கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி காலமானார்!

/files/detail1.png

கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி காலமானார்!

  • 5
  • 0

-V.கோபி

புகழ்பெற்ற நாடக ஆசிரியர் மற்றும் கூத்துக் கலைஞரும், தமிழகத்தின் பரிசோதனை நாடக குழுவான கூத்துப்பட்டறையின் நிறுவனருமான ந.முத்துசாமி இன்று சென்னையில் காலமானார். 82 வயதாகும் இந்த முதுபெரும் கலைஞர், தமிழகத்தில் மாற்று நாடக இயக்கத்தை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றியவர். இவருக்கு பத்மஸ்ரீ விருது 2012-ம் ஆண்டும் சங்கீத நாடக அகாடமி விருது 1999-ம் ஆண்டும் வழங்கப்பட்டது.

தமிழகத்தின் முதல் நவீன நாடகம் என கருதப்படும் ‘காலம் காலமாக’ என்ற நாடகத்தின் மூலம் 1969-ம் ஆண்டு புகழ் வெளிச்சத்திற்கு வந்தார் முத்துசாமி.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புஞ்சை என்ற ஊரில் பிறந்த முத்துசாமி, 1950-களில் சென்னைக்கு குடிபெயர்ந்தார். 1977-ல் கூத்துப்பட்டறையை தொடங்கியவர், அடுத்த பத்து வருடத்தில் அதை முழுநேர தமிழ் நாடக களஞ்சியமாக செயல்பட வைத்தார். 2000 மற்றும் 2007 ஆகிய இடைப்பட்ட வருடங்களில், நாடகத்திற்கான சிறந்த ஐந்து பயிற்சி மையங்களில் ஒன்றாக யுனெஸ்கோ-வால் கூத்துப்பட்டறை அடையாளம் காணப்பட்டது.

எட்டு வருடங்களுக்கு மேல் தெருக்கூத்து கலையை கற்ற முத்துசாமி, பாரம்பரிய தமிழ் நாட்டுப்புற கலைகளை புதுப்பிக்கும் பேரார்வத்தை இங்கிருந்தே பெற்றுக் கொண்டார்.

இதுவரை 60-க்கும் மேற்பட்ட நாடகங்களை தயாரித்துள்ளது கூத்துப்பட்டறை. அதில் இங்கிலாந்து (1989), நல்லவள் (2001), பாஞ்சாலி சபதம் (2004), ஆசிரியரை தேடிய ஆறு கதாபாத்திரங்கள் (2005) மற்றும் தெனாலிராமன் (1999 மற்றும் 2008) ஆகிய நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை.

சில வருடங்களுக்கு முன் தி இந்து (ஆங்கிலம்) பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், “திரும்பி பார்க்கையில், நான் வந்த பாதை முழுதும் சிரமங்கள் நிரம்பியது. ஆனால் நான் விரும்பியதை செய்து முடித்துள்ளேன். படைப்பாளிகளுக்கு தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒன்று தாக்கத்தை ஏற்படுத்தும். எனக்கும் அதுபோலவே நடந்தது. எனது சிறுகதைகளும் நாடகங்களும் பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளன. கடந்த 30 வருடங்களில், பல நடிகர்களுக்கு எங்கள் கூத்துப்பட்டறையின் மூலம் பயிற்சி அளித்துள்ளோம். இது எளிதான விஷயம் இல்லை” என்கிறார் முத்துசாமி.

நாசர், விஷால், பசுபதி, விஜய் சேதுபதி, விமல் போன்ற பல நடிகர்களுக்கு பயிற்சி அளித்த முத்துசாமி, முதல்முறையாக 2008-ம் ஆண்டு வாழ்த்துக்கள் என்ற படத்தில் நடித்தார்.

நன்றி: thenewsminute

 

Leave Comments

Comments (0)