என் பெயர் பாலாறு: ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர். சீனிவாசன் பேட்டி

/files/detail1.png

என் பெயர் பாலாறு: ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர். சீனிவாசன் பேட்டி

  • 9
  • 0

-தமிழரசன்

ரொம்ப காலமாக ஆவணப்படங்களில் பயணித்து வருகிறீர்கள். அந்த பயணம் பற்றி பகிர்ந்துக் கொள்ளுங்கள்?

எனக்கு சிறிய வயதிலிருந்தே புகைப்படத்துறையில் ஆர்வம் இருந்தது. புகைப்படங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். புகைப்படங்கள் என் வாழ்க்கைய மாற்றியமைக்கும் ஒன்றாக இருந்தது. அதிலிருந்து படங்கள் பரிட்சயம் ஆனது. அதே போல சில படங்களும் வாழ்க்கையை மாற்றியமைப்பதாக அமைந்தன. சினிமாவிலும் ஈடுபாடு வந்தது. சினிமா பார்ப்பதும் , சினிமாவைப் பற்றி மக்களுக்கு காட்டுவதுமாக இருந்துவந்தேன். திருநெல்வேலி காஞ்சனை திரைப்பட இயக்கம் வழியாக இதைப் போன்று சினிமா சார்ந்து நிறைய வேலைகள் செய்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது திரைப்படம் எடுக்கனும் என்ற எண்ணத்தில் அது சார்ந்த வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் தான் திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி படுகொலை ஜூலை 23, 1999இல் நடந்தது. அதை ஆவணப்படுத்தலாம் என ஒரு முடிவெடுத்தேன். அது தான் அடுத்தக்கட்ட மாற்றியமைத்தலைச் செய்தது.

நம்மைச் சுற்றி என்னவெல்லாம் நடக்கிறது குறிப்பாக சாதியம் எப்படி இயங்குகிறது,சாதிய வன்முறைகள் என அது வரை அதைப் பற்றிய புரிதல் இல்லாமல் தான் இருந்தது. அதை ஆவணப்படுத்தும் பொழுது தான் உண்மையான தமிழகமும் , அதன் நிலையையும் புரிந்துக் கொண்டேன். அதிலிருந்து ஆவணப் படங்களில் இயங்கிக் கொண்டும் இருக்கிறேன். 

என்னை நானே தெரிந்துக் கொள்ளவும் , தமிழகத்தை தெரிந்துக் கொள்ளவும் நான் படம் எடுக்கிறேன். நிறைய பேர் படங்கள் பற்றிக் கற்றுக்கொண்டு படம் பண்ணுவார்கள், ஆனால் நான் படங்கள் எடுப்பதன் மூலம் அதனைக் கற்றுக் கொண்டேன்.

சினிமாவில் ஆவணப்படம் என்கிற ஒரு வடிவத்தை எப்படி பார்க்கின்றீர்கள் ?

அடிப்படையில் எல்லாமே ஒன்றுதான் என்றே பார்க்கின்றேன். கேமராவின் வழியாக நீங்கள் ஒன்றைப் பார்க்கின்ற பொழுதே அது புனைவுதான். அதில் ஆவணப்படம், கதைப்படம் என்று வித்யாசப்படுவதாக பார்க்கவில்லை. நாம் செய்வதெல்லாம் தமிழ் சமூகத்தின் எதார்த்தத்தை எவ்வளவு எதார்த்தமாக புனைவாக்க முடிகிறதோ அவ்வளவு எதார்த்த புனைவாக மாற்றுகிறோம். ஒரு உண்மை சம்பவத்தை படம் பிடித்தாலும் கூட அது அதனை படம் பிடிப்பவரை பொருத்தும் , அவர் படம் பிடிக்கும் கேமராவும் , படம்பிடிக்கும் முறை பொருத்தும் பல்வேறு கருத்துருவம் இருக்கும். அதனால் நாம் ஒரு விடயத்தை செய்யும் பொழுது அதை புனைவாக தான் கருதியாக வேண்டும். அப்போது நாம் செய்யக் கூடிய காரியத்தின் தேவை பொருத்து அதனுடைய புனைவுத் தன்மை கூடவும் , குறையவும் செய்யும். அடிப்படையான ஒன்று ஒருவிடயத்தை எவ்வளவு நுட்பபாகவும், வாழ்க்கைக்கு நெருக்கமாக படம் பிடிக்கிறோம் என்பது தான்.

