‘மகாத்மாக்களிடம்’ ஜாக்கிரதையாக இருங்கள்! பகுதி -4

/files/detail1.png

‘மகாத்மாக்களிடம்’ ஜாக்கிரதையாக இருங்கள்! பகுதி -4

  • 115
  • 0

-தமிழில்: கொற்றவை

(2)    திரு.காந்தியின் ‘ஹரிஜன சேவா சங்கம்’

 டிசம்பர் 1932 இல் திரு.காந்தி தீண்டப்படாதோர் சமுகத்தின் ஊழியர்கள் என்றொரு சங்கத்தை தொடங்கினார், பின்னர் அதற்கு ஹரிஜன் சேவா சங்கம் என்று பெயர் மாற்றினார்.விஷ்ணு பக்தர்கள் அப்பெயரை ஏற்றுக் கொண்டனர், ஆனால் சைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை ஏனென்றால், ‘ஹரி’ என்றால்  விஷ்ணு, ‘ஹரா’ என்றால் சிவன்! தீண்டப்படாதோரை ‘ஹரிஜனர்கள்’ என்றழைப்பதால், ஹரி பலம் வாய்ந்தவராகிவிடுவார் என்று சைவ பக்தர்கள் அஞ்சினர். அதனால் அவர்களும் ஹரி முகாமில் சேர்ந்தார்கள் (‘ஹரி-ஹர்-ஜன்’ என்று பெயரிட்டிருந்தால் இரண்டு கடவுள்களும் இணைந்து தீண்டப்படாதோரை காப்பாற்றி இருக்கலாம்).திரு.காந்தி, ‘ஹரிஜன்’ என்றால் ‘கடவுளின் குழந்தைகள்’ என்று பொருள் சொல்லி சைவர்களை சமாதானப்படுத்தினார். ஹரிஜனர்கள் ‘கடவுளின்’ பிள்ளைகள் என்றால் மற்றவர் எல்லாம் எவர் பிள்ளைகள்? இதை அவர் தெளிவுபடுத்தவில்லை.
‘ஹரிஜனர்கள்’ என்னும் அந்தப் பதம் குறித்து அம்பேத்கர் பின்வருமாறு விளக்குகிறார்:

“தீண்டப்படாதோர் என அழைக்கப்படுவதற்குப் பதிலாக இப்போது ஹரிஜனங்கள் என அழைக்கப்பட்டனர்... ஹரிஜனம் என்ற பெயரைத் தாழ்த்தப்பட்ட மக்கள் அறவே வெறுக்கின்றனர்.இந்தப் பெயருக்கு ஆட்சேபம் தெரிவித்துப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவதாக இந்தப் பெயர் சூட்டப்பட்டதால் அவர்கள் நிலைமை ஒன்றும் மேம்பட்டுவிடவில்லை; இந்துக்களின் மதிப்பில், பார்வையில் அவர்களை உயர்த்திவிடவில்லை பழைய மொந்தையில் புதிய கள் என்றே இப்புதிய பெயரை அவர்கள் கருதுகின்றனர். ஹரிஜனங்கள் என்பது பழைய தீண்டப்படாதோரைக் குறிக்கிறது என்பது எல்லாருக்குமே தெரியும்.இந்தப் புதிய பெயர் தீண்டாமை என்னும் சாபத்திலிருந்து, சாபத் தீட்டிலிருந்து தாழ்த்தப்பட்ட மக்கள் விடுபடுவதற்கு எந்த வழியையும் காட்டவில்லை.தாழ்த்தப்பட்ட இனத்தோர் பழைய பெயருடன் எவ்விதம் பழிக்கப்பட்டார்களோ அவ்விதமே புதிய பெயருடன் இழிவுபடுத்தப்படுகிறார்கள்; இதில் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டாவதாக, தீண்டப்படாதவர்கள் என்று அழைக்கப்படுவதையே தாங்கள் விரும்புவதாக அவர்கள் கூறுகிறார்கள், எங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்கை, கொடுமையை அதன் சொந்தப் பெயரால் அழைப்பதுதான் மேல் என்பது அவர்களது வாதம்.மேலும், நோயாளிக்கு தான் எந்த நோயால் அவதிப்படுகிறோம் என்று தெரிந்திருப்பது நல்லது.அதுமட்டுமல்ல, தீங்கு இழைத்தவருக்கு அந்தத் தீங்கு அகற்றப்படாமல் அப்படியே நீடிக்கிறது என்பது தெரிந்திருப்பதும் அவசியம்.எதையும் மூடிமறைப்பது இப்போதுள்ள உண்மைகளைப் பற்றித் தவறான எண்ணத்தையே தோற்றுவிக்கும்.பழைய பெயரை மூடிமறைப்பதற்குக் கொண்டுவரப்பட்ட இந்தப் புதிய பெயர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மோசடியையும் இந்துக்களுக்குத் தவறான முறையில் அளிக்கப்பட்ட மன்னிப்பையுமே குறிக்கும்... தாழ்த்தப்பட்டோரில் வீறுமிக்கவர்கள் இந்தப் பெயர் மிகுந்த தரக்குறைவை, இழிவை, தாழ்வைக் குறிக்கிறது என்பதை உணர்ந்து வெகுண்டெழுந்தனர். இதனால், ஹரிஜன் என்னும் பெயரைச் சட்டரீதியாக்குவதற்கு காங்கிரஸ் அரசாங்கம் பம்பாய் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டுவந்தபோது தாழ்த்தப்பட்டோர் அனைவரும் கோபாவேசம் கொண்டு ஒரே மனதாக வெளிநடப்புச் செய்தனர்... எனினும் இது தாழ்த்தப்பட்ட மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று என்பதும், அது அவர்களுக்கு எத்தகைய நன்மையையும் செய்யவில்லை என்பதும் மறுக்கமுடியாத, அசைக்கமுடியாத உண்மைகள்”.
இந்தப் பொருளில், ‘ஹரிஜன்’ என்னும் பதம் தீண்டப்படாதோருக்குப் பிடிக்கவில்லை என்பதைக் கூறி அம்பேத்கர் கசப்புடன் சொல்கிறார்:

