நா. முத்துசாமி – தமிழ் நாடக ஆளுமை

/files/detail1.png

நா. முத்துசாமி – தமிழ் நாடக ஆளுமை

  • 120
  • 0

-  சுகுமார் சண்முகம்

கலை மற்றும் சமூகத்தைப் பற்றிய ஆழமான புரிதலைக் கொண்ட நா.முத்துசாமி அவர்கள், சிறுகதை, நாடகம், கட்டுரைகள் போன்ற இலக்கிய படைப்புகள் மூலம் தனக்கென ஒரு எழுத்து நடையை உருவாக்கி அதன் மூலம் தன்னை ஒரு சிறந்த எழுத்தாளராக இச்சமூகத்தில் அறிமுகம் செய்துகொண்டார். இலக்கியத்தோடு நிறுத்திக்கொள்ளாமல், நாடகத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, சென்னையில் கூத்துப்பட்டறை என்ற நாடக அமைப்பை நிறுவிய அவர், வழக்கமான நடிப்பு, நாடக முறைகளைத் தவிர்த்து தனக்கான ஒரு கோட்பாட்டை நாடகத்திலும், பிரதிகளிலும் கொண்டுவந்தார். மேலும், தெருக்கூத்துக் கலைகளின் நுணுக்கங்களையும், தெருக்கூத்துக் கலைஞன் தன்னை தயார்படுத்திக்கொள்ளும் முறைமைகளையும் தன்னுடைய நவீன நாடக நடிகர்களைப் பின்பற்ற வைத்தார். 
 
மனிதனின் சிந்தனைக்கேற்ப மேற்கத்திய நாடுகளில் நாடகங்கள் பல தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு தளத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், தமிழ் நாடகத்தை மேற்கத்திய நாடகத்திற்கு இணையாகக் கொண்டுசெல்ல முயற்சித்து, புதிய முறைகளையும், வடிவங்களையும் தன்னுடைய நாடக பரிசோதனை மூலம், தமிழ் நாடகத்தில் அறிமுகப்படுத்தியவர். 

அதுமட்டுமின்றி இந்திய மற்றும் உலக அளவில் பிரபலமாக இருந்த சில நாடக ஆளுமைகளைப் பயிற்சிப்பட்டறைக்கு அழைத்து பல்வேறு நாடகக் கோட்பாடுகளையும், பயிற்சிகளையும் தன்னுடைய மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வைத்தார். மேலும் அவர் தன்னுடைய மண் சார்ந்த இசை மற்றும் நாட்டுப்புறக் கலைகளைப் புரிந்துகொண்டு, அதன் முக்கியத்துவத்தை மாணவர்களுக்குப் பயிற்றுவித்து, நேர்த்தியான நாடகக்கலைஞர்களாக உருவாக்கியவர். 

ஆரம்ப காலகட்டத்தில் அவரது இயக்கத்தில் உருவான அக்கினிக் குஞ்சு, தூத கடோத் கஜா, விறகு வெட்டிகள் போன்ற நாடகங்கள், அவருடைய திறமையான நெறியாளுகையை வெளிப்படுத்தியதோடு, பசுபதி, கலைராணி, ஜெயகுமார், ஜெயராவ், போன்ற சிறந்த நடிகர்களை உருவாக்கியது.

அவர் எழுதி, இயக்கிய நாற்காலிக்காரர், சுவரொட்டிகள் மற்றும் உந்திச்சுழி போன்ற நாடகங்கள் சமகால அரசியல்களை தன்னுடைய வசனங்கள் மற்றும் குறியீடுகளைக் கொண்டு நவீன நாடகம் மூலம் அவர் காட்சிப்படுத்திய விதங்கள், தமிழ் நாடக உலகிற்கு புதியதாக இருந்தது மட்டுமின்றி, பல பார்வையாளர்கள் முன் சமூகம் சார்ந்த கேள்விகளை முன்வைத்து  பெரும் தாக்கத்தை உண்டாக்கியதே, அவரை ஒரு சிறந்த நாடகவியலாளராகவும், ஆளுமையாகவும் உருவாக்கக் காரணமானது. 

Leave Comments

Comments (0)