என் பெயர் பாலாறு ஒரு நதியின் சிதைவைப் பற்றி பேசுகிறது. இயற்கையான ஒரு விடயத்தை கட்டுப்படுத்த நினைக்கும் குறிப்பிட்ட புள்ளியில் தோன்றிய அணைக்கட்டு என்பதை எப்படி பார்க்கிறீர்கள் ?

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நேருவின் கனவானது பிரம்மாண்ட இந்தியாவை அமைப்பது. நேரு இல்லாமல் காந்தி, அம்பேத்கர் , ஜே.சி.குமரப்பா இவர்களுடைய இந்தியாவைப் பற்றிய கனவு வேறாக இருந்தது. நேருவின் பிரம்மாண்ட இந்தியா கனவில் அமைக்கப்பட்ட திட்டங்கள் தான் இப்பொழுது வரை நம்மை நகர்த்திக் கொண்டிருக்கிறது. அந்த சமயத்தில் சுற்றுச் சூழலை பற்றி யாருமே பொருட்படுத்தாமல் தான் இருந்தார்கள். அதைவிட முக்கியமான ஒன்று அரசாங்க திட்டத்தை மக்கள் வென்றெடுக்க முடியாத இரும்புத்திரை மாதிரியான நீதியின் கீழ் இந்த திட்டங்கள் வந்தன.

அதில் மிக முக்கியமான திட்டம் என்பது பிரம்மாண்டமான அணைக்கட்டுகள் திட்டம் இருந்தது.ஆனால் அந்த காலகட்டத்தில் இந்த பிரம்மாண்ட அணைக்கட்டுகள் திட்டத்தை யாரும் எதிர்த்திருக்கலாம் என நினைக்கிறேன்.எனக்கு சரியாக நினைவிலும் இல்லை.ஆனால் கடந்த பத்து வருடங்களாக உலகின் மிக முக்கிய சுற்று சூழல் அறிஞர்கள் சொல்வது அது இயற்கைக்கு எதிரான ஒன்று மட்டுமல்ல ஒட்டுமொத்த சூழலையே பாதிக்கக்கூடிய ஒன்றாக இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் காமாரஜர் ஆட்சிக் காலத்தில் அணைக்கட்டுகளுக்காக கடுமையாக போராடி பெரிய பெரிய அணைக்கட்டுகள வாங்கியிருக்கோம். பிறகு ஒரு நாற்பது வருடம் கழித்து மண்வளம் பாதிக்கப்படுதல் போன்ற மிகப் பெரிய அழிவுகளை அணைக்கட்டுக்கள் பெரிய அழிவுகள சந்திக்கின்றது. அதுமட்டுமல்லாது தண்ணீரை ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் தேக்குவதன் மூலம் அதன் நீரியல் விடயங்கள் மாறுதல் அடைகிறது,நிறைய ஊர்களுக்கு தண்ணீர் இல்லாமல் போகிறது,நிறைய பழங்குடிகள் வெளியேற்றப்படுகிறார்கள்.
இதைப் போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது.

alt text

ஆனாலும் இதையெல்லாம் தாண்டி ஒரு நாற்பது ஐம்பது வருடங்களுக்கு பிறகு அந்த அணைக்கட்டுகளோட நிலை என்ன என்பது சந்தேகத்திற்குறியதாக இருக்கின்றது.
இதையெல்லாம் தவிர்த்து திருநெல்வேலியில் ஒரு அணைக்கட்டை எடுத்துக்கொண்டால் அது பொதிகை மழையில் ஆரம்பித்து காயல் என்ற துறைமுகத்தில் தாமிரபரணி ஆறு சேருகிறது. பறவைகள் வலசை போவது போல் அணைக்கட்டுகள் இல்லாத காலகட்டத்தில் எல்லா மீன்களும் வலசை போவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். அதாவது பொதிகை மலையிலிருக்கும் மீன்கள் காயல் துறைமுகம் வரை வந்த பிறகு திரும்பி பொதிகை மலைக்கு வருகின்றது. பிரம்மாண்டமான அணைக்கட்டுகள் கட்டும் பொழுது மீன்களின் வலசையும் பாதிப்புக்குள்ளாகிறது.