“தாழ்த்தப்பட்டோரில் வீறுமிக்கவர்கள் (more manly- ஆண்மை மிக்கவர்-மொ.ர்)இந்தப் பெயர் மிகுந்த தரக்குறைவை, இழிவை, தாழ்வை குறிக்கிறது என்பதை உணர்ந்து வெகுண்டெழுந்தனர்”.

இந்தப் புதிய பெயரின் இழிவான தாக்கங்களை பெண்கள் எதிர்க்கவில்லை என்பது இதன் பொருளா? இது தீண்டப்படாதப் பெண்களை அவமதிப்பதற்குச் சமம்.ஆனால், ஒன்றிரண்டு இடங்கள் தவிர, அம்பேத்கரின் எழுத்தில் இத்தகைய பாணி இருக்கவில்லை.மாறாக பெண்கள் பற்றிய கவனமான சொற்களையே காண முடிகிறது. ‘ஆண்மை மிக்கவர்கள்’ போன்ற சொல்லாடல்கள் பெண்ணை அவமதிக்கும் கலாச்சாரத்தையே தொடர்புபடுத்தும்.இது போன்ற மொழியை ஒருவர் கைவிட வேண்டும்.

சரி, காந்தி தொடங்கிய ஹரிஜன் சேவா சங்கத்தின் குறிக்கோள்கள் என்ன? தீண்டப்படாதோருக்குத் தனி ஏற்பாடுகள் செய்வது மட்டுமே: தனிக்கிணறு, தனி மருத்துவமனை, எல்லாம் தனி! காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் தீண்டத்தகாதோரின் குழந்தைகளுக்கு உதவித்தொகை உண்டு.இரண்டாவது குறிக்கோள், அமைதியான முறையில் தீண்டாமையைக் கடைப்பிடிக்கக்கூடாது என்று இந்துக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது. இந்துக்கள் மத்தியில் பிரிவினை நேர்ந்தால், அதை சகித்துக் கொள்ள முடியாது என்று சொல்லும் காந்தி, இந்தத் தனி ஏற்பாடுகள் மூலமே தனது சேவையைத் தொடங்கினார். சாதிக்கலப்பு விருந்துகளைக் கூட இந்த சங்கம் ஊக்குவிக்கவில்லை.மாறாக, அது தனது வேலை இல்லை என்று அப்பட்டமாக அறிவித்தது “சாதியமைப்பு ஒழுப்பு மற்றும் சமபந்தி விருந்து போன்ற சமூக சீர்திருத்தங்களை இந்தச் சங்கத்தின் செயற் பரப்புக்கு வெளியே வைக்கவும்”.

தீண்டாமையின் அடித்தளத்தை அசைக்கக் கூட விரும்பவில்லை அச்சங்கம் என்பதே இதன் பொருள்!

