‘மகாத்மாக்களிடம்’ ஜாக்கிரதையாக இருங்கள்! பகுதி -3

/files/detail1.png

‘மகாத்மாக்களிடம்’ ஜாக்கிரதையாக இருங்கள்! பகுதி -3

  • 5
  • 0

-தமிழில்: கொற்றவை

2.’துணை மகாத்மாக்களிடம்’ ஜாக்கிரதையாக இருங்கள்!

கோவில் நுழைவு ‘மசோதா’ என்னும் ‘நாடகம்’: ரங்க ஐயர், என்னும் ஒரு காங்கிரஸ்காரர் மத்திய சட்டமன்றத்தில், மார்ச் 24,1932 இல் கோவில் மசோதாவை அறிமுகம் செய்தார்.மற்ற கட்சிகளிடமும், பொது மக்களிடமும் இந்த மசோதாவுக்கு ஆதரவு கோரும் பொறுப்பை ராஜகோபாலாச்சாரி மற்றும் பிர்லாவிடம் ஒப்படைத்தார் காந்தி.அந்த மசோதா இந்து பெரும்பான்மையினரின் கருணையை வேண்டி நின்றதால், அம்பேத்கரும் தீண்டத்தகாதோரின் மற்ற தலைவர்களும் அதற்கு ஆதரவுதர மறுத்தார்கள்.அந்த மசோதா பொது மக்கள் கருத்திற்காக ஆகஸ்ட் 1934 வரை சுற்றில் இருந்தது.

“இச்சமயம் ஓர் எதிர்பாராத சம்பவம் நடைபெற்றது.சட்டமன்றத்தைக் கலைத்து விட்டுப் புதிதாகத் தேர்தல் நடத்த இந்திய அரசாங்கம் முடிவு செய்தது.இந்த அறிவிப்பு திரு.ரங்கா அய்யரின் மசோதா சம்பந்தமாக மத்திய சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் இதுவரை கடைபிடித்துவந்த போக்கில் ஒரு திடீர் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது.அவர்கள் அனைவரும் ஒன்றுபோல் மசோதாவுக்கு எதிராகக் குரல் எழுப்பினர்; மசோதாவை மேற்கொண்டு ஆதரிக்கவும் மறுத்துவிட்டனர்.வாக்காளர்களிடம் அவர்களுக்கிருந்த அச்சமும் திகிலும் கிலியுமே இதற்குக் காரணம்.திரு.ரங்க அய்யரின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக இருந்தது”.

அந்த மசோதாவிற்கெதிராக முதல் பிரச்சாரத்தைத் தொடங்கியவர் ராஜகோபாலாச்சாரி.அதற்கு அவர் கொடுத்த காரணம்: ‘மத விசயத்தில் இனி காங்கிரஸ் தலையிடாது என்னும் உறுதிப்பாடு இருக்கிறதா என்று இந்து வேட்பாளர்கள் கேட்கிறார்கள், அதனால் இந்த மசோதாவைக் கைவிடுவது தவிர வேறு வழியில்லை’ என்றார்.

இந்த துரோகத்தைச் சகித்துக் கொள்ள முடியாமல் காங்கிரஸ் கட்சியையும்,ராஜகோபாலச்சாரியையும் சட்டசபையில் வசை பாடினார் ரங்க ஐயர்.ராஜகோபாலாச்சாரியின் நிலைப்பாட்டை ‘துரோகம்’ என்றும் காங்கிரஸ் ஒரு ‘முகமூடி அணிந்த நடனக்காரர்கள்’ கூடம் என்றும் அவர் கூறினார்.

சரி, இந்த இடத்தில் காந்தி என்ன செய்தார்? இதை நாம் நிச்சயம் குறித்துக் கொள்ள வேண்டும்.யெரவாடா சிறையில் உண்ணாவிரதம் இருந்த நாள் முதல், தீண்டப்படாதவர்களின் பிரச்சினையில் அவர் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர் என்று சொல்லி வந்திருக்கிறார்.நவம்பர் 4,1932 அன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் சொல்வது

“ஒப்பந்தத்தின் இந்த ஜீவாதாரமான ஷரத்துகள் சாதி இந்துக்களால் செயல்படுத்தப் படவில்லை என்றால் நான் ஆண்டவனையும் மனிதனையும் எதிர்கொள்வதற்கு எப்படி உயிரோடிருக்க முடியும்? ஒப்பந்தத்தின் ஷரத்துகளை சாதி இந்துக்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்துவார்கள் என்பதற்கு என்னை நீங்கள் பிணையாகக் கருதலாம் என்று டாக்டர் அம்பேத்கர், ராவ் பகதூர் எம்.சி.ராஜா மற்றும் ஒடுக்கப்பட்ட இனத்தாரைச் சேர்ந்த ஏனைய நண்பர்களிடம் கூறியிருக்கிறேன்”.

தீண்டப்படாதோருக்கு அன்பைப் ‘பொழிந்த’ இந்த மனிதர் மசோதா விசயத்தில் என்ன செய்தார்? அம்பேத்கரின் விளக்கத்தில் பார்ப்போம்:

“...அவர் ராஜகோபாலாச்சாரியர் அந்தத் திட்டத்துக்கு இரண்டகம் செய்தபோது அதனைக் கண்டித்தாரா? தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் செய்த இந்தத் துரோகத்தை திரு. காந்தி கண்டிப்பார் என்றுதான் பலரும் எதிர்பார்த்தனர்; இது முற்றிலும் இயல்பு.ஆனால் உண்மையில் இதற்கு நேர்மாறாகத்தான் நடைபெற்றது. திரு.ராஜகோபாலாச்சாரியாரைக் கண்டிப்பதற்குப் பதிலாக, அவரது சீற்றம் திரு.ரங்க அய்யர் மீது பாய்ந்தது.அவர் செய்த குற்றம்தான் என்ன? மசோதாவுக்கு அளித்து வந்த ஆதரவை திடீரென்று திரும்பப் பெற்றுக் கொண்டதற்காக காங்கிரஸ் கட்சியை வன்மையாகக் கண்டித்ததே அவர் செய்த குற்றம்”.
காந்தி சொன்னார்:

“ஆலயப் பிரவேச மசோதாவின் பிதாமகர் கையில் அது பட்டுள்ள சீரழிவை விட அந்தக் கேடு பயக்கும் மசோதாவை ஆழக் குழிதோண்டிப் புதைப்பதே சிலாக்கியம்...எனக்குத் தெரிந்தவரை அவர் காங்கிரஸ்காரர்கள் மீது இவ்வளவு வக்கிரமாக அனலும் கனலும் கக்குவதற்கு எத்தகைய முகாந்திரமுமே இல்லை...இது இதர இந்துக்களைவிட காங்கிரஸ் அதிகம் அக்கறை காட்டும் நடவடிக்கை அல்ல.ஆகவே, காங்கிரசின் பெயரை விவாதத்தில் இழுத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது”.

இவ்வாறாக காந்தி ரங்கா ஐயருக்கு ஒழுக்க விதிகளைக் கற்றுக்கொடுத்தார். 

“இந்த மசோதா வெற்றி பெறவில்லையென்றால், அந்த கடவுளை நான் எவ்வாறு எதிர்கொள்வேன்” என்று சொன்ன உண்மையின் மாபெரும் காதலன், அதுபற்றிய கவலை ஏதுமின்றி மசோதாவைக் கைவிட்டார்.தோல்வியால் வருத்தம் அடைந்தவர்கள் மீது குற்றம் சாட்டினார்.தேர்தலுக்குப் பிறகு அந்த நாடகத்தைத் தொடரலாம் என்னும் பெரும் தன்னம்பிக்கையோடு அதைச் செய்தார்!

உண்மையில், அதுபோலவே நடந்தது! எம்.சி.ராஜா என்றொரு காங்கிரஸ்காரர் சென்னை சட்டப்பேரவையில் 1937 இல் கோவில் நுழைவுக்கான ஒரு புதிய மசோதாவை அறிமுகம் செய்தார்.

அந்த ராஜாவே ஒரு தீண்டப்படாத வகுப்பைச் சேர்ந்தவர்.ஒருகட்டத்தில்,அவர் காங்கிரசின் கடுமையான எதிர்ப்பாளராக இருந்தார்.ஆனால் அவர் பிரிட்டிஷாரோடு கடும் கோபத்தில் இருந்தார், பின்னர் காந்தியின் ஆதரவாளரானார். வட்டமேசை மாநாட்டிற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் ராஜாவைக் கூப்பிடாது ஸ்ரீனிவாசனைக் கூப்பிட்டதால், தனித் தொகுதிக்கு எதிர்ப்பு தெரிவித்து காந்தியை மகிழ்வித்தார்.எனினும், காங்கிரசின் தொடக்க நாட்களில்,’கட்சி ஒழுங்கிற்குக் கட்டுப்பட்டு காங்கிரசில் சேரும் தீண்டப்படாதவர்களின் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும்?’ என்று காந்தியிடம் ஆலோசனைக் கேட்டவர் அவர். தங்களுடைய சாதியின் நலனுக்கேற்றாற்போல் செயல்பட தீண்டப்படாதவர்களுக்கு சுதந்திரம் உண்டு, கட்சி விதிகள் இதில் செல்லுபடியாகாது.அப்போது முதல் ராஜா காந்தியின் தொண்டரானார்.

இப்போது, ராஜகோபாலாச்சாரி கைப்பட எழுதிய,ராஜா அறிமுகம் செய்த கோவில் நுழைவு மசோதாவுக்கு இப்போது ஒப்புதல் அளித்தார் காந்தி. ஜுலை 1938இல் சென்னை சட்டசபையில் அந்த மசோதா விவாதத்திற்கு வந்தது.இப்போது மீண்டும் ராஜகோபாலாச்சாரி அதற்கெதிராக பிரச்சாரம் செய்தார். காங்கிரஸ் கட்சியில் உள்ள தீண்டப்படாதவர்களின் பிரதிநிதிகளுக்கு மசோதாவை எதிர்க்கும்படிக் கட்டளை பிறப்பித்தார்.ராஜகோபாலாச்சாரி எதனால் இதைச் செய்தார் என்பதை அம்பேத்கர் விளக்கவில்லை.இந்துக்களின் ஓட்டுகளை இழந்துவிடுவோமோ என்னும் பயத்தில் ரங்க ஐயரின் மசோதாவை அவர்கள் கைவிட்டனர்.

ராஜா மசோதாவை அறிமுகம் செய்தபோது என்னதான் நடந்தது? ராஜகோபாலாச்சாரியார் தாமே எழுதி அதை ஏன் எதிர்க்கவும் செய்தார்? அம்பேத்கரிடம் அதற்கான விளக்கங்களைக் காணமுடியவில்லை.

காங்கிரசுக் கட்சியில் இடம் பெற்றிருக்கும் தீண்டப்படாதோரின் பிரதிநிதிகள் சட்டப்பேரவையில் மசோதாவை எதிர்க்க வேண்டும் என்றும், அதை மீறுவது கட்சி ஒழுங்கை மீறுவதாகும் என்றும் ஒரு கட்டளையைப் பிறப்பித்தார் ராஜகோபாலாச்சாரி, ஆனால் தங்கள் சாதி நலனுக்கெதிரான கட்சி ஒழுங்கைக் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை என்று முன்னர் காந்தி சொல்லியிருந்தார். ஆனால் இப்போது அது தலைகீழாக இருக்கிறது!

தீண்டப்படாதவர்கள் கோவில் நுழைவுக்காக மசோதா! அதை அவர்களே எதிர்க்க வேண்டும்! இப்படி ஒரு சூழலில், தீண்டப்படாதோரின் மன்றப் பிரதிநிதிகள் என்ன செய்திருக்க வேண்டும்? சட்டப்பேரவையில் இடம் கிடைத்ததே போதும் என்று அவர்களும் நிறைவு கொண்டனர். அவர்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து அம்பேத்கர் விளக்குகிறார்:

“சென்னைச் சட்டமன்றத் தாழ்த்தப்பட்ட இன உறுப்பினர்களுக்கு இதனால் மிகவும் சங்கடமான நிலைமை ஏற்பட்டது.அவர்களுக்கு வேறு வழியில்லை.மசோதாவை எதிர்க்கும்படி சட்டசபையில் காங்கிரஸ் கட்சி கொறடா மூலம் ஆணை பிறப்பிக்கப்பட்டது.இதன் பேரில் அவர்கள் எல்லாரும் ஒருமித்து மசோதாவை எதிர்த்து வாக்களித்தனர். தாழ்த்தப்பட்டோரின் பிரதிநிதிகள், அந்த இன மக்களது நலன்களின் பாதுகாவலர்கள் என்று கருதப்படுகின்றனர்.ஆனால் காங்கிரசில் தங்களை இணைத்துக் கொண்டதன் காரணமாக அவர்கள் வாய் கட்டப்பட்ட நாய்கள் போல் ஆகிவிட்டனர்.அவர்கள் கடிக்க முடியாவிட்டாலும் குலைக்கவாவது செய்யலாம், அதுவும் முடியவில்லை. தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பேச்சு சுதந்திரத்தையும் செயல் சுதந்திரத்தையும் இழந்து நின்றார்கள் என்றால் அவர்கள் காங்கிரசில் சேர்ந்ததும், காங்கிரசின் கட்டுப்பாட்டுக்குத் தங்களை உட்படுத்திக் கொண்டதுமே இதற்கு முழுமுதல் காரணம்”.

ராஜகோபாலாசாரியாரின் இந்த துரோகம் குறித்து ராஜா காந்திக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினார்.

“இந்த மசோதாவுக்கு நீங்கள் மனமுவந்து ஆசி வழங்கியிருக்கிறீர்கள்.திரு.ராஜகோபாலாச்சாரியாராலேயே இம்மசோதா தயாரிக்கப்பட்டு, நீங்கள் அங்கீகரித்திருக்கிறீர்கள். “சட்டமன்றத்தின் முந்தையக் கூட்டத்தொடரில் திரு.ராஜகோபாலாச்சாரியாரின் ஒப்புதலுடன் மசோதாவைக் கொண்டு வந்தேன்.இதற்கு முழு ஆதரவளிப்பதாக அவரும் கூறினார்.அரசாங்கமே தனது மசோதாவாக இதைக் கொண்டு வரலாமே என்று யோசனை கூறினேன்.இதை மறுத்து மசோதாவை என்னையே கொண்டுவரும்படி கூறினார்.இது சம்பந்தமாக 1938- ஜுலை 12ஆம் தேதி அவரைச் சந்தித்தேன்.மசோதாவைக் குறிப்பிட்ட கமிட்டிக்கு அனுப்பக்கோரும் தீர்மானத்துக்கு நான் அறிவிப்பு கொடுத்திருப்பதாக தெரிவித்தேன்.இதற்கு அவர் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை.”இதற்கு இடையே என்ன நடந்ததோ தெரியவில்லை.மசோதாவைப் குறிப்பிட்ட கமிட்டியின் பரிசீலனைக்கு அனுப்பக் கோரும் எனது தீர்மானம் அவையில் விவாதத்திற்கு வருவதற்கு இரண்டு தினங்களுக்குமுன் ராஜகோபாலாச்சாரியார் என்னைக் கூப்பிட்டனுப்பினார்; மசோதாவைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும்படிக் கூறினார்; ஆனால் நான் மறுத்துவிட்டேன். காலக்கிராமத்தில் நான் மசோதாவை அவையின் பரிசீலனைக்கு முன்வைத்தேன்.திரு.ராஜகோபாலாச்சாரியார் எழுந்து நின்று மசோதாவை எதிர்த்தார்; அதனைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி என்னைக் கேட்டுக்கொண்டார்; இதர மாவாட்டங்களுக்கு அல்லாமல் மலபாருக்கு மட்டும் இதே போன்ற ஆலயப் பிரவேச மசோதாவைக் கொண்டுவரப் போவதாகக் கூறினார்”.

மலபார் பகுதியில் கோவில் நுழைவு மசோதாவை அமுல்படுத்துவது மிகவும் கடினமான காரியம், அங்கு எப்படியும் அது தோல்வியைத் தழுவும் என்றும் எழுதினார் ராஜா.அதனால் தான் தந்திரமாக ராஜகோபாலாச்சாரி அந்த மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்தார்.

ராஜா இதனால் வருத்தம் கொண்டிருந்தாலும், தீண்டப்படாதோர் அனைவரும் தனித் தொகுதி கேட்டபோது காந்தியின் பக்கம் சாய்ந்து கொண்டு அதை எதிர்த்து, பின்வருமாறு அறிவித்தவர்:
“ஏனென்றால், மாண்ட்போர்டு சீர்திருத்தத்தின் மூலம் நாங்கள் ஏற்கனவே அனுபவித்துவரும் விசேட சலுகை எண்ணற்ற ஊராட்சி அமைப்புகளிலும் மாகாண சட்டமன்றங்களிலும் மத்திய சட்டமன்றத்திலும் நாங்கள் பிரதிநிதித்துவம் பெறுவதற்கு வகை செய்துள்ளது என்பதை இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்

...இந்துக்களின் தார்மீக மனச்சான்று பெருமளவுக்கு விசிப்படைந்திருப்பதையும், எழுச்சி கொண்டிருப்பதையும் காண்கிறோம். எனவே, இந்து சமூகத்தின் பிரதான அமைப்பிற்குள்ளேயே மாற்றம் ஏற்படுவதில்தான் எங்களது விமோசனமும், விடுதலையும், நற்கதியும் அமைந்திருப்பதைத் திட்டவட்டமாகப் பார்க்கிறோம்”.

“இந்தத் தீண்டப்படாத சமூக நபர் அப்போது அச்சமூகத்தின் உரிமைகளுக்கெதிராக வாக்களித்தது போல், இப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் செய்தார்கள்.இரண்டும் ஒன்றுதான், இந்தக் கட்டத்திலாவது பிரச்சினையை ராஜா புரிந்து கொண்டார் என்பதை அவரது கடிதம் விளக்குகிறது.

காந்திக்கு மேலும் எழுதினார் ராஜா:

“திரு.ராஜகோபாலாச்சாரியாரது உரையின் விளைவு எந்த மக்களது சமூக, மத மேம்பாட்டிற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோ, அதற்கு எதிராக எனது சொந்த சமூகத்தினரை வாக்களிக்கச் செய்து எனது தீர்மானத்தைத் தோற்கடிப்பதாக இருந்தது... காங்கிரஸ் தலைமையில் சாதி இந்துக்களுடன் கூட்டு வாக்காளர் தொகுதி ஏற்பாட்டில் நாங்களும் சேர்ந்ததானது எங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நினைத்தோம்; ஆனால் அதற்குமாறாக சாதி இந்துத் தலைவர்களால் வழிநடத்தப்படும் காங்கிரஸ் எங்கள் சுதந்திரத்தை அழிப்பதிலும் எங்களைக் கொண்டே எங்கள் குரல்வளையை நடுக்குவதிலும்தான் முனைந்து ஈடுபட்டிருக்கிறது என்று எண்ணும் நிலைக்குநான் தள்ளப்பட்டிருக்கிறேன்... இந்நிலைமையில் இந்துக் கோவில்களில் பிரவேசிக்க எங்களுக்குச் சுதந்திரம் இல்லை என்றால் நாங்கள் இந்துக்கள் அல்ல என்றாகிறது. நாங்கள் இந்துக்கள் அல்ல என்றால் இவர்களுடன் சேர்ந்து கூட்டு வாக்காளர் தொகுதியில் நாங்கள் ஏன் இடம்பெற வேண்டும்? முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகத்தினருக்கும் எதிராக இவர்களது எண்ணிக்கையைப் பெருக்குவதற்காகவே?... ஆலயப்பிரவேச மசோதா நிராகரிக்கப்பட்டதைச் சென்னைக் காங்கிரஸ் அரசாங்கம் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு இழைத்த பச்சையான, அப்பட்டமான துரோகமென்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்”.

இப்படி ராஜா மீண்டும் மீண்டும் காந்திக்குக் கடிதம் எழுதினார்.எனினும் காந்தி இரண்டு முறை மட்டுமே பதில் எழுதினார்.

முதல் பதில். “அன்பார்ந்த நண்பரே... திரு.சி.ராஜகோபாலாச்சாரியார் தமக்குச் சிறந்தது எனப்பட்டதைச் செய்வார்; அவரை நீங்கள் நம்பவேண்டும் என்று விரும்புகிறேன்.அவர் தமது சொந்த வழியில் காரியங்களைச் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அவரை நம்ப இயலாது என்றால் உங்களுக்குச் சரியானது என்று தோன்றுவதைச் செய்யலாம். எனக்குத் தெரிந்ததெல்லாம் ஹரிஜனங்களுக்கு அவரைவிட ஒரு சிறந்த நண்பர் இருக்க முடியாது என்பதுதான்.”

இரண்டாம் பதில்: “நீங்கள் தவறான எண்ணத்தில் இருக்கிறீர்கள் என்பதையே உங்கள் கடைசிக்கடிதம் காட்டுகிறது... தீண்டாமை விசயத்தில் நான் எவ்வளவு உறுதியாக இருக்கிறேனோ, அவ்வளவு உறுதியாக ராஜகோபாலாச்சாரியாரும் இருக்கிறார் என்பதை நான் அறிவேன்.ஆதலால் எவ்வாறு காரியம் ஆற்றவேண்டும் என்று அவர் எடுத்துள்ள முடிவை நான் மதிக்க வேண்டும்... இந்த ஆலயப் பிரவேசப் பிரச்சினையை ஒரு மாபெரும் சமயச் சீர்திருத்தம் எனக்கூற வேண்டும்.சமயப்பற்றுக் கொண்ட உங்கள் மனத்தை இதில் செலுத்த வேண்டுமென்று விரும்புகிறேன்.அவ்வாறு செய்வீர்களானால் உங்கள் மனப்பூர்வமான ஆதரவை ராஜாஜிக்கு அளித்து அவரது முயற்சி வெற்றிபெறச் செய்ய வேண்டும்”

இதுவே காந்தியின் பதில்.

ராஜாஜி மசோதாவை எதிர்த்தார் என்றால், காந்தியின் அனுமதி இல்லாமலா அதைச் செய்வார்? அது அவர்களுடைய கூட்டு முடிவு.ராஜகோபாலாச்சாரிக்கு முழு ஆதரவையும் கொடுத்து ராஜாவை வசை பாடினார் காந்தி.
இந்தக் கோவில் நுழைவு பற்றிப் பல புதிரான விசயங்கள் உள்ளன.1936 இல், திருவாங்கூரில், மஹாராஜா (அரசர்) தீண்டத்தகாதோருக்கு கோவில் நுழைவை அனுமதிப்பதாக அறிவித்தார்.ஆனால் மஹாராணியின் தனிக் கோவில்கள் இதில் அடக்கம் இல்லை.பன்னீர்செல்வம் என்னும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் சென்னை பிரதம மந்திரியான ராஜகோபாலாச்சாரியிடம் இந்த விலக்கு குறித்து கேள்வி எழுப்பினார்.அதற்கு ராஜகோபாலாச்சாரி பதில் அளிக்கவில்லை.தீண்டப்படாதோருக்குக் கோவில் திறந்தே வைக்கப்பட்டிருக்கிறது என்று பிரச்சாரம் செய்தாலும், அது உண்மை இல்லை என்பதே இதன் பொருள்!

கோவில் நுழைவுக்காக காங்கிரசு அரசாங்கம் இரண்டு சட்டங்களைக் கொண்டுவந்ததாக அம்பேத்கர் சொல்கிறார்.(தேதியைக் கொடுக்கவில்லை).

“புதிய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து இரண்டு மாகாணங்களில் காங்கிரஸ் அரசாங்கங்களால் இரு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஒன்று பம்பாயில், மற்றொன்று சென்னையில்.இந்தச் சட்டங்களில் சாரமே இல்லை.கோவில்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்காகத் திறக்கப்பட வேண்டும் என்று அவை உறுதியாகக் கூறவில்லை.கோவில்களின் தர்மகர்த்தாக்கள் தங்கள் நிர்வாகத்திலுள்ள ஆலயங்களை அவர்கள் விரும்பினால் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் திறந்துவிட இம்மசோதாக்கள் அனுமதிக்கின்றன.ஆனால் இவ்வாறு செய்ய வேண்டுமென்று தர்மகர்த்தாக்களை எவ்வகையிலும் நிர்ப்பந்தப்படுத்தாததால் இம்மசோதாக்கள் கதைவைக்குதவாத வெறும் காகிதங்களே தவிர வேறல்ல. ஆனால் சென்னை சட்டத்திற்கு ஓரளவு புதிரான வரலாறு உண்டு.சென்னையின் பிரதமரான திரு.ராஜகோபாலாச்சாரியார்தான் இந்த சட்டத்தை இயற்றியவர்.காங்கிரசில் அவர் மிக உயர்ந்த இடத்தை வகிக்கிறார்.அதாவது ‘துணை மகாத்மா’ என்று அழைக்கப்படும் அளவுக்கு உயர்நிலையில் இருக்கிறார்”.

இதன் பொருள், ‘மகாத்மாக்களுக்கு’ப் பின் ‘துணை மகாத்மாக்கள் இருப்பார்கள்’ என்பதாகும்!

3.’மகாத்மா’ குறித்து மேலும் சில கருத்துகள்.

‘சாதி அமைப்பு’ மீது காந்திக்கு மிகுந்த மரியாதை உண்டு.அவரைப் பொறுத்தவரை, அதில் நல்லொழுக்கங்கள் உள்ளன.அவருக்கு வயது முதிரும் வரை பல வருடங்கள் அவரால் சமபந்தி விருந்துகளை சகித்துக் கொள்ள முடியவில்லை. ‘நவஜீவன்’ இதழில் 1922 இல் அவர் தன் கருத்துக்களை வெளிப்படுத்தினார்:

“இந்து சமுதாயம் இதுவரை தாக்குப் பிடித்து நின்றிருக்கிறது என்றால் சாதி அமைப்பு என்னும் அடித்தளத்தின்மீது அது அமைந்திருப்பதே காரணம்... பல்வேறு சாதிகள் ராணுவத்தின் பல்வேறு படைப்பிரிவுகள் போன்றவை.

ஒவ்வொரு படைப்பிரிவும் ஒட்டு மொத்த நலனுக்காகப் பாடுபட்டு வருகிறது... சாதியமைப்பு முறையைத் தோற்றுவிக்கக்கூடிய ஒரு சமூகம் தன்னேரில்லாத ஒழுங்கமைப்பு ஆற்றலைப் பெற்றிருக்கவே செய்யும்... சமபந்தி விருந்தோ அல்லது கலப்புத் திருமணமோ தேசிய ஒற்றுமையை வளர்ப்பதற்கு அவசியம் என்று நான் கருதவில்லை”.

காந்தியைப் பொறுத்தவரை, வெவ்வேறு சாதிகளின் சாதிக்கலப்பு தேவையற்றது.அவர் சொல்கிறார்:

“இவ்வாறு ஒன்று சேர்ந்து உணவு அருந்துவது நட்புறவை வளர்க்கிறது என்பதை அனுபவம் மறுக்கிறது: இது உண்மையானால் ஐரோப்பாவில் போர்களே நடந்திருக்க மாட்டா...இயற்கை உபாதையைத் தீர்த்துக் கொள்வது போன்றே உணவு அருந்துவதும் ஓர் அனுசிதமான செயலாகும்; இதிலுள்ள ஒரே வித்தியாசம் இயற்கைக் கடன்களை முடித்தபிறகு நாம் ஓரளவு நிம்மதி பெறுகிறோம்; ஆனால் உணவு அருந்துவதும் ஓர் அனுசிதமான செயலாகும்; இதிலுள்ள ஒரே வித்தியாசம் இயற்கைக் கடன்களை முடித்தபிறகு நாம் ஓரளவு நிம்மதி பெறுகிறோம்; ஆனால் உணவு அருந்திய பிறகோ மனஉளைவு அடைகிறோம்.இயற்கைக் கடனைத் தனிமையில் முடிப்பது போன்றே உணவு அருந்துவதையும் தனிமையில் மேற்கொள்ளவேண்டும்:.

சாதிக்கலப்பு விருந்தை அவர் எதிர்ப்பதற்கு இதுவே காரணம்.இந்தக் கொள்கையை நாம் பின்பற்றினால், பிறகு ஒரே சாதியைச் சேர்ந்த இரண்டு நபர்களும் கூடஇணைந்து உண்ணக்கூடாது.தன்னைக் கேள்வி கேட்க யாருமில்லையென்றால் ஒருவர் வாய்க்கு வந்ததை உளறுவார் என்பதை காந்தியின் வாதம் உணர்த்துகிறது.

சாதியமைப்பை, பரம்பரைத் தொழிலைப் போற்றி, காந்தி இறுதியாகச் சொன்னது,

“...சாதியமைப்பு முறையை ஒழித்துக்கட்ட முனைந்து நிற்கும் அனைவரையும் எதிர்க்கிறேன்...சிறு சிறு சாதிகள் ஒன்றிணைந்து மாபெரும் சாதியாக உருவெடுப்பதே மிகச்சிறந்த பரிகாரமாகும். இத்தகைய பெரிய சாதிகள் நான்கு இருக்க வேண்டும்.பழைய சதுர் வருண முறையைப் புணரமைக்க இது உதவும்”.

காந்தியைப் பொறுத்தவரை, நாலு பிரிவுகளை மட்டுமே கொண்ட வருண அமைப்பு, சாதித் தொழிலை நிலைத்திருக்கச் செய்யும் சாதியமைப்பு, முடிவில்லாமல் எண்ணற்ற சாதிகளை உருவாக்கும் அமைப்பைக் காட்டிலும் உயர்வானது. இங்கு அம்பேத்கரின் பார்வை ஒன்றை நினைவூட்டுவது அவசியம். நால் வருணங்கள ப் போற்றும் இதே வேலையைத் தான் அம்பேத்கரும் செய்தார்.’சாதியின் தோற்றம்’ என்னும் முழுக் கோட்பாடும், நால் வருணங்கள் உயர்வானவை என்னும் அனுமானத்தின் மீது எழுப்பப்பட்டுள்ளது.ஆனால் காந்தியோ, ஆரிய சமாஜிகளோ இதே அனுமானத்தை வைத்தால், “நால் வருணத்தில் அப்படி என்ன உயர்வாக இருக்கிறது?” என்று உடனே அம்பேத்கர் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பார். நால் வருணம் குறித்த அம்பேத்கரின் விவரிப்பைப் பின்வருமாறு நாம் காணலாம்:

“சாதி என்னும் சிந்தனை நாசகரமானது என்றால், அது வருணம் என்னும் சிந்தனையின் தீமையினால் தான்”. இது காந்திக்கு அளித்த எதிர்வினைப் பதில்.காந்தி நால் வருணத்தைப் போற்றவும், முரணாக அம்பேத்கர் இவ்வாறு சொல்கிறார்: 

 “சாதி அமைப்பு முறையிலிருந்து வருண அமைப்பு முறைக்கு திரு.காந்தி மாறியதானது காந்தியம் ஜனநாயகத்துக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டில் அணுவளவும் வேறுபாட்டை ஏற்படுத்தி விடவில்லை.முதலாவதாக, சதுர் வருணம் என்னும் கருத்துதான் சாதி கருத்துக்குப் பிறப்பிடமாகும்.சாதி என்னும் கருத்து பெருங்கேடு பயக்கக்கூடியதாக இருக்கிறதென்றால், சதுர்வருண கருத்தின் கொடிய நச்சுச் சூழலே இதற்கு முற்றிலும் காரணம்”.

நால் வருணங்களை அவரே போற்றிப் புகழ்ந்துள்ளார் என்பதை இங்கு அம்பேத்கர் நினைவில் கொள்ளவில்லை.நால் வருணங்கள் குறித்து காந்திக்கோ அல்லது ஆரிய சமாஜவாதிகளுக்கோ தங்கள் கருத்தில் சுய-முரண்பாடு இருக்கவில்லை.எப்போதும் அவர்கள் ‘வருணம் நல்லது’ என்றே சொல்லி வந்துள்ளனர்.ஆனால் அம்பேத்கருக்கு, ஒரு கட்டத்தில் வருணம் நல்லது, மற்றொரு கட்டத்தில் அது கெட்டது.இது போன்ற வாதங்களின் மீது அவர் விமர்சனங்களை எதிர்கொண்டேயாக வேண்டும்.

(1)    மீண்டும் காந்தி குறித்து

 நால் வருணங்கள் குறித்த பாடங்களைக் கேட்கும்பொழுது காந்தி பரவசம் அடைகிறார்.சூத்திரர்கள் நிலம் வாங்கக்கூடாது என்று வருண அமைப்பு நிறுவியதைப் போலவே காந்தியும் அதையே வலியுறுத்துகிறார்:
“சமயக் கடமை என்ற முறையில் மட்டுமே மேல் சாதியினருக்கு ஊழியம் செய்யும் சூத்திரன் ஒருபோதும் சொந்தமாக சொத்து ஏதும் வைத்துக் கொள்ள மாட்டான், உண்மையில் எதையும் தனக்குச் சொந்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை கூட அவனுக்கு இல்லை.அத்தகையவன் ஆயிரம்முறை வணங்குவதற்குரிய தகுதி படைத்தவன்... தேவர்களே அவன்மீது பூமாரி பொழிவார்கள்”.

சொத்து அல்லது வேறு ஏதாவது வைத்துக் கொள்ளுதல் ‘இலட்சியம்’! இந்த சொற்கள் எல்லாருக்குமானவை அல்ல, சூத்திரர்களுக்கு மட்டுமானது! மேல் சாதியினர் சொத்து வைத்துக் கொள்ளலாம்! சொத்துடைமை வர்க்கத்திற்கு அது இலட்சியம் இல்லை. சூத்திரர்கள் கொண்டால் மட்டுமே அது ‘இலட்சியம்’.மதக் கடமையின் ஒரு பகுதியாக அவர்கள் மேல் சாதியினருக்குப் பணிவிடை செய்ய வேண்டும்! அவர்கள் அப்படிச் செய்தால், கடவுள் அவர்கள் மீது பூமாரி பொழிவார்! பேரன்புடன் திரு.காந்தி சூத்திரர்களுக்கு இந்தப் பாதையைக் காட்டினார்!

சூத்திரர்களை ஏமாற்றுவதற்கு காந்தி மேற்கொண்ட முயற்சியைவிட, மலம் அள்ளும் தொழில் செய்யும் தீண்டப்படாதோரை ஏமாற்றுவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சி எத்தனை அற்பமானது என்பதைப் பாருங்கள்!

“மோட்சம் அடைய நான் விரும்பவில்லை.மறுபிறவி எடுக்கவும் நான் விரும்பவில்லை, எனினும் நான் மறுபிறவி எடுக்க நேர்ந்தால் ஒரு தீண்டப்படாதவனாகப் பிறக்கவே விரும்புகிறேன்.அப்போதுதான் அவர்களது துன்ப துயரங்களில், இன்னல் இடுக்கண்களில், அவமதிப்புகளில் நான் பங்குகொள்ள முடியும்; இதன் மூலம் இந்த இரங்கத்தக்க, வெறுக்கத்தக்க அவல நிலையிலிருந்து நானும் அவர்களும் விடுபடப் பாடுபட முடியும்.எனவே, நான் பிறப்பதாக இருந்தால் ஒரு பிராமணனாகவோ அல்லது சூத்திரனாகவோ பிறக்க விரும்பவில்லை, மாறாக ஆதிசூத்திரனாகப் பிறக்க வேண்டுமென்றே பிராத்தனை செய்கிறேன்... துப்புரவுத் தொழில் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.எனது ஆசிரமத்தில் பதினெட்டு வயது நிரம்பிய ஒரு பிராமண இளைஞன் இருக்கிறான்.ஆசிரமத்தின் தோட்டி சுத்தமாக இருக்க வேண்டுமென்பதைக் கற்றுத்தரும் பொருட்டு அவனே இந்த வேலையைச் செய்து வருகிறான்.இந்த இளைஞன் ஒரு சீர்திருத்தவாதியல்ல. வைதீகத்திலேயே பிறந்து வளர்ந்தவன்.ஆயினும் தான் ஒரு திறமையான தோட்டியானாலொழிய தான் மேற்கொண்டுள்ள புனித சேவை பூர்த்தியடைந்ததாகாது என்பதை உணர்ந்தான்; ஆசிரமத்தின் தோட்டி தனது பணியை நன்கு செய்ய வேண்டுமென்றால் தானே அப்பணியைச் செய்து பிறருக்கு வழிகாட்ட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். “இதே போன்று நீங்கள் இந்து சமுதாயத்தை மாசு துடைத்துத் துப்புரவு செய்து வருகிறீர்கள் என்பதை உணர வேண்டும்”.

இந்து சமுகத்தை இந்துக்கள்தான் சுத்தம் செய்ய வேண்டும், மற்றவர் ஏன் செய்ய வேண்டும்? சமூகத்தின் அனைத்து நபர்களின் மூத்திரத்தையும், கழிவுகளையும் சுத்தம் செய்யும் பணியை எதற்காக ஒரே ஒரு சாதி மட்டும் ஏற்க வேண்டும்? இந்த மகாத்மா (என்னும் பெரிய ஆன்மா) அதில் உள்ள அநியாயத்தை உணரவில்லையா? ஆசிரமப் பணியாளர் தன் வேலையைச் ‘சிறப்பாகச்’ செய்ய, பிராமணப் பையன் ஒருவன் அவ்வேலையை செய்ததாகச் சொல்கிறார் காந்தி. இதைச் சொல்வதற்கு அவர் வெட்கப்படவில்லை.பிராமணப் பையன் சில நாட்கள் கழித்து அவ்வேலையைச் செய்வதை நிறுத்திவிடுவான்.ஆனால் துப்புரவாளர் தன் வாழ்நாள் முழுவதும், பரம்பரைப் பரம்பரையாக, மகாத்மா மீண்டும் ஒரு துப்புரவாளராகப் பிறந்து அவர்களை மீட்கும் வரை அதைச் செய்து கொண்டே இருக்க வேண்டும்! தீண்டப்படாதோரை உயர்த்த எதற்காக காந்தி மீண்டும் ஒரு பிறவி எடுக்க வேண்டும்? அதை ஏன் இந்தப் பிறவியிலேயே செய்யக் கூடாது?

(அடுத்த பகுதியில் தொடரும்...)

நன்றி: சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு

தெலுங்கு மூலம்: ரங்கநாயகம்மா

பதிப்பகம்: SWEET HOME PUBLICATIONS

Leave Comments

Comments (0)