இதற்கு சூழலியலாளர்கள் முன் வைப்பது என்னவென்றால் ," பிரம்மாண்டமாக கோடிகளில் கட்டக் கூடிய அணைக்கட்டுகள் தேவையில்லை, அந்தந்த ஊர்களுக்கு சிறிதான தடுப்பணைகள் இருந்தாலே அங்குள்ள நீர்வளம் சிறப்பாக இருக்கும்,நிலத்தடி நீரும் பெருகும்."

 அதாவது ஒரு இடத்தில் பிரம்மாண்ட அணைக்கட்டுகள் கட்டுவதற்கு பதிலாக ஒரு ஆறு பாய்ந்து கடலில் சேருவதற்கு இடைப்பட்ட தொலைவில் ஒரு ஐந்து அல்லது பத்து கிலோமீட்டர்களுக்கு இடையில் சிறிய சிறிய தடுப்பணைகள் கட்டப்பட்டு அதில் தேங்கிய தண்ணீர் வழிந்து வருவதன் மூலம் அந்த தண்ணீர் தங்கி சுத்தியிருக்கும் எல்லா கிராமத்திற்கும்  accufires எனப்படும் ஒன்றின் நீர் தாங்கிகள் வழியாக அந்த நீர் வளத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள முடியும். இன்றைய அறிவியல் இப்படியாக இருக்கின்றது. இதை நிறைய பேர் நடைமுறை படுத்தியிருக்கின்றார்கள். குறிப்பாக ராஜஸ்தானில் Magsaysay விருது பெற்ற ராஜேந்திர சிங் போன்றவர்கள் செய்திருக்கிறார்கள். அவருடன் தங்கியிருந்து நேரடியாக பார்த்தேன். நம்மைப் போன்ற மழை மிகுதியான தமிழகத்தில் பிரம்மாண்டமாக அதைச் செய்யலாம், ஆனால் அவர்  செய்தது ராஜஸ்தான் போன்ற பாலைவனம். அதில் நீர் வரத்தையும் பெருக்கியிருக்கிறார். 

alt text

இப்பொழுது கூட காவிரியில் தண்ணீர் வருகிறது.எத்தனை ஊர்களில் சிறிய தடுப்பனைகள் இருக்கின்றது என்பது கேள்விக்குறியாக உள்ளது. அப்டியான ஒன்று இல்லாததால் தான் இங்கு தண்ணீர் பிரச்சனை இப்படி இருக்கின்றது. தமிழகத்தில் ஒவ்வோரு வருடமும் தேவைக்கு அதிகமான அளவிலே மழை பெய்வதாக சொல்லப்படுகிறது, ஆனாலும் நாம் கடுமையான குடிநீர் பிரச்சனையில் இருக்கின்றோம். அதற்கு பெரிய பிரம்மாண்டமான அணைக்கட்டுகளைக் கட்டலாம். இவ்வகை சிறிய அணைக்கட்டுகள் எல்லா ஊர்களிலும் அமைப்பது அறிவியல் ரீதியாகவும் பிரச்சனைக்குறியதாக இல்லாமலும், குறைந்த பொருட்செலவுடனும் இருக்கின்றது. இதுதான் என்னுடைய பார்வை.

நதி நீர் பங்கிடுதலில் ஆறு பாயும் தூர அளவிற்கு ஏற்ப ஒதுக்கியிருந்தாலும் கர்நாடகாவும், ஆந்திராவும் அதை மீறி விதிக்கப்பட்டதற்கும் அதிகளவில் தண்ணீரை எடுக்கிறார்கள். அதாவது விதிக்கப்பட்ட அளவிற்கும் அதிகமாக தண்ணீரை மத்திய அரசின் விதியை மீறி எடுத்தும் ஏன் இத்தனைகால இழுத்தடிப்புகள், அமைதிகாத்தல் தமிழகம் என்பதனாலா இல்லை எதனால் என்று நினைக்கிறீர்கள்?