இந்தச் சங்கத்தை அவர்கள் தொடங்கிய போது (‘ஹரிஜன் சேவா சங்கம்’ என்று பெயர் சூட்டுவதற்கு முன்),செயற்குழுவில் மூன்று தீண்டப்படாதோரை எடுத்துக்கொண்டனர்: அம்பேத்கர், எம்.சி.ராஜா மற்றும் ஆர்.ஸ்ரீனிவாசன்.
லீகின் காரியதரசி, தக்கருக்கு அம்பேத்கர் நீண்ட கடிதம் ஒன்றை எழுதினார், சங்கத்தின் நடவடிக்கை குறித்துத் தனது ஆலோசனைகளை அதில் எழுதினார்.அவ்வாலோசனைகள் பின் வருமாறு: எல்லா பொது கழிவறைகளையும், இந்துக்களைப் போல் தீண்டப்படாதோரும் பயன்படுத்தும் உரிமை இருக்கிறது, அதை அவர்கள் தைரியமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதைச் சங்கம் சொல்ல வேண்டும்.இது இரத்தக் களரிக்கும் வழிவகுக்கலாம்.அது நடந்தாலும், வேறு எந்த வகையிலும் நினைத்ததை அடையும் வழி இல்லை. நீதிமன்ற வகுப்புகளில் இந்தச் சங்கம் தீண்டப்படாதோருக்கு உதவிகள் செய்ய வேண்டும்.தீண்டாமையைப் பின்பற்றக்கூடாது என்றும், அவர்கள் தொழில் செய்யும் போது வீட்டு வேலை, அலுவலப் பணி ஆகியவற்றில் தீண்டப்படாதோருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் இந்துக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.இந்து மருத்துவர்கள் தயக்கமின்றி தீண்டப்படாதோருக்கு மருத்துவம் செய்ய வேண்டும்.அந்தச் சங்கம் சமூக சீர்திருத்தத்திற்காகப் பணி செய்யும் தொண்டர்களைச் சார்ந்திருக்க வேண்டும்.தீண்டப்படுபவர், தீண்டப்படாதார் இருவரையும் பிணைக்கக்கூடிய ஒரே விசயம் அன்பு.குடும்பத்திற்கு வெளியே, நியாயம் மட்டுமே அன்பை திறக்கவல்லது, தீண்டப்படுபவர்கள், தீண்டப்படாதாருக்கு நியாயம் செய்வதை சங்கம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறாக அம்பேத்கர் அக்கடிதத்தில் தனது பார்வையை எடுத்துரைத்தார்.

ஆனால் காந்தியோ, தக்கரோ இந்தப் பார்வையை வரவேற்கவில்லை.அம்பேத்கரின் கடிதத்திற்கு அவர்கள் பதில் கூட அளிக்கவில்லை.தனது திட்டங்களுக்கு மதிப்பில்லை, அங்கிருந்தால் எதையும் சாதிக்க முடியாது என்றுணர்ந்த அம்பேத்கர், லீகிலிருந்து விலகினார். மற்ற இருவரும் கூட வெளியேறினர்.

யெரவாடா சிறையில், செப்டம்பர் 25,1932 அன்று தனது உண்ணாவிரதத்தை காந்தி முடித்த அன்று, காங்கிரஸ் கட்சி தீண்டாமை குறித்து பம்பாயில் ஒரு கூட்டம் நடத்தியது.மதன் மோகன் மாளவியா போன்ற தலைவர்கள், தீண்டாமை என்னும் தீமையை ஒழிக்க பெரும் பணம் செலவழிக்க வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தபோது, அதற்கு அவ்வளவு பணம் தேவையில்லை என்று கூட்டத்தில் இருவர் கூறினர். அங்கு கூடியிருக்கும் ஆண்களும், பெண்களும் தீண்டப்படாதோரை அவர்கள் இல்லங்களில் சேர்த்துக் கொண்டாலே போதுமானது என்றார்!

இந்து ஆண்கள், பெண்கள் தீண்டாமையைக் கைவிட ஒரு பைசா கூடத் தேவையில்லை.ஆனால், அத்தகைய நல்ல ஆலோசனையைக் கூட பங்கேற்றவர்கள் விரும்பவில்லை.தலைவர்களுக்கு அது சுத்தமாகப் பிடிக்கவில்லை! அவர்கள் ஆலோசனை குறித்துக் கவலைப்படவில்லை. “ஆம், இன்று முதல் தீண்டப்படாதோரை நம் இல்லங்களுக்கு அழைப்போம்” என்று சொல்லி முடித்திருக்கலாம்..ஆனால் அவர்கள் ஆலோசனைக்கு பதிலளிக்கவே இல்லை.

தீண்டாமைக்கெதிராகப் போராட அந்தச் சங்கத்தை தொடங்கியவர்கள், சங்கத்தில் உறுப்பினராக விரும்புவோர் எவரும் தீண்டாமையைப் பின்பற்ற கூடாது என்று நிச்சயமாக ஒரு நிபந்தனையை வகுத்திருக்க வேண்டும்.ஆனால் அச்சங்கத்தில் அப்படி ஒரு நிபந்தனை இருக்கவில்லை.ஏனென்றால், அவர்கள் முதலில் அதைக் கடைபிடிக்க வேண்டும் தங்கள் வீடுகளில் தீண்டப்படாதோரை அனுமதிப்பது அத்தனை பெரிய கஷ்டமா!

இந்துக்கள் மனம் மாறாமல் தீண்டாமைப் பேய் மறைய வேண்டும்! பெருமளவிலான பணத்தைத் திரட்டுதல், தனிக்கிணறு, பள்ளிகள் அமைத்தல், இவை தாமாகவே தீண்டாமைக்கெதிரான போராட்டத்தை நடத்திக் கொள்ள வேண்டும்!

தீண்டப்படாதோரை உயர்த்துவதற்காகத் தொடங்கப்பட்ட சங்கத்தில் தீண்டப்படாதோரே இல்லை.இது குறித்து அவர்கள் காந்தியிடம் கேள்வி எழுப்பியபோது, காந்தி வெவ்வேறு பதில்களை அளித்தார்:இது தீண்டப்படாதோருக்கான சங்கம், அவர்களால் ஆன சங்கம் அல்ல; தீண்டாமையைக் கடைப்பிடித்து இந்துக்கள் பாவம் செய்வதுபோல், இந்துக்கள் மட்டுமே அதை ஒழிக்கவும் வேலை செய்ய வேண்டும்; இந்தச் சங்கத்திற்கு இந்துக்கள் மட்டுமே நன்கொடை அளிக்கின்றனர், தீண்டப்படாதோர் அல்ல.அதனால் அவர்களுக்கு சங்கத்தில் இணையும் உரிமை இல்லை..

தீண்டப்படாதோருக்காக அமைக்கப்பட்ட ஒரு சங்கத்தில் அவர்களின் இருப்பு நன்மை செய்யுமா தீமை செய்யுமா? அவர்கள் இடம்பெற்றால் என்ன சேதம் விளையும்?

இந்துக்கள் பாவம் செய்வதால், அவர்கள் மட்டுமே அச்சங்கத்தில் பணிபுரிய வேண்டும் என்கிறார் காந்தி இல்லையா? ஆனால் ஒன்றை கவனமாகப் பார்க்க வேண்டும்- சங்கத்தின் நடவடிக்கைகளை, சமூகச் சீர்திருத்த எண்ணத்தோடு முன்னெடுத்தவர்கள் இந்துத் தொண்டர்கள் அல்ல.சம்பளத்திற்கு அமர்த்தப்பட்ட இந்துப் பணியாளர்கள்!

‘நன்கொடை’ விசயத்திற்கு வருவோம், கேட்டால், தீண்டப்படாதோரும் நன்கொடை அளிக்கத் தயாராக இருக்கிறார்கள்.ஆனால், தீண்டப்படாதோரையும் உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கும், காந்திக்கு இந்த எண்ணம் பிடிக்கவில்லை.அவர்கள் சங்கத்தில் இணைந்தால், இந்துக்களுக்கெதிராகத் தீவிரமாகச் சண்டையிட வேண்டும் என்று சொல்லக்கூடும் இல்லையா? அதனால் அவர்களை உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள காந்தி விரும்பவில்லை.

தீண்டப்படாதோர் அரசாங்கச் சட்டங்களைப் பயன்படுத்த இந்துக்கள் அனுமதிப்பதில்லை.இருந்தாலும் காந்திக்கு இந்துக்கள் மீது கோபம் இல்லை.இந்துக்களுக்கெதிராகப் போராட தீண்டப்படாதோரை ஊக்குவிக்கும் அணுகுமுறை காந்தியிடம் இல்லை.இந்துக்களை ஆற்றுப்படுத்துதல், அவர்களிடம் மேல் முறையீடு செய்தல் இதுவே காந்தியின் வழி: நீங்கள் ஏன் சிறிது மாறக்கூடாது? உங்களுக்குப் பிடித்தால் மட்டும் சிறிது மாறுங்கள்.பிடித்தால் மட்டும்! தீண்டப்படாதோரின் பிள்ளைகள் பள்ளிக்கு வர நீங்கள் ஏன் அனுமதிக்கக்கூடாது? இது மட்டும் செய்யுங்கள்! பெரிதாக ஏதும் வேண்டாம்! உறுதியாக ஆணையிட்டால், இந்துக்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகத் திரும்பிவிடுவார்கள் என்று காந்திக்குப் பயம்! அவருடைய தலைவர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள அனைவரோடும் இணக்கமான உறவில் இருக்க வேண்டும்.இதுவே அவருடைய அரசியல் தந்திரம்! வேறு சொற்களில் கூறுவதேனில், இந்துக்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல், ‘தீண்டப்படாதோருக்குச் சேவை என்னும் நாடகமாற்றுவதே’ அவரது குறிக்கோள்.

கவிதா சம்பவம்: அஹமதாபாத் மாவட்டத்தில் கவிதா என்னும் கிராமத்தில் சில தீண்டப்படாதோர் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பினர்.ஆகஸ்ட்8,1935 அன்று தீண்டப்படாதோரின் குழந்தைகளைப் பள்ளிகளில் அனுமதிக்கும் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது.அதுமுதல், அக்கிராமத்தில் தீண்டப்படாதோரின் துன்பங்கள் அதிகரித்தது.அவர்களின் குடிசைகளை இந்துக்கள் (பெண்கள் உட்பட) தாக்கத் தொடங்கினர், அவர்களின் வீட்டுப் பொருட்களைச் சேதப்படுத்தினர், உள்ளிருப்பவர்களை அடித்துத் துன்புறுத்தினர், கிணறுகளில் மண்ணெண்ணை ஊற்றினர், தீண்டப்படாதவர்களைப் புறக்கணித்தனர், அவர்களுக்குப் பொருட்கள் விற்பதை நிறுத்தினர்.நாளுக்கு நாள் இதுபோன்ற அட்டூழியங்கள் பெருகின.அரசாங்கம் சட்டம் இயற்றியுள்ளதே என்னும் நம்பிக்கையில் தீண்டப்படாதோர் தங்கள் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்த்ததே அதற்குக் காரணம்.இந்தக் கொடுமைகளை பொறுக்க முடியாமல்,காந்தி நிர்மாணித்த ஹரிஜன் சேவா சங்கத்தை அணுகினர்.தங்கள் துன்பங்களை எடுத்துரைத்து, கிராமத்தை விட்டு வெளியேறும் முடிவை அறிவித்தனர்.

இந்த விவசாயம் காந்தியின் காதுகளை எட்டியது.தீண்டப்படாதோரின் முடிவு காந்திக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவர்கள் திட்டத்தைச் செயல்படுத்துமாறு அறிவுரை கூறினார் காந்தி.

“தன் கையே தனக்கு உதவி.இதைவிடச் சிறந்த உதவி வேறு எதுவுமே இல்லை.தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்பவர்களுக்கு ஆண்டவன் உதவுகிறார்.சம்பந்தப்பட்ட ஹரிஜனங்கள் கவிதாவின் மண்ணை விட்டு வெளியேறத் தீர்மானித்திருப்பதாகக் கூறப்படுகிறது.இவ்வாறு செய்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவதோடு, இதே போன்று நடத்தப்படும் இதரர்களுக்கும் பாதை செப்பனிட்டுத் தந்தவர்களாவார்கள். வேலை தேடுவதற்கே இடம் விட்டு இடம் செல்ல வேண்டியிருக்கும் போது சுயமரியாதையைத் தேடி அவர்கள் இவ்வாறு செய்வதில் தவறு என்ன இருக்க முடியும்?

அன்பாதரவற்ற இந்தக் கவிதாவிலிருந்து வெளியேறுவதற்கு ஹரிஜனங்களின் நலத்தில் அக்கறை கொண்டவர்கள் இந்த ஏழை எளிய குடும்பங்களுக்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன்”.

தீண்டப்படாதோர் இடம்பெறும் கிராமத்தில் இந்துக்கள் இருக்கமாட்டார்களா? அவர்கள் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்க அனுமதிப்பார்களா? அங்கும் இதே விவசயங்கள்தான் நடக்கும் என்று காந்திக்குத் தெரியாதா?

அவருக்கு எல்லாம் தெரியும், பின்னர் அவர் அதைச் சொல்ல வேண்டாமா? “எங்கும் செல்லாதீர்கள்.இதே நிலைதான் எல்லா இடத்திலும் இருக்கிறது. எங்கிருக்கிறீர்களோ அங்கிருந்துகொண்டே உங்கள் போராட்டத்தை தொடருங்கள்.உங்களை கொடுமைப் படுத்துபவர்கள் மீது புகார் அளியுங்கள்! ஹரிஜன் சேவா சங்கம் உங்களுக்கு உதவியாக இருக்கும்!” என்று அவர் சொல்லியிருக்கலாம், அல்லவா?

ஆனால் தீண்டப்படாதோரை இத்தகைய கலகத்தைச் செய்வதற்குத் தயார்படுத்தும் எண்ணம் காந்தியிடம் இல்லை.தீண்டப்படாதோர் சர்ச்சைகளில் ஈடுபடாமல், இந்துக்களின் கருணையை, தயையை எதிர்பார்த்து இருக்க வேண்டும், அடிபணிந்து நடக்க வேண்டும்.இந்துக்களால் துன்புறும்போது இடம் விட்டு இடம் பெயரவேண்டும். ‘சுய-மரியாதை’ பற்றிய காந்தியின் போதனை இதுவே!

தீண்டப்படாதோருக்கு இந்த போதனை பிடிக்கவில்லை.அவர்கள் கவிதாவை விட்டு வெளியேறும் எண்ணத்தை விட்டுவிட்டார்கள்.அதே கிராமத்தில் இருந்துகொண்டு, இந்துக்களுக்கெதிராக வழக்குத் தொடுத்தார்கள்.காந்தியின் படைத்தளபதி களத்தில் நிழைந்தார், அந்த கிராமத்திற்குச் சென்றார்.தீண்டப்படாதோருக்கு அழுத்தம் கொடுத்து இந்துக்களுக்கெதிராகப் போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப்பெறச் செய்தார் இந்த பெரிய மனிதர். ‘ஹர்ஜனர்களுக்காக’ ஹரிஜன் சேவா சங்கம் ஆற்றிய சிறந்த ‘சேவை’ இதுவே.

காரே கிளைக்கதை: 1938இல் காங்கிரஸ் அரசாங்கம் இருந்த மத்திய மாகாணத்தில் ஒரு நெருக்கடி தோன்றியது.தன்னுடைய பழைய மந்திரி சபையை இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி, புதிய மந்திரிசபை அமைத்து, அதில் அக்னி போஜ் என்னும் ஒரு தீண்டப்படாதோரை மந்திரியாக நியமித்தார்.இது முதல் காரேவுக்கு தொல்லை தொடங்கியது.காங்கிரஸ் பாராளுமன்ற கட்சியை அவர் கலந்தாலோசிக்கவில்லை என்றும், கட்சி ஒழுக்கத்தை மீறினார் என்றும் கூறி காரேவை பிரதம மந்திரி பதவியிலிருந்து நீக்கியது காங்கிரஸ் அரசாங்கம்.தீண்டப்படாத ஒருவரை மந்திரியாக நியமித்ததே அவர் செய்த குற்றம்.அக்னிபோஜ் தீண்டப்படாதவராக இருந்தபோதிலும், அவர் ஒரு பட்டதாரி, பேச்சாளர் மற்றும் கட்சி உறுப்பினர்.இருந்தாலும், தீண்டப்படாத ஒருவரை மந்திரியாக்கியதை காந்தியால் சகித்துக் கொள்ள முடியவில்லை.”ஹரிஜனர் ஒருவரை ஏன் மந்திரியாக்கினீர் என்று கூறி காந்தி தன்மீது குற்றம் சாட்டினார் என்று காரே வெளிப்படையாகவே கூறி வந்தார்” காந்தி அவரிடம் சொன்னதை எழுத்தில் அறிவிக்குமாறு காரேவிடம் அம்பேத்கர் கூறினார். அது பின்வருமாறு:
“எனது இரண்டாவது அமைச்சரவையில் ஒரு ஹரிஜனைச் சேர்த்துக் கொண்டமைக்காக மகாத்மா காந்தி என்னைக் கண்டித்தார்.இது ஹரிஜனங்களின் மேம்பாட்டிற்காக காங்கிரசே வகுத்தளித்தத் திட்டம், இதன் பொருட்டு மகாத்மாஜி சாகும்வரை உண்ணாவிரதமிருந்தார்.இத்தகைய திட்டத்தைச் செயல்படுவதற்குச் சந்தர்ப்பம் வாய்த்தபோது என்னால் முடிந்ததைச் செய்தேன்.இவ்வாறு செய்ததில் நான் தவறு ஒன்றும் இழைத்திடவில்லை என்று உறுதிப்பட பதில் கூறுவேன்.என் சுயநல நோக்கத்திற்காகவே இதை நான் செய்ததாக மகாத்மாஜி என்மீது குற்றம் சாட்டினார்.இந்தக் குற்றச்சாட்டை நான் வன்மையாக மறுத்தேன்; எனக்கு எந்த சுயநல நோக்கமும் இல்லை என்பன என் ராஜினிமாவே மெய்ப்பிக்கும் என்று கூறினேன். பிறகு, என் செயல்மூலம் அந்த அப்பாவி சமூகத்தின் உறுப்பினர்களிடையே வேற்றுமை வித்தைத் தூவிவிட்டதாகவும், இதன் மூலம் காங்கிரசுக்கு நான் தீங்கிழைத்து விட்டதாகவும் மகாத்மாஜி வருத்தப்பட்டார்”.

இது போன்ற இலட்சியங்களையும், ஆசைகளையும் தீண்டப்படாதவர்களிடம் தூண்டிவிட்டது தவறு என்றும் மன்னிக்க முடியாத ஒருமோசமான செயல் என்றும் திரு.காந்தி சொன்னதாக மருத்துவர் காரே கூறினார்.

காரே சொன்னது உண்மை என்று நம்பலாம்.ஏனென்றால், காரேவின் இராஜினாமாவிற்குப் பின்னர் அமைக்கப்பட்ட புதிய மந்திரிசபையில் அக்னி போஜ் இடம்பெறவில்லை. அவர்கள் அவரை மீண்டும் மந்திரியாகச் சேர்க்கவில்லை.

“இதற்கு விளக்கம் கேட்கும் பொருட்டு ஏராளமான தாழ்த்தப்பட்ட மக்கள் ஷெகானுக்குச் சென்றனர்.இதனை எதிர்பார்த்த திரு.காந்தி உடனே மெளனவிரதம் அனுஷ்டிக்க ஆரம்பித்துவிட்டார்; இதனால் அவரிடமிருந்து எத்தகைய விளக்கமும் பெற இயலவில்லை; பிறகு, மத்திய மாகாணங்களின் காங்கிரஸ் அமைச்சரவையில் தீண்டப்படாதோர் ஒருவரை சேர்த்துக் கொள்ளாததற்காக திரு.காந்திக்கு எதிராக அவர்கள் சத்தியாகிரகம் செய்ய ஆரம்பித்தனர். இந்தச் சங்கடத்திலிருந்து மீளதிரு.காந்தி ஷெகானை விட்டுக் கிளம்பி, பட்டாணியர்களுக்கு அகிம்சையைப் போதிப்பதற்காக வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் சுற்றுப்பயணம் செய்யக் கிளம்பிவிட்டார்”.

நிறைய தீண்டப்படாதவர்கள்கள் காங்கிரஸ் கட்சி வாயிலாக சட்டசபைக்குள் நுழைந்தனர்.ஆனால் ஒருவரும் மந்திரியாக முடியவில்லை. 1942 இல் காங்கிரஸ் கட்சியின் தீண்டப்படாத நண்பர் காந்தியிடம் ஐந்து கேள்விகள் கேட்டார்.அதில் ஒரு கேள்வி:

“மாகாண சட்டமன்றங்களில் உள்ள பெரும்பாலான தாழ்த்தப்பட்ட இன உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்ற தாழ்த்தப்பட்ட இன சட்டமன்ற உறுப்பினர்களிலிருந்து அமைச்சர்களை நியமிக்கும்படி காங்கிரசுக்கும் சட்டமன்றங்களிலுள்ள பல்வேறு பெரும்பான்மைக் கட்சிகளின் தலைவர்களுக்கும் நீங்கள் ஆலோசனைக் கூறுவீர்களா?..காந்தியின் பதில்: “இவ்வாறு நான் ஆலோசனை கூற இயலாது. சமுதாயத்தின் புறக்கணிக்கப்பட்ட இனங்களைப் பாதுகாக்கும் பணியை அவர்களுக்கும் நாட்டுக் ும் ஊறு விளைவிக்கும் அளவுக்குச் செயல்படுத்த முற்படலாகாது.ஓர் அமைச்சர் என்பவர் அனைவரது நம்பிக்கையையும் பெற்ற தலைசிறந்த நபராக இருக்க வேண்டும்.ஒருவர் ஓர் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பில் இடம்பெற்றுவிட்ட பிறகு உயர் நிலைகளை அடைய வேண்டுமானால் அவர் தமது உள்ளார்ந்த தகுதிகளையே, திறமையையே செல்வாக்கையே சார்ந்திருக்க வேண்டும்”.

இந்தக் கொள்கை தீண்டப்படாதோருக்கு மட்டுமானது, இந்துக்களுக்கானதல்ல! அவர்களுக்கு, சட்டசபைக்கு தேர்வானால் போதும்.அவர்கள் மந்திரியாகலாம்.பிறப்பிலேயே அவர்களுக்குத் தகுதியும், பெருமையும் உள்ளது! தீண்டப்படாதோர் என்ன படித்திருந்தாலும், என்ன குணம் படைத்திருந்தாலும் அது பொருட்டல்ல.இதுவே காந்தியின் கொள்கை!

தகுதிப் பிரச்சினை குறித்து அம்பேத்கர் சொன்னது உண்மையே, பொறுப்புகளை நிறைவேற்ற ‘ஆற்றல்’ தேவை.இதை எவரும் மறுக்கவில்லை.ஆனால், இருக்கும் மக்களில் இருந்து ஆற்றல்மிக்கவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.அமைச்சராகும் நபர் மக்களின் பிரதிநிதி.அவர் அம்மக்களைப் போலவே புத்திசாலியாக இருப்பார்.மக்களில் இருந்து வரும் ஒரு பிரதிநிதி எப்படி நாட்டு மக்களைக் காட்டிலும் புத்திசாலியாக இருப்பார்? அதனால், இருப்பவருக்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும்.

‘அது பிரிட்டிஷுக்கு எதிராக சண்டையிடும் மேடை’ என்று அம்பேத்கர் குற்றம் சாட்டினார்.இயன்றவரை ஒற்றுமையாக இருந்தால், இந்தியர்கள் சுதந்திரம் பெற முடியும். இந்து-முஸ்லிம் ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சி இதனாலேயே.அரசியல் தந்திரமாகவேனும் தீண்டப்படாதோருடன் ஒற்றுமையை ஏற்படுத்த காங்கிரஸ் கட்சி முயலவில்லை.மேற்சொன்ன சம்பவங்கள் இந்த உண்மையை நிறுபிக்கின்றன.
அம்பேத்கர் காந்தி குறித்து இந்த விசயங்களை எழுதியிருக்கவில்லை என்றால், மக்கள் இன்றும் காந்தியின் சொற்களையே நம்பிக் கொண்டிருந்திருப்பர்.

1936இல் காந்தியிடம் ஒரு மாற்றத்தைக் கவனிக்க முடிகிறது.சமபந்தி விருந்து, சாதிக்கலப்பு திருமணம் ஆகியவற்றை ஏற்றுகொள்வதாகச் சொன்னார்.ஆகஸ்ட்15,1936 அன்று ஹரிஜனில் அவர் சொன்னார்:
“... அவ்வாறே சாத்திரங்கள் சாதிக்கு ஆதரவளிக்குமானால் (இன்று நாம் காண்கின்ற அருவருப்பூட்டுகின்ற நிலையில்) என்னை ஒரு இந்து என கூறிக் கொள்ள மாட்டேன் அல்லது இந்துவாக இல்லாமல் போகலாம்.ஏனெனில் கலப்பு மணத்தைக் குறித்தோ அல்லது சமபந்திபோஜனம் குறித்தோ எனக்கு நுணுக்க ஐயப்பாடு ஏதுமில்லை”.

எனினும், இது உண்மையான முன்னேற்றமா இல்லை வெறும் புதிய அரசியல் தந்திரமா என்று ஒருவர் பரிசோதிக்க வேண்டும்.தீண்டாமை ஒழிப்பில் காந்தி உண்மையில் எத்தனை அக்கறையோடு இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள அம்பேத்கரின் நூல்களில் 9 மற்றும் 16 ஆம் தொகுதிகளைப் படிக்கவும்! இதுபோல் டஜன் கணக்கில் சம்பவங்கள்.மகாத்மாவின் மனப்பான்மையைக் கண்டு உண்மையில் நீங்கள் கொதித்துப் போவீர்கள்.
தொகுதி 16ல் காந்தி குறித்து அம்பேத்கர் 14 கேள்விகளை வைக்கிறார்.அத்தனையும் காந்தியின் ‘நேர்மையை’ வெளிப்படுத்தும் சம்பவங்கள்.

நிறைய இடங்களில், அம்பேத்கர், தயக்கமின்றி, மேலெழுச்சியாய் காந்தியை, காந்தியிசத்தை: ‘மாபெரும் தந்திரசாலி’, ‘இலட்சியவாத அரசியல்வாதி’, ‘சிறுபிள்ளைத்தனமானவர் மற்றும் நேர்மையற்றவர்’, ‘பிசாசு’ (elf), ‘தந்திரத்தை அதிகப்படியாகச் செய்தவர்’, ‘முட்டாள் மற்றும் கலகவாதி’, ‘முதுகில் குத்துபவர்’, ’தீண்டப்படாதோருக்கு எதிராகச் சதி செய்பவர்’, ‘நம்பிக்கை துரோகி’, ‘மாயாவாதி, என்றெல்லாம் சாடினார். அவற்றுக்குரிய பின்புலத்தில் உள்ளடக்கத்தில் இவ்விமர்சனங்கள் சரியே.எது நியாயம், எது அநியாயம் என்று புரிந்துகொண்டால் இந்த விமர்சனம் நமக்கு மகிழ்வூட்டும்.மகாத்மாக்கள் குறித்தும், துணை மகாத்மக்கள் குறித்தும் இன்னும் எத்தனை இரகசியங்கள் மறைந்திருக்கின்றனவோ!
 

Leave Comments

Comments (0)