ரத்த நாளங்களில் தோன்றும் உள்காயங்களை சரி செய்யாமல் விட்டுவிட்டு அதை சரி செய்ய வரும் கொலஸ்ட்ராலை குறைத்து யாதொரு பயனுமில்லை. நாம் அன்றாடம் எடுக்கும் லிபிட் ப்ரொபைல் எனும் கொழுப்பு பரிசோதனையில் மொத்த கொலஸ்ட்ரால் ட்ரைகிளசரைடுகள் எச். டி. எல்,  எல். டி. எல்,  வி. எல். டி. எல் போன்றவற்றை காணலாம். 

இவற்றில் கொலஸ்ட்ரால் அளவுகள் 200 க்கும் மேல் அதிகமானால் நமக்கு பீதி வந்து விடுகிறது. ஒருமுறை சிந்தித்து பாருங்கள். உங்கள் வீட்டில் தினமும் அடுப்பு எரிந்தால் நீங்கள் ஏன் ஹோட்டலில் சென்று உணவு வாங்க போகிறீர்கள் ?? அது போலத்தான் உங்களுக்கு தேவையான கொலஸ்ட்ராலை நீங்கள் உங்கள் உணவு வழி சரியாக கொடுத்தால், ஏன் உங்கள். கல்லீரல் தேவையில்லாமல் இவ்வளவு கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்யப் போகிறது??? புரியவில்லையா??

நமது கல்லீரலின் நூற்றுக்கணக்கான பணிகளுள் தலையாய முதல் பணி - நாம் உண்ணும் உணவில் கொழுப்பை பிரித்தெடுத்து அதை கொலஸ்ட்ராலாக உருமாற்றி உடல் முழுமைக்கும் கொண்டு செல்வது. ஆனால் நாம் உணவில் கொழுப்பை சரியாக எடுக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம்.. நமது கல்லீரல் இன்னும் தன் பணிச்சுமையை கூட்டி நமக்காக தினமும் 2000 - 2500 மிகி அளவு கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது. ஆகவே, உங்களுக்கு உடலில் கொலஸ்ட்ராலும் ட்ரைகிளசரைடும் அதிகமாக இருக்கிறது எனில் நீங்கள் மாவுச்சத்தை அதிகமாக உண்டு கொழுப்பை கண்டால் பயன்படும் ரகம் என்று பொருள். 

என்ன மாவுச்சத்தை அதிகம் உண்டால் கொழுப்பு கூடுமா?? 

ஆம்.. நாம் தினமும் காலை மதியம். இரவு என்று முவ்வேளையும் கார்ப்ஸை முழுப்போடு போட்டால் அது நம் கல்லீரலுக்கு சென்று ட்ரைகிளசரைடுகளாகவும் , லோ டென்சிடி லிபோ ப்ரோடினாகவும் உருமாறும். நாம் நண்பன் என்று நினைத்து உண்ணும் கார்ப்ஸ் தான் உள்ளே சென்று நமக்கு துரோகம் செய்கிறான். நாம் கயவன் என்று உண்ண மறுக்கும் கொழுப்பு , நமக்கு நன்மையைத் தவிர வேறொன்றும் செய்வதில்லை. அடுத்து , கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகமாக இருந்தால் மாரைடப்பு வந்துவிடும் என்று கூறப்படுகிறதே . இது உண்மையா? இது பெரிய கட்டுக்கதை. உண்மையில், இது வரை கொலஸ்ட்ரால் குறித்து நடந்த அத்தனை ஆய்வுகளையும் பகுப்பாய்வு செய்ததில் கொலஸ்ட்ரால் குறைவாக உள்ளவர்களுக்கு தான் மரணம் விரைவாக வருகிறது என்று முடிவுகள் கூறுகின்றன. (https://www.ncbi.nlm.nih.gov/pubmedhealth/behindtheheadlines/news/2016-06-13-study-says-theres-no-link-between-cholesterol-and-heart-disease/)

மேலும், அதிக கொலஸ்ட்ராலுக்கும் இதய நோய்க்கும் சம்பந்தம் இல்லை என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. குறைவான கொலஸ்ட்ரால் இருப்பவர்களுக்கு தான் இதய நோய்/ ஸ்ட்ரோக் போன்ற வியாதிகள் வந்து மரணங்கள் அதிகமாக நிகழ்கின்றன என்று இந்த ஆய்வு கூறுகிறது. (https://www.ncbi.nlm.nih.gov/m/pubmed/21160131/)

அடுத்து, LDL குறித்த பயம் ..

LDL என்றால் கெட்ட கொழுப்பு. அது ஏறவே கூடாது. ஏறினால் மாரடைப்பு ஏற்படுவது உறுதி என்ற அளவில் பல கதைகள் உலாவருகின்றன. 

உண்மை என்ன??

LDL (low density lipoprotein) என்பது முதலில் ஒரு கொழுப்பே அல்ல அது ஒரு புரதம். கல்லீரலில் இருந்து உற்பத்தியாகி நமது உள்காயங்களை ஆற்ற பயன்படும் நிவாரணி. கொழுப்பு தண்ணீரில் கரையாது. ரத்தம் என்பது தண்ணீருக்கு மிக ஒத்தது. ஆகவே, இந்த கொழுப்பானது புரதம் எனும் காரில் ஏறி அமர்ந்து கொள்கிறது. இதில் கொழுப்பு தான் பயணி லிபோ புரோட்டீன் என்பது கார் என்று வைத்துக்கொள்வோம்.  இந்த பயணி தனது காரில் ஏறி ரத்த நாளங்கள் எனும் சாலைகளில் பவனி வந்து கொண்டே இருக்கும். நாம் கொழுப்பு பரிசோதனையில் 
LDL cholesterol எவ்வளவு என்று தான் பார்க்கிறோமே ஒழிய .. அவற்றை ஏற்றிச் செல்லும் வாகனமான LDL particles எத்தனை இருக்கிறது என்று பார்ப்பது இல்லை. 

எத்தனை பயணிகள் இருக்கிறார்கள் என்பதை மட்டுமே பார்க்கிறோம் .. எத்தனை கார்கள் சாலையில் செல்கின்றன என்று நாம் பரிசோதனையில் பார்ப்பதில்லை. இப்போது , இந்த எடுத்துக்காட்டை அமல்படுத்தி பார்ப்போம். ஒரு சாலையில் , ஒரே நேரத்தில் அதிக கார்கள் ஓடினால் நெரிசல் அதிகமாக அவை சாலையின் இரு ஓரங்களையும் இடிக்க வாய்ப்பு உள்ளதுதானே..
அது தான். ரத்த நாளங்களிலும் நடக்கிறது. LDL particles அதிகமாக இருந்தால் நமது இதயத்தின் ரத்த நாளங்களின் உள்பகுதியை சேதப்படுத்தி காயம் உண்டாக்குகின்றன. 

உண்மையில் பிரச்சனை எத்தனை கார்கள் என்பதில் தான் இருக்கிறதே தவிர அதில் உள்ளே பயணம் செய்யும் பயணிகளிடம் இல்லை என்பதை விளங்கியிருப்பீர்கள். 
ஆகவே, LDL cholesterol அதிகமாக இருக்கும் நபருக்கு LDL PARTICLES குறைவாக இருக்கலாம் LDL cholesterol குறைவாக உள்ள நபருக்கு LDL particles அதிகமாகவும் இருக்கலாம்.இப்போதைக்கு இதை கண்டறியும் பரிசோதனைகள் நம்மிடம் வரவில்லை. எதிர்காலத்தில் வரலாம். அதுவரை பொத்தாம் பொதுவாக LDL கொழுப்பு கெட்டது என்ற எண்ணம் தவறு. 

ஆள் நல்ல குண்டாக உடல் பருமனோடு இருப்பார் மெடபாலிக் சின்ட்ரோமின் அத்தனை அறிகுறிகளும் இருக்கும் .. ஆனால் அவருக்கு LDL cholesterol குறைவாக ரிசல்டில் வரும். ஆனால் அவரது LDL particle அளவுகள் அதிகமாக இருக்கலாம்.மேலும், இந்த LDL particles இலும் இரண்டு வகை உள்ளன.

1. Pattern A 
2. Pattern B 

Pattern A என்பது பெரிய வகை large fluffy LDL. இவற்றால் நமது ரத்த நாளங்களை ஊடுறுவ முடியாது. ஆகவே, இவை நல்ல வகை LDL ஆகும். Pattern B என்பது சிறிய வகை LDLகள். இவற்றை oxidised LDL என்றும் அழைக்கலாம். இவை ரத்த நாளங்களுக்குள் ஊடுறுவி மாரடைப்பை ஏற்படுத்த வல்லவை. நம்மிடம் இவை இரண்டையும் அளக்கும் கருவிகள் தற்போது இல்லை ஆனால் தோராயமாக இவற்றை நாம் அளக்கலாம் . எப்படி???

உங்களது ட்ரைகிளசரைடு அளவுகளையும் எச்.டி. எல் எனும் ஹை டென்சிட்டி லிபோ ப்ரோட்டின் அளவுகளையும் தெரிந்து வைத்திருப்பீர்கள். அவையிரண்டையும் வகுத்துக்கொள்ளுங்கள் Triglycerides / HDL = ??? கணக்கு போட்டதில் என்ன பதில் வந்தது?? பதில் 3.8க்குள் வந்திருந்தால் உங்களிடம் இருக்கும் LDL PARTICLES இல் 81% ஊறுவிளைவிக்காத Pattern A வகை 
3.8க்கு மேல் இருந்தால் உங்களிடம் இருப்பது79%pattern B வகை பிரச்சனைக்குரிய LDL. 

இந்த வகுத்தல் கணக்கு உங்களுக்கு இதய நோய் வருமா வராதா என்பதை சொல்லும் முக்கிய கணக்கு ஆகவே லிபிட் ப்ரோபைலில் முதலில் செய்ய வேண்டிய கணக்கு இது தான். 
(https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2664115/).மேலும், HDL எனும் high density lipoprotein அளவுகள் நமக்கு ஏற வேண்டும் . அதற்கு என்ன செய்ய வேண்டும்??குறை மாவு நிறை கொழுப்பு உணவுகளை உண்ண வேண்டும் . தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.  ஒமேகா 3 நிறைந்த உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். ட்ரைகிளசரைடு குறைய வேண்டும் .HDL ஏற வேண்டும்.  இது தான் நமது குறிக்கோள். 

இவையிரண்டும் சரியாக இருந்தால் நமக்கு இதயம் சார்ந்த கவலை தேவையில்லை. பேலியோவில் ட்ரைகிளசரைடுகள் 100 க்கும் கீழ் வரும் HDL 50க்கும் மேல் செல்லும் வகுத்தல் கணக்கு 2 மற்றும் அதற்குள் தான் வரும். ஆகவே மாவுச்சத்தை குறைத்து கொழுப்புணவை உண்ணும் போது இதயம் பாதுகாப்பாகவே இருக்கும் என்பது திண்ணம்.
 

Leave Comments

Comments (0)