இந்தியாவில் பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் தண்ணீரை பிரித்துக் கொள்கிறோம். இதைப் போன்ற செயல்பாட்டிற்காக உலகம் முழுக்க Raiparian Rights என்கிற ஒன்று இருக்கிறது. அதன் படி கடைநிலையில் இருப்பவர்களுக்கு அதிக உரிமை இருக்கின்றது. அதாவது நதி இறுதியாக எந்த பகுதியில் போய் சேருகின்றதோ அந்த பகுதிகளுக்கே அதிக முக்கியத்துவம் இருக்கின்றது.

இந்திய சுதந்திரத்திற்கு பிறகு நதி என்பது குறிப்பிட்ட நாட்டிற்கு  சொந்தமானது அல்ல. ஒரு குறிப்பிட்ட நாட்டில் தண்ணீரை நிறுத்தி வைக்க முடியாது என்பது தான் சட்டப்பூர்வமாக இருப்பது. அதையும் தாண்டி கர்நாடக அரசும், ஆந்திர அரசும் நிறைய அணைக்கட்டுகளைக் கட்டியிருக்கின்றது, கட்டிக்கொண்டும் இருக்கின்றது.  இதை வெறுமென தண்ணீர் பிரச்சனையாக பார்க்க இயலாது. இது ஒரு அடிப்படையான உரிமை பிரச்சனை. இது ஒட்டுமொத்தமாக நமக்கு இருக்கின்ற உரிமைகள் குறித்தும், இந்தியாவில் மொழிவாரியாக தனித்தனியாக  மாநிலங்கள் பிரிக்கப்பட்டதில் உள்ள அநீதிகளையும் பார்க்க முடியும். தண்ணீர் விடவில்லை என்பதும், அது மறிக்கப்படுவதும் எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல.

இதை முற்றிலுமாக கேட்பதற்கு சரியான பிரதிநிதியையும் நாம் மத்தியரசிற்கு அனுப்பவில்லை.

ஒரு காவிரிப் பிரச்சனை என்றால் அதை எடுத்துக் கொண்டு அது தீர்ப்பதற்கான நேரடியான எந்த முயற்சியையும் நம்முடைய மத்திய அமைச்சர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ நேரிடையாக ஏற்படுத்தாமலே இருக்கிறார்கள். ஒரு பிரச்சனையின் பொழுது முக்கிய பங்குவகிக்கின்ற மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்வதன் மூலம் இந்த மாதிரியான பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். ஆனால் அவர்கள் அதைப் போன்று செய்வதில்லை. இந்த விடயத்தில் தொடர்ந்து ஒரு துரோகத்தை தான் பார்க்கின்றோம். எளிய மக்கள் வரை தனித் தமிழ்நாடு என்கிற முழக்கத்தைச் செய்கிறார்கள். அதில் பரிபூரண நியாயம் இருப்பதாகவே கருதுகிறேன். 

alt text

பாலாறு பல விதங்களில் சிதைக்கப்பட்டுகிறது.அதில் ஒன்றாக தோல் தொழிற்சாலைக் கழிவுகளும் இருக்கின்றது. 1960க்கு முன் இருந்த தோல் பதனிடுதல் முறை இயற்கையான முறையில் இருந்து வந்திருக்கின்றது. அதன் பிறகு மத்தியரசு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பல ரசாயனங்களை பயன்படுத்தி அதன் மூலம் வெளிப்படும் கழிவுகள் பெரும் விளைவை ஏற்படுத்துகிறது. நிலைக்கு வருகிறது. அதனால் வரும் கழிவுகள் பெரும் விளைவை ஏற்படுத்துகின்றன. அரசு நிலத்தை இங்க யாருக்கான பொருளாக வைத்திருக்கிறது ?

அனைத்துமே பொருளாதாரம் சம்பந்தப்பட்ட ஒன்றுதான்.மக்கள் மத்தியில் அரசாங்கம் தண்ணீர், மின்சாரம் போன்றவற்றை ஒரு சேவைப் பொருளாதாரமாக செய்ய வேண்டும். இப்படி சேவையாக செய்வது தான் அதன் முறை ஆனால் இப்பொழுது எல்லாமே ஒரு சந்தைப் பொருளாதாரத்தின் கீழ் சென்றுவிட்டது. பணம் மட்டுமே பிரதானமான ஒன்றாகவும் ஆகிவிட்டது. அதில் தான் சுற்றுச் சூழல் என்கிற ஒன்று சம்பந்தமில்லாததாக ஆகி விட்டது.

ஒரு அரசாங்கத்தின் பார்வையிலே சொல்கிறேன் ஒரு ஊர்,அதில் நன்றாக தண்ணீர் பாயும் நதி,அந்த ஊரில் நன்றாக விவசாயம் நடந்து, அதன் மலைவளம் , காடுவளம் 40% மேல் இருக்கின்றது.இதைப் போன்ற விடயங்கள் தான் பணக்கார நாடாக மாற்றிக் கொள்வதற்கும்,தக்க வைத்துக் கொள்வதற்கும் பிரதானமான ஒன்று. அரசு ஒரு குறிப்பிட்ட இடத்தை வைத்து அதிக பணம் சம்பாதிக்க நினைக்கின்றது.அதன் வழியே தான் இந்த தோல் பதனிடுதல் மூலம் நிறைய அந்நியச்செலவானி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதனால் அந்த வாணியம்பாடி மக்களுக்கு ஆசையைத் தூண்டி ஈடுபட வைக்கின்றார்கள். உலகம் முழுக்க இருக்கின்ற வளர்ச்சி அடைந்த நாடுகள் நம்மைப் போன்ற மூன்றாம் உலக நாடுகள் அதாவது வளர்ச்சி அடைந்துக் கொண்டிருக்க நாடுகளின் மீது இதைப் போன்ற குப்பைகள்  கழிவுகளை கொண்டு வந்து திணித்துவிட்டு, தங்கள் நாடுகளின் நீர்வளத்தை பாதுகாக்கின்றனர். அதற்கான சூழ்ச்சி தான் இவையெல்லாம். இந்த மாதிரியான வணிக நோக்கு தான் அடிப்படையான பிரச்சனையாக இருக்கின்றது.

எங்களுடைய தண்ணீர் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சொல்ல மக்களுக்கும் முடியாத சூழல், மேலிருக்கும் முதலாளிகள் எவ்வளவு அழிந்தாலும் கவலை இல்லை என்றபடி அதை வியாபாரமாக்குகின்றார்கள். அரசாங்கமே பணத்தின் மீதான ஆசைய தூண்டி இதைப் போன்ற மக்களையும் பயன்படுத்திக் கொள்கின்றது. ஒரு ஊரில் ஓடக்கூடிய நதியில் எவ்வளவு விஷங்களை , கழிவுகளைக் கொட்டலாம் ? எத்தனையை அது தாங்கும்? என்கின்ற அளவீடு கூட அரசாங்கத்திடம் இல்லாது எவ்வளவு பாழ்படுத்தமுடியுமோ அவ்வளவு பாழ்படுத்துகிறார்கள். இதில் மிக முக்கியமான ஆபத்தான பாதிப்பு தோல் தொழிற்சாலையின் மூலம் வருகிறது.அங்கிருந்து வெளிப்படும் குரோம் போன்ற பயங்கரமான கழிவுகள் நிலத்தடி நீரில் இறங்குகின்றன. அங்கு வசித்து வரும் மக்களுக்கு பற்கிள் கெட்டுப் போவது , கேன்சர் போன்ற பல்வேறு வகையான வியாதிகள் என குறுகிய காலத்திலே இறந்துவிடுவார்கள்.

இது பிறநாடுகளுக்கு பணம் சம்பாதிப்பதற்காக நம் நாட்டு மக்கள் பலியாகின்றனர். இதனுடைய ஒட்டுமொத்த காரணம் பேராசை தான். மக்களும் சரி, அங்குள்ள முதலாளிகளும் சரி மொத்தமாக இந்த பேராசையினால் தூண்டப்படுகிறார்கள். அதற்கு பலியாகவும் செய்கின்றனர். நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே அவர்களது நோக்கமாக இருக்கின்றது. ஆனால் அது ஒரு உண்மையான தீர்வு இல்லை. ஒரு நாடு 50% சதவீத காடுகளைத் தக்கவைத்து, ஆறு முழுவதும் நீர் நிறைந்து இருப்பதன் மூலமே அது ஒரு பணக்கார நாடாக இருக்கும். உலகம் முழுவதும் சுற்றுலாத் தளங்களாக எது இருக்கின்றது ? நாம் எதைப் போன்ற இடங்களை பார்க்க விரும்புகின்றோம் ?

எதற்காக பயணிக்கின்றோம்?

எந்த இடத்தில் நீர்வளம் மிகுந்து பசுமையாக இருக்கின்றதோ அதையே பார்க்க விரும்புகின்றோம், அதற்காகவே பயணமும் செய்கின்றோம்.

அழிந்து போன ஒரு வாணியம்பாடிக்கோ, ராணிப்பேட்டைக்கோ யாரும் போக விரும்புவதில்லை. அரசாங்கத்தின் பார்வைபடி சொன்னாலுமே

பணம் அதிகமாக சம்பாதிப்பதற்கு முதலில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். தொழிற்சாலை தொடங்குவதாலோ , பிற நாட்டு கழிவுப் பொருட்களை இங்க கொட்டுவதற்கு அனுமதிப்பதன் மூலம் லாபம் ஈட்டுவது என்பது சுற்றுச் சூழல் அழிவையே தரும்.

நம் வாழ்க்கைக்கு தேவைப்படும் சுற்றுச் சூழலை அழிக்க செய்தீர்களென்றால் ஒரு பத்து வருடங்களுக்கு பிறகு எஞ்சியதாய் எதுவும் இருக்காது, அதன் பிறகு உங்களுக்கு எந்தவிதமான வருமானமும் வராது. சுற்றுச் சூழலை பாதுகாப்பதன் மூலம் வாழ்நாள் முழுக்க பணம் சம்பாதிக்க முடியும். இவர்கள் வளர்ச்சி, பணம் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் அல்லவா அந்த வளர்ச்சி , பணம் இரண்டும் நீங்கள் காடுகளைப் பாதுகாப்பதன் மூலமாகவும், நதிகளைப் பாதுகாப்பதன் மூலமாகவும் தான் பெற முடியும்.

கேரளா , கர்நாடகா , ஆந்திரா போன்ற மாநிலங்களோடு தமிழகத்தை பொருத்திப் பார்க்கும் பொழுது ஆற்று மணல் விடயத்தில் தமிழகத்தை விட அவர்கள் விழிப்புணர்வோடு இருக்கின்றார்கள்.எந்த புள்ளி இங்க விழிப்புணர்வு அவ்ளவா இல்லாததற்கு காரணமாக இருக்கும் ?

இங்கு நம் ஊரில் நிறைய விழிப்புணர்வு இருக்கின்றது. ஆனால் அது மக்களுக்கு. இங்கு மணலை கொள்ளையடிப்பது அரசாங்கம். நேரடியாக முதலமைச்சரில் தொடங்கி, அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் வரை மணலை கொள்ளையடிக்கின்றார்கள். இது தான் இங்க பெரிய பிரச்சனை இதற்கு எதிராக போராடும் பெரிய  அதிகாரிகள், மக்கள் கொல்லப்படுகின்றனர். அப்பொழுது இங்கே பெரிய மணல் மாபியாக்களும் அரசாங்கமும் சேர்ந்து நதியை கொள்ளையடிக்கின்றனர். நதியை கொள்ளையடிப்பது என்பது ஒரு கட்சியுடைய முக்கிய கொள்கையாக தி.மு.க வும், ஆ.தி.மு.கவும் வைத்திருக்கின்றது.  மிக முக்கியமாக தி.மு.க தான் அதிகளவு மணல் கொள்ளையைச் செய்தது. ஒவ்வொரு முறை ஆட்சி மாஞும் பொழுதும்  முதல் முறை அடித்த கொள்ளையை விட அதிகரித்துக் கொண்டே போகிறது. காரணம் மணல் ஒரு பெரிய தங்கம்.  மணல் கொள்ளை என்பது அரசியல்வாதிக்கு பணம் சம்பாதிக்கக் கூடிய தொழிலாக மாறிவிட்டது. அதனால் முதலமைச்சரே கொள்ளையடிக்கக் கூடிய ஒன்றாக ஆகிவிட்டது. பிறகு  எப்படி நாம் மக்களை குறை சொல்வது. மக்களானவர்கள் விழிப்புணர்வோடு போராடுகிறார்கள் , இவர்கள் மாறாக தன் சொந்த மக்களை, தங்களுடைய சொந்த தாயையே அழிக்கின்றார்கள்.

இந்த மணல் கொள்ளை சம்பந்தமாக கொலைகள் நடந்திருப்பதாக சொல்லியிருந்தீர்கள். இந்த ஆவணப்படம் எடுக்கும் பொழுதோ அல்லது எடுத்தபிறகு இது குறித்த விவாதத்தை எழுப்பும் போதோ ஏதும் இடையூறு ஏற்பட்டதா? 

நாங்கள் படம் எடுக்கும் பொழுதே நிறைய நிறைய முன்னெச்சரிக்கையோடு தான் எடுத்தோம்.  குறிப்பாக மணல் கொள்ளை பற்றி எடுக்கையில் மிகவும் முன்னெச்சரிக்கையோடு இருத்தல் வேண்டும். அதற்கு ஏற்றவாரு கேமரா, Zoom lenz என பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எடுத்தோம். என் பெயர் பாலாறுக்கு முன் ஒரு மணல் கொள்ளையை தெளியாக யாரும் செய்திருக்கவில்லை.   செய்தி தொலைக்காட்சிகள் கூட செய்யவில்லை. 

அதைத்தாண்டி மக்களது ஒத்துழைப்பு என்ற ஒன்றும் இருக்கின்றது. இப்பொழுது ஒரு ஊரில் மணல் கொள்ளை நடக்கப் போகிறது என்றால் அந்த ஊர் மக்களே எங்களுக்கு தகவலும் சொல்லி உதவிகரமாகவும் இருப்பார்கள். கிட்டதட்ட நூற்றுக்கணக்கான மக்கள் அந்தக் காட்சியை படம் பிடிக்கும் பொழுது உதவினார்கள். படம் எடுக்கும் பொழுது சிரமப்பட்டுதான் எடுத்தோம் , ஆனால் படம் எடுத்து வெளிவந்த பிறகு பெரிதாக பிரச்சனை ஏதும் இல்லை.

alt text

ஆவணப்படத்தில் ஒரு பெண் சொன்னதின் படி மணல் கொள்ளையை எதிர்த்து போராடிய மக்களை மூன்று பேருந்தில் கூட்டிச் சென்று காவலர்கள் மிரட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் மிரட்டுவதோடு இல்லாமல் இந்த வேலையை நீங்கள் செய்யுங்கள் என்கிற உந்துதலையும் கூடவே தருகிறார்கள். இதையெல்லாம் வைத்துப் பார்க்க இவையெல்லாம் ஒரு திட்டமிடலின் பெயரில் நடப்பதாக நினைக்கின்றீர்களா ?

கார்ப்பரேட்டின் செயல்பாடு என்னவென்றால் எந்த மக்கள் தங்களுடைய வளத்தை காப்பாற்ற போராட வேண்டுமோ அந்த மக்களை வைத்தே கார்பரேட் அந்த வளத்தை கொள்ளையடிப்பதற்கு பயன்படும் கருவியாக மாறுகின்றார்கள். இது உலகம் முழுக்க கார்பரேட்டின் செயல்பாடு இப்படித்தான் இருக்கின்றது. இதெல்லாம் ஒரு ஐம்பது வருடத்தில் மிகப்பெரிய அழிவை சந்திக்கப் போகின்றது. தண்ணீர் இல்லாததனால் பெரிய பெரிய நாகரீகங்கள் அழிந்திருக்கின்றது, அதிக தண்ணீராலும் கூட அழிந்ததும் இருக்கின்றது. அதைப்போல சென்னையில் இருக்கக்கூடிய மக்கள் தண்ணீர் இல்லாததனால் வேறு இடத்திற்கு புலம்பெயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம இருக்கின்றது. கூடிய சீக்கிரத்தில் இது நடக்கப் போகின்றது என்பதே உண்மை.

இந்த நகரமயமாதலில் மக்களின் நுகர்வு என்பது தேவைக்கு அதிகமாகவும், அத்தியாவசியத்தை அழிப்பதாகவும் இருக்கின்றது. இந்த நகரமயமாதலையும், அதனால் வந்த நுகர்வு கலாச்சாரத்தையும் எப்படி பார்க்கின்றீர்கள் ?

 ஏற்கனவே சொன்னது போல் அடிப்படையில் நாம் அனைவரும் சந்தைப் பொருளாதாரம் எனப்படுகிற வணிக ரீதியான பொருளாதாரத்தில் சிக்கிக் கொண்டோம். இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் நமது ஆடம்பர விடயங்கள் சிக்கிக் கொண்டால் கூட பிரச்சனை இல்லை. அதில் தண்ணீர் , மின்சாரம் எல்லாம் சிக்கிக்கொண்டது தான் பயங்கரமான ஒன்று. அதற்காக நாம் போராடி தண்ணீர் விற்பனைக்குறிய பொருள் அல்ல, மின்சாரம் போன்ற பொருட்களும் ஒரு சேவைக்குறிய விடயம் என்பதற்கு போராடி வெற்றி பெறவில்லையென்றால் நம் எதிர்காலம் என்பது மிகவும் மோசமாக இருக்கும்.

alt text

பாலாறை மீட்டெடுக்க என்ன வழி இருப்பதாக நினைக்கின்றீர்கள் ? 

பாலாறு மட்டுமல்ல தமிழகத்திலுள்ள அனைத்து ஆறுகளையும் மீட்டெடுக்கனும். இன்னும் ஐம்பது வருடங்களுக்குத் தேவையான மணலை நம் கண் முன்னே தாமிரபரணியில் இருந்து  காவேரி வரை கொள்ளையடித்து விட்டனர். நான் குறிப்பிடுவது இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள தண்ணீர் பிரச்சனை, மத்திய அரசு, தமிழக அரசு இரண்டிற்குமான பிரச்சனை இதை எல்லாம் தாண்டி மணல் கொள்ளையை மிக முக்கியமான பிரச்சனையாக பார்க்கின்றேன்.  அதை பெரிய அளவில் போராட்டம் செய்து அரசை கேள்விக் கேட்டு இதைத் தடுத்து நிறுத்தவில்லையென்றால் நாம் மிக மோசமான விளைவை மேலும் சந்திக்க நேரிடும். இப்போதைய சூழலுக்கு முற்றிலுமாக மணல் கொள்ளைய 0% அளவிற்கு நிறுத்தினால் தான் நாம் தப்பிக்க முடியும். வீடுகட்டுவதற்கு போன்ற காரணங்களைச் சொல்லி நம்மை ஏமாற்றிதான் மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. அது வீடு கட்டப் பயன்படுவதில்லை. வெளி நாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. வீடு கட்டுவதற்கான தேவை என்பது மிகக் குறைவு. அதே போல் வீடுகட்டும் முறையும் மாற்றியமைக்கப்பட வேண்டும். சூழலுக்கு இசைவாக மணலை அதிகம் பயன்படுத்தாத பசுமை வீடுகள் கட்டப்பட வேண்டும். அன்றாட வாழ்க்கையில் காலை முதல் மாலை வரை சுற்றுச் சூழலுக்கு இசைவான பல விடயங்களைச் செய்ய வேண்டும். இதெல்லாம் ஒன்றினையும் போதுதான் நதிகள் காப்பாற்றப்படும். ஒரு முதலமைச்சரே நேரடியாக கொள்ளையடிக்கக்கூட மிணல் கொள்ளைப் பிரச்சனையை கேள்வி கேட்டு முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும். மூன்றடி அள்ளுவது ஐந்தடி அள்ளுவது போன்ற ஏமாற்று வேலைகளெல்லாம் இல்லாமல் ஒரு இருபது வருடங்களோ , ஐம்பது வருடங்களோ தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் தான் மறுபடி நதியைக் காப்பாற்ற முடியும்.

alt text

மணல் ரீதியான , மரங்கள் ரீதியான, கழிவு ரீதியான விடயங்களை சீர் செய்ய முனைவதன் மூலம் தமிழக தண்ணீர் பிரச்சனையை ஈடுகட்ட முடியும் தானே ?

ராஜேந்திர சிங் என்ன சொல்லுகிறார் என்றால் "தமிழகத்தில் தேவைக்கு அதிகமாகவே மழை நீர் பொழிகின்றது" என்கிறார்.

அதை முறையாக சேகரித்துப் பராமரிக்கக்கூடிய  விடயங்கள் இல்லை என்பதே நமது முக்கியமான பிரச்சனை என்று பார்க்கிறேன்.

 

 

Leave Comments

Comments